இலங்கையின் அரசியல் வரலாற்றைப் பொறுத்த வரையில், அவசரகாலச் சட்டம் என்பது புதியதொரு விடயமல்ல. 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றது. இலங்கை சுதந்திரம் பெற்று 73 வருடங்களாகின்றன. சுமார் 35 வருடங்கள் அதாவது சுதந்திரத்தின் பின்னரான காலப் பகுதியில் சுமார் அரைவாசிக் காலம் இந்நாட்டில் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றது.
காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வந்த பின்னரும் நாடு சாதாரண நிலையில் இருக்கவில்லை என்பதையே இது சுட்டிக் காட்டுவதாக உள்ளது. அந்தந்த காலகட்டத்தைக் கையாள்வதற்கு அரசுக்கு மேலதிக அதிகாரங்கள் தேவைப்பட்டமையால் ஆட்சியாளர்கள் அவசரகாலச் சட்டத்தை நாட்டின் நலன் கருதி பயன்படுத்தியுள்ளார்கள் என்றே கூற வேண்டும். இதன் காரணமாக அவ்வப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் அவசரகாலச் சட்டத்தை பயன்படுத்தி வந்துள்ளன. அதாவது நிறைவேற்று அதிகாரத்தின் கரங்களை குறிப்பாக சட்டவாக்கம் மற்றும் நடைமுறைப்படுத்தல்களைப் பலப்படுத்துவதற்காக அது பயன்படுத்தப்பட்டுள்ளது. அவசரகாலச்சட்ட விதகள் அரசியலமைப்பைத் தவிர, ஏனைய சட்டங்களை விட உயர்வானதாகக் காணப்படுகின்றமை இதற்கான காரணமாகும்.
ஏற்கனவே குறிப்பிட்டது போல இலங்கையில் சுமார் 35 வருடங்கள் அவசரகாலச் சட்டம் நடைமுறையில் இருந்த போதும், இது பெரும்பாலும் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் சிவில் கலகங்களைத் தடுப்பதற்குமே அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவையின் விநியோகத்தை முகாமைத்துவம் செய்வதற்காக அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படுவது இது முதற் தடவையாக இல்லாத போதும், கடந்த காலங்களில் இருந்த சூழலும் தற்பொழுது பயன்படுத்தப்படுவதற்குமான சூழலும் வித்தியாசமாக உள்ளன. இதனால் அவசரகாலச் சட்டம் இம்முறை பயன்படுத்தப்படுவது ஒரு தனித்துவமானதாகவே பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டத்தை அமுலுக்குக் கொண்டு வருவதற்கான அதிகாரம் முழுமையாக ஜனாதிபதியிடமே காணப்படுகிறது. இருந்த போதும் அவரசகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் அது பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இது ஒரு மாதத்துக்குள் நீக்கப்படா விட்டால், புதியதொரு வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக நீடிக்கப்பட வேண்டும்.
அதேநேரம், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்ட ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானம் எந்தவொரு நீதிமன்றத்திலும் சவாலுக்கு உட்படுத்தப்பட முடியாததாகும்.
இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 02வது பிரிவினால் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்குவதற்காக அவசரகால சட்ட ஒழுங்குவிதி அமுலுக்குக் கொண்டு வருவதாக கடந்த 30ஆம் திகதி வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தார். இது கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்திலும் அங்கீகரிக்கப்பட்டது.
அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 132 வாக்குகளும், எதிராக 51 பேரும் வாக்களித்திருந்தனர். அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த 41 உறுப்பினர்கள் வாக்கெடுப்பின் போது கலந்து கொள்ளவில்லை.
ஏற்கனவே அறிவித்திருந்தது போல பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் உறுப்பினர்கள் அரவசரகாலச் சட்டத்துக்கு எதிராக வாக்களித்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியின் ஒரேயொரு பாராளுமன்ற உறுப்பினரான ரணில் விக்கிரமசிங்க வாக்களிக்கவில்லை.
நாடு கொவிட்-19 என்ற உலகத் தொற்று நோய்க்கு உள்ளாகியிருக்கும் சூழ்நிலையில் பல்வேறு சவால்கள் ஏற்கனவே காணப்படும் போது அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, சீனி, பால்மா போன்றவற்றின் விலைகள் கட்டுப்பாடற்ற விதத்தில் அதிகரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன், அவற்றுக்கான தட்டுப்பாடும் சந்தையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொவிட் சூழலால் ஏற்பட்டுள்ள நாணயமாற்று வீதப் பிரச்சினை என்பனவும் நிலைமையை மோசமடையச் செய்துள்ளது. குறிப்பாக பாரிய மொத்த விநியோகத்தர்களால் போலியாக ஏற்படுத்தப்பட்ட இந்தத் தட்டுப்பாட்டினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பைத் தடுக்கும் நோக்கிலேயே இம்முறை அவசரகாலச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதியினால் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருப்பதால் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் தடையற்ற விநிநோயகத்தை உறுதிப்படுத்த முடிவதுடன், பொருட்களைப் பதுக்குபவர்களுக்கு எதிராக அதிகூடிய தண்டப்பணத்தை அறவிடுவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது.
உத்தரவாத விலையின் கீழ் பெருந்தொகையான அத்தியாவசியப் பொருட்களை மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கான விநியோகத்தை இந்தச் சட்டம் உறுதிப்படுத்துகிறது. அது மாத்திரமன்றி புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் எம்.டி.எஸ்.பி.நிவுன்ஹெலவுக்கு அத்தியாவசிய சேவையை சரியான முறையில் பேணுவதற்கு கூடுதலான அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன.
இந்த அடிப்படையில் போலியாக ஏற்படுத்தப்பட்ட உணவுப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் அரசாங்கத்தினால் சீனிக்கு அதிகூடிய சில்லறை விலை நியமிக்கப்பட்டிருப்பதுடன், பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகையிலான சீனி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்த களஞ்சியங்களிலிருந்தும் மீட்கப்பட்டது.
அதேநேரம், 2003ஆம் ஆண்டு நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தைத் திருத்துவதற்கான யோசனையையும் அரசாங்கம் பாராளுமன்றத்தில் முன்வைத்துள்ளது. இதன் ஊடாக நுகர்வோருக்குக் கிடைக்கும் அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதிப்படுத்துவது மற்றும் நுகர்வோருக்குத் தீங்கிளைக்கும் வகையில் செயற்படும் வியாபாரிகளுக்கு எதிராக கடுமையான தண்டனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புக்கள் அரசாங்கத்துக்கு கிடைக்கும்.
இந்தச் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுமாயின் தவறிழைக்கும் வர்த்தகர்கள் மற்றும் கம்பனிகளிடம் 100,000 ரூபா முதல் 10 மில்லியன் ரூபா வரை நீதிமன்றத்தின் ஊடாகத் தண்டப்பணம் அறவிட முடியும். இவ்வாறான நடைமுறைகள் எதிர்காலத்தில் போலியாக ஏற்படுத்தப்படக் கூடிய தட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதற்கு அரசாங்கத்துக்கு உறுதுணையாகவிருக்கும்.
இவ்வாறான பின்னணியில் அவரசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி உணவு விநியோகத்தை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் யோசனைக்கு எதிர்க் கட்சியினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தி அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் அடிப்படை உரிமையைக் கோரி நடத்தப்படுகின்ற போராட்டங்களை நசுக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும் என எதிர்க் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
குறிப்பாக தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்குவதே இச்சட்டம் அமுல்படுத்தப்பட்டதன் நோக்கம் என அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
எனினும், மக்களின் நலன்களுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதே தவிர, எதிரணியினரின் போராட்டங்களையோ அல்லது செயற்பாடுகளையோ முடக்குவதற்காக இது கொண்டு வரப்படவில்லையென ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்தனர். கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அரசுக்கு எதிரான போராட்டங்களில் எந்தவிதமான பலத்தையோ அல்லது அதிகாரத்தையோ ஜனாதிபதி பயன்படுத்தவில்லை.
எவர் மீதும் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையோ அல்லது தடியடிப் பிரயோகங்களையோ மேற்கொள்ளவில்லை. கொவிட்-19 தொற்றுநோய் சூழல் பற்றியும் கவனத்தில் கொள்ளாது, எதிர்க் கட்சியினர் பொறுப்பற்ற விதத்தில் ஆயிரக்கணக்கானவர்களை வீதியில் இறக்கிப் போராட்டங்களை நடத்திய போதும் அரசாங்கம் அவற்றைத் தடுப்பதற்கு எந்தவிதமான பலத்தையும் பயன்படுத்தவில்லை.
இவ்வாறான நிலையில் தற்பொழுது அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி அதன் ஊடாக எவரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய தேவை அரசுக்குக் கிடையாது என்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலரும் பாராளுமன்ற விவாதத்தில் தெரிவித்திருந்தனர்.
அதேநேரம், ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி மக்களை ஒடுக்குவதற்கு முயற்சிக்கிறது என்றதொரு சர்வதேச பிம்பத்தை ஏற்படுத்துவதற்கு சில தமிழர் தரப்பு அரசியல்வாதிகள் முயற்சிப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் அவசரகாலச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது. இதன் போது சர்வதேசம் செல்லாதவர்கள் ஏன் இப்பொழுது மாத்திரம் இதனை பொருட்படுத்துகின்றனரென்ற வினாவும் எழுகின்றது. இந்த நாடகம் அவர்களின் அரசியல் நிலைப்புக்காக என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தற்பொழுது நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் மனித உரிமைகளுக்கு அப்பால் மக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் உணவு என்பனவே தாக்கத்தைச் செலுத்தும் பிரச்சினைகளாக உள்ளன. மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வினைப் பெற்றுக் கொடுக்க முன்வராத இவ்வாறான தரப்பினர் வெறுமனே சர்வதேச தரப்புக்களுக்காக கருத்துக்களைத் தெரிவிப்பதில் எந்தவித பயனும் இல்லை.
-தினகரன் வாரமஞ்சரி
2021.09.12