கொரோனா இரண்டாவது அலையின்போது பலர் உதவி கிடைக்காமல் உயிரிழந்தனர். தற்போது மூன்றாவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக இருக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் டுவிட்டரில் (Twitter) ட்ரெண்ட் (Trend) ஆனது.
ஒட்சிசன் கிடைக்காமல் மக்கள் திண்டாடியது, உயிர்களை இழந்து உறவினர்கள் கதறியது என இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை ஏற்படுத்திய தாக்கம் அனைவரும் அறிந்ததே. தற்போது நோய் கட்டுப்பாட்டிற்கு வந்தாலும் கொரோனா வைரஸ் உருமாறி வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் செப்டம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல், இணையதளம் வாயிலாக பேட்டியளித்தார்.
அவர் கூறுகையில், ‛‛மோசமான நிர்வாகத்தால் கொரோனா முதல், இரண்டாவது அலையில் நிறைய இழப்பு ஏற்பட்டது. அடுத்து மூன்றாவது அலையும் வரும் என மக்களுக்கு தெரியும். இதன் காரணத்தை கண்டறிய வேண்டும். வைரஸ் தொடர்ந்து உருமாற்றம் பெறுவதால் மேலும் பல அலைகள் வரலாம் என நான் கூறுகிறேன். மக்கள் இந்த சமயம் தடுப்பூசி செலுத்துவது அவசியமாகும். தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு இன்னும் விரைவுப்படுத்த வேண்டும்.
இரண்டாவது அலையின்போது பலர் உதவி கிடைக்காமல், ஒட்சிசன் தேவையை பூர்த்தி செய்யாததால் நிறைய இழப்புகள் ஏற்பட்டன. பிரதமரின் கண்ணீர் கோவிட்டால் உறவினர்களை இழந்தோரின் கண்ணீரை துடைக்காது. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தாமல் மேற்கு வங்க தேர்தல் வேலகளில் பிரதமர் பிஸியாக இருந்தார். 3வது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும். மருத்துவமனைகள், ஒட்சிசன் படுக்கைகளை தயார்படுத்த வேண்டும் என்றார். மேலும் கொரோனா குறித்த வெள்ளை அறிக்கையையும் காங்கிரஸ் சார்பில் வெளியிட்டார்.
கொரோனா 3வது அலை தொடர்பாக ராகுல் எச்சரிக்கை விடுத்த விஷயமும், மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அவர் பேசியதும் டுவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. #RahulExposesModiGovt, #White_Paper ஆகிய ஹேஷ்டாக்குகளில் தேசிய அளவில் ட்ரெண்ட் ஆகின. இதில் பதிவான சிலரின் கருத்துக்களை இங்கு பார்க்கலாம்.
* பல குடும்பங்களில் துக்கத்தை காண முடிந்தது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்தனர். வேலை பறிபோனது, வருமானம் இல்லை, குழந்தைகள் ஆனாதைகள் ஆகினர். ஆனால் அரசாங்கம் அவர்களுக்கு உதவவில்லை. இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசாங்கம் நிதி வழங்கவில்லை. ஆனால் மோடி மஹால் (புதிய பார்லிமென்ட்) கட்ட மட்டும் பணம் செலவிடப்படுகிறது.
* தடுப்பூசி செலுத்தும் பணி மிகவும் மெதுவாக நடக்கிறது. ஆனால் பா.ஜ. ஆளும் மாநிலங்களில் மட்டும் இந்த பணிகள் முழு வீச்சில் நடக்கின்றன. பா.ஜ., பொருத்தமட்டில் கோவி தடுப்பூசி செலுத்தப்படுவது கூட ஒரு மார்க்கெட்டிங்காக தான் பார்க்கப்படுகிறது. நாட்டின் சுகாதார விஷயத்தில் எமெர்ஜென்ஸி (Emergency) நிலவுகிறது என அவர்கள் உணரவில்லை.
* ராகுல் கூறுவது சரி தான் பா.ஜ., கூற வேண்டாம். ஆனால் மக்கள் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராகுங்கள் என அவர் கூறுவதை ஏற்கலாமே.
* மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றனர். ராகுல் கூறுவதையும் அரசியலாக பார்க்காமல் மக்களை காப்பாற்ற உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
* கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலை வந்தபோது ராகுல் எச்சரித்தார். ஆனால் மோடியும், அவரின அரசும் புறக்கணித்தனர். இப்போதாவது ராகுல் சொல்வதை கேட்டு மூன்றாவது அலைக்கு மத்திய அரசு தயாராக வேண்டும்.
இப்படி பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.