Site icon சக்கரம்

தடுப்பூசியைத் தவிர்த்து, கொரோனாவிடம் வீழத் தயாராகிறோமா?

ஆதி வள்ளியப்பன்

னித குல வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் இயற்கைச் சீற்றங்கள், போர்கள் உள்ளிட்ட எத்தனையோ ஆபத்துகளை எதிர்கொண்டிருந்தாலும், தொடர்ந்து வாழ்வதற்கான யத்தனங்களை மனித குலம் மேற்கொண்டபடியே இருந்துவந்திருக்கிறது. நோயால் மனித குலம் எத்தனை கோடிப் பேரை இழந்தது என்பதை வரலாற்றின் ஓரிரு பக்கங்களைப் புரட்டினாலேயே தெரிந்துகொள்ளலாம்.

வட அமெரிக்கா-தென்னமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் ஐரோப்பியக் காலனியாதிக்கமும் குடியேற்றமும் நிகழ்ந்தபோது, புதிய தொற்றுநோய்களால் பல கோடி உள்ளூர் இனக்குழுக்கள்/பழங்குடிகள் பலியாகினர். அதற்குப் பிறகு அந்த இனக்குழுக்கள்/பழங்குடிகளின் மக்கள்தொகை பெருமளவு குறுகிவிட்டது. இயற்கைச் சீற்றங்கள், போர்களைவிட மனிதர்களை அதிக அளவில் பலிகொள்பவையாக நோய்கள் உள்ளன.

மாற்றுத் தீர்வு இருக்கிறதா?

இந்தப் பின்னணியில் நாவல் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப் படுத்துவதில் அரசு அமைப்புகளின் தோல்வி, நாடு முழுவதும் மருத்துவ ஒட்சிசன் – மருந்துப் பற்றாக்குறை, மருத்துவமனைகள், மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோர் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருவது போன்றவற்றைப் பார்க்கி றோம். இப்படியொரு இக்கட்டான தருணத்தில் வைரஸை எதிர்த்துப் போராடுவதைவிட, ‘கோவிட் ஒரு நோயே இல்லை’, ‘தனக்கு வந்திருப்பது கோவிட் இல்லை’, ‘தடுப்பூசி நோயைத் தடுக்காது’ என்பது போன்ற அடிப்படையற்ற பிரச்சாரங்களை எதிர்கொள்வதுதான் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துவருகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தேவையற்ற இந்த முரண்பாடு கொரோனா வைரஸை எதிர்கொள்வதில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

தடுப்பூசி போட வேண்டாம் எனப் பிரசாரம் செய்பவர்கள் போலியோ சொட்டு மருந்து, பெரியம்மைக்கான தடுப்பூசி போன்றவை இல்லாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதற்குப் பதிலளிக்க வேண்டும். 40 வயதுக்குக் கீழ் உள்ளவர்களில் கால் ஊனம் கிட்டத்தட்ட இல்லாமலி ருப்பதற்கு போலியோ சொட்டுமருந்து வழங்குவது இயக்கமாக்கப்பட்டு, அது அனைத்துக் குழந்தைகளுக்கும் கொடுக்கப்படுவது 20 ஆண்டுகளுக்கு உறுதிபடுத்தப்பட்டதே முதன்மைக் காரணம். நோய்களுக்கு அல்லது நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி தீர்வல்ல என்கிற கருதுகோளை முன்வைப்பவர்கள், மேற்கண்டது உள்ளிட்ட பல்வேறு வைரஸ் நோய்களுக்கு என்ன தீர்வு வைத்திருக்கிறார்கள்?

ஏன் வேண்டும் தடுப்பூசி?

முதல் தடுப்பு மருந்தைக் கண்டு பிடித்த பிரிட்டிஷ் மருத்துவர் எட்வர்டு ஜென்னர், பல குழந்தைகளிடம் அதைப் பரிசோதித்த அதேநேரம், ஒருவயதுகூட ஆகியிராத தன் மகனிடமும் அதைப் பரிசோதித்துப் பார்த்தார். போலியோவுக்குத் தடுப்பூசி கண்டு பிடித்த அமெரிக்க வைரஸ் நிபுணர் ஜோனஸ் சால்க், தன் குழந்தைகளிடமும் அந்தத் தடுப்பூசியை பரிசோதித்துப் பார்த்தார். முந்தைய நூற்றாண்டுகளில் இதுபோல் குறைந்த எண்ணிக்கையில் தடுப்பூசிப் பரிசோதனைகள் நடைபெற்றன. இன்றைக்குத் திட்டவட்டமான நடைமுறைகளுடன் ஆவணப்படுத்தப்பட்ட பிறகே எந்த ஒரு தடுப்பூசியும் விற்பனைக்கு வருகிறது.

தடுப்பூசியில் பல வகைகள் இருக்கின்றன. எல்லாத் தடுப்பூசிகளும் நோய்களை முழுமையாகத் தடுக்க வல்லவையல்ல. அந்தச் சூட்சுமத்தைக் கண்டடையேவே உலகெங்கும் உள்ள மருத்துவர்களும் ஆராய்ச்சியாளர்களும் கைகோத்துப் பயணித்துவருகிறார்கள். அதேநேரம், நாவல் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட பிறகு ஒருவேளை நோய் தொற்றினாலும், வைரஸின் வீரியத்தை மட்டுப்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் நாவல் கொரோனா வைரஸில் இந்தியாவில் 750 வேற்றுருவங்களும் உலகில் 8,666 வேற்றுருவங்களும் கண்டறியப் பட்டுள்ளன. இவற்றில் அதிகம் பரவிவரும் வேற்றுருவங்களுக்கு எதிராகத் தற்போதுள்ள தடுப்பூசிகள் குறிப்பிடத்தக்க அளவு செயலாற்றலை வெளிப்படுத்துகின்றன. எனவே, எவ்வளவு விரைவாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துகிறோமோ அவ்வளவு நல்லது. மாறாக, தடுப்பூசி போட்டுக்கொள்வதிலிருந்து மக்கள் விலகி நிற்பது கூடுதல் வேற்றுருவங்கள் உருவாக வழிவகுக்கும். எதிர்கால வேற்றுருவங்கள் மக்களை எவ்வளவு மோசமாகப் பாதிக்கும் என்பதைக் கணிக்க முடியாது என்று எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

ஏற்கத்தக்க கேள்விகளா?

வயதுவந்தவர்களுக்கு ஆண்டுதோறும் தடுப்பூசி போடுவதன் மூலமாகவே, பெரும் நோய்த்தொற்றுகளிலிருந்து தங்கள் நாட்டு மக்களை வெளிநாடுகள் காத்துவந்திருக்கின்றன. ஆனால், இந்தியாவில் குழந்தைகளுக்குப் போடும் அளவுக்கு வயது வந்தவர்களுக்குத் தடுப்பூசி போடும் நடைமுறை வழக்கமாக இல்லை. கோவிட்-19 சூழலுக்குமுன் இந்தியாவில் வயதுவந்தவர்களுக்கு குறைவாகவே தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. இந்த நடைமுறை நமக்குப் புதிதாக இருப்பதாலேயே அதை நிராகரிப்பதும், வீண் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பிக்கொண்டே இருப்பதும் முறையல்ல.

அதேநேரம் ஏற்கத்தக்க நியாயமான கேள்விகளை (Valid Questions) கேட்கலாம். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு எழும் உடல்சிக்கல்கள் குறித்த தொடர் ஆய்வு, மருத்துவ கண்காணிப்பு தேவை என்கிற கோரிக்கையை சிலர் முன்வைக்கிறார்கள். இந்தக் கேள்விகளைப் புறக்கணிக்காமல் வெளிப்படைத்தன்மையுடன் அரசு செயல்பட்டாக வேண்டும். அது வீண் சந்தேகங்களைத் தவிர்க்கும்.

தடுப்பூசியை மறுப்பது உரிமையா?

தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பது தங்களுடைய தனி உரிமை என்று சிலர் நம்புகிறார்கள். யாரும் தனிநபர்களாக இந்த உலகில் வாழ்ந்துவிட முடியாது. குடும்பம், சமூகம், ஊர் போன்ற அமைப்புகளின்றி யார் ஒருவரும் வாழ்வது சாத்தியமில்லை. நம்முடைய ஒவ்வொரு நாள், ஒவ்வொரு வேளை வாழ்க்கையை நகர்த்தவும் நேரடியாக அறிந்த, அறியாத எண்ணற்றோரின் உழைப்பு பங்களிக்கிறது. பால் பாக்கெட் போடுபவர், செய்தித்தாள் போடுபவர், தண்ணீர் கேன் போடுபவர் நேரடியாக வீட்டுக்கு வருகிறார்கள் என்றால், காய்கறிக் கடை, மளிகைக் கடை, கறிக் கடை, அலுவலகங்கள் எனப் பல இடங்களுக்கு வாரத்துக்கு ஒரு முறையாவது நாமும் சென்றுவருகிறோம்.

இந்தப் பின்னணியில் நம் ஒருவருக்கு ஏற்படும் நோய்த்தொற்று நிச்சயமாக நம்முடன் நிற்கப் போவதில்லை, நமது குடும்பத்தினர், அலுவலக சக ஊழியர்கள் எனப் பலருக்கும் பரவுவதற்குச் சாத்தியமிருக்கிறது. ஒரு கோவிட் தொற்றாளர் 30 நாள்களில் 406 பேருக்குப் பரப்பிவிடச் சாத்தியம் உண்டு என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. நோய் அறிகுறி தெரியாத நிலையில், மற்றவர்களுக்கு நோயைப் பரப்பாமல் இருப்பதற்கு நம் கையில் எந்தத் தடுப்பு ஆயுதமும் இல்லை.

அறிவியலை நிராகரிக்கும் பார்வை

நோய் அறிகுறி தெரிந்த பிறகு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் அல்லது மருத்துவமனையில் இருக்க வேண்டும். ஆனால், கோவிட் அறிகுறிகள் தென்பட்டாலும்கூட, எந்தப் பரிசோதனையும் மேற்கொள்ளாமல் அது கோவிட் இல்லை என்று நம்புவதைப் பெரும்பாலோர் பெருமையாகவே கருதுகிறார்கள். முகக்கவசம் போன்ற எளிய அம்சங்கள் நோய்ப்பரவலைத் தடுக்கும், மட்டுப்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்டிருந்தாலும் முகக்கவசம் அணிவதும் தேவையற்றது எனப் பிரசாரம் செய்வதை மாற்று மருத்துவக் குழுக்கள் எனத் தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்பவை வழக்கமாகக் கொண்டுள்ளன.

இதே குழுக்கள்தாம் வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்துக்கொள்ளலாம் என்று அறிவியல்பூர்வமற்ற பிரச்சாரத்தை மேற்கொண்டுவருகின்றன. இந்தப் பிரசவ நடைமுறையில் ஏதேனும் சிக்கல்கள் எழுந்தால், குழந்தையோ தாயோ மரண விளிம்புக்குச் சென்றால், அதைக் கையாள என்ன வழிகள் உள்ளன என்பதைப் பற்றி அந்தக் குழுக்கள் மூச்சுவிடுவதில்லை. இதனால், தமிழகத்தில் சில உயிர்ப்பலிகள் நிகழ்ந்துள்ளன.

எதையும் அறிவியல் பார்வையுடன் அணுக முன்வராத இந்தக் குழுக்கள் கொரோனாவைக் கட்டுப் படுத்தவும், கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்கவும் என்ன மாற்று வழிமுறைகளை கைவசம் வைத்துள்ளன என்பதைக் கூறாமல், தடுப்பூசி தவறு என்று மட்டும் அவப்பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. மதரீதியான விழாக்கள், குடும்ப விழாக்களுக்குக் கூட்டமாகச் செல்பவர்களுக்கும் இதுபோன்ற அறிவியல்பூர்வமற்று பிரச்சாரம் செய்பவர்களுக்கும் எந்த வேறு பாட்டையும் காண முடிவதில்லை.

எல்லோரையும் கணக்கில் கொள்கிறோமா?

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் அறிவியல்பூர்வமற்ற மனப்பான்மை என்பது தனிமனிதர்களை, அவர்களுடைய குடும்பத்தை மட்டும் பாதிப்பதில்லை. ஏற்கெனவே சமூகத்தின் அடித்தட்டில் அடிப்படைத் தேவைகளுக்கு அல்லாடும் சாதாரண மக்களையே கடுமையாக பாதிக்கிறது. தற்போதைய இரண்டாம் அலையில் நடுத்தர வர்க்கத்தினர், மேல்தட்டு வர்க்கத்தினர் அரசு, தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முயல்வார்கள். ஆனால், அடித்தட்டு மக்கள் இந்தக் காலத்தில் உணவு தொடங்கி மருத்துவம், கல்வி என ஒவ்வொரு அடிப்படைத் தேவைக்கும் அரசை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அவர்களிடையே நாவல் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவினால், அவர்களைக் காப்பாற்றுவதற்குத் தடுப்பூசி எதிர்ப்பாளர்களிடம் என்ன பதில் அல்லது மாற்றுவழி இருக்கிறது?

அடித்தட்டு மக்களின் குடும்பங்களில் பெரும்பாலோர் அன்றாடம் வேலை தேடிச் செல்பவர்களாகவோ சிறிய தொழில்களை மேற்கொள்பவர்களாகவோ இருப்பார்கள். எல்லோருமே குறைந்த வருவாயைப் பெறுவதால், ஒருவருடைய இழப்பு அல்லது நோய்நிலை என்பது ஒட்டுமொத்த குடும்பத்தையும் புரட்டிப்போட்டுவிடும். கொரோனா பெருந்தொற்றால் சமூகமும் வேலைகளும் முடங்கியுள்ள இந்தக் காலத்தில், குடும்ப உறுப்பினர் ஒருவருடைய இழப்பு என்பது எளிதில் பதிலீடு செய்யக்கூடியதில்லை.

அனைத்து மக்களுக்கும் இலவச தடுப்பூசி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் அனைத்து மக்களுக்கும் அது செலுத்தப்பட்டதை உறுதிப்படுத்த வேண்டியதும் அரசின் கடமை. அப்போதுதான் நாவல் கொரோனா வைரஸ் பரவல் தடுத்து நிறுத்தப்பட்டு, ஒரு சமூகமாக நாம் இயல்புநிலைக்குத் திரும்ப முடியும். அதற்கேற்ப அரசின் கொள்கை முடிவுகள் அமைய வேண்டும்.

என்ன செய்யப் போகிறோம்?

நாவல் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி சார்ந்து உண்மையில் நாம் எதிர்த்துப் போராட வேண்டியது, அதன் விலை குறித்தே. தடுப்பூசி உற்பத்தி, விநியோகம், விலை, பரவல்தான் தற்போது நம் முன் உள்ள பெரிய பிரச்சினைகள். அந்தப் பிரச்சினைகளைக் கையாள்வதை விட்டுவிட்டுத் தடுப்பூசியே தவறு என்று சொல்வது அடுத்தடுத்த கொரோனா வைரஸ் அலைகளை வரவேற்பதற்குச் சமம்.

ஏற்கெனவே அரசும் மக்களும் நாவல் கொரோனா வைரஸை வென்றுவிட்டோம் என்று வீண் மமதையில் இருந்ததால்தான், மோசமான இரண்டாம் அலையைச் சமாளிக்க முடியாமல் தற்போது திணறிவருகிறோம். அடுத்து மூன்றாம், நான்காம் அலைகள் வரும். முந்தைய வைரஸ் தொற்றுச் சுழற்சிகள் இதை நமக்கு உணர்த்தியுள்ளன.

நூறாண்டுகளுக்கு முன்பு ஸ்பானிஷ் ஃபுளூ நோய்த்தொற்றின் இரண்டாம் அலை உலகை ஆட்டிப் படைத்த காலத்தில் தடுப்பூசி போன்ற கண்டுபிடிப்புகள் சாத்தியமாகியிருக்கவில்லை. அப்போது உலக மக்கள்தொகையில் 30 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டார்கள், மூன்று சதவீதத்தினர் அந்த நோய்க்குப் பலியானார்கள். அப்படி பலியானவர்களில் நான்கில் ஒருவர் இந்தியர் (1.25 கோடி). அந்தக் காலத்தில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துக்கொள்ள பெரும்பாலான இந்தியர்கள் முன்வரவில்லை.

அந்த நோய்த்தொற்றுக்கு இந்தியாவில் அதிகமானோர் பலியானதற்கு அறிவியல் அடிப்படையிலான மருத்துவ சிகிச்சையை நாடாததே முதன்மைக் காரணம். நூறாண்டுகளுக்குப் பிறகு நிலைமை மேம்பட்டிருந்தாலும், தேவையற்ற சந்தேகம், நம்பகமின்மை காரணமாக ஒரு நோயிடம் மண்டியிடும் நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறோம். நாவல் கொரோனா வைரஸ் போன்ற ஒரு நோய்த்தொற்றை வெல்வதற்கு அரசு மட்டுமல்லாமல், மக்களும் உரிய புரிதலுடன் எதிர்வினையாற்றாவிட்டால் அடுத்துவரும் ஆண்டுகளும் இதே வைரஸுடன் போராடுவதற்கு உரியவையாக மாறிவிடும்.

Exit mobile version