யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம், ‘இலங்கை வவுனியா பல்கலைக்கழகம்’ என அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸின் கையொப்பத்துடன், இதுதொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (08) வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர், எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு, ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல், இலங்கை வவுனியா பல்கலைக்கழகம் என்ற பெயர் அமுலாகும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட கற்கைகளில் விசேடத்துவத்தை அபிவிருத்தி செய்யும் இயல்திறனுடன் திடமானவோர் அடிப்படையைக் கொண்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் இலக்குடன் பரந்தளவிலான தொடர்புபட்ட கற்கைகளுடன் சம்பந்தப்பட்ட கற்கைநெறிகளை இந்தப் பல்கலைக்கழகம் அபிவிருத்தி செய்தல் வேண்டும்.
உள்நாட்டு மூலவள அடிப்படையினுள் விழுமியத்தை உருவாக்குதல் பற்றி மாணவர்களுக்குக் கல்வி புகட்டுவதன்மீது, இந்தப் பல்கலைக்கழகம் கூடுதலான அழுத்தத்தைக் கொண்டிருத்தல் வேண்டும் என்று வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாபார கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானம் பீடம், தொழில்நுட்ப கற்கைகள் பீடம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக, குறித்த கற்கைகளின் உயர் கற்கைகளை வழங்கும் பொருட்டு, வவுனியா பல்கலைக்கழகம் தாபிக்கப்படுகின்றது.
வியாபரம் கற்கைகள் பீடம்:
- நிதி மற்றும் கணக்கியல் துறை
- ஆங்கில மொழி கற்பித்தல் துறை
- கருத்திட்ட முகாமைத்துவத் துறை
- மனிதவள முகாமைத்துவத் துறை
- சந்தைப்படுத்தல் முகாமைத்துவத் துறை
- வியாபாரப் பொருளியல் துறை
- முகாமைத்துவ மற்றும் தொழில் உரிமையாண்மைத் துறை
பிரயோக விஞ்ஞானம் பீடம்:
- பெளதிக விஞ்ஞானத் துறை
- உயிரியல் விஞ்ஞானத் துறை
தொழில்நுட்ப கற்கைகள் பீடம்:
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் துறை
வவுனியா வளாகம் 1997ஆம் ஆண்டு (மார்ச் 26: 968/6 வர்த்தமானி அறிவிப்பின் மூலம்) உருவாக்கப்பட்டதோடு, அதற்கமைய ஜூலை 31ஆம் திகதி முதல் அவ்வர்த்தமானி அறிவிப்பு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.