Site icon சக்கரம்

புத்தாண்டு: இந்திய – சீன இராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்!

கிழக்கு லடாக் பகுதிகளிலுள்ள ஹொட் ஸ்பிரிங்ஸ் மற்றும் டெம்சோக் பிரதேசங்களில் முகாமிட்டுள்ள இந்திய மற்றும் சீன இராணுவத்தினர் புத்தாண்டின் நிமித்தம்  பரிசில்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். இப்பிராந்தியத்திலுள்ள ஏனைய பிரதேசங்களான கே.கே பாஸ், டி.பி.ஓ. பொட்டல்நெக், கொங்கலா, சுஷுல் மோல்டோ, நாதுலா, கொங்ராலா,  பும்லா, வாச்சா தமாய் ஆகியவற்றிலும் இரு நாட்டு இராணுவத்தினரும் புத்தாண்டு பரிசில்களைப் பரிமாறி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதாக ‘இந்தியா டுடே’ தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு மே மாதம் இந்திய, சீன இராணுவத்தினருக்கிடையில்  கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட முறுகல் நிலைக்கு பின்னர்  இரு நாட்டு இராணுவத்தினரும் இம்முறை புத்தாண்டின் நிமித்தம் இனிப்புக்களைப் பரிமாறி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆன போதிலும் ஹொட் ஸ்பிரிங்கஸ்  பிரதேசத்தில் இன்னும் தீர்க்கப்படாத முரண்பாடுகள் நீடிப்பதோடு,  மோதலின் ஒரு பகுதியாக இல்லாத டெம்சோக் பிரதேசத்தில் இராணுவக் குவிப்பும் தொடர்கிறது. லடாக் பிராந்தியத்தில் நிலவும் முறுகல்களுக்கு  இறுதித் தீர்மானத்தை எட்டுவது தொடர்பில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

கிழக்கு லடாக்கில் முழுமையான படைக் குறைப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதை  இந்தியா நிலைப்பாடாகக் கொண்டுள்ளது. அதற்கு  சீனா இணங்காத நிலை தொடர்கிறது. பாங்காங் தசோ, கல்வான், கோக்ரா ஆகிய இடங்களில் மோதல் தவிர்ப்பு வலயங்கள்  உருவாக்கப்படுகின்ற போதிலும் அவை இறுதித் தீர்மானத்திற்கு வழிவகுக்காது என்று இந்தியா தெரிவித்திருக்கிறது. அதேநேரம் சீனா,  ஹொட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் மோதல் தவிர்ப்பு வலயத்தை அமைக்க  வலியுறுத்தியுள்ளது.

இப்பகுதிகளில் 3 முதல் 10 கிலோ மீற்றர்கள் வரையான தூர இடைவெளியில் மோதல் தவிர்ப்பு வலயங்ளை அமைக்கும் போது, இந்தியா வழமையாக  ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடும் பகுதிகளில் ரோந்து செல்ல முடியாத நிலையை உருவாக்கும்  எனத் தெரிவிக்கப்படுகின்றது.

படைத் தளபதிகள் மட்டத்தில் பல சுற்று சந்திப்புக்கள் நடந்துள்ள போதிலும்  முட்டுக்கட்டை தொடர்கிறது. பாதுகாப்பு முன்னரங்குகளில் படையினரின் அதிகரிப்பு எதுவும் இடம்பெறாத போதிலும் இரு தரப்பினரும் படைகளைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர்.

2020 மே  முதல் லடாக் பிராந்தியத்தியில்  50,000 க்கும் மேற்பட்ட படையினர் பணியில்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  சீனாவானது லடாக்கில் மாத்திரமன்றி அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றின் கிழக்கு எல்லை பகுதிகளிலும் கடந்தாண்டு ஆக்கிரமிப்பு நகர்வுகளை மேற்கொண்டுள்ளது. இவ்வாறான சூழலில் இரு நாட்டு படையினரும் புத்தாண்டின் நிமித்தம் பரிசில்களைப் பரிமாறிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version