Site icon சக்கரம்

புகழ்பெற்ற மருத்துவ வார இதழான லான்செட்டின் தலையங்கம்: இந்தியாவின் கோவிட் நெருக்கடி

ந்தியாவில் தற்போது நிகழும் துன்பக் காட்சிகளைப் புரிந்து கொள்வது கடினம். மே 4 அன்று வரை, நாளொன்றுக்கு சராசரியாக 3,78,000 பேர் என்கிற விகிதத்தில் 20.2 மில்லியன் (இரண்டு கோடியே இருபது லட்சம்) கோவிட் 19 தொற்றினால் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்; 220000 பேருக்கு மேல் இறந்திருக்கின்றனர். இந்தக் கணக்குகள் அனைத்துமே குறை மதிப்பீடுகள்தான் என்று வல்லுனர்கள் நினைக்கின்றனர். மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. முன்களப் பணியாளர்கள் முற்றிலும் களைப்படைந்து விட்டனர். தொற்றுக்கு ஆளாகின்றனர். மருத்துவ ஒட்சிசன், மருத்துவ மனைப் படுக்கைகள் போன்ற பிற அத்திவாசியத் தேவைகளுக்காக நம்பிக்கையற்றுப் போய் மக்கள் விடுக்கும் கோரிக்கைகள் சமூக வலைத் தளங்கள் முழுவதிலும் விரவிக் கிடக்கின்றன. ஆனாலும், மார்ச் மாதத்தின் இறுதியில் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கைப் பல்கிப் பெருகிக் கொண்டிருக்கும் நேரத்தில் கூட இந்தியாவின் சுகாதார அமைச்சர் பெருந்தொற்றின் ‘இறுதி ஆட்டத்திற்கு’ வந்து விட்டோம் என்று பிரகடனம் செய்தார்.

பல மாதங்களாகக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்த போதிலும், நோயின் இரண்டாவது அலை வரும் அபாயம் இருக்கிறது, கொரோனா வைரசின் புதிய வடிவங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்கிற எச்சரிக்கைகள் விடுக்கப் பட்ட பின்னரும் கூட கோவிட்-19ஐ தோற்கடித்து விட்டோம் என்கிற தோற்றத்தையே இந்திய அரசு தந்து கொண்டிருந்தது. நோய் குறித்த ஆராய்ச்சியிலிருந்து உருவாக்கப் பட்ட மாதிரிகள் இந்தியர்களுக்கு கூட்டான கொரோனா எதிர்ப்பு சக்தி (herd immunity) வந்து விட்டது என்று தவறான நம்பிக்கையைத் தந்தமையால் அரசாங்கம் மெத்தனமாக இருந்தது மட்டுமின்றி போதுமான தயாரிப்பிலும் இறங்கவில்லை. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஜனவரியில் நோயாளிகளிடையே சீரம் எனப் படும் ரத்தத்தின் நீர்த்த பகுதியை ஆய்வு செய்து நடத்திய கணக்கெடுப்பில் 21 சதவீத இந்தியர்களின் உடல்களில் மட்டுமே கோவிட் வைரசின் எதிர் உயிரிகள் இருக்கின்றன எனத் தெரிய வந்தது. சில நேரங்களில் நரேந்திர மோடி அரசாங்கம் பெருந்தொற்றுப் பரவலைத் தடுப்பதை விட டிவிட்டரில் வந்த விமரிசனங்களை நீக்குவதிலேயே அதிகக் குறியாக இருந்தது போல் தோன்றியது.

தொற்றினைப் பெருமளவு பரப்பும் நிகழ்வுகள் குறித்து எச்சரிக்கைகள் இருந்த போதிலும் அரசாங்கம் நாட்டின் பல பகுதிகளிலிருந்து வந்து பல லட்சக் கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் தொற்றினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஏதும் இல்லாத மத விழாக்களையும், மாபெரும் அரசியல் கூட்டங்களையும் நடத்த அனுமதித்தது.

கோவிட் பெருந்தொற்று முடிவுக்கு வந்து விட்டது என்கிற எண்ணத்தில் தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தையும் மட்டுப் படுத்தியது; இதனால் மொத்த மக்கள் தொகையில் 2 சதவீதத்திற்கும் குறைவானர்களுக்கே தடுப்பூசி போடப் பட்டுள்ளது. மத்திய அரசின் தடுப்பூசித் திட்டம் உடைந்து சிதறியது. மத்திய அரசு தடுப்பூசிக் கொள்கை குறித்து மாநிலங்களைக் கலந்தாலோசிக்காமலே திட்டத்தின் போக்கை மாற்றி 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி என்று விரிவாக்கியதால் தடுப்பூசிகள் தீர்ந்து போயின; மாபெரும் குழப்பம் ஏற்பட்டது; தடுப்பூசிச் சந்தையில் மாநிலங்களும் மருத்துவமனைகளும் போட்டி போட்டு வாங்கும் நிலை ஏற்பட்டது.

நோயின் தாக்கம் அனைத்து இடங்களிலும் சமமாக இல்லை. உத்தரப் பிரதேசம், மஹாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் திடீரென்று தொற்று எண்ணிக்கை உயர்ந்ததால் மருத்துவ ஆக்சிஜன் விரைவாகத் தீர்ந்தது, மருத்துவமனை இடங்கள் சுருங்கின, மயானங்களில் உடல்களை எரிக்க இடமின்றிப் போனது. ஒட்சிசன், மருத்துவமனைப் படுக்கைக் கோருபவர்களுக்கு எதிராக தேசியப் பாதுகாப்புச் சட்டங்கலள் பாயும் என்று எச்சரிக்கும் அளவுக்கு சில மாநில அரசுகள் சென்றன. கேரளா, ஒடிஷா போன்ற மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட அதிகமான தயார் நிலையில் இருந்ததால் இரண்டாம் அலையின் போது அவர்களுக்குத் தேவையான அளவு மருத்துவ ஒட்சிசனைத் தயாரித்து உபரியை மற்ற மாநிலங்களுக்கு அனுப்பவும் முடிந்தது.

இந்தியா தற்போது இருமுனைத் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். முதலில், குளறுபடி செய்யப்பட்ட தடுப்பூசித் திட்டத்தை சீர் செய்து அதை உரிய வேகத்தில் நடத்த வேண்டும். இதற்கு இரண்டு தடைகளை உடைக்க வேண்டும். முதலில் தடுப்பூசிகள் சப்ளையை அதிகரிக்க வேண்டும், சில தடுப்பூசிகளை வெளிநாட்டிலிருந்து வாங்க வேண்டும். இரண்டாவதாக, தடுப்பூசி வினியோகத் திட்டத்தினைத் துவக்க வேண்டும். இது நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது, பொது மருத்துவ சேவை, முதல்நிலை மருத்துவ மையங்கள் அதிகம் இல்லாது தவிக்கும், இந்திய மக்கள் தொகையில் 65 சதவீதமாக இருக்கும் (80 கோடி) கிராமப்புற மக்களுக்கும் சென்று சேருமாறு அமைக்கப் பட வேண்டும். உள்ளூர் மக்களை நன்கு அறிந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுடன் அரசு இணைந்து செயல்பட்டு தடுப்பூசி சமமான அளவு கிடைக்கச் செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, தடுப்பூசிகள் போடப்படும் அதே நேரத்தில் கோவிட் தொற்றுப் பரவலை முடிந்த அளவுக்குக் குறைக்க வேண்டும். தொற்று எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் இந்த நேரத்தில், அரசு சரியான புள்ளி விவரங்களைச் சரியான நேரத்தில் வெளியிட வேண்டும்; என்ன நடக்கிறது, தொற்றினைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் (முழு ஊரடங்கு உட்பட) என்பதை மக்களிடம் வெளிப்படையாகவும் கறாராகவும் சொல்ல வேண்டும். கொரோனாவின் புதிய வடிவங்களைக் கண்டறிந்து, புரிந்து கொண்டு, மேலும் புதிய வடிவங்கள் உருவாகாமல் தடுப்பதற்காக கொரோனா மரபணு வரிசை ஆய்வை விரிவாக்க வேண்டும்.

மாநில அரசுகள் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கத் துவங்கி விட்டன. ஆனால் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப் பிடிப்பது, பெரும் கூட்டமாகக் கூடாமலிருப்பது, தாமாக முன் வந்து தனிமைப் படுத்திக் கொள்வது, பரிசோதனை செய்து கொள்வது ஆகியவற்றின் அவசியம் குறித்து மக்களுக்கு விளக்கும் பணியைச் செய்வதில் மத்திய அரசுக்கு அத்தியாவசியமான பங்கு இருக்கிறது. விமரிசனத்தையும் திறந்த மனதுடனான விவாதத்தையும் முடக்க மோடி செய்யும் முயற்சிகள் மன்னிக்க முடியாதவை.

ஓகஸ்டு 1ஆம் தேதிக்குள் இந்தியாவில் 10 லட்சம் கோவிட் மரணங்கள் நிகழக் கூடும் என மருத்துவக் குறீயீடுகளை அளக்கும் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. அப்படி நடந்தால் தானாகவே வருத்திக் கொண்ட ஒரு தேசியப் பேரழிவிற்கு மோடி அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் ஆரம்பத்தில் பெற்ற பலன்களை இந்தியா விரயம் செய்து விட்டது. கோவிட் தொற்றைக் கட்டுப் படுத்துவதற்காக இந்திய அரசு உருவாக்கிய தேசியக் குழு ஏப்ரல் மாதம் வரை கூடவே இல்லை. இதன் விளைவுகள் நம் கண்ணின் முன்னால் நிற்கின்றன. பெரும் நெருக்கடியான இந்த நேரத்தில் இந்தியா தன் எதிர்வினையை மாற்றிக் கட்டமைக்க வேண்டும். அரசாங்கம் தன் தவறுகளை ஒப்புக் கொண்டு, பொறுப்பு மிக்க தலைமையையும் வெளிப்படையான செயல்பாட்டையும் உருவாக்கி, அறிவியலை மையப்படுத்திய ஒரு பொது மருத்துவ எதிர்வினையை ஆற்றுவதைப் பொறுத்துதான் அதன் வெற்றி இருக்கும்.

தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

Exit mobile version