மகத்தான ரசிய பாட்டாளி வர்க்கப் புரட்சி நடந்து 104 ஆண்டுகள் ஓடி விட்டன. இந்த நூறு ஆண்டுகளில் உலகப் பாட்டாளி வர்க்க இயக்கம் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டு விட்டது. ரசியப் புரட்சியிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை என்னென்ன, அதன் இன்றைய பொருத்தப்பாடு என்ன என்பதைப் பார்க்கலாம்.
தொழிலாளி வர்க்க இயக்கம் – 19-ம் நூற்றாண்டிலும், 20-ம் நூற்றாண்டிலும்
ரசிய பாட்டாளி வர்க்கம், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கம் அரசியல் ரீதியாக தனது முத்திரையை பதித்திராத காலத்தில் வளர்ச்சி அடைந்து அதிகாரத்தைக் கைப்பற்றியது.
அந்த காலகட்டத்தில், ஜெர்மனியிலும், பிரான்சிலும், ரசியாவிலும், அமெரிக்காவிலும் சமூக ஜனநாயகக் கட்சிகள் தொழிலாளர் வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும், மார்க்சிய அடிப்படையில் சமூக மாற்றத்துக்கான நெம்புகோலாக அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதிலும் புதிய பாதை அமைக்கும் வகையில் செயல்பட்டு வந்தன. தொழிலாளர் இயக்கங்கள் தொழிற்சங்கங்கள் மூலமாக பணி நிலைமைகளை மேம்படுத்துதல், வேலை நிறுத்தங்களில் ஈடுபடுதல், மார்க்சியத்தை கோட்பாட்டு ரீதியாக வளர்த்துச் செல்லுதல், கட்சி அமைப்பை வலுப்படுத்துதல் போன்ற அம்சங்களில் வளர்ந்து சென்றன.
1917 ரசியப் புரட்சிக்குப் பிந்தைய 50 ஆண்டுகளில் குறிப்பாகவும், 1980-களின் இறுதியில் சோசலிச முகாமின் வீழ்ச்சி வரையில் பொதுவாகவும், உலக அரசியலில் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் வளர்ச்சி பண்புரீதியான மாற்றம் அடைந்து செல்வாக்கு பெற்றிருந்தது. 1990-களுக்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் அது மீண்டும் ஒரு மாற்றத்தை அடைந்துள்ளது. உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிலாளர் வர்க்க இயக்கமும் 19-ம் நூற்றாண்டின் இறுதியில், அரசியல் அதிகாரம் இல்லாமல் இருந்த நிலையுடன் ஒப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இன்னும் சொல்லப் போனால், உலக முதலாளித்துவத்தைப் பொறுத்த வரையில், இன்றைய நிலையானது 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ் முதலாளித்துவம் பற்றிய தமது கூரிய விமர்சன பகுப்பாய்வை உருவாக்கி வளர்த்த கால கட்டத்தை ஒத்தது என்று கூட சொல்லலாம்.
மார்க்சியத்தின் தத்துவார்த்த, அரசியல், அமைப்புத் துறை வளர்ச்சி
18-ம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்த தொழிற்புரட்சியும், 1789-ல் தொடங்கிய பிரெஞ்சு முதலாளித்துவப் புரட்சியும் ஐரோப்பிய வரலாற்றையும், உலக வரலாற்றையும் குலுக்கிப் போட்டன. ஆலை உற்பத்தி, எந்திரங்களை பயன்படுத்தி பெருவீத உற்பத்தி, உலகளாவிய சந்தையின் விரிவாக்கம், மூலதனத்தின் திரட்டல், மிகை மூலதனம், மிகை மக்கள் தொகை, காலனிய நாடு பிடிக்கும் போட்டி, ஏகாதிபத்தியங்களின் உருவாக்கம் என்ற அடுத்த 150 ஆண்டு கால வரலாற்றில், இந்த மாற்றங்களுக்கு இணையாக பாட்டாளி வர்க்க சித்தாந்தமும், இயக்கமும், அரசியலும் வளர்ச்சியடைந்தன.
மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்துவ உற்பத்தி முறையின் இலக்கண ரீதியான களமான இங்கிலாந்தை வகைமாதிரியாகக் கொண்டு மூலதனத்தின் இயக்கத்தையும், முதலாளித்துவ உற்பத்தி முறையின் வர்க்க உறவுகளையும், போராட்டத்தையும் மகத்தான பகுப்பாய்வு செய்து முதலாளித்துவத்தின் ஆணி வேராக, உயிர் அணுவாக இருக்கும் அம்சங்களை தொகுத்து பாட்டாளி வர்க்க இயக்கத்துக்கு பாதை சமைத்துக் கொடுத்தனர்.
முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையாக இருக்கும்
- சரக்கு உற்பத்தி,
- சரக்கின் இரு காரணிகளான பயன்-மதிப்புக்கும் மதிப்புக்கும் இடையேயான எதிர்நிலை,
- பயன்-மதிப்பைப் படைப்பது மதிப்பைப் படைப்பது என உழைப்பின் இரட்டைத் தன்மை,
- மதிப்பின் வடிவங்கள்,
- பண வடிவமும் அதன் பரிணாம வளர்ச்சிகளும்,
- பணம் மூலதனமாக மாற்றமடைவது,
- உபரி-மதிப்பின் உற்பத்தி (அறுதி உபரி மதிப்பும் ஒப்பீட்டு உபரி மதிப்பும்)
- மூலதனத் திரட்டல்,
- சமூக மூலதனத்தின் சுற்றோட்டம்,
- முதலாளித்துவ இலாபம்,
- இலாப வீதம்,
- இலாப வீதம் குறைந்து செல்லும் போக்கு பற்றிய விதி,
- அவ்விதியின் உள்முரண்பாடுகளும் முதலாளித்துவ நெருக்கடிகளும்,
- வணிக மூலதனம்,
- வட்டி மூலதனமும் வங்கி மூலதனமும்,
- நிலம் உள்ளிட்ட இயற்கை வளங்களில் தனியுடைமையை அடிப்படையாகக் கொண்ட வாடகை
என முதலாளித்துவ உற்பத்தி முறையின் உட்கூறுகளாக அமையும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைந்த ஒரு முழுமையாகவும், தனித்தனி அம்சங்களாகவும் விஞ்ஞான பகுப்பாய்வு செய்தனர். அதன் மூலம் நவீன சமூகத்தில் உள்ள வர்க்கங்களுக்கு இடையேயான உறவையும், உலக நாடுகளுக்கு இடையேயான ஆதிக்க உறவுகளையும், முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சியின் நெருக்கடிகள் நிறைந்த பாதையையும், அது தவிர்க்க முடியாமல் அடுத்த உயர்ந்த ஒரு உற்பத்தி முறைக்கு மாறிச் செல்வதற்கான சக்திகளை உருவாக்குவதையும் வெளிச்சம் போட்டுக் காட்டினர்.
ரசியாவில் மார்க்சியம்
முதலாளித்துவத்தின் உற்பத்தி முறையானது
- தொழில்துறை ஏகபோகங்கள்,
- வங்கித் துறை ஏகபோகங்கள்,
- தொழில் மூலதனமும் வங்கி மூலதனமும் இணைந்து நிதி மூலதனம் உருவாதல்,
- மூலதன ஏற்றுமதி,
- ஏகாதிபத்திய செல்வாக்கு மண்டலங்கள், நாடு பிடிக்கும் போட்டி
என பரிணாம மாற்றம் அடைந்த கால கட்டத்தில் உலக நிலைமைகளையும், ரசியாவின் அரசியல் பொருளாதார நிலைமைகளையும் மார்க்சிய முறையில் பகுப்பாய்வு செய்து ரசியப் புரட்சிக்கு வழி காட்டினார் லெனின்.
- ரசிய சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிப் பாதை என்ன,
- ரசிய சமூகத்தின் வர்க்க உறவுகள் என்ன,
- ரசிய அரசின் தன்மை என்ன,
- அன்றைய அரசியல் பொருளாதார சூழலுக்கு ஏற்ற அரசியல் செயல் தந்திரம் என்ன,
- எத்தகைய கட்சி அமைப்புமுறையை கட்டியமைக்க வேண்டும்,
- ஏகாதிபத்தியத்தின் தோற்றமும் தன்மையும் என்ன,
- புரட்சியின் கடமையும் தன்மையும் என்ன
ஆகிய அரசியல், அமைப்புத் துறை ஆய்வுகளோடு, தத்துவத் துறை போராட்டத்தையும், நடைமுறை அரசியல் போராட்டத்தையும் நடத்துவதற்கான முன்னணி விளக்காக வழிகாட்டினார் லெனின்.
மேலே சொன்ன மார்க்சிய-லெனினிய இயக்கத்தின் உச்சகட்டமாக 1917 நவம்பர் மாதம் 7-ம் தேதி ரசியத் தலைநகர் பீட்டர்ஸ்பர்க் நகரில் இடைக்கால அரசாங்கத்தைத் தூக்கி எறிந்து பாட்டாளி வர்க்க அரசான சோசலிச குடியரசை தொழிலாளி வர்க்கமும், விவசாயிகளும் நிறுவினர். இந்தப் புரட்சியிலும், இதற்கு முன்னோடியாக, பாதை ஏற்படுத்திய 1905 புரட்சி, 1917 மார்ச்சில் நடந்த முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி இவற்றில் முன்னணி பாத்திரம் வகித்தது ரசிய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி தலைமையிலான தொழிலாளி வர்க்கம்.
இவ்வாறாக, 1870-ல் பாரிஸ் கம்யூனில் தொடங்கி 1917 சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் வரையில் தொழிலாளி வர்க்கம் உலக அரசியல் அரங்கில் தனக்கென ஒரு பாதையை ஏற்படுத்தி நிர்ணயகரமான சக்தியாக வளர்ச்சியடைந்தது.
20-ம் நூற்றாண்டில் உலக தொழிலாளர் வர்க்க இயக்கம்
ரசியப் புரட்சிக்குப் பிந்தைய கால கட்டத்தில் சோவியத் யூனியனின் தலைமையில் உலகெங்கிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவானதும், தொழிலாளி வர்க்க இயக்கம் பெரும் பாய்ச்சலைக் கண்டது. சோவியத் யூனியனின் சோசலிச கட்டமைப்பு மனித சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை துரிதப்படுத்தியது. ஏகாதிபத்திய முரண்பாடுகளால் வெடித்த இரண்டாம் உலகப் போரில் சோசலிச இயக்கமும், கம்யூனிஸ்ட் கட்சிகளும், தொழிலாளர் வர்க்க அமைப்புகளும் மகத்தான சாதனைகளை புரிந்து உலகை முதலாளித்துவ பயங்கரத்திலிருந்து காப்பாற்றின.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் சீனாவிலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான உழைக்கும் வர்க்கங்களின் ஆட்சி ஏற்பட்டது. இந்தியா போன்ற நாடுகள் காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றன. வியட்னாம், கியூபா, கொரியா, அல்ஜீரியா போன்ற நாடுகள் விடாப்பிடியாக நின்ற காலனிய சக்திகளை எதிர்த்து போராடி அவற்றை துரத்தி அடித்தன. இந்தோனேசியா, மலேசியா, சிலி போன்ற நாடுகளில் காலனிய சக்திகள் தமது ஆதிக்கத்தைத் தக்க வைத்துக் கொண்டன.
முதலாளித்துவத்தின் வளர்ச்சிப் போக்குகள்
ரசியப் புரட்சிக்குப் பின்னர், உலக முதலாளித்துவம் முக்கியமான இரண்டு கட்டங்களை தாண்டிச் சென்றது. 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்க ஏகபோக நிறுவனங்கள் அறிமுகப்படுத்திய அசெம்பிளி லைன் முறையானது, ஆலை உற்பத்தியில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. நுகர்வு பொருள் துறை ஏகபோகங்கள் தொழிலாளர் வர்க்கத்தின் மீதான சுரண்டலை பண்புரீதியில் மாற்றி அமைத்தன. புதிய எரிசக்தி ஆதாரங்களான கச்சா எண்ணெய், மின்சாரம் ஆகியவை தொழில் துறையிலும், சமூக மறுஉற்பத்திக்கான துறைகளிலும் துரிதமான வளர்ச்சிகளைக் கொண்டு வந்தன.
இரண்டாவதாக, 1970-களில் 18-ம் நூற்றாண்டின் தொழிற்புரட்சிக்கு நிகரான தகவல் தொழில்நுட்பப் புரட்சி ஏற்பட்டது. மின்னணு சர்க்யூட்டுகள், கணினிகள், கணினி வலைப்பின்னல்கள், உலகளாவிய தொலைதொடர்பு, இணையம் ஆகியவை ஆலை உற்பத்தியை உலகளாவியதாக மாற்றி அமைத்தன. மூலதனத்தின் சுற்றோட்டம், தகவல் பரிமாற்றம், உற்பத்தி நிர்வாகம் போன்றவற்றில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி மூலதன உறவுகளை அடிப்படையாக மாற்றி அமைத்தன. இதற்கு இணையாக சேவைத் துறையில் மூலதன ஆதிக்கம், கடன் செலாவணி அடிப்படையிலான பணவியல் முறையின் மிகப்பெரிய வளர்ச்சி, தேசங்கடந்த தொழிற்கழகங்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஆகியவை முதலாளித்துவத்தின் வீச்சையும், ஆழத்தையும் அதிகப்படுத்தின.
உலக முதலாளித்துவத்தின் வளர்ச்சியில் பல பண்புரீதியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
- கார் உற்பத்தி, தொலைக்காட்சி, வானொலி மற்றும் பிற வாழ்வுச் சாதனங்களுக்கான நுகர்பொருள் துறையில் ஏகபோகங்களின் தோற்றம்.
- கணினி தொழில்நுட்பம், பிளாஸ்டிக் தொழில்நுட்பம்
- நுகர்வோர் கடன் வளர்ச்சி – முதலாளித்துவத்தின் மிகை உற்பத்தியை ஈடுகட்ட எதிர்கால வேண்டலை முன்நோக்கி தள்ளுவது
- சுமார் 20 ஆண்டுகளில் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய பொருளாதார மறு கட்டுமானம், இராணுவ முதலீடுகள் மூலமாக மூலதனம் வெகு வேகமாகப் பெருகியது.
1970-களில் உலக மூலதன சுற்றோட்டத்தில் இன்னும் ஒரு மாற்றம் ஏற்பட்டது. சீனா அமெரிக்காவுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டது. உலகெங்கிலும் சோசலிச, திட்டமிட்ட பொருளாதார கட்டமைப்புகளில் உடைசலும், தேக்கமும் ஏற்பட மூலதனத்தின் கட்டற்ற ஆட்சி சுமத்தப்பட ஆரம்பித்தது. ஐ.எம்.எஃப், உலக வங்கி, 1990களில் உலக வர்த்தகக் கழகம் இவற்றின் மூலமாக தேசங் கடந்த மூலதனப் பாய்ச்சல், தேசங்கடந்த சந்தைகள், தேசங்கடந்த உற்பத்தி என்ற கட்டுமானம் உருவாக ஆரம்பித்தது.
இதற்கான தொழில்நுட்ப அடித்தளமாக கணினி மற்றும் இணையம் உட்பட தகவல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. நிறுவன மேலாண்மை, வங்கிகள் உட்பட நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் மட்டுமின்றி பொழுதுபோக்கு போன்ற சேவைத் துறைகளும் உலகெங்கிலும் வழங்கப்படும் வகையில் சேவைகளுக்கான முதலாளித்துவ உலகச் சந்தை உருவாக்கப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏகாதிபத்திய முதலாளித்துவ கட்டமைப்பு (பிரெட்டன் வுட்ஸ், ஐ.எம்.எஃப், உலக வங்கி, காட், நேட்டோ) ஒரு புறம், சோசலிச கட்டமைப்பு (சோவியத் யூனியன், சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், யூகோஸ்லேவியா), காலனிய நவ காலனிய நாடுகள் (இந்தியா, பிற தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள், தென் அமெரிக்க நாடுகள்) என மூன்று மண்டலங்களாக பிரிந்திருந்தது.
மூலதனம் ஏகாதிபத்திய முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் உற்பத்தி, சந்தைப்படுத்தல், மூலதனப் பாய்ச்சல், பொது நாணயம் இவற்றுக்கான நிறுவனங்களை ஏற்படுத்திக் கொண்டது. சோசலிச முகாமின் வீழ்ச்சியை ஒட்டி இந்தக் கட்டமைப்பு உலகம் முழுவதும் தன் காலைப் பரப்பியது.
இன்றைய உலகமும் நமது பணியும்
1990-களுக்குப் பிறகு உலகம் முழுவதும் ஒரே முதலாளித்துவக் கட்டமைப்புக்குள் கொண்டு வரப்பட்டு, டாலர், ஐ.எம்.எஃப், லண்டன், நியூயார்க் நிதி மையங்கள், உலகளாவிய மூலதனம், உலகளாவிய சந்தை, உலகளாவிய உற்பத்தி, கணினி, தகவல் தொழில்நுட்பம், இணையம், சேவைத்துறை உலகமயமாதல், கடன் பொருளாதாரம் இவற்றின் அடிப்படையில் வளர்ந்து சென்றது.
அதற்குள் சீனா தனிச்சிறப்பான இடத்தைப் பிடித்தது. உலகின் உற்பத்திச் சாலை என்ற அந்தஸ்தில் மேற்கத்திய உலகின் மீது படையெடுத்தது. அமெரிக்கா தொடர்ந்து இந்தக் கட்டமைவின் பாதுகாவலனாக நீடித்தது. ஐக்கிய நாடுகள் சபை மேலும் மேலும் பொருத்தப்பாட்டை இழந்தது.
இதை ஒட்டி உலக சோசலிச இயக்கமும், உலகெங்கிலும் உள்ள தொழிலாளி வர்க்க அமைப்புகளும், கட்சிகளும் பெரும் பின்னடைவை சந்தித்தன. மாறி விட்ட புதிய உற்பத்தி நிலைமைகளை கோட்பாட்டு ரீதியாக தொகுத்து தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கான போர்தந்திர, செயல்தந்திர அரசியலில் அடிப்படையான மாற்றங்களை செய்யாமல் முந்தைய காலகட்டத்தில் இருந்து மரபுரீதியாக பெறப்பட்ட சொற்றொடர்களை பயன்படுத்தி இரண்டாம் நிலை பாத்திரத்துக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருந்த மூலதன செயல்பாடுகளுக்கு எதிரான பொருளாதார, அரசியல் போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தன.
தகவல் தொழில் நுட்பப் புரட்சியும், மூலதனத் திரட்டலின் பிரம்மாண்ட வளர்ச்சியும் உலகப் பொருளாதாரத்திலும், அரசியலிலும் ஏற்படுத்திய மாற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் பின்தங்கிப் போனது, தொழிலாளர் வர்க்க இயக்கம். 1890-களில் “ரசியாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி” என்ற நூலில் லெனின் ரசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பாதையை வரையறுத்து ஒளி காட்டியது போன்று எந்த ஒரு ஐரோப்பிய அல்லது ஆசிய நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சியும் உலக முதலாளித்துவ வளர்ச்சிப் போக்கின் ஒளியில் தமது நாட்டின் பொருளாதார அரசியல் திசைவழியை கணித்து அதன் அடிப்படையிலான அரசியல் பொருளாதார பாதையை வகுத்துக் கொள்ளவில்லை.
ரசியப் புரட்சி நடந்து 104 ஆண்டுகள் ஆன பிறகு, ஏகாதிபத்திய நாடுகளின் படைகளையும், உள்நாட்டு எதிரிகளையும் எதிர்த்துப் போராடி ரசிய பாட்டாளி வர்க்கம் தனது ஆட்சியை நிலைப்படுத்திக் கொண்ட 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ரசியப் புரட்சி உலகப் பாட்டாளி வர்க்கத்துக்கு வழங்கிய பங்களிப்புக்கு இணையான ஒன்றை மீண்டும் நடத்திக் காட்ட வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கிறோம்.
- கோட்பாட்டுத் துறையில் மார்க்சிய லெனினியத்தை வளர்த்துச் செல்வது,
- புதிய உலக நிலைமைகளை மேலும் மேலும் தெளிவாக பகுப்பாய்வு செய்து முடிவுகளை வந்தடைவது,
- அவற்றை மேலும் மேலும் ஆர்வத்துடன் தொழிலாளர் வர்க்கத்தின் மத்தியில் எடுத்துச் செல்வது,
- பருண்மையான நிலைமைகள் பற்றிய பருண்மையான ஆய்வுகளின் அடிப்படையில் அரசியல் இயக்கங்களை நடத்துவது,
- அந்த அரசியல் இயக்கங்களை புரட்சிகர அதிகார கைப்பற்றலுக்கான அரசியலாக வளர்ப்பது,
- அதற்கேற்ற கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு முறையை உருவாக்கி வலுப்படுத்துவது
என்று ரசிய தொழிலாளர் வர்க்க இயக்கத்துக்கும் அதன் மூலமாக உலகத் தொழிலாளர் வர்க்க இயக்கத்துக்கு ரசிய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியும் குறிப்பாக லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியும் ஆற்றிய பணிக்கு இணையான பணியை ஆற்றி 21-ம் நூற்றாண்டின் பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்தி முடிக்கும் கடமையை நாம் எதிர்கொண்டுள்ளோம்.
ரசியாவின் நவம்பர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் வழிகாட்டியது போல, பாரிஸ் கம்யூனுக்கு நூற்றாண்டு கால இங்கிலாந்து, பிரெஞ்சு தொழிலாளர் வர்க்க இயக்கம் வழிகாட்டியது போல, நவம்பர் புரட்சியும், கடந்த 100 ஆண்டு கால கம்யூனிச இயக்கமும் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. அவை காட்டும் வழியில் பயணித்து மனித சமூகத்தையும், இந்த பூமிப் பந்தையும் முதலாளித்துவ நாச பாதையிலிருந்து மீட்கும் பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்தி முடிப்பது நம் முன் இருக்கும் பணி.
நன்றி: மெய்ப்பொருள்