-நிலோத்பல் பாசு (Nilotpal Basu)
ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமையிலான ஓராண்டு கால போராட்டம், நினைத்துப் பார்க்க முடியாத வெற்றியை சாதித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மோடி அரசு முதன் முறையாக ஒரு மக்கள் போராட்டத்திற்கு முன் அடிபணிந்துள்ளது. விவசாயிகளின் ஒருங்கிணைந்த இப்போராட்டம் நாடு முழுவதின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு, நவ தாராளமயத்தின் சர்வதேச நிதி மூலதனத்தின் கீழ் இயங்கும் வலதுசாரி அரசியல் சித்தாந்தத்திற்கு எதிராக உலகம் முழுவதும் போராடி வரும் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.
விவசாயிகளின் போராட்டம் அரசாங்கத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதோடு அவர்களுக்குப் பெரும் சங்கடத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் அறிவித்தார். பெரும் பகுதி விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தின் முன் தனது முந்தைய நிலைபாட்டில் அவரால் உறுதியாக நிற்க முடியாமல் போனதே அந்த அதிர்ச்சியின் வெளிப்பாடாகும்.
விவசாயிகள் போராட்டம் நடந்த இக்காலம் முழுவதும் அரசாங்கத்தின் கொள்கையே சரி என்று வழிமொழிந்த பிரதான ஊடகங்கள், மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்கிற முடிவை மோடியின் கச்சிதமான ஆட்டம் என்று முன்னிறுத்துகின்றன. இது விவசாயிகளின் பிரம்மாண்டமான போராட்டத்தை மறுக்கும் செயலாகும். அதனால்தான், விரைவில் வரவிருக்கும் சில மாநில தேர்தல்களை மனத்தில் கொண்டே சட்டங்கள் திரும்பப் பெறப்படுவதாக அவை தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், பூனை கூடையை விட்டு வெளியே வந்துவிட்டது. மூன்று வேளாண் சட்டங்களையும் ஏன் திரும்பப் பெறுகிறோம்? என்பதற்கான காரணங்கள் மற்றும் நோக்கங்கள் நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. அக்குறிப்பே, எவ்வாறு இச்சட்டங்கள், விவசாயம் மற்றும் வேளாண் பணிகள் அனைத்தும் கார்ப்பரேட் பெரு முதலாளிகளிடம் கையளிக்கும் உள்நோக்கத்தைக் கொண்டது என்பதை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
சட்டங்களை திரும்பப் பெறும்போதும் அரசாங்கம் தனது பொய்களையும் ’நியாயங்களையும்’ மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. அதில் ”வல்லுநர் குழுக்களின் பல ஆண்டுகால பரிந்துரைகள், விவசாயிகள், துறைசார் வல்லுநர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகள், விவசாய பொருளாதார அறிஞர்கள் உள்ளிட்டவர்களின் ஆலோசனைகள், விவசாய அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையிலும் விவசாயிகள் மற்றும் ஊரக அமைப்புகளின் அனைத்துவிதமான சமூக பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும் இந்தச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. முப்பதாண்டுகளாக பல அரசாங்கங்கள் இச்சீர்திருத்தங்களை செய்ய முயற்சித்தபோதும் தற்போதைய அரசைபோல் விரிவான அளவில் அதற்கான முன்முயற்சிகளை அவை மேற்கொள்ளவில்லை. மேலும் இக்காலத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியும் நிகழ்ந்துள்ளது.” என்று அக்குறிப்பில் அரசு தெரிவித்துள்ளது.
விவசாயிகளின் போராட்டத்தை இழிவுபடுத்துவதும் அவற்றை ஏளனமாக கருதும் போக்கும் இதிலும் தொடர்வதைக் காணலாம். “குறிப்பிட்ட சில விவசாய குழுக்களே இச்சட்டங்களை எதிர்த்து போராடுகின்றபோதும், பல்வேறு கூட்டங்களிலும் பல்வேறு முறைகளிலும் வேளாண் சட்டங்களின் அவசியத்தை விவசாயிகளிடம் எடுத்துரைக்க அரசாங்கம் கடுமையாக முயற்சித்தது.” என்று நாடாளுமன்றத்தில் அரசு கூறியுள்ளது. இதில் எள் அளவும் உண்மை இல்லை.
சர்வதேச நிதியம் & நவ தாராளமயத்தின் கூட்டு தான் வேளாண் சட்டத்தின் உள்ளடக்கம்
துவக்கத்திலேயே அரசாங்கத்தின் வர்க்க சார்பு இதில் வெளிப்படையாக தெரிவதை கவனத்தில் கொள்வது அவசியமாகும். கரோனா பெரும்தொற்றுக் காலத்தை கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான சீர்திருத்தங்களை மேற்கொள்ள சாதகமாக பயன்படுத்தப்படுவதே அருவருக்கத்தக்க செயலாகும். கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த இந்த கடுமையான ஊரடங்கு அமலாக்கப்படுவதாக கூறினாலும், விவசாயத்தை கார்ப்பரேட்களுக்கு, குறிப்பாக அரசாங்கத்தோடு நெருக்கமானவர்களுக்கு, கையளிக்கவே ஊரடங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. விவசாய பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், அவற்றை சேமிப்பதற்கான சேமிப்பு கிடங்குகளை அமைப்பதற்கும், விநியோக ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இக்காலத்தில் செய்துள்ள முதலீடுகளின் அளவே இதனை அப்பட்டமாக வெளிப்படுத்தும்.
இது அரசாங்கத்தின் செயல்பாட்டில் உள்ள வர்க்க உள்ளடக்கத்தை வெளிப்படுத்துகிறது. வர்க்க உணர்வுடன் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்த்து நிற்காமல் போனால், சொந்தமாக விவசாயம் செய்வதற்கும், எதை விதைப்பது? என்பதை சுயமாக முடிவு செய்வதற்கும், விற்பனைக்கான முறைகளை தீர்மானிப்பதற்கும், பல்வேறு வேளாண் நடவடிக்கைகளில் விவசாயிகளின் சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் முடியாமல் போகும்.
சர்வதேச நிதியத்தின் விவசாய பொருட்களின் உலகளாவிய சந்தையின் தேவைகளை நிறைவேற்றும் போக்குடைய செயல்பாட்டின் ஒரு பகுதியாக தங்களை நிறுத்திக்கொள்ள விவசாயிகள் இயக்கம் உறுதியாக மறுத்துள்ளது. கார்ப்பரேட் பெருமுதலாளிகள் அரசாங்கத்தை அதை நோக்கியே தள்ளுகின்றனர். இது உலகளாவிய போக்காகவே உள்ளது. அதன் அடிப்படையிலான உலகளாவிய சட்டகத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடனேதான் வேளாண் சட்டங்கள் அவசரகதியில் கொண்டுவரப்பட்டன.
இந்த சட்டகத்தின் முக்கியமான கூறு என்னவெனில், விவசாய நிலத்தில் பயிரிடப்படும் பொருளை மாற்றுவதாகும். மற்ற வளர்முக நாடுகளைபோல் அல்லாமல் சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு, நாம் உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருப்பது நமது அரசியல் மற்றும் பொருளாதார இறையாண்மை பாதுகாப்பதற்கான முக்கியமான அரணாக உள்ளது. உணவு உற்பத்தி எவ்வாறு இந்திய மக்களுக்கு அவசியமோ, அதேபோல் கார்ப்பரேட் தலைமையிலான விவசாய சந்தைக்கு வர்த்தகப் பயிர்கள் அவசியமாக உள்ளது. மேலும் இந்த வர்த்தகப் பயிர்கள் இந்தியாவின் பல்வேறு காலச்சூழலில் நன்றாக விளைய கூடியதாகவும் உள்ளது. எனவே வேளாண் சட்டங்கள், எதை விதைப்பது? எதை விவசாயம் செய்வது? எனும் சுதந்திரத்தை பாதிக்கும். விவசாயிகள் மீது தொடுக்கப்பட்ட இத்தாக்குதலை பூகோள எல்லைகளை கடந்து விவசாயிகள் இயக்கம் வென்றுள்ளது.
எதிர்ப்பாற்றலின் விரிந்த தன்மை
“தொடர்ந்து நிலவும் சர்வதேச முதலாளித்துவ நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று மற்றும் அதை தொடர்ந்த ஊரடங்கின் காரணமாக இந்திய பொருளாதாரம் சந்திக்கும் நெருக்கடிகளின் பின்னணியில், விவசாயம் மற்றும் அதன் வர்த்தகத்தை முழுமையாக கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்ல இந்திய ஆளும் வர்க்கத்தின் தலைமை எடுத்த முயற்சிகளை விவசாயிகளின் இந்தப் போராட்டம் தடுத்துள்ளது” என்று விவசாயிகளின் இப்போராட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறைவேற்றிய தீர்மானம் சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னெப்போதும் இல்லாத அளவிலான எதிர்ப்புணர்வின் விரிந்த தன்மையையும் அதன் வர்க்க இயங்கு தன்மையையும் தெளிவாக விளக்குவது எளிதானதல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான அரசாங்கம் இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அதன் மக்கள் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து ஆங்காங்கே எழுந்த எதிர்ப்பு இயக்கங்களுக்கு சரியான பலன் கிடைக்கவில்லை. தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்கச் சொன்ன அச்சுறுத்தல் நிறைந்த காலத்தில் பொதுவான கொள்கை பிரச்சினைகளுக்காக பிரம்மாண்டமான மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதில் உள்ள சிரமமே நம்ப முடியாத அளவிலான இப்போராட்டத்தை புரிந்து கொள்ள போதுமானதாகும்.
இப்போராட்டம் மேலும் பல சிக்கல்களை கொண்டதாகும். ஏனெனில், இந்திய விவசாயிகளிடம் நிலவும் வர்க்க வேறுபாடுகளால் கடந்த காலத்தில் அனைத்து தரப்பு விவசாயிகளையும் ஒன்றிணைத்து ஒரு போராட்டத்தை நடத்த முடிந்ததில்லை. ஆனால், இப்போராட்டத்தில் வசதிபடைத்த விவசாயிகள், சிறிய மற்றும் மத்திய தர விவசாயிகளும் பங்கேற்றனர். அதேநேரம் சாதிய படிநிலையின் படி கடந்த காலங்களில் தனித்து ஒதுங்கியிருந்த நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களை அணிதிரட்டுவது பெரும் சவாலாக இருந்தது.
அரசாங்கமும் அதன் அரசியல் இயந்திரமான பிஜேபி – ஆர் எஸ் எஸ் –உம் இந்த சமூகக் குறைபாட்டைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த முனைந்தனர். மத அடையாளங்களை பயன்படுத்தியும் அரசியல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. போராட்டத்தில் பங்கேற்ற பெரும்பகுதியினர் பஞ்சாப் மாநிலத்தவர்கள் என்பதால் இப்போராட்டம் காலிஸ்தான் தீவிரவாதத்தின் சதி என்றும் கொச்சைப்படுத்தினர். ஆனால், அரசின் அத்தனை முயற்சிகளும் தோல்வியையே தழுவியது. வேற்றுமைகளை கடந்த ஒற்றுமையின் பலத்துடன் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் தலைமையில் சுமார் 500 அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அரசாங்கத்தின் பல்வேறு தாக்குதல்களை எதிர்கொள்ளும் கேடயமாக இருந்தது. இவ்வொற்றுமையே அதன் தனித்தன்மையாக விளங்கியது.
இந்த விரிந்து பரந்த வர்க்க – வெகுஜன ஒருங்கிணைவு ஏற்படுவதற்கான அடிப்படையான அம்சங்களை பிரதான ஆய்வாளர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர்; அல்லது தெரிந்தே அதை மறுத்து, சிதைக்கப் பார்க்கின்றனர். இப்போராட்டம் நீண்டகால வளர்ச்சிப்போக்கின் அடித்தளத்தில் எழுந்துள்ளது. நிச்சயம் திரும்ப பெற வேண்டிய சட்டமான கட்டாய நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்த போராட்டத்திலிருந்து இது துவங்கியது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக விவசாய பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது; பணப்புழக்கம் குறைந்தது ஆகியவற்றுக்கு எதிராக நடந்த போராட்டங்கள் இப்போராட்டத்தின் இரண்டாம் கட்டமாகும். அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு (AIKSCC) ஒரு விரிந்த மேடையின் துவக்கமாகும். அதுவே பின்னர் வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஐக்கிய விவசாயிகள் முன்னணியாக எழுந்து நின்றது. இது, வர்க்கம், சாதி என்கிற வேற்றுமைகளை கடந்த ஒருங்கிணைவை வழங்கியது.
“சர்வதேச நிதி மூலதனத்துடன் இணைந்த பெரு முதலாளிகளுக்கும் பணக்கார விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் இடையே இந்த வேளாண் சட்டம் ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. இம்மோதல் உழைக்கும் வர்க்கம், ஏழை விவசாயி மற்றும் விவசாய கூலி தொழிலாளர்களை ஒருங்கிணைத்து முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவ வர்க்க அமைப்பிற்கு எதிரான போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதற்கு உதவும் சாத்தியக்கூறுகள் உள்ளன’‘ என்ற மத்திய குழுவின் அறிக்கையை கொண்டு நாம் இதை சுருக்கமான கூறலாம்.
விவசாயிகளின் இப்போராட்டத்தின் துவக்கத்திலிருந்தே தொழிற்சங்கங்களின் உடனடியான ஆதரவு செயல்பாடுகளை உள்வாங்காமல், இயற்கையாக உள்ள விரிவான வர்க்க இணைவு முழுமை பெறாது. மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் விரோத செயல்பாடுகளையும், அது கொண்டு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்தும், இயற்கை வளங்களை கண்மூடித்தனமாக விற்பதை கண்டித்தும் உழைக்கும் வர்க்கம் கனன்று கொண்டிருந்தது. இது விவசாயிகளின் ஒருங்கிணைந்த போராட்டத்திற்கு தொழிலாளி வர்க்கத்தையும் தெழிற்சங்கங்களையும் தங்களது உறுதியான ஆதரவை நல்கிட வழிவகுத்தது. சமீபகாலங்களில் திட்டமிட்ட அடிப்படையில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் ஒருங்கிணைவு பல முட்டுக்கட்டைகளை தகர்த்துள்ளது. அதுவே ஒரு விரிவான ஒருங்கிணைவை கட்டியமைக்க வழிகோலியது.
“தேசத்தின் சொத்துக்களை கொள்ளையடிக்கும் நவ தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் தீவிரத்தன்மை பெரு முதலாளிகளுக்கும் சிறு,குறு மற்றும் மத்திய தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் முதலாளிகளுக்கும் இடையே ஒரு மோதலை உருவாக்கியுள்ளது. பெரு முதலாளிகள் மற்றும் இதர முதலாளிகள் மத்தியில் உருவாகியுள்ள இம்மோதல், பிஜேபி மற்றும் அதன் கொள்கைகளுக்கு எதிரான வலுவான விரிந்த ஒருங்கிணைவை கட்டியமைக்கும் சாத்தியக்கூறுகளை உருவாக்கியுள்ளது.” (மத்திய குழு அறிக்கை)
புதிய அரசியல் விழிப்புணர்வு: ஜனநாயகத்தையும் அரசியல் அமைப்பு சட்டத்தின் மாண்புகளை பாதுகாத்தல்
திரும்பிப் பார்க்கையில், வாழ்நிலையைப் பாதுகாப்பதற்கான வர்க்கப் போராட்டமானது, அடிப்படையாகவும், பெருமளவிலும் பொருளாதாரரீதியான தன்மை கொண்டதாக அமைந்திருந்த இந்தப் போராட்டத்தினை புதியதொரு அரசியல் மட்டத்திற்குக் கொண்டு சென்று, அதை உண்மையானதொரு மக்கள் இயக்கமாக உருமாற்றி அமைத்தது என்பது தெளிவாகிறது. “விவசாயிகளுக்கு ஆதரவான சீர்திருத்தம்” என்று சொல்லப்பட்ட இச்சட்டங்களை எதிர்த்து போராடுவதற்கான விழிப்புணர்வை மூவர்ணக் கொடியின் பின்னணியில் இந்திய அரசியல் அமைப்பு சட்டமே ஏற்படுத்தியது என்பது தற்செயல் நிகழ்வே.
அரசாங்கத்தின் இந்த சட்ட நடைமுறைகள் முழுக்க முழுக்க இந்திய அரசியல் சாசனத்திற்கும் அதன் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானதாகும். அதுவே இந்த நீடித்த போராட்டத்திற்கு அடித்தளமாக அமைந்தது. இவ்வேளாண் சட்டங்களை அரசாங்கம் மிருக பலத்துடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய போதும், அது நாடாளுமன்ற மரபுகளையும் நடைமுறைகளையும் காலில் போட்டு மிதித்தது. அதுவும் இந்த வீரியமிக்க போராட்டத்திற்கு உரமிட்டது.
தேச விடுதலை போராட்டத்தின் போது அது உத்தரவாதப்படுத்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் உள்ளடக்கமான ஜனநாயகம் மற்றும் மாநில உரிமைகளை இவ்வரசு குறைத்து மதிப்பிட்டதன் விளைவாக அது தற்போது அம்பலப்பட்டு நிற்கிறது. இறுதியாக, தேசத்தின் தலைநகரின் வீதிகளில் நடந்த இப்போராட்டம் அரசாங்கத்தின் அருவருக்கத்தக்க வடிவத்தை தோலுரித்து காட்டியுள்ளது. இதில் முரண்பாடு என்னவெனில், வேளாண் சட்டங்களை அரசாங்கம் திரும்பப் பெற்றிருப்பது, நீதி நியாயங்களை நிலைநாட்டுவதற்கான போராட்டங்கள் சரியானதுதான் என்று நிருபித்துள்ளது.
அரசாங்கம்தான் வன்முறையை கையாளும் என்பதை உருவகமாக மட்டுமல்லாமல் நிஜத்திலும் எடுத்துக்காட்டியுள்ளது. எழுநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் போராட்ட களத்தில் தியாகிகளாக மரணித்திருந்தாலும் அரசின் தாக்குதலுக்கு உள்ளாகி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெரிய அளவில் உள்ளது. தடுப்பு வேலிகள் போடுவது, சாலைகளில் பள்ளம் வெட்டி வைப்பது, கூர்மையான கம்பிகளை சாலையில் பதிப்பது போன்ற அரசின் நடவடிக்கைகள் மேலெழும் மக்கள் திரள் போராட்டங்களை தடுத்துவிட முடியாது. வன்முறையற்ற மக்கள் திரள் போராட்டங்கள் பெரிய அளவில் ஆதரவை பெற்றிருப்பதோடு வருங்கால போராட்ட முறையாகவும் காட்சி தருகிறது.
வெற்றிகளின் பலன்களை முன்னோக்கிய பயணத்திற்கு பயன்படுத்துவோம்
இவ்வரசு வீழ்த்த முடியாத சக்தியல்ல; ஒன்றிணைந்த போராட்டத்தால் அதை முறியடிக்க முடியும் என்கிற உணர்வு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. அனைத்து விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய பொருட்களுக்கு போதுமான கொள்முதல் விலை, விவசாய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் வகையில் அமைப்பு ரீதியான அடிப்படை மாற்றங்கள் உள்ளிட்டவைகளுக்கான போராட்டம் தொடரும் என்பது தெளிவு.
ஐக்கிய விவசாயிகள் முன்னணி தொடர்ந்து செயலாற்றும் என்றும், மேற்கண்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள அது புதிய முன்னெடுப்புகளை செய்யும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. ஜனநாயக இயக்கங்களுக்கான புதிய சாத்தியக்கூறுகளை இப்போராட்டத்தின் வெற்றி உருவாக்கியுள்ளது என்பது தெளிவு. முன்னோக்கிய பயணத்திற்கான விரிவான ஒருங்கிணைவை இந்த வெற்றி விட்டுச் சென்றுள்ளது.
தமிழில்: ச.லெனின்