முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரிஷாட் பதியுதினின் இல்லத்திற்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஒக்டோபரில் டயகம 3ம் பிரிவில் இருந்து 15 வயது சிறுமி வீட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார். கடந்த 03 ஆம் திகதி தீக்காயங்களுடன் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 15 ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இன்று (19.07.2021) தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனின் வீட்டுக்கு வேலைக்கு சென்று மர்மமான முறையில் உயிரிழந்த டயகம சிறுமிக்கு நீதி வேண்டி பல்வேறு முறைபாடுகளை செய்துள்ளதாகவும் இவருக்கு நீதி கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் மனித அபிவிருத்தி தாபனத்தின் பணிப்பாளர் கலாநிதி சிவபிரகாசம் தெரிவித்தார்.
தலவாக்கலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
மலையக தோட்டப்பிரதேசங்களில் சிறுவர்கள் தொழிலுக்கு அமர்த்தப்படுவது அல்லது அனுப்புவது அல்லது அதற்கு உடந்தையாக இருப்பது மீண்டும் இந்த கொவிட் காலப்பகுதியில் அதிகரித்து இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஸ்கெலியா முல்லுகிராமத்தை சார்ந்த சுமதி – ஜவராணி ஆகிய இரு சிறுமிகளினுடைய மறைவானது மலையகத்தில் மாபெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. இதன் மூலம் சிறுவர்களை அடிமைகளாக தொழிலுக்கு அமர்த்துவது குறைவடைந்து சென்றது. மனித அபிவிருத்தி தாபனம் சிறுவர் தொழிலுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகளையும், விழிப்புணர்வூட்டல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது என்கிறார்.
வெளியிடங்களில் பணிபுரியச் செல்கின்ற மலையக சிறார்களுக்கு ஏற்படும் அநீதிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு சமூகத்தில் சகல மட்டங்களிலும் உள்ள அனைருக்கும் இருக்கின்றது. எனவே, அவரவர் விருப்பத்துக்கு ஒருவரையொருவர் குறை கூறாமலும் விமர்சிக்காமலும் இணைந்து குரல்கொடுக்க வேண்டியது அவசியமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
கொழும்பில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டு தீக்கிரையாகியுள்ள டயகம தோட்டத்தைச் சேர்ந்த சிறுமி ஹிஷாலினியின் மீது நாட்டு மக்களதும் ஊடகங்களினதும் கவனம் வெகுவாகத் திரும்பியுள்ளது. இந்த நிலைமைக்கு குடும்பத்தின் வறுமைதான் பிரதான காரணமாக இருந்தாலும் சிறுமிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அநீதிக்கு சரியான தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். அத்தோடு, மக்கள் பிரதிநிதியான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பதினாறு வயது சிறுமி வேலைக்கு அமர்த்தபட்டிருந்தமை கண்டிக்கத் தக்கதாகும்.
மலையகத்தில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது சர்வ சாதரணமான விடயமாக ஒரு காலத்தில் இருந்து வந்துள்ளது. பத்திரிகை விளம்பரங்களில் கூட வீட்டு வேலைக்கு மலையகத்தவர் விரும்பத் தக்கது என்று போடப்பட்டிருக்கும். இதற்கு எதிராக “பிரிடோ” முதலான அமைப்புகள் விழிப்புணர்வுத் திட்டங்களை மக்கள் மத்தியில் கொண்டு வந்ததன் ஊடாக இந்த நிலைமை ஓரளவு குறைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. எனினும், மீண்டும் பழைய நிலைமை தோன்ற ஆரம்பித்துள்ளது.
கொழும்பில் பணிபுரிந்த இளைஞர், யுவதிகள் மர்மமான முறையில் மரணமடைந்த செய்திகள் கடந்த காலங்களில் வெளிவந்திருந்தாலும் அவை தொடர்பான முறையான விசாரணைகள் எவையும் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால், டயகம தோட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் மரணம் தொடர்பான அறிக்கை நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவது ஓரளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மலையகத்தில் உள்ள சிறுவர்களை வேலைக்கு கொழும்புக்கு அழைத்துச் சென்று கமிஷன் பெறுகின்ற தரகர்கள் எல்லா இடங்களிலும் இருக்கின்றார்கள். எந்த விதமான அனுமதிப் பத்திரமும் இல்லாமல் ஏஜண்டுகளாக செயற்பட்டு வருகின்ற தரகர்களுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுத்து தடை செய்ய வேண்டும். அதேபோல், சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு மாத்திரம் அல்லாது அனைவருக்கும் இருக்கின்றது என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒரு பிரச்சினை தலைதூக்கும் போது அதைப் பற்றி பேசி விவாதிப்பதும் அறிக்கை விடுவதும் பின்னர் மறந்து போய் விடுவதும் வழக்கமாக இருந்து வருகின்றது. அந்த நிலைமை டயகம சிறுமி ஹிஷாலினி விடயத்திலும் இருந்து விடக் கூடாது. சமூக வலைத் தளங்கள் உட்பட சமூகத்தில் உள்ள சகலரும் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்து நீதி கிடைக்க பாடுபட வேண்டும். இந்தச் சிறுமியின் மரணம் சமூகத்துக்கு ஒரு படிப்பினையாகவும், எதிர்காலத்துக்கு எச்சரிக்கை விடுவதாகவும் அமைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.