Site icon சக்கரம்

மீண்டும் ஐரோப்பாவில் மையம் கொள்ளும் கோவிட் – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை, நான்காவது அலையா இது?

ஐரோப்பாவில் பரவலாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அக்கண்டம் மீண்டும் கொரோனாவின் மையமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

ஐரோப்பா கண்டம், வரும் பெப்ரவரி மாதத்துக்குள் மேலும் ஐந்து லட்சம் மரணங்களைச் சந்திக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார் ஐரோப்பாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஹான்ஸ் க்ளூக்(Dr Hans Henri P. Kluge).

கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிப்புக்கு போதுமான அளவுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததை ஒரு காரணமாக கூறினார் அவர்.

“நாம் நம் செயல்திட்டத்தை மாற்ற வேண்டும், கொரோனா அதிகம் பரவிய பின் எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக, பரவலைத் தடுக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என்றார் ஹான்ஸ்.

கடந்த சில மாதங்களில் ஐரோப்பா முழுக்க தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வேகம் குறைந்துள்ளது. ஸ்பெயினில் 80 சதவீதம் மக்கள் இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் முறையே 68 மற்றும் 66 சதவீதத்தினர் மட்டுமே இரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் எண்ணிக்கை இன்னும் குறைவாக உள்ளது. ஒக்ரோபர் 2021 நிலவரப்படி, ரஷ்யாவில் 32 சதவீதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு பொது சுகாதார தளர்வுகளும் ஒரு காரணமென குற்றம்சாட்டினார் ஹான்ஸ். உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்தில் மத்திய ஆசியாவின் சில நாடுகளுட்பட மொத்தம் 53 நாடுகள் உள்ளன. இப்பிராந்தியம் இதுவரை 14 லட்சம் மரணங்களை பதிவுசெய்துள்ளது.

ஐரோப்பாவில் போதுமான கொரோனா தடுப்பூசி விநியோகம் மற்றும் சாதனங்கள் இருந்தும், கடந்த நான்கு வார காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 சதவீதம் அதிகரித்துள்ளது என கொரோனாவுக்கான உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ் கூறினார்.

ஐரோப்பாவின் இந்த கொரோனா தொற்று எண்ணிக்கை உயர்வு, உலக நாடுகளுக்கான எச்சரிக்கை மணி என அவருடன் பணியாற்றும் முனைவர் மைக் ரயான் (Dr Mike Ryan) கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஜெர்மனியில் 34,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை 37,000க்கும் அதிகமாக உள்ளது. கொரோனா நான்காவது அலை இறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என்றும், சுகாதார அமைப்பின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.

“நாம் இப்போதே சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை எனில், இந்த நான்காவது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும்” என ஜெர்மனியின் ஆர் கே ஐ இன்ஸ்டிட்டியூட்டைச் (RKI institute) சேர்ந்த லோதர் வெய்லர் (Lothar Wieler) கூறினார்.

ஜெர்மனியில் 30 லட்சத்துக்கும் அதிகமான, 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இன்னும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பே ஹான்ஸ் குறிப்பிட்டது போல கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜெர்மனியோடு மட்டும் முடிந்துவிடவில்லை.

கடந்த வாரத்தில் ரஷ்யாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை திடீரென அதிகரித்தது. ரஷ்யாவில் 8,100 பேரும், உக்ரைனில் 3,800 பேரும் உயிரிழந்தனர். இருநாடுகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. உக்ரைனில் கடந்த 24 மணி நேரத்தில் 27,377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு.

ரோமானிய நாட்டில் கடந்த 24 வாரத்தில் இந்த வாரத்திலேயே அதிகமாக 591 பேர் உயிரிழந்துள்ளனர். ஹங்கேரியில் தினசரி கொரோனா பாதிப்பு கடந்தவாரத்தில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

ஹாலந்தில் ஒரே வாரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 31% அதிகரித்ததால் மீண்டும் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி போன்ற கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த உள்ளதாகக் கூறியுள்ளது.

லாட்வியாவில் வரலாறு காணாத அளவுக்கு கொரோனா பரவுவதால் திங்கட்கிழமை முதல் மூன்று மாத காலத்துக்கு அவசரநிலையை அறிவித்துள்ளது.

குரேஷியாவில் வியாழக்கிமை (04.11.2021) 6,310 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டனர், இது அந்நாட்டின் அதிகபட்ச தொற்று எண்ணிக்கை.

ஸ்லோவாகியா தன் இரண்டாவது அதிகபட்ச தொற்று எண்ணிக்கையைக் கண்டது, செக் குடியரசிலும் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இத்தாலியில் 12 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கை அதிகமென்றாலும், கடந்த வாரத்தில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை 16.6% அதிகரித்துள்ளது.

போர்ச்சுகளில் கடந்த செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக கொரோனா தொற்று எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

ஸ்பெயின் போன்ற ஒரு சில நாடுகளில் மட்டுமே கொரோனா தொற்று எண்ணிக்கை பெரிதாக அதிகரிக்கவில்லை.

மூலம்: Covid: WHO warns Europe once again at epicentre of pandemic

2021.11.05

Exit mobile version