Site icon சக்கரம்

சிலியின் இளம் வயது ஜனாதிபதியாகின்றார் கேப்ரியல் போரிக்

தென்னமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியின் புதிய அதிபராக, முன்னாள் மாணவ இயக்கத்தின் தலைவர் கேப்ரியல் போரிக் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 35 வயதாகும் கேப்ரியல் போரிக் (Gabriel Boric), சிலி நாட்டின் மிக இளம் வயது அதிபர் எனும் பெருமையைப் பெறுகிறார்.

தற்போதைய அதிபர் செபஸ்தியான் பினேராவின் ஆட்சிக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட அடக்குமுறைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்ற இடதுசாரித் தலைவரான போரிக்கின் வெற்றி, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

சிலியின் தெற்குப் பகுதியில் உள்ள பூன்டா அரேனாவைச் சேர்ந்தவர் கேப்ரியல் போரிக். சான்டியாகோவில் உள்ள சிலி பல்கலைக்கழகத்தில் படித்த போரிக், மாணவர் கூட்டமைப்புக்குத் தலைவராக இருந்தவர். கல்வியை மேம்படுத்தவும், கல்விக் கட்டணங்களைக் குறைக்கவும் கோரி 2011-ல் நடந்த மாணவர் போராட்டங்களின் வழியே கவனம் ஈர்த்தவர். 2014-ல், கீழவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருக்கு 25 கூட ஆகவில்லை.

சோஷியல் கன்வெர்ஜன்ஸ் கட்சியைச் சேர்ந்த கேப்ரியல் போரிக்குக்கு, இந்தத் தேர்தலில் 56 சதவீத வாக்குகள் கிடைத்திருக்கின்றன. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜோஸ் ஆன்டோனியோ காஸ்ட் (José Antonio Kast) 44 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறார். 2017-ல் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஆன்டோனியோ காஸ்ட் , 2019-ல் குடியரசுக் கட்சியை உருவாக்கினார். இந்தத் தேர்தலில் முதல் சுற்றில், போரிக்கை நெருங்கிவந்தாலும் இறுதியில் தோல்வியைத் தழுவியிருக்கிறார் காஸ்ட்.

கடந்த மாதம் நடந்த முதல்சுற்று வாக்குப் பதிவைக் காட்டிலும், நேற்று நடந்த வாக்குப்பதிவில் 56 சதவீதம் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. 2012-க்குப் பிறகு நடந்திருக்கும் அதிகபட்ச வாக்குப்பதிவு இது.

சிலியில், 1973 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை ஆட்டிப்படைத்த சர்வாதிகாரி அகஸ்டோ பினோசெட்டின் (Augusto Pinochet) கொடுங்கோல் ஆட்சி, 1990-ல், ஒரு பெரும் கலகத்துக்குப் பின்னர் முடிவுக்கு வந்தது. எனினும், முழுமையான ஜனநாயகம் அங்கு எட்டாக்கனியாகவே இருந்துவந்தது.

குறிப்பாக, செபஸ்தியான் பினேரா ஆட்சியில், மிகக் குறைவான ஊதிய உயர்வு, வேலைப் பாதுகாப்பின்மை, ஏழைகளுக்கு எட்டாத கல்விக் கட்டணம், மருத்துவக் கட்டணம் போன்றவை உழைக்கும் மக்களைக் கடனில் தள்ளின. ஜனநாயக ஆட்சி என்று சொல்லப்பட்டாலும், இன்னமும் ராணுவ ஆட்சியைப் போன்ற ஆட்சிமுறையைத் தாங்கிப் பிடிக்கும் அரசமைப்புச் சட்டம், அரசியல் தலைவர்களின் ஊழல் என்று பல்வேறு பிரச்சினைகள் சிலே மக்களை வேதனையில் ஆழ்த்தியிருந்தன.

இந்தச் சூழலில், 2019 அக்டோபர் மாதம் மெட்ரோ ரயில் கட்டணத்தை 4 சதவீதம் உயர்த்தியது சிலி அரசு. அதிகரித்துவரும் கல்விக் கட்டணம், மருத்துவக் கட்டணம், வீடுகளின் விலை என்று எதையும் கட்டுப்படுத்த முன்வராத அரசின் மீது கோபத்தில் இருந்த மக்கள், இந்தக் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். வழக்கம்போல், இந்தப் போராட்டத்தைத் தொடங்கிவைத்தது மாணவர்கள்தான். ஆனால், கல்லூரி மாணவர்கள் அல்ல, இடைநிலைப் பள்ளி மாணவர்கள். அக்டோபர் 7-ல் தலைநகர் சான்டியாகோவில் மெட்ரோ ரயில் நிலையங்கள் முன்பு மாணவர்கள் நடத்திய அமைதிப் போராட்டம் மெல்ல மெல்லப் பரவியதும், அரசு அடக்குமுறையைத் தொடங்கியது. போராட்டக்காரர்களை மிகக் கொடூரமாகத் தாக்குவது, கண்ணீர்ப் புகை குண்டுகளை மிக அருகிலிருந்து அவர்கள் மீது செலுத்துவது, காவல் வாகனங்களால் மோதி நசுக்கிக் கொல்வது என்று அதிரவைக்கும் அராஜகத்தை சிலி அரசு செய்தது. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாகினர்.

‘போராட்டத்தை ஒடுக்க, சிலி அரசு அளவுக்கு அதிகமான படைகளைப் பயன்படுத்துகிறது. சட்டவிரோதமான கைது நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது’ ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் போன்ற மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டின. ஆனால், ‘அரசுக் கட்டிடங்கள், பொதுக் கட்டமைப்புகள், பொதுமக்களைக் காக்க..’ என்று காரணம் சொல்லிக்கொண்டு மேலும் மேலும் துருப்புகளை அனுப்பினார் அதிபர் செபஸ்தியான் பினேரா.

மக்கள் உறுதியாக நின்று எதிர்த்துப் போராடினர், எதிர்க்கட்சிகளும் மக்களுக்குத் துணை நின்றனர். அதில் கேப்ரியல் போரிக்கின் பங்கு மிக முக்கியமானது. போராட்டத்தின் இறுதியில், குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்துவது முதல், மருந்துப் பொருட்கள் விலை, போக்குவரத்துக் கட்டணம் ஆகியவற்றைக் குறைப்பது வரை பல்வேறு நடவடிக்கைகளை எடுப்பதாக அறிவித்தார் செபஸ்தியான் பினேரா. அந்தப் போராட்டம் காரணமாக அரசமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.

இவற்றின் தொடர்ச்சியாக, பிராடு ஃப்ரன்ட் (Broad Front), கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பிற சிறிய கட்சிகள் இணைந்து உருவான அருபெபோ டிக்னிடாட் கூட்டணியின் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார் கேப்ரியல் போரிக். முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட அவருக்குச் சிலி மக்கள் வாக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்.

2022 மார்ச் மாதம் புதிய அதிபராகப் பதவியேற்கவிருக்கிறார் போரிக். அனைவருக்குமான அதிபராக இருக்கப்போவதாகக் கூறியிருக்கும் போரிக், இந்த மாற்றத்துக்கான சவாலை எதிர்கொள்வதில் சிறப்பாகச் செயல்படப்போவதாகக் கூறியிருக்கிறார். ஆட்சி மாற்றத்துக்கு மூன்று மாத அவகாசம் இருக்கும் நிலையில், முழு ஒத்துழைப்பு நல்குவதாகத் தற்போதைய அதிபர் செபஸ்தியான் பினேரா கூறியிருக்கிறார்.

சிறுபான்மையினர், மூன்றாம் பாலினத்தவர் என அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செல்லும் அதிபராக போரிக் இருப்பார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. சிலி நாட்டை முழுமையான ஜனநாயகப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பும் அவர் மீது விழுந்திருக்கிறது.

மக்கள் பக்கம் நிற்கும் அவரது அரசியல் கொள்கை இந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்ய உதவும் என நம்புவோம்!

Exit mobile version