–சங்கர சிவன்
இலங்கை அரசியல் அமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட மாகாண சபைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும்படி கோரி இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்து ஒரு மகஜரை சில தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டு அவருக்கு அனுப்பி வைத்திருக்கின்றன.
இந்த மகஜரில் கையெழுத்திட்ட கட்சிகள் யாவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சில உதிரிக் கட்சிகளை உருவாக்கியவர்களும்தான். எனவே அடிப்படையில் இவர்கள் அனைவரும் பல கட்சிகள் என்ற போர்வையில் இருந்தாலும், அடிப்படையில் ஒரே அணியைச் சேர்ந்த ஒரே கருத்தியலைக் கொண்ட கட்சிகள்தான்.
இன்னொரு முக்கியமான விடயம், இந்த மகஜரில் கையெழுத்திட்ட கட்சிகள் யாவும் இலங்கையின் வட பகுதியைத் தளமாகக் கொண்டு செயற்படும் கட்சிகள்தான். அதிலும் கூட, வடக்கில் பிரதானமாகச் செயற்படும் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியோ அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய முன்னணி கட்சியோ உள்ளடக்கப்படவில்லை. இந்த இரு கட்சிகளுக்கும் தலா இவ்விரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். அது மட்டுமின்றி, முன்னாள் வட கிழக்கு மாகாண முதலமைச்சர் அ.வரதராஜப்பெருமாள் தலைமையிலான தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியும் உள்ளடக்கப்படவில்லை.
தவிர, கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு அதி கூடிய வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்துக்குத் தெரிவானவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியும் இந்த மகஜர் கூட்டில் இணைக்கப்படவில்லை.
அது மட்டுமின்றி, மலையகத்தின் மிகப்பெரும் தொழிற்சங்க அடிப்படையிலான சௌமிய மூர்த்தி தொண்டமான் உருவாக்கிய அரசியல் கட்சியாகிய இலங்கை தொழிலாளர் காங்கிரசும் இதில் உள்ளடக்கப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க, இந்த மகஜர் அனுப்பும் விடயம் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பங்குபற்றிய ரவூப் ஹக்கீம் தலைமையிலான சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியோ மற்றும் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணிக் கட்சியோ மகஜரில் கையெழுத்திடாது இறுதி நேரத்தில் பின்வாங்கிவிட்டன. இந்த மகஜரில் உள்ளடக்கட்ட விடயங்கள் தமது மக்களின் அபிலாசைகளையும் உள்ளடக்கவில்லை என அவர்கள் கருதியதாலேயே கையெழுத்திடாமல் தவிர்த்துக் கொண்டன எனத் தெரிய வருகிறது.
அது மட்டுமல்லாமல், அவர்கள் கையெழுத்திடாமைக்கு சிறுபான்மை இனங்களின் கூட்டு நலன்களுக்கு அப்பால் சில விடயங்களும் இருக்கின்றன. அதில் ஒன்று முஸ்லீம் தலைமையும், மலையகத் தலைமையும் பாரம்பரியமாக வடக்கு தலைமையை விட தென்னிலங்கையிலுள்ள சிங்கள (குறிப்பாக ஐ.தே.க.) தலைமைகளுடனேயே இணைந்து தமது அரசியல் நடவடிக்கைகளைச் செய்து வந்திருக்கின்றன என்பதாகும். அடுத்தது, வட மாகாணத் தலைமைகள் வருங்காலத் தேர்தல்களை மையமாக வைத்து இந்தக் காய் நகர்த்தலைச் செய்வது போல, முஸ்லீம் – மலையக் தலைமைகளுக்கும் வருங்காலத் தேர்தல்களை மையமாகக் கொண்டு சில காய் நகர்தல்களைச் செய்ய வேண்டிய தேவை உள்ளது. (பிரிவினை அல்லது சமஸ்டி கோரும் வடக்குத் தலைமையுடன் இணைந்தால் தமது தேர்தல் வெற்றிக்குப் பாதிப்பு வரலாம் என அவை எண்ணுகின்றன)
எனவே, பலரும் கடந்த காலங்களில் குற்றம் சாட்டியது போல இம்முறையும் யாழ். மேட்டுக்குடியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மட்டுமே இந்த மகஜரில் கையெழுத்திட்டுள்ளன. மகஜர் இந்திப் பிரதமரின் கைகளுக்குப் போக முன்னரே இந்தக் கட்சிகளிடம் ஏற்பட்டுள்ள இழுபறி இந்த முயற்சியின் தோல்வியை முன்னரே கட்டியம் கூறி நிற்கிறது.