Site icon சக்கரம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்க அனைவரும் ஒன்றுபட்டு பாடுபட வேண்டும்!

ஏ.எம். கஸ்பியா வீவி

உடல், உள, பாலியல் ரீதியான வன்முறைகளால் உலகெங்கும் ஏராளமான பெண்கள் பாதிப்பு

பெண்கள் பற்றியும் அவர்களின் சாதனைகள் பற்றியும் எல்லோரும் புகழ்ந்து பேசினாலும் இப்பெண்கள் படும் துன்ப துயரங்களை யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை. பெண்கள் தமது வீடுகளிலும் தொழில் நிலையங்களிலும் பொது இடங்களிலும் பல்வேறு உடல் உள நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றார்கள். இதுவே வன்முறையாக மாறுகின்றது.

பெண்கள் மீதான வன்முறை என்பது பெண்களின் சுதந்திரத்தை பலவந்தமாக பறிக்கும் அல்லது தடை செய்யும் செயலாகும். பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் எதிரான வன்முறை உலகெங்கும் தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. உலகில் மூன்றில் ஒரு பெண் தனது வாழ்நாளில் அடிக்கப்பட்டோ வன்புணர்விற்கு வற்புறுத்தப்பட்டோ பிற வகையில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டோ துன்புறுத்தப்படுகின்றாள். இவ்வாறு துன்புறுத்துபவர் வழக்கமாக அவருக்குத் தெரிந்தவராகவே உள்ளனர். அதனாலேயே பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் திகதி உலகெங்கும் கொண்டாடப்படுகின்றது. இது 18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட கைத்தொழில் புரட்சியின் பின்னர் தொழிற்சாலைகளில் எட்டு மணித்தியால வேலை, சமஉரிமை, உழைப்பிற்கேற்ற ஊதியம் கேட்டு அமெரிக்க அரசிற்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து 1921ஆம் ஆண்டு முதல் மார்ச் 8ஆம் திகதியை மகளிர் தினமாக பிரகடனம் செய்தது. இதை தொடர்ந்து வந்த போராட்டங்கள் மூலம் இரு சகோதரிகள் அந்நாட்டு அரசினால் கொலை செய்யப்பட்டனர். அவர்களை நினைவு கூரவே நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையான நாட்களை பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக உலகெங்கும் விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

பெண்களக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகளை உடல் ரீதியானது, உள ரீதியானது, பாலியல் ரீதியானது என நோக்க முடியும். பால் அடிப்படையிலான வன்முறைகள் எந்நேரத்திலும் எவருக்கும் ஏற்படக் கூடும். எனினும் ஒருசில பெண்கள் மற்றும் சிறுமியருக்கு இவ்வாறான பாதிப்புகள் அதிக அளவில் இடம்பெறும் சாத்தியம் உள்ளது. குறிப்பாக சிறுமியர் மற்றும் வயதான பெண்கள், ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் பெண்கள், திருநங்கைகள், அகதிப் பெண்கள், சுதேசிய பெண்கள் அல்லது எச்.ஐ.வி. வைரஸ் தாக்கத்துடன் வசிக்கும் பெண்கள் மற்றும் மனிதாபிமான சிக்கல்களுடன் வசிக்கும் பெண்கள் வன்முறையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

உடல் ரீதியான வன்முறைகளை நோக்கும் போது அடித்தல், துன்றுத்தல், சித்திரவதை செய்தல், காயப்படுத்தல், சூடு வைத்தல், பட்டினி போடுதல், வெளியில் தெரியாத வகையில் அடித்தல், பணத்துக்காக ஒருவருக்கு விற்றல் கடத்துதல், அதிக நேரம் வேலை வாங்குதல், பெண்களை ஒதுக்கி வைத்தல் என்பன அடங்கும்.

உள ரீதியான வன்முறை என்பது மனது நோகும்படி ஏசுதல், திட்டுதல், வசைபாடுதல், ஆசாபாசங்களுக்கு மதிப்பளிக்காது விடுதல், பேசாமல் செய்தல் என்பனவாகும். இதன் பாதிப்பு உடற் பாதிப்பு போன்று நேரடியாக வெளியில் தெரியாது. இதன் பாதிப்பு காரணமாக தற்கொலை வரை ஆபத்து செல்லும். உளரீதியான பாதிப்பானது நீண்ட கால வெளிப்பாடாக காணப்படும். பாலியல் ரீதியான வன்முறையை நோக்கும் போது இது விருப்பமின்றி ஒன்று சேர்தல், பாலின உறுப்புக்களை காட்டுதல், சேதப்படுத்தல், வன்புணர்வு மேற்கொள்ளுதல் போன்றவை அடங்கும்.

பொதுவாக இவ்வாறான வன்முறைகள் ஏற்படுவதற்கு காரணமாக பல்வேறு காரணிகள் விளங்குகின்றன. பொருளாதார நெருக்கடி, வறுமை, குடும்பச் சுமை, குடும்பங்களில் அதிக பிள்ளைகள் காணப்படுதல், பாலியல் தேவையை பூர்த்தி செய்ய முடியாமை, தொழில் இன்மை, அதிக கடன் சுமை, அதிக வட்டிக்கு கடன் பெறுதல், நுண்கடன் பெறுவதில் ஆர்வம் காட்டுதல் போன்ற காரணங்களாலும் கணவன், மனைவி இடையே ஏற்படும் முரண்பாடுகள் மற்றும் வருமானத்துக்கு ஏற்ப செலவு செய்யாமல் ஆடம்பர வாழ்வில் அதிக அக்கறை செலுத்துதல் போன்ற காரணங்களினால் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

இவ்வன்முறைகளில் பொதுவாக இல்லத்து வன்முறைகள் அல்லது குடும்ப வன்முறைகள் என்பது நாளுக்கு நாள் எம் சமூகத்தில் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றன. குடும்ப வன்முறைகள் நீதிமன்றம் மற்றும் பொலிஸ் நிலையங்கள், மத்தியஸ்த சபை ஆகியவற்றில் வரும் முறைப்பாடுகளை காணும் போது சமூகத்தின் நிலைமையை நாம் கண்கூடாக காணமுடியும்.

இத்தகைய வன்முறைகள் ஏற்படுவதற்கு பிரதான காரணம் சமூகம் பெண்களை இழிந்தவர்களாக நோக்குவதுடன் அவர்களை கட்டுப்படுத்தும் உரிமைகளையும் அதிகாரத்தையும் ஆண்களுக்கு கொடுத்துள்ளதும் ஆகும். பெண் தனது கட்டுக்கோப்புக்குள் இருக்க வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடு ஒருவிதமான வன்முறைகளாக வெளிப்படுகின்றன.

இவற்றில் குடும்ப வன்முறை என்பது விசேடமாக நோக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் பாரதூரம் கருதியே 2005ஆம் ஆண்டு 34ம் இலக்க சட்டத்தை இலங்கைப் பாராளுமன்றம் இயற்றியுள்ளது. இவ்வாறு வீட்டு வன்முகளால் பாதிக்கப்படும் நபர் அதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்காக தங்கள் பிரிவிற்குரிய நீதவான் நீதிமன்றத்தை நாடி பாதுகாப்புக் கட்டளையை பெற்றுக் கொள்ள முடியும். இவ்விண்ணப்பத்தை பாதிக்கப்பட்ட நபர் தாக்கல் செய்யலாம். சிறுவர்கள் பாதிக்கப்படுவதாயின் பெற்றோர் பாதுகாவலர்களினால் அல்லது பிள்ளை யாருடன் வசிக்கின்றதோ அவரால் தாக்கல் செய்யப்பட முடியும்.

இத்தகைய வன்முறைகள் குடும்பத்தில் மாத்திரமன்றி தொழில் நிலையங்கள், பொது இடங்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேவை வழங்கக் கூடிய வைத்தியசாலைகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என பல்வேறுபட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் இடம்பெறுகின்றன. ஆண்களுக்கு மட்டும் அவசியம் எனக் கருதி பெண்களை இடைநடுவே கல்வியை தொடர முடியாமல் ஆக்குவதும் இவற்றில் ஒன்றாகும்.

தொடர்ச்சியாக இவ்வாறான வன்முறைகள் அதிகரிப்பதற்கு காரணம் சட்டத்தை இறுக்கமாக கடைபிடிக்காமையும் சட்டத்தை அமுல்படுத்துவதில் உள்ள சிக்கல்களும் பெண்களுக்கான முறைப்பாடுகளை பதிவு செய்வதில் தாமதங்கள் ஏற்படுவதாலும் ஆகும்.

ஒவ்வொரு பெண்ணும் தனக்கான உரிமைகளையும், அதற்காக நாட வேண்டிய இடங்களையும் தெரிந்திருப்பது கட்டாயமாகும். இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளை குறைக்க முடியும். அரசாங்கமும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு திருத்தச்சட்டங்கள் மூலம் சட்டங்களை காலத்துக்கு ஏற்ப மாற்றியுள்ளது. இளவயது திருமணங்கள் குறைக்கப்பட்டு குடும்ப வன்முறைகளை இல்லாதொழிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதுதவிர 24 மணி நேர சேவையாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் பதிவு செய்யப்படுகின்றன. இதற்காக 1938, 118 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு பதிவு செய்யப்பட்டு உடனடியாக தீர்வு வழங்கப்படுகின்றது.

பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வன்முறைகளில் இருந்து பெண்களை பாதுகாப்பதற்கு அரசாங்கமும் அரச சார்பற்ற நிறுவனங்களும் தன்னாலான ஒவ்வொரு முயற்சிகளையும் எடுத்துள்ளன. பெண்கள் தனக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு குரல் கொடுக்க வேண்டும். குற்றம் செய்யும் நபரை தண்டனை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இது சமூகத்தின் எதிர்கால நலனுக்கு இன்றியமையாத அம்சமாக அமையும். துணிந்து நின்று தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் முயற்சியில் பெண்கள் ஒன்றுபட்டு நின்று செயற்பட வேண்டும்.

பெண்களுக்கு எதிரான அனைத்து வன்முறை ஒழிப்பு நாள் நவம்பர் 25

Exit mobile version