Site icon சக்கரம்

வடக்கு மக்கள் வெளிநாட்டு சக்திகளின் கரங்களில் விழுந்துவிடக் கூடாது!

அலி சப்றி (Ali Sabry)

டக்கில் வாழுகின்ற மக்கள் வெளிநாட்டு சக்திகளின் கரங்களில் விழுந்து பாதிப்படையக்கூடாது என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்றி (Ali Sabry) தெரிவித்துள்ளார். வட பகுதியில் வாழ்கின்ற மக்களின் பல்வேறு சட்டப் பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதற்காக ‘நீதிக்கான வழி’ என்ற நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், ‘இந்த நடமாடும் சேவை வெளிநாட்டுத் தலையீடு இல்லாமல் உள்நாட்டிலேயே பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்களுடைய சட்டக் கட்டமைப்புக்குள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.

சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற வாசகத்தை மாத்திரம் எழுதிவைப்பதால் சிறைக் கைதிகள் பாதுகாக்கப்படப் போவதில்லை. கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற தாக்குதல்கள், அச்சுறுத்தல் செயற்பாடுகள் குறித்து நாம் எமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம். இதனை ஒருபோதும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேபோல் இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெறுகின்ற காரணத்துக்காக ஒட்டுமொத்த சிறைச்சாலை கட்டமைப்பையும் தவறாகச் சித்தரிக்கவும் முடியாது.

சகல நாடுகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. மாறாக இலங்கையில் மாத்திரம் இவை இடம்பெறுவதாகக் கூறவும் முடியாது. எவ்வாறு இருப்பினும் எதிர்காலத்தில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறாத வகையில் சகல தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டும் வருகின்றன.

பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை “தமிழ் அரசியல் கைதிகள்” என கூறுவதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்ட காரணத்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். எனினும் இந்த விவகாரத்துக்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை செய்வதன் மூலம் விரைவில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அரசு தயாராக இருக்கின்றது.

இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரமாகத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையே ஜனாதிபதியும் வலியுறுத்தியுள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திருத்துவதற்கு அரசு தற்போது முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வது குறித்து ஆராயும் விதமாக ஜனாதிபதியால் நிபுணர்கள் குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. 42 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீண்டகாலத்துக்கு இந்தப் பிரச்சினைகளை இழுத்தடித்துக்கொண்டு செயற்பட அரசு தயாராக இல்லை. பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வொன்று அவசியம் என்பதையே ஜனாதிபதியும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்தார். எனவே அது குறித்து விரைவில் தீர்மானம் எடுக்கப்படும்”  என்றார்.

Exit mobile version