–குமார் பிரசாந்த்
93 வயது வரை துடிப்புள்ள காந்திய செயற்பாட்டாளாராக வாழ்ந்து, காந்தியக் கொள்கைகளைத் தன் பாட்டாலும்,பேச்சாலும், கலை நயத்தாலும்,விளையாட்டுகளாலும் தேசம் எங்கும் பரப்பியவர் சுப்பாராவ்! சுமார் 400 சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் சரணடையக் காரணமானவர்! சுமார் 80 ஆண்டுகள் காந்தியப் பணியை கர்மமே கண்ணாகச் செய்து மறைந்த இந்த மகத்தான காந்தியவாதியின் வாழ்க்கை நமக்கு பல ஆழமான செய்திகளைச் சொல்கிறது..!
தமிழகத்தில் சேலத்தை பூர்வீகமாகக் கொண்ட சுப்பாராவ் பிறந்தது பெங்களுரில்! செயல்பட்டது தேசம் தழுவிய அளவில்! மத்திய பிரதேசத்தில் காந்தி ஆஸ்ரமம் வைத்திருந்தார். ராஜஸ்தானில் உடல் நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் 27.10.2021 அன்று மரணமடைந்ததையடுத்து அவரது உடல் அங்குள்ள வினோபா கியான்மந்திரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அஞ்சலி செலுத்திய முதல்வர் அசோக் கெலாட் , ”சுப்பாராவ்ஜியை என் 12 வயதில் அவர் காமராஜரோடு ராஜஸ்தான் வந்ததில் இருந்து அறிவேன். என்னைப் போன்ற சிறுவர்களுக்கு அவர் தான் அந்த நாட்களில் காந்தியத்தை கற்பித்தார்’’ என்றார். சுப்பாராவ் உடல் , மத்திய பிரதேசத்தில் உள்ள மோரெனாவுக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடந்தன!
வீரர்கள் அமரர் ஆகும் காலம் சோகம் கொள்ளும் காலம் அல்ல! சங்கற்பமும், புதிய உத்வேகமும் கொள்ளவேண்டிய காலமாகும். சேலம் நஞ்சுண்டையா சுப்பாராவ் அல்லது சுப்பாராவ் அல்லது அண்ணாஜி (பாயிஜி) என்று நாடு முழுவதும் அறியப்பட்டவர் அமரர் ஆனதும் அப்படிப்பட்ட ஒன்றுதான். அதனால் நம் இதயம் சோகம் அடைந்தாலும், நாம் புதிய உத்வேகம் கொள்ள வேண்டும். அவர் தளர்வுற்று நிராசையுடன் கையறு நிலையில் தன் வாழ்வின் இறுதியை எட்டவில்லை. உற்சாகமாக செயலாற்றிய வண்ணம், பாடிய வண்ணமும், பண் இசைத்த வண்ணமும் முடிவில்லா ஓய்வில் ஆழ்ந்தார். உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரும் ஒருநாள் முடிவில்லா ஓய்வு பெற்றே தீர வேண்டும். அவர் 93 வயதை நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் எந்த நிமிடமும் இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கலாம். ஒக்ரோபர் 27, காலை ஆறு மணிக்கு சுப்பாராவ்ஜி அந்த யதார்த்தத்தை எதிர்கொண்டார். மாரடைப்பு ஏற்பட்டு மூச்சு நின்றது. காந்தியை எழுதிய இன்னொரு எழுத்தாளன் தன் எழுதுகோலுக்கு ஓய்வு கொடுத்துவிட்டான்.
சுப்பாராவ் சுதந்திரப் போராட்ட வீரர். ஆனால் ஆகஸ்ட் 15, 1947 உடன் தன் போராட்டத்தை கைவிடாத வீரர்களில் ஒருவர். விடுதலை என்பதன் பொருளை விரிவாக்கிக் கொண்டே சென்ற போராளிகளில் ஒருவர் அவர். ஒரு காலத்தில் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலைக்காகப் போராடினார். பின்னர் ஆங்கிலேயத்துக்கு மனரீதியாக அடிமைத் தனத்திலிருந்து விடுபடப் போராடினார். பிறகு மனிதநேயமும், சமூக நீதியும் கொண்ட சமுதாயத்தைப் படைக்க வினோபா, ஜெயப்பிரகாஷ் நாராயண் போராடத் துவங்கியபோது தனது அரைக்கால் சட்டையுடன் அதிலும் துடிப்புடன் பங்கேற்றார்.
அவருடைய போராட்ட வரலாறு 13 வயதிலேயே துவங்கிவிட்டது. 1942 இல் காந்திஜி ஆங்கில அரசுக்கு “வெள்ளையனே வெளியேறு” என்று உத்தரவிட்டார். ‘அடிமை நாட்டின் தலைவன் ஒருவன் அடிமைப்படுத்திய நாட்டுக்கு இப்படி உத்தரவிடக்கூடும்’ என்பது அனைவரையும் உலுக்கிவிட்டது. எத்தனையோ போர் எல்லாவற்றையும் பறந்து அந்த இறுதிப் போரில் குதித்தனர். பெங்களூரின் ஒரு பள்ளியில் படித்து வந்த 13 வயது சிறுவன் சுப்பாராவுக்கு என்ன செய்வது என்று தோன்றாததால், பள்ளி சுவற்றிலும், நகரச் சுவர்களிலும் கொட்டை எழுத்துக்களில் குவிட் இண்டியா (வெள்ளையனே வெளியேறு) என்று எழுத ஆரம்பித்தான். சிறுவன் சுப்பாராவ் சிறைக்கு அனுப்பப்பட்டான். பிறகு,, அரசாங்கம் அவனது வயதை உத்தேசித்து அவனை விடுவித்தது. ஆனால் சிறுவன் தன் வேலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவில்லை. விடுதலைக்கு குரல் கொடுத்துக் கொண்டே இருந்தான். 21.10.2021 வரை குரல் கொடுத்துக் கொண்டேயிருந்து மீளா மெளனத்தில் ஆழ்ந்து போனார்.
சுதந்திரப் போரில் ஈடுபடுவது என்றால் அப்போது காங்கிரஸில் சேருவது என்றே பொருள். காங்கிரஸ்காரன் என்றால் விடுதலைப் போராட்ட வீரன் என்று பொருள். காந்தி குல்லாவும், கதராடையும் அணிந்தால் புரட்சிப்படை வீரன்தான். சுப்பாராவும் அதையே செய்தார். காங்கிரஸிலிருந்து காங்கிரஸ் சேவா தளத்திற்குச் சென்றார். அப்போது சேவா தள அமைப்பாளராக இருந்த ஹார்டிகரின் பார்வை இவர் மீது நிலைகொண்டது. அவர் சுப்பாராவை ஒரு ஆண்டு சேவாதளத்திற்காக தரவைத்தார். இளைஞர்களை வைத்து வேலை செய்யும் அற்புத ஆற்றல் அவரிடம் இருந்தது. அவரது கருவிகளே அலாதியானவை. பள்ளியில் அவர் பஜனைகளும், பக்திப் பாடல்களும் பாடுவது வழக்கம். இப்போது சமுதாய மாற்றத்திற்காகப் பாடத் துவங்கினார். இளைஞர்கள் அவரது குரலை எதிரொலித்தனர். இது நாடு முழுவதும் உள்ள இளைஞர்களைச் சென்றடைய வேண்டுமானால் நாட்டின் எல்லா மொழிகளையும் கற்க வேண்டும் என்பதை இப்போது சுப்பாராவ் கண்டார். பல இந்திய மொழிகளை விரைந்து கற்றார். இவ்வளவு மொழிகளில் தேர்ச்சி என்பது மிக அரிது. இதற்கிடையில் எப்போது அவர் காங்கிரஸ், சேவாதளம் ஆகிய உடைகளைக் களைந்து முழு சர்வோதய ஊழியர் ஆனார் என்பது யாருக்கும் புரியாத புதிர்.
1969ஆம் ஆண்டு காந்திஜியின் பிறந்த நாள் நூற்றாண்டு. காந்திஜியின் வரலாற்றையும், செய்தியையும் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சுப்பாராவ் கனவு கண்டார். எப்படிச் செய்வது என்ற கேள்விக்கு சுப்பாராவிடம் பதில் தயாராக இருந்தது. அரசாங்கம் பிராட்கேஜ், மீட்டர்கேஜ் ரயில் வண்டி இரண்டு கொடுத்தால் காந்தி கண்காட்சி ரயில் விடலாம் என்றார். இது ஒரு நூதனமான திட்டம். வருடம் முழுவதும் இப்படி இரு ரயில் வண்டிகள் சுப்பாராவின் யோசனைப்படி நாடு முழுவதும் சுற்றின. முடிந்தவரை சின்னஞ்சிறு ரயில் நிலையங்களிலும் நின்றது. பள்ளி, கல்லூரி மாணவர்களும், ஆண்களும், பெண்களும், திரளாக வந்து இந்த உள்ளாட்சி ரயிலைப் பார்வையிட்டனர். காந்தியைப் புரிந்து கொண்டனர். இதனால் நாடு முழுவதுமுள்ள இளைஞர்களுடன் நேரடி தொடர்பு ஏற்பட்டது. நிர்மாணத்திட்ட ஊழியர்கள் வேண்டும் என்பது காந்திஜியின் கனவு. அப்படித் தொண்டுள்ளம் கொண்ட இளைஞர்களை சுப்பாராவ் திரட்டினார்.
மத்தியப் பிரதேசத்து சம்பல் பள்ளத்தாக்குகளில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இளைஞர்களின் ஆக்கப் பணிகளை உயர்த்த அவருக்கு ஒரு புதிய யோசனை உதயமாயிற்று. அதிலிருந்து பெரிய அளவில் நீண்ட காலத்திற்கு இளைஞர்கள் முகாம் திட்டம் உருவாகி நடக்க ஆரம்பித்தது. நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இளைஞர்களைத் திரட்டினார். பாட்டுப் பாடிய வண்ணம், கரும்பு நிலத்தை வயலாக மாற்றினார். அணைகள், சாலைகள், சிறுசிறு வீடுகள் உருவாயின. பாழ் நிலத்தை வாழ் நிலமாகமாற்றுவதும், மொழிகளினால் இளைஞர்களை ஒன்றுபடுத்துவதும் அவர் வாழ்க்கையின் விரதங்களாக மாறின. அவரது எண்ணங்கள் உள்நாட்டில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் உருப்பெற்று நனவாயின. அவர் ஒரு நடமாடும் பயிலரங்கமானார். இவ்வாறு எண்ணற்ற முகாம்கள் அவர் நடத்தினார். நாட்டின் அமைதி குன்றிய இடங்களைத் தேர்ந்தெடுத்து சவால்கள் மிக்க சூழ்நிலைகளில் அவர் முகாம்கள் நடத்தினார்.
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களின் இருப்பிடம். ஒன்றையயான்று மிஞ்சும் கொள்ளைக்கூட்டங்கள் அங்கே கொலை, கொள்ளைகள் நடத்திவிட்டு இந்தப் பள்ளத்தாக்கில் வந்து மறைந்து கொள்வது வழக்கம். அரசாங்கம் எவ்வளவோ பணம் செலவழித்தும், பெரிய காவல்துறைப் படைகளை அனுப்பியும் குறிப்பிடத்தக்க பயன் ஏதும் விளையவில்லை. பிறகு ஒரு அலை உண்டாயிற்று. ஒரு கொள்ளையர் கூட்டம் வினோபா முன் தன் ஆயுதங்களை சமர்ப்பித்து விட்டு நாங்கள் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தம் செய்ய விரும்புகிறோம். சாதாரண மக்கள் வாழ்வுக்குத் திரும்ப விரும்புகிறோம் என்றது. கொள்ளையர்களின் இந்தச் செயல் நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் சமுதாயவியல் அறிஞர்களைச் சிந்திக்க வைத்தது. வினோபாஜி நட்ட செடி வளர்ந்து ஜெயப்பிரகாஷ் நாராயணிடம் வந்தது. 400க்கும் அதிகமான கொள்ளையர்கள் ஜே.பி.யின் முன் துப்பாக்கிகளை வைத்து கொள்ளையர் வாழ்க்கையிலிருந்து விடுபட்டனர்.
இதில் சிலரைப் பிடித்து கொடுப்பவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது என்பதை இங்கே குறிப்பிட வேண்டும். இவ்வாறு கூட்டாக கொள்ளையர்கள் சரணடைந்தது குற்றவியல் வரலாற்றில் புதுமையான அத்தியாயமாகும். ஜே.பி. ‘இவர்கள் கொள்ளையர்கள் அல்ல. நமது தவறான சமுதாய அமைப்புக்கு எதிராக எழுந்து வழி தவறிப் போனவர்கள். இவர்களை அன்புடன் அரவணைத்தால் இவர்கள் நல்வழிக்குத் திரும்புவார்கள்” என்றார். இவ்வாறு கொள்ளையர்கள் சரணடைந்ததின் பின்னணியில் சுப்பாராவ் முக்கிய பங்காற்றினார். சம்பல் பள்ளத்தாக்கில் மோனரா என்னும் இடத்தில் சுப்பாராவ் ஆசிரம் அமைத்தார். இது கொள்ளையர்கள் சரணடையும் இடமாக விளங்கியது.
சுப்பாராவ் எவ்வளவோ செய்தார். ஒன்று மட்டும் செய்யவில்லை. அவர் தன் உடையை மாற்றவே இல்லை. அதை அரைக்கால் சட்டை, அதை அரைக்கை சட்டை. மிகவும் குளிராக இருந்தால் மட்டும் முழுக்கை சட்டை. உறுதியான கொள்கைப் பிடிப்பும் ஆனால் பழகுவதற்கு பணிவும் இனிமையும் கொண்டவர். காந்திப் பள்ளியின் ஒப்பற்ற மாணவர். இன்று அவர் இல்லை. விடை பெற்றுக் கொண்டுவிட்டார். ஆனால் அவரது பள்ளி புதிய சுப்பாராவ்களுக்காக திறந்தே உள்ளது.