Site icon சக்கரம்

140வது நினைவு தினம்: ஜென்னி மார்க்ஸ்

-கணேசன்

மூலதனம்’ நூலை எழுதி “கம்யூனிஸத்தின் தந்தை’ என்று பெயரெடுத்த கார்ல் மார்க்சின் மனைவியின் பெயர்தான் ஜென்னி. மார்க்சை அறிந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் அவரது மனைவி ஜென்னியைப் பற்றியும் அறிவர். அன்பு நிறைந்த பெண்ணிடம் காதல் கொள்வது என்பது ஒரு மனிதனை மறுபடியும் மனிதனாக்குகிறது என்று குறிப்பிட்டார் மார்க்ஸ். மார்க்சைவிட ஜென்னி 4 வயது மூத்தவர். ஜென்னியின அழகு, அமைதியான பண்பு, சிறந்த கல்வி அறிவு ஆகியவை கார்ல் மார்க்சைப் பெரிதும் கவர்ந்தது.

மார்க்சும் ஜென்னியும் ஜெர்மனியிலிருந்தும், பிரான்சிலிருந்தும், பெல்ஜியத்திலிருந்தும் மாறி மாறி விரட்டப்பட்டனர். மனிதன் தன்னுடைய சக மனிதனின் உயர்வுக்காகவும், நன்மைக்காகவும், பாடுபடுவதன் மூலமே அவன் தன்னை உயர்த்திக் கொள்கிறான். பொது நன்மைக்காகப் பாடுபடுவதன் மூலம் தங்களைச் சிறப்பித்துக் கொள்ளும் மனிதர்களைத்தான் வரலாறு மிக உயர்ந்த மனிதர்கள் என்று அடையாளம் காட்டுகிறது. மிக அதிகமான அளவு மக்களை மகிழ்ச்சியடைச் செய்யும் மனிதன்தான் மகிழ்ச்சிகரமான மனிதன் என்று வரலாறு வரவேற்கிறது. மார்க்ஸின் புரட்சிகரமான பணிகளால் காவல்துறை ஜென்னியையும் கைது செய்தது. அவர் இருண்ட சிறைக்குள் தள்ளப்பட்டார். அந்தச் சிறையில் வீடற்ற பிச்சைக்காரர்கள், நாடோடிகள், நீசத்தனமான கெட்ட நடத்தை உள்ள பெண்கள் ஆகியோர் காவலில் வைக்கப்படும் இடத்தில் ஒரு நாள் இரவைக் கழித்தார்.

மார்க்சின் கையெழுத்து மிகவும் மோசமாக இருக்கும். அதை யாரும் எளிதில் படிக்க முடியாது. அந்தக் கையெழுத்தைப் படித்து, அதைப் பிரதிகள் எடுக்க வேண்டிய வேலையையும் ஜென்னி செய்து வந்தார். அவருடைய கையெழுத்து மோசமாக இருந்ததால்தான், அவருக்கு எங்கும் வேலை கிடைக்கவில்லை.

மார்க்சோ, ஜென்னியோ அவர்கள் படுகின்ற கஷ்டங்கள் பொதுமக்களுக்குத் தெரியாதபடி தான் வாழ்ந்தார்கள். வறுமையிலும் நோயிலும் அடிபட்டதால், ஜென்னியின் உடல் மகனுக்கு பால் கொடுக்கும் நிலையில் இல்லை. என் மகனுக்கு இருந்த பசியில் அவன் பலமாக உறிஞ்சியதன் விளைவாக எனது மார்பு உரசலுக்கு இலக்காகி, தோல் வெடித்து விட்டது. அதனால் நடுங்கும் அவனது சிறிய வாய்க்குள் இரத்தம் கொட்டியது என்று மனம் திறந்து குடும்ப நண்பருக்கு எழுதிய கடிதத்தில் ஜென்னி குறிப்பிட்டார்.

ஒரு நேரத்தில் மார்க்ஸ் குடும்பம் உணவின்றித் தவிக்க ஆரம்பித்தது. மார்க்சின் கோட்டும் பேண்டும், அடகுக் கடைக்குப் போய்விட்டன. எனவே அவர் வெளியே வர முடியாமல் இருந்தார். கடிதம் எழுதுவதற்குக் கூட வெள்ளைத் தாள் வாங்க முடியாத நிலையில் இருந்தனர். வறுமையின் உச்சக்கட்டத்தில் இருந்த இந்த நேரத்தில் அவர்களுடைய சின்னஞ்சிறு மகள் பிரான்சிஸ்கா மரணமடைந்தாள். அந்த மகளைப் புதைப்பதற்குக் கூட இருவரும் மிகவும் சிரமப்பட்டனர். அதுவும் கிறிஸ்துவர்களின் முக்கிய பண்டிகையான ஈஸ்டர் பண்டிகையின்போதுதான் மரணமடைந்தாள்.

Friedrich Engels, Karl Marx and his wife Jenny, and their children Laura Marx and Eleanor Marx – 1864

அந்த நேரத்தில் ஒரு பிரெஞ்சு அகதி ஒருவர் இங்கிலாந்தின் பணமான இரண்டு பவுண்டு கொடுத்து உதவினார். அந்தப் பணம் தான் சவப்பெட்டி வாங்குவதற்குப் பயன்பட்டது. அந்தக் குழந்தை பிறந்தபொழுது தொட்டில் வாங்குவதற்குக்கூட அவர்களிடம் பணமில்லை. இறந்த போது சவப்பெட்டி வாங்கவும் முடியவில்லை என்கிறார் ஜென்னி.

இதன்பிறகு எட்கர் என்ற பெயருடைய அவர்களுடைய எட்டு வயது மகன் ஒரு வருடம் நோயினால் அல்லல்பட்டு மரணமடைந்தார். உருக்கு போன்ற எதற்கும் கலங்காத நெஞ்சுரமுள்ள மார்க்சையே மகனின் மரணம் நிலைகுலையச் செய்துவிட்டது. 1880-ம் ஆண்டில் ஜென்னியை நுரையீரல் நோய் பாதித்தது. பிறகு அது ஈரல் புற்றுநோயாக மாறியது.

அந்தப் புற்றுநோயின் கொடுமையால் பாதிக்கப்பட்ட ஜென்னி 1881-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி காலமானார். புற்றுநோயின் காரணமாக ஏற்பட்ட வேதனைகளையும் சித்திரவதைகளையும் சகித்துக் கொண்டிருந்தார். ஆனால் ஜென்னியின் நகைச்சுவை குணம் ஒரு வினாடி கூட அவரைவிட்டு அகலவில்லை.

உயிர்போகும் கடைசி வினாடி வரை நல்ல நினைவுடன் இருந்தார். கடைசியாகத் தன் கணவர் மார்க்சிடம் என்னுடைய பலம் குறைந்து வருகிறது என்று கூறினார். ஜென்னி இறந்ததைக் கண்ட மார்க்சின் உயிர் நண்பர் ஏங்கல்ஸ், “மார்க்ஸ் செத்து விட்டார்’ என்று குறிப்பிட்டார். டிசம்பர் 5-ம் தேதி லண்டனில் ஏழை, எளிய சாமான்ய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹைகேட் என்னுமிடத்திலுள்ள கல்லறையில் ஜென்னி மார்க்ஸ் அடக்கம் செய்யப்பட்டார்.

உயிருக்குயிராக நேசித்த மனைவியின் இறுதி ஊர்வலத்தில் மார்க்ஸ் கலந்து கொள்ள முடியாதபடி மிகவும் பலவீனமாக அதுவும், மயங்கிய நிலையில் இருந்தார்.

எல்லாவற்றையும் இழந்து நின்ற இவர்களின் வாழ்க்கைப் போராட்டம், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே.

ஏங்கெல்ஸ்

ஜென்னி – மார்க்ஸ் ஆகியோர் வாழ்வில் அவ்வப்போது தோன்றிய வசந்தம் – ஏங்கெல்ஸ். மார்க்ஸ் மறைந்தபோது மூலதனத்தின் முதல் பாகம் மட்டுமே வெளியிடப்பட்டது. அவரது மறைவுக்குப் பின்னர் மூலதனத்தின் 2ஆம் பாகமும் – 3ஆம் பாகமும் வெளிவர முழுப்பங்கு வகித்தவர்தான் ஏங்கெல்ஸ். இவர் ஜென்னிக்கும் மார்க்சுக்கும் தத்துவரீதியாகவும் – பொருளாதார ரீதியாகவும் துணை நின்றதோடல்லாமல் – தன் மறைவுக்குப் பின் தன் சொத்தை எல்லாம் ஜென்னி – மார்க்சின் குழந்தைகளுக்கு உரிமையாக்கியவர்.

ஏங்கெல்ஸ் என்ற அருமை நண்பர் இல்லையெனில் ஜென்னி – மார்க்ஸ் ஆகியோரின் உழைப்பின் பயன் உலகுக்கு முழுமையாகச் சென்று சேர்ந்திருக்காது. இவர்களின் ஒட்டுமொத்தச் சிந்தனையின் சாறுதான்: ‘பாட்டாளிகள் இழப்பதற்கு அவர்களின் அடிமைத் தளைகளைத் தவிர ஏதுமில்லை’. ஆனால், பாட்டாளிகள் பெறுவதற்கோ ஓர் பொன்னுலகம் இருக்கிறது. ஆகவே, உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள். இச்சாறு இன்றும் தொழிலாளர்களுக்கு உயிரூட்டுகிறது. பொருளாதார ஏற்றத் தாழ்வை ஒழிக்க இவர்கள் ஆற்றிய பணிக்கு நிகராக தந்தை பெரியார் நம் நாட்டில் வருணஜாதி வேற்றுமைகளை வேரோடு அழிக்க அறிவாயுதம் ஏந்தினார்.

 Eleanor Marx

எல்லாவற்றையும் இழந்து நின்ற இவர்களின் வாழ்க்கைப் போராட்டம் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே. 1881ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் நாள் உயர்வான காதலுக்கும், பொறுமைக்கும், சகிப்புத் தன்மைக்கும் இலக்கணமாக விளங்கிய ஜென்னி என்ற மலர் பூமியில் உதிர்ந்தது.

இவர்தம் சிந்தனைகள் ஏதும் இல்லாத மக்களை அடிமைப்படுத்தும் ஆதிக்க சக்திகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இன்றும் இருந்து கொண்டுளளது.   புரட்சி   வணக்கம்.

Laura Marx
Exit mobile version