Site icon சக்கரம்

நூர்ந்தும் அவியா ஒளி – தோழர் ப. ஜீவானந்தம்

-சூர்யாசேவியர்

புரட்சி என்பது புதுமைக்கூத்து!
புரட்சி என்பது புத்துயிர் வெள்ளம்!
புரட்சி என்பது புதிரைத் தீர்த்தல்!
புரட்சி என்பது போரிற் பெரிது!
புரட்சி என்பது புதுமைக் கீதம்!
புரட்சி என்பது புத்துயிர் முரசு!
புரட்சி என்பது பொறுமைக் குறுதி!
புரட்சி என்பது போம்பணிக் கறுதி!
புரட்சி என்பது பூகம்ப வேகம்!
புரட்சி என்பது பூரண மாற்றம்!
புரட்சி என்பது புரட்டின் வைரி!
புரட்சி என்பது புவித்தாய் நகைப்பு!
என ஆவேசக் குரலெடுத்து பாடியவர் ஜீவா.
தன்னைப்பற்றியே சிந்திக்கும் மனிதர்களுக்கிடையில், இந்த மண்ணைப் பற்றியே சிந்தித்த மகத்தான ஜீவன்.

காந்தியவாதியாய் – காங்கிரஸ்காரராய்-சுயமரியாதை இயக்கத்தவராய்- தனித்தமிழ் இயக்க ஆர்வலராய்-சுயமரியாதை சமதர்ம இயக்கத்தவராய்-காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி தலைவராய்-இறுதியில் இம்மண்ணின் மக்கள் அரசியல்-சமூக-பொருளாதார விடுதலையடைய மார்க்சியத்தை தவிர வேறு மாற்று இல்லை என்ற முடிவிற்கு வந்து கம்யூனிஸ்ட்டாக பரிணமித்தார். பூதப்பாண்டி துவங்கி காசிமேட்டில் தன் கடைசிப்பயணம் வரை ஒரு வர்க்கப் போராளியாய் வலம் வந்த வைரி தோழர் ஜீவானந்தம் .

குமரியின் பூதப்பாண்டியில் பிறந்தவர்.பெற்றோரால் சொரிமுத்து என்று பெயரிடப்பட்டு,முதல் மூன்று குழந்தைகளும் இறந்துவிட்ட நிலையில்,கடவுளை வேண்டி மூக்குகுத்தி மூக்காண்டி என அழைத்தனர்.நான்காவது குழந்தை நாலுமறிந்து,நாடறிந்த நல்லவரானது.சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்கான தேடலை தேடிப்படித்தவர்-தேடிப்பிடித்தவர்.

வைக்கம் போராட்டம் தான் அவரின் முதல் போராட்ட பங்கேற்பு. மனநோயாளிகளின் பூமி என்று சுவாமி விவேகானந்தரால் கூறுமளவிற்கு சாதியத்தின் கொடிய வாசனை வீசிய அன்றைய கேரளத்தின் திருவிதாங்கூர் பகுதியில் தீண்டாமைத் தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

ஒரு மனிதனின் வளர்ச்சியில் சுற்றம், சூழலும் சமூக அமைப்பும் அங்கம் வகிக்கின்றன. பள்ளியில் படிக்கும்போதே சாதிகள் இல்லையடி பாப்பா! குல தாழ்ச்சி இகழ்ச்சி சொலல் பாவம்” எனப் பாரதியைப் படித்தார். ஒடுக்கப்பட்ட சகோதரர்களின் கரம் பற்றி நடந்தார்.

“வாயற்ற நாயும், கழுதையும் மலந்தின்னும் பன்றியும் செல்லலாமாம். மனிதர் நாம் சென்றால் புனிதம் கெட்டு தீட்டு வந்து உலகம் முழுகிப்போய்விடுமாம்” என ஆவேசமாய் பேசியது மட்டுமல்ல செயலிலும் இறங்கியவர்.

பள்ளியில் படிக்கும்போதே வைக்கத்தில் பெரியாரின் போராட்டத்தில் முதலில் கால்வைத்தார்.படிப்பு நின்று போனது.சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலுக்குள் ஜோசப் பூதலிங்கம் என்ற தாழ்த்தப்பட்டவரை அழைத்துக்கொண்டு ஆலயப்பிரவேசம் செய்தார்.

உயர்சாதி வெறியர்களால் அடித்து உதைக்கப்பட்டார். காந்தியத்தின் தீண்டாமைக்கு எதிரான தத்துவத்தின் பால் சற்றும் மனம் தளரவில்லை. தீண்டாமைக்கு எதிரான அவரின் தொடர் நடவடிக்கை தொடர்ந்தது. வீட்டைவிட்டு வெளியேறும் நிலையும் வந்தது.

காந்தியத்தின் மீதுள்ள பற்று நெல்லைமாவட்டம் சேரன்மகாதேவி குருகுலத்தில் வ.வே.சு ஐயரிடம் வந்து சேர்த்தது. ஆசிரமத்தில் ஆசிரியப் பணியைச் சிறிதுகாலம் செய்தார். எந்தத் தீண்டாமைக்கு எதிராகப் போராடினாரோ  அந்தத் தீண்டாமை குருகுலத்திலும் குடியிருந்தது.

தீண்டாமைக்கு எதிராக பெரியார், வரதராஜநாயுடு ஆகியோரோடு இணைந்து போராடினார். முடிவில் அங்கிருந்து வெளியேறி காரைக்குடி சிறாவயல் ஆசிரமத்திற்கு சிறகுகள் பறந்தன. காசிவிஸ்வநாத செட்டியாரின் காந்தி ஆசிரமத்தில் சொரிமுத்து என்ற மூக்காண்டி ஜீவானந்தமாக மாறுகிறார்.

மகாத்மாதான் இந்தத் தேசத்தை உய்விக்கவந்தவர்.அவரே கடவுள் எனக் கருதுகிறார். அரிசன் இதழில் காந்தி எழுதிய கட்டுரை அவரை அதிர்ச்சி அடையச்செய்கிறது. சுதந்திர இந்தியா வர்ணாசிரம தர்மத்தின் படியே எதிர்காலத்தில் வழிநடக்கும் என்பதே அந்தக் கட்டுரை.

வர்ணாசிரமம் குறித்த காந்தியின் கருத்துகள் ஜீவாவை சிரமப்பட வைக்கிறது. வர்ணாசிரமத்தின் வக்கிரம் குறித்து காந்திக்கு கடிதம் எழுதுகிறார் ஜீவா. உங்கள் கடிதம் படித்தேன். வர்ணாசிரமம் குறித்த உங்கள் கருத்தை ஏற்கிறேன் என்று காந்தி பதில் கடிதம் எழுதுகிறார்.

1927 இலங்கை செல்லும் வழியில் தமிழகம் வந்தார் காந்தி. காரைக்குடி ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் வீட்டில் தங்குகிறார். நான் ஜீவாவை சந்திக்க வேண்டும் என்கிறார் காந்தி. அவரை அழைத்து வரவா என்று கேட்கிறார்கள். இல்லை, நான் அவரைப் போய் நேரில் சந்திக்க வேண்டும் என்கிறார் காந்தி. காரைக்குடி சிறாவயல் ஆசிரமத்திற்கு காந்தி செல்கிறார். காந்தியே நேரடியாக வந்து ஜீவாவை சிறாவயலில் சந்திக்கிறார். அப்போது ஜீவாவிற்கு வயது 20 தான்.

ஜீவாவிற்கும்-காந்திக்கும் விவாதம் நடக்கிறது. ஒரு மனிதனின் பிறப்பின் சிறப்பு வாழ்க்கை ஒழுக்கத்தில் தானே அன்றி, தர்மங்களுக்கும் குணங்களுக்கும் ஏற்ப மனிதர்களை நான்கு வர்ணங்களாக பிரித்திருக்கிறேன் என கீதையில் கூறுவதை எப்படி ஏற்க முடியும்?என்று காந்தியிடம் கேள்வி எழுப்பினார் ஜீவா.

கீதையை வேதமாகக் கருதும் காந்தி, பிறப்பு குறித்த கீதையின் கருத்தை நான் ஏற்கிறேன் என்கிறார். மகாத்மாவின் கருத்தை ஜீவாவால் ஜீரணிக்க முடியவில்லை. காந்தியத்தின் மீதான நம்பிக்கை தளர்கிறது. காந்தியத்திலிருந்து விடுபட்டு,பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் ஜீவா.

இந்தப் பயணத்தின்போதுதான் தமிழக விவசாயிகள் சட்டை இல்லாமல் நிலத்தில் நின்றதைப்பார்த்த காந்தி, விவசாயிகள் என்று சட்டை அணிகிறார்களோ அன்றுதான் நானும் சட்டை அணிவேன் என்று தன் சட்டையைக் கழட்டிவீசினார்.

காந்தியத்திலிருந்து விலகி பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைகிறார் ஜீவா. நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற மாவீரன் பகத்சிங் எழுதிய நூலை பெரியார் மூலம் தமிழில் மொழி பெயர்த்தார் ஜீவா. அந்த நூல் பெரியாரின் தம்பி கிருஷ்ணசாமி நாயக்கர் பெயரில் வெளியிடப்பட்டது.

தமிழில் மொழிபெயர்த்த ஒரே காரணத்திற்காக பொள்ளாச்சி வீதிகளில் ஒரு விலங்கைவிடக் கேவலமாக சங்கிலியால் கட்டி அடித்து இழுத்து வந்தனர் வெள்ளைக்கார போலீஸ்.

ஜாதிய வேறுபாடுகளுக்கு எதிரான பெரியாரின் வீரஉரைகள் ஜீவாவை சுயமரியாதைக்காரனாய் கிளர்ந்தெழச்செய்தது. கருத்துப் போராட்டங்களும் தொடர்ந்தது.

மூடநம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பிராமணிய எதிர்ப்பு, பூணூல் அறுப்பு என வெறும் வர்ணபேதங்களை மட்டுமே முன்னிறுத்தி பேசுவது மட்டும் போதாது. வர்க்க பேதத்திற்கு எதிராக சமதர்மக் கொள்கைகளையும் இணைக்கவேண்டும் என்று பெரியாரிடம் வாதிட்டார் ஜீவா.
முடிவில் சுயமரியாதை இயக்கத்திலிருந்து வெளியேறி, சுயமரியாதை சமதர்ம இயக்கம் என்ற கட்சியைத் தொடங்கினார்.

அப்போது இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் வெள்ளையர்களால் தடை செய்யப்பட்ட காலம். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் கம்யூனிஸ்ட்கள் இணைந்து வேலை செய்தனர்.1932 ல் சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்று சிறை சென்ற பொழுதுதான் அவருக்கு கம்யூனிஸ்ட் தோழர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது.

அப்போது சேலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் சென்னை மாகாண மாநாட்டில் ஜீவா செயலாளராக தேர்வு செய்யப்படுகிறார். ஒரு கட்சியின் மாகாணப் பொறுப்பை அவர் ஏற்கும்போது வயது 25 தான். காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் இதழாக முதலில் வெளியிடப்பட்டதே ஜனசக்தி நாளிதழ்.

அதன்பிறகு 1936 ல் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்படுகிறது. அந்தக்கிளையில் அவரும் ஒரு உறுப்பினர். தமிழ் மொழியின் மீதான பற்று, தனித்தமிழ் இயக்கம் கண்ட வேதாசலம் என்ற மறைமலையடிகளோடு தொடர்பு ஏற்படுகிறது.

ஜீவா என்பது வடமொழிச்சொல். எனவே தன் பெயரை உயிர்இன்பன் என்று மாற்றி உலா வந்தார். எம்மொழிச் சொல்லும் கலக்காமல் தனித்தமிழில் பலமணிநேரம் பேசும் ஆற்றல் கொண்டவர். அவரின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் தமிழகத்திலேயே அவர் நடமாடக்கூடாது என்று வாய்ப்பூட்டுச்சட்டம் போடப்பட்டு பூதப்பாண்டிக்கு நாடு கடத்தப்பட்டார். 1939 முதல் 1945வரை இது தொடர்ந்தது.

இந்திய விடுதலைக்குப் பிறகு 1948 முதல் 1951 வரை நேரு அரசு கம்யூனிஸ்ட் கட்சியைத் தடைசெய்தது.கைது செய்யப்பட்டு சிறை சென்றவர் 1951 ல் வெளியே வந்தார்.

1949 ராபின்சன் பூங்காவில் அறிஞர் அண்ணாவால் துவக்கப்பட்ட தி.மு.க திராவிட இயக்கத்தவருக்கு எதிராக இந்திய அரசமைப்புச் சட்டம் இருப்பதாகக்கூறி 1952 முதல் சட்டமன்ற தேர்தலைப் புறக்கணித்தது.

1952 சட்டமன்ற தேர்தலில் இன்றைய இராயபுரம் தொகுதியான அன்றைய வண்ணாரப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தி.மு.க.சட்டமன்றத்திற்குள் நுழையும் முன்பே தமிழ்நாடு எனப் பெயர் வைக்கவேண்டுமென சட்டமன்றத்தில் பேசினார்.

நான் தமிழன், என்னுடைய மொழியே இந்த ராஜ்ஜியத்தில் ஆட்சிமொழியாக இருக்கவேண்டும். கல்விக்கூடங்களிலும், நியாயமன்றத்திலும், நிர்வாகத்துறையிலும் தமிழ் மொழியே இயங்க வேண்டும் என்று 1952 செப்டம்பர்-29 ல் சட்டசபையில் முழங்கினார் ஜீவா. ஜீவாவின் சட்டமன்ற உரைகள் இன்றும் ஜீவனுள்ள வரிகள்.

தன் வாழ்நாள் முழுமையும் உழைப்பாளிகளின் நலனுக்காய் வாழ்ந்தவர். கண்ணம்மா என்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தவரையும், அவர் இறப்பிற்குப்பிறகு பத்மாவதி என்ற தெலுங்கு இனத்தவரையும் சாதி மறுப்புத் திருமணம் செய்தவர். மேற்குத் தாம்பரத்தின் கஸ்தூரிபாய் நகரில் ஒரு சிறிய குடிசைவீட்டில் கடைசிவரை வாழ்ந்தவர்.

பேச்சாளராய்-எழுத்தாளராய்-கவிஞராய்-பாடலாசிரியராய்-பத்திரிக்கையாளராய்-நாடக நடிகராய் பன்முகத்தன்மையுடன் பவனி வந்தவர்.

பிரபஞ்சத்தின் அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்தியவர்.
பிறர் நலனில் தன் நலனை அடக்கியவர்.
முற்றிலும் சுயநலம் துறந்தவர்.
மானுடனுக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்.
அவர் இறந்தபோது காசிமேட்டின் சுடுகாட்டில் கண்ணீர் ஒழுக கதறிப் பாடினார் பாவலர் வரதராஜன்(இளையராஜாவின் அண்ணன்).

சிங்கமென முரசறைந்த குரலும் எங்கே?
செந்தமிழை ஆய்ந்து சொன்ன உருவம் எங்கே?
செங்கொடி ஈன்றெடுத்த ஜீவா எங்கே?
இனி எங்கள் குறை ஈடு செய்ய யார்தான் இங்கே?என்று பாடினார்.

ஆம்..அந்த ஜீவா எங்கே?

இன்று தோழர்.ஜீவா நினைவு நாள்.

பாட்டாளிகளின் தோழன் ஜீவா!

– எழிலரசன்

சுதந்திர போராட்ட வீரராக, பொதுவுடமை போராளியாக, மிகச் சிறந்த பேச்சாளராக விளங்கிய தோழர் ஜீவாவின் பிறந்த நாள் இன்று.

தமிழகத்தில் பொதுவுடமை கட்சியின் முக்கிய  தலைவராக விளங்கிய பொதுவுடமை போராளி தோழர் ஜீவா, பொது  வாழ்வில்  நாற்பது  வருடம் ஈடுபட்டு, பல்வேறு சிறைகளையும், சோதனைகளையும் தாங்கிய தியாகி. தன்னுடைய  ஆயுள் காலத்தில் பத்து  வருடங்கள் சிறையில் கழித்த இவர், காந்தியவாதியாக, சுயமரியாதை  இயக்க பற்றாளராக, பொதுவுடமை  இயக்க தலைவராக செயலாற்றியவர்.

ஜீவா என்று அன்புடன் அழைக்கப்படும் தோழர் ப.ஜீவானந்தம்,
நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற கிராமத்தில் 1907ம் ஆண்டுகளுக்கு இதே நாளில் பட்டத்தார்–உமையம்மாள் தம்பதியினரின் மகனாக பிறந்தார். இயற்பெயர் சொரிமுத்து.

சிறு வயதிலேயே காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஜீவா, ஒன்பதாம் வகுப்பு  படிக்கும்போதே கவிதைகளும், நாடகங்களும்
எழுதி நடிக்கவும் செய்தார். தமிழிலக்கியம்  மீது தனி ஆர்வம்  கொண்டிருந்தார். பெரும் இலக்கியவாதியாகவும், பத்திரிகையாளராகவும் திகழ்ந்தார். குடியரசு, ஜனசக்தி, பகுத்தறிவு, புரட்சி, தாமரை ஆகிய இதழ்களுக்கு புரட்சிகரமான கட்டுரைகளும், கவிதைகளையும் படைத்தவர்.

பொதுவுடமை  மேடைகளில் முதல் முறையாக  தமிழ் கலாச்சாரத்தோடு கலந்துரையாடல் தமிழிலக்கியம் பேசியவர் ஜீவா. தமிழோடு சேர்த்து கட்சியையும் வளர்த்தார். காங்கிரஸ் ஆட்சியில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப்பட்டபோது, ஜீவா  தலைமறைவு வாழ்க்கை மேற்கொண்டார். ஜீவாவிற்கு பொதுவுடைமை ஒரு கண் என்றால், மேடையில் இலக்கிய முழக்கம் செய்வது இன்னொரு கண் போல.

இலக்கிய மேடைகளில் ஜீவா ஏறினால், அவரது பேச்சை ரசிக்க அக்காலத்தில் இளைஞர்கள் திரண்டுவருவர். ஒரு தேர்ந்த தமிழறிஞர் போல அவர் நாவாடுவதை தமிழறிஞர்களும் பெரிதும் ரசிப்பர். அக்காலத்தில் அது எல்லா தலைவர்களுக்கு கிடைக்காத பேறு.

இளமையில் கடலூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.  மகளாகிய கண்ணம்மாவை திருமணம்  செய்து கொண்டார். இவரது மறைவிற்குப்பின் 1948 ஆம் ஆண்டு பத்மாவதி என்பவரை கலப்பு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குமுதா, உஷா, உமா என்ற மகள்களும் மணிக்குமார் என்ற மகனும் பிறந்தனர்.

பெரியாரோடு இணைந்து  வைக்கம் போராட்டம், சுசீந்திரம் தீண்டாமை இயக்கம்  ஆகியவற்றில் ஈடுபட்டு தீண்டாமைக்கு எதிராக போராடியவர் ஜீவா.

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட காலக் கட்டத்தில் அவருக்கு  அளிக்கப்பட்ட தூக்கு  தண்டனைக்கு எதிராக வெகுண்டெழுந்தார். அனல் கக்கும் பேச்சால்  அன்றைய இளைஞர்களின் மனதில் புரட்சிக் கனலை மூட்டினார். சிறையிலிருந்தபடி பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்?’ எனும் நூலை தமிழில் மொழி பெயர்த்தார். அதை வெளியிட்டவர் பெரியார். பரபரப்பான இந்த நுாலை வெளியிட்டதற்காக, ஜீவாவின் கை கால்களை கட்டி விலங்கிட்டு,  திருச்சி முழுவதும் வீதி வீதியாக இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர் காவல்துறையினர்.

1930 களில் தன்னை  சுயமரியாதை இயக்கத்தினராக அடையாளப்படுத்திக் கொண்ட ஜீவா, காங்கிரஸ் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பொதுவுடமை தோழர்களுடன் சிறை சென்றார். வெளிவரும்போது தீவிர பொதுவுடமையாளனாக வெளிவந்தார்

கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் ஜீவா,  சீனாவின் இந்திய படையெடுப்பை கடுமையாக எதிர்த்தார். சீனா, இந்தியாவில்  ஆக்கிரமிப்பு செய்ததை ஜீவா ஏற்கவில்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சிலில் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் முக்கிய பங்கு ஜீவாவினுடையது.

கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலத்தில் (1939–1942) பம்பாயிலும் சிறையிலும் தன் பெரும்பகுதியை செலவிட்டார். 1948-ல் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்டபோது இலங்கைக்கு சென்று செயலாற்றினார்.

1952- ம் ஆண்டு வண்ணாரப்பேட்டை தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். சட்ட மன்றத்தில் தனது பேச்சால் மற்ற தலைவர்கள் அனைவரையும் கவர்ந்தார் ஜீவா. அதுவரை பொதுமக்களை கவர்ந்த ஜீவாவின் பேச்சால், தலைவர்களும் ஈர்க்கப்பட்டனர். எதிராளியையும்  பேச்சால் தன் வசப்படுத்தும் தனித்துவம் மிக்கவராக ஜீவா விளங்கினார். ஜீவா சட்டமன்றத்தில் நிகழ்திய உரை “சட்டப்பேரவையில் ஜீவா” என்று நூலாகவும் வெளிவந்துள்ளது.

எதிரணியில் இருந்தாலும் அனைத்து தலைவர்களுடனும் நட்பு பாராட்டியவர் ஜீவா. காமராஜரால் பெரிதும் மதிக்கப்பட்டவர். நகைச்சுவை மேதை கலைவாணரின் பெருமதிப்பிற்குரியவராக ஜீவா இருந்தார். தலைமறைவு வாழ்க்கையில் ஜீவாவின் பெரும்பகுதி நேரம் கலைவாணரின் பாதுகாப்பில் கழிந்தது.

இலக்கியத்தின் பால் தீராக தாகம் கொண்ட ஜீவா, தனது இறுதி காலத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தை துவங்கினார். இலக்கியத்தை மையப்படுத்தி ‘தாமரை’ இலக்கிய இதழை தொடங்கினார். ‘ஜனசக்தி’  நாளிதழையும் தொடங்கினார்.

தன் இறுதிக்காலம் வரை மக்களிடையே வாழ்ந்த ஜீவா, வறுமையிலேயே கழித்தார். ஜீவாவின் இறுதிக்காலம் வறுமையிலேயே கழிந்தது. ஒருமுறை அப்போதைய முதல்வர் காமராஜர் சென்னையில் ஜீவா  வசித்துவந்த பகுதியில் ஒரு அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். காமராஜரின் உதவியாளர்,  திறப்பு விழா நடக்கும் இடத்தின் அருகேதான் ஜீவாவின் வீடு இருப்பதாக போகிற போக்கில் சொல்ல அதிர்ந்தார் காமராஜர். காரணம் அது ஒரு குடிசைப்பகுதி.

நிகழ்ச்சி முடிந்து ஜீவாவின் வீட்டுக்கு சென்ற காமராஜர்,  அவரது எளிமையான வீட்டை கண்டு இன்னும் அதிர்ந்துபோனார். அத்தனை சாதாரணமாக இருந்தது அந்த வீடு. அலுவலகம் திரும்பிய காமராஜர் உடனடியாக ஜீவாவிற்கு விடுதலைப் போராட்ட வீரர் ஒதுக்கீட்டில் அரசு வீட்டை ஒதுக்கும்படி உத்தரவிட்டார். ஆனால் ஜீவா அதை ஏற்க மறுத்தார்.

“என் வாழ்நாள் முழுவதும் இந்த பாட்டாளி மக்களுக்காக உழைத்தேன். என் இறுதிக்காலமும் அத்தகைய மனநிலையிலேயே கழிய வேண்டும். அவர்களிடமிருந்து என்னை தனித்துக்காட்டும் எந்த விஷயமும் எனக்கு தேவையில்லை” என மறுத்தார் நேர்மையாளர் ஜீவா.

இத்தனை மக்கள் ஆதரவுடனும் பெரும்தலைவர்களுக்கு  பிடித்தமானவராக இருந்தாலும்,  துாய்மையான தலைவனாக எளிமையாகவும் இறுதிவரை நேர்மையாக தன் பொதுவாழ்வினை அமைத்துக்கொண்டார் தோழர் ஜீவா.

உடல்நலம் குன்றிய நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18- ம் நாள் இயற்கை எய்தினார் ஜீவா. ஜீவாவின் பொன்னுடலுக்கு கட்சி மாச்சர்யமின்றி தலைவர்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். பின்னாளில் மத்திய அரசு  அவர் தபால் தலையை வெளியிட்டு கவுரவம் செய்தது.

மதமும் மனித வாழ்வும், புதுமைப் பெண், மேடையில் ஜீவா, தேசத்தின் சொத்து, கலை இலக்கியத்தின் புதிய பார்வை ஆகியவை ஜீவா தொடர்பான நுால்கள்.

இவரது நினைவாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மணிமண்டபம் அமைத்து பெருமை சேர்த்துள்ளது தமிழக அரசு. புதுச்சேரியில் இவரது நினைவாக அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஜீவானந்தம் என பெயரிட்டது புதுவை அரசு. பாட்டாளிகளின் குரலாய் ஒலித்த தோழர் ஜீவாவின் வாழ்வு என்றும் மக்களிடையே சிறந்து விளங்கும்.

“நீங்கள் இந்தியாவின் சொத்து!” காந்தி வியந்த தோழர் ஜீவாவின் நினைவு நாள் பகிர்வுகள்

– தனிமொழி

மிழகத்தில் எத்தனையோ விடுதலைப் போராட்ட வீரர்கள், இலக்கியவாதிகள், பொதுவுடைமைக் கொள்கை கொண்டவர்கள், பேச்சாளர்கள், சுயமரியாதைக் கொள்கை உடையவர்கள் இருக்கலாம். ஆனால், அது அனைத்தையும் ஒருங்கே உடைய ஒரு தலைவர் என்றால் அது தோழர் ஜீவாதான்.

அவரின் 59 வது நினைவு தினமான இன்று அவர் குறித்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

21 ஆகஸ்ட் 1907-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலுக்கு அடுத்துள்ள பூதப்பாண்டி என்னும் ஊரில் பட்டக்கார் பிள்ளை – உடையம்மாள் ஆகிய தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் ஜீவானந்தம். சிறுவயது முதலே இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்த ஜீவா, பத்தாம் வகுப்பு படிக்கும்போதே சுகுணராஜன், சுதந்திரவீரன் போன்ற நாவல்களை எழுதினார். நாடகங்ளை எழுதி இயக்கி அதில் நடிக்கவும் செய்தார். இலக்கியவாதியான அவர் இலக்கியச்சுவை, ஈரோட்டுப் பாதை சரியா, கலை இலக்கியத்தின் புதிய பார்வை, சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள் ஆகிய நூல்களை எழுதியுள்ளார். தன்னை கம்யூனிச சோசலிச தொண்டனாக முன்வைத்து சமதர்மக் கீதங்கள், சோவியத் இலக்கியம் பற்றி ஜீவா, சோஷலிஸ்ட் தத்துவங்கள் போன்ற நூல்களையும் எழுதியுள்ளார். சுயமரியாதை, சாதி ஒழிப்பைப் பேசும் வகையில் புதுமைப்பெண், பெண்ணுரிமை கீதங்கள், மதமும் மனித வாழ்வும் போன்ற நூல்களையும் இயற்றியுள்ளார்.

தோழர் ஜீவா உண்மையான களப் போராளியாகவும் இருந்தார். தொழிலாளர் நடத்திய பல போராட்டங்களை ஒருங்கிணைத்து நடத்திக் காட்டினார். 1946-ம் ஆண்டு நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டத்தைத் தடுத்த நிறுத்தக் கோரி பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டது. ஆனால், போராட்டத்தைக் கைவிடாமல் ஜீவா தலைமையில் போராட்டக்காரர்கள் முன்னேறிச் சென்றனர்.

ஆத்திரம் அடைந்த பிரிட்டிஷ்காரர்கள், “இன்னும் ஒரு அடி எடுத்து வைப்போர் சுடப்படுவர்” என்றனர். அதைக் கேட்டதும் கோபம் கொண்ட தோழர் ஜீவா, ”எங்கே சுடு” எனத் தனது மார்பைக் காட்டினார். அதைக்கேட்டு அவர்கள் பின்வாங்கத் தொடங்கினர். காந்தியக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, ஒத்துழையாமை கொள்கைகளில் தன்னை இணைத்துக்கொண்டு அந்நிய துணிகளின் பயன்பாட்டைத் தவிர்த்தார் ஜீவா. 1927-ல் காந்தியின் பெயரில் ஒரு ஆசிரமம் நடத்தி வந்தார். அதைப் பார்வையிட வந்த காந்தி உங்களின் சொத்து என்ன எனத் தோழர் ஜீவாவிடம் கேட்க, ”தாய்நாடுதான் என் சொத்து” எனப் பதிலளித்தார் ஜீவா. அதைக் கேட்டு வியந்த காந்தி, “நீங்கள்தான் இந்தியாவின் சொத்து” எனப் பாராட்டினார். தான் முன்னோடியாக நினைக்கும் காந்தியடிகளே தன்னை புகழ்ந்துரைத்ததைப் பெரிதும் போற்றி மகிழ்ந்தார் ஜீவா.

ஒருமுறை காமராஜர் ஒரு அரசு விழாவுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தபோது, குடிசைகள் அதிகமாக இருந்த பகுதியில் தோழர் ஜீவாவின் வீடு இருப்பதாக அறிந்தார். உடனே விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் தோழர் ஜீவாவுக்கு வீடு தர நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால், அதை ஏற்க மறுத்த ஜீவா, தொழிலாளருக்காகப் போராடிய காலத்தை நினைவுகூரும் வகையில் அந்தக் குடிசையிலேயே தன் இறுதிக் காலத்தையும் கழிக்க விரும்பினார்.

சாதி ஒழிப்பு, சுயமரியாதை கொள்கையால் ஈர்க்கப்பட்ட தோழர் ஜீவா, பெரியாருடன் பல போராட்டங்களில் கலந்துகொண்டார். சாதி ஒழிப்பில் ஈடுபட்டு, ஊர் மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தார். சாதி ஒழிப்புப் போராட்டத்துக்குப் பரிசாகக் கத்திக்குத்தும் அவருக்குக் கிடைத்தது. எனினும், அவர் தனது கொள்கையில் பின்வாங்கவில்லை.

தோழர் ஜீவானந்தம் சிறந்த பேச்சாளர், அவர் பேசுவதைக் கேட்க பல கூட்டங்கள் கூடும். அப்படி, 1932-ம் ஆண்டு சட்ட மறுப்பு ஆதரிக்கும் வகையில் ஒரு கூட்டம் நடந்தது. அப்போது ஜீவா பேசியதைக் கேட்டு வியந்த ஆங்கிலேயர்கள் இவரை மேற்கொண்டு பேச அனுமதித்தால் தங்கள் ஆட்சிக்குத்தான் ஆபத்து எனத் தீர்மானித்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுவே, அவரின் முதல் சிறைவாசம். சிறையில் கம்யூனிச மற்றும் சோசலிசக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு நாளடைவில் தன்னை ஒரு பொதுவுடைமைத் தலைவனாக வளர்த்துக்கொண்டார் ஜீவா.

ஜீவாவின் வீட்டுக்கு ஒருமுறை வந்த காமராஜருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. வந்தவரை வீட்டுக்கு வெளியிலேயே நிற்க வைத்துவிட்டு உள்ளே சென்ற ஜீவா வெகுநேரம் ஆகியும் திரும்பவில்லை. காத்திருந்த காமராஜர் வீட்டுக்குள் சென்று பார்க்க, அங்கே, தன் வேட்டியை உலர்த்திக்கொண்டிருந்தார் ஜீவா. ஒரே வேட்டியையே துவைத்து உலர்த்தி காய வைத்து மீண்டும் பயன்படுத்துவதுதான் அவர் வழக்கம். இத்தனைக்கும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் ஜீவா. ஒய்யாரமான வீடு கட்டி வாழ்ந்த தலைவர்களுக்கு மத்தியில் ஓலைக் குடிசையில் வாழ்ந்த உன்னத மனிதர் தோழர் ஜீவா.

1963-ம் ஆண்டு ஜனவரி 18-ம் தேதியன்று இந்தியாவின் சொத்து தன் உடலை மண்ணுக்கும் தன் உயிர்மூச்சான கொள்கைகளை மக்களுக்கும் விட்டுச் சென்று தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. அவரின் இறுதி ஊர்வலத்துக்கு அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், நாடக நடிகர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பெரும் கூட்டம் கூடியது. இறக்கும் வரையிலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தவர் ஜீவா. மக்களுக்கான தலைவர்களாக காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர் எனப் பலர் இருந்த வேளையில் தலைவர்களுக்கே தலைவனாக இருந்தவர் தோழர் ஜீவா. அவரின் இறுதி ஊர்வலமே அதற்குச் சாட்சி!

Exit mobile version