காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதக் குழுக்களினால் சிறுபான்மையினரும், புலம்பெயர் தொழிலாளர்களும் குறிவைத்துத் தொடர்ந்து கொல்லப்பட்டு வருவது ஒன்றிய அரசினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பிரச்சனைகளை மேலும் மோசமானவைகளாக மாற்றி இருக்கின்றன. பள்ளி ஆசிரியர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களைக் குறிவைத்துக் கொலை செய்திருப்பது மக்கள் மத்தியில் மத அடிப்படையில் பிளவினை விரிவுபடுத்திட வேண்டும், அவர்களை விரட்டியடிக்கப்படுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என்கிற கெடுநோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவைகளே என்பது தெளிவாகத் தெரிகிறது.
2019 ஆகஸ்டிலிருந்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக உடைத்து, யூனியன் பிரதேசங்களாக மாற்றி, ஜம்மு-காஷ்மீர் மக்களை, குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் மக்களை ஆட்சி செய்துகொண்டிருக்கும் ஒன்றிய அரசுமீது சுமத்தப்பட்டுள்ள வலுவான குற்றச்சாட்டாகவே இது நடந்திருக்கிறது. நாடு சுதந்திரம் பெற்ற சமயத்தில் இந்தியா என்றும் பாகிஸ்தான் என்றும் பிளவுபட்ட சமயத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழ்ந்துவந்த மக்களும், மதச்சார்பற்ற அரசியல் சக்திகளும் இந்தியாவுடன் இணைந்தனர். அவ்வாறு இணைந்த மக்களையும், மதச்சார்பற்ற அரசியல் சக்திகளையும் பழிவாங்கும் விதத்திலேயே அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவும் 35-ஏ பிரிவும் ரத்து செய்யப்பட்டன, ஜம்மு-காஷ்மீர் மாநிலமும் தகர்க்கப்பட்டது.
மோடி-அமித் ஷா இரட்டையரின் ஆட்சியானது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை மதவெறி அடிப்படையில் பிளவுபடுத்திடுவதற்காக, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வாழும் முஸ்லீம் பெரும்பான்மையினரின் மக்கள்தொகையைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்குக் கிஞ்சிற்றும் தயங்கிடவில்லை. இந்த நிகழ்ச்சிநிரலின் காரணமாகவே காஷ்மீர் பள்ளத்தாக்கில் செயல்பட்டுவரும் பிரதான அரசியல் கட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கைகள் கைவிடப்படாமல் தொடர்கின்றன.
ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துகள் கூறுபவர்கள் ஒடுக்கப்படுவதன் மூலமாகவும், ஊடகங்கள் தங்கள் வாயைத் திறக்கவிடாமல் மூடச் செய்திருப்பதன் மூலமாகவும், அனைத்துப் பகுதிகளிலும் ராணுவத்தினரைக் குவித்து வைத்திருப்பதன் மூலமாகவும் இவ்வாறு பல வழிகளிலும் ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக ரீதியிலான அரசியல் இயக்கங்களுக்கான வாய்ப்பு வாசல்கள் அடித்துவீழ்த்தப்பட்டிருப்பது, பாகிஸ்தானின் ஆதரவுடன் செயல்படும் தீவிரவாத-பயங்கரவாத குழுக்களுக்கு வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட வழியேற்படுத்திக் கொடுத்திருக்கின்றன.
பயங்கரவாதக் குழுக்கள் அப்பாவி மக்களைக் குறிவைத்துத் தாக்குகின்றன என்று கூறப்படுவதில் ஒரு பகுதியே உண்மை இருக்கிறது.
பயங்கரவாதிகள் அனைவரின் நோக்கமும் இப்பகுதியில் காஷ்மீரிகள்-காஷ்மீரிகள் அல்லாதவர்கள் ஆகியவர்களுக்கு இடையேயான பிளவினை மத அடிப்படையில் விரிவுபடுத்தி ஆழப்படுத்திட வேண்டும் என்பதேயாகும். மோடி அரசாங்கத்தின் பிளவுவாத மற்றும் இந்துத்துவா அடிப்படையிலான கொள்கைகளும் மக்களை மேலும் தனிமைப்படுத்தி, இவ்வாறாக தீவிரவாத சக்திகளுக்கு உதவி செய்துகொண்டிருக்கின்றன. இத்தகைய போக்கை எதிர்த்து முறியடித்திட ஜனநாயக அரசியல் நடவடிக்கை எதுவும் இங்கே இல்லை.
இங்கே தீவிரவாத மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து இருந்துவந்தபோதிலும், இங்கே சீர்கேடடைந்துகொண்டிருக்கும் நிலைமையைத் தடுத்து நிறுத்திட ஒரே வழி, ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தைத் திரும்ப அளிப்பதும், அரசியல் நடவடிக்கைகளுக்கு இருந்துவரும் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்குவதும், அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதும், ஊடகங்களின் உரிமையை மீளவும் அளிப்பதுமேயாகும். அப்போதுதான் இங்கே ஒரு ஜனநாயக சூழல் ஏற்படும், அதன்மூலமாக தீவிரவாத சக்திகள் தனிமைப்படுத்தப்படும், பயங்கரவாதிகளின் வன்முறைகளைச் சமாளித்திட முடியும்.
ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை, நாட்டின் இதர பகுதிகளில் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களிலிருந்து தனித்துப் பார்க்கக் கூடாது. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் தங்களுடைய முஸ்லீம் எதிர்ப்பு நிகழ்ச்சிநிரலை நாடு முழுதும் திட்டமிட்டு நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாட்டின் சில இடங்களில் நடைபெறாத நாட்களே இல்லை என்று கூறலாம். அதேபோன்றே சமூக ஊடகங்களிலும் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்கள் நாள்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பாஜக ஆளும் மாநிலங்களில், இதுபோன்று வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்துத்துவா அமைப்புகளுக்கு ஆட்சியினரால் பாதுகாப்புகள் அளிக்கப்படுகின்றன. கர்நாடகா போன்ற சில மாநிலங்களில், கிறித்தவத் தேவாலயங்கள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும் கூட்டங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவ்வாறு ஆளும் கட்சியினரின் சிறுபான்மையினருக்கு எதிரான நிகழ்ச்சி நிரலும், இந்துத்துவா அமைப்புகளும் இதேபோன்றதொரு நிகழ்ச்சிநிரலை காஷ்மீரில் செயல்பட்டுக்கொண்டிருக்கும் அடிப்படைவாத-தீவிரவாதக் குழுக்களுக்கு அளிக்கிறது.
தெற்கு ஆசிய நாடுகளில் மதவெறி அரசியலும், மத அடிப்படைவாதமும் ஒன்றை மற்றொன்று ஊட்டி வளர்ப்பவை என்பதற்கு சமீபத்தில் வங்க தேசத்தில் இந்து சமூகத்தினருக்கு எதிராகவும், கோவில்களுக்கு எதிராகவும் மத அடிப்படைவாத சக்திகள் தாக்குதல்கள் நடத்தியிருப்பது சங்கடங்களை ஏற்படுத்தும் நினைவூட்டுபவை களாகும்.
துர்கா பூஜை கொண்டாட்டங்களின்போது சமூக ஊடகங்களில் குரானைப் பயன்படுத்தி இந்துக்களுக்கு எதிராக மதவெறித் தீயை விசிறிவிடவேண்டும் என்பதற்காகத் திட்டமிட்டு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றே தெரிகிறது. இந்த சமயத்தில் வங்க தேசம் முழுவதும் 17 இடங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் ஆறு பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். ஷேக் ஹசினா அரசாங்கம் மதவெறி அடிப்படையில் கலகங்களை விளைவிப்போருக்கு எதிராக உறுதியாக நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்திருக்கிறார். நாடு முழுவதும் நூற்றுக்கணக்கானவர்களை ஏற்கனவே கைது செய்திருக்கிறார். ஆனாலும், வங்க தேசத்தில் உள்ள விமர்சகர்கள், இந்தியாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல்கள்தான் வங்க தேசத்திற்குள் செயல்பட்டுவரும் மதஅடிப்படைவாத சக்திகளை எண்ணெய் ஊற்றி வளர்த்துக்கொண்டிருக்கிறது என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.
தெற்கு ஆசியா முழுவதுமே மதச் சிறுபான்மையினர் மற்றும் இனச் சிறுபான்மையினர், அங்கேயுள்ள பெரும்பான்மை இனத்தினரின் அடிப்படைவாத மற்றும் மதவெறிக் குழுக்களின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றார்கள். இலங்கையில், புத்தமத சிங்களப் பேரினவாதிகள் சிறுபான்மையினரைக் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கின்றனர். பாகிஸ்தானில், ஷியாஸ் போன்ற முஸ்லீம்களிலேயே சிறுபான்மையினராக இருக்கக்கூடியவர்கள் உட்பட சிறுபான்மையினர் அனைவரும் எந்த நேரமும் தாங்கள் தாக்கப்படக்கூடும் என்ற அச்சத்துடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானத்தில் ஆட்சிக்கு வந்திருக்கும் தலிபான்களால், இதர மதத்தினரையும் மற்றும் சிறுபான்மை இனத்தினரையும் தங்களுடைய நாட்டின் மக்களாகப் பார்க்க முடியாது.
மதவெறியையும், இன வெறியையும், பிராந்திய வெறியையும் ஊட்டி வளர்த்ததில் தெற்கு ஆசிய நாடுகளில் ஆட்சியில் உள்ள ஆளும் வர்க்கங்களின் கட்சிகளுக்குப் பொறுப்பு உண்டு. இவற்றில் இந்தியா மிகவும் பெரிய மற்றும் மிகவும் வலுவான நாடாகும். இங்கே பின்பற்றப்பட்டுவரும் இந்துத்துவா மதவெறியும், இந்து தேசியவாதமும் சிறுபான்மையினருக்கு எதிராக ஏவிடும் வன்முறை வெறியாட்டங்கள் அதற்கிணையாக அண்டை நாடுகளில் இருந்துவரும் மதம், சமூகம் மற்றும் கலாச்சாரப் பாரம்பர்யங்களின் அடிப்படையில் தவிர்க்க முடியாத விதத்தில் பிரதிபலித்திடும். அனைத்து மக்களுக்கும் சமமான வளர்ச்சியை அளிக்கக்கூடிய, அனைவரின் நலன்களிலும் கவனம் செலுத்தக்கூடிய அரசியலைக் கொண்ட மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக விழுமியங்களை உறுதியுடன் மேற்கொள்வதன் மூலமாக மட்டுமே தெற்கு ஆசியா முழுவதற்கும் சிறந்ததொரு எதிர்காலத்திற்கான மற்றும் முன்னேற்றத்திற்கான வழியை ஏற்படுத்திட முடியும்.
-பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்: Communalism and Fundamentalism in South Asia
தமிழில்: ச.வீரமணி
ஒக்ரோபர் 21, 2021