Site icon சக்கரம்

அரிசி ஆலை உரிமையாளர்களே அரிசி விலையைத் தீர்மானிக்கின்றனர்!

நாட்டின் மொத்த நெல் உற்பத்தியில் 46 வீதமானவற்றை பெரும் அரிசி ஆலை முதலாளிகளே கொள்வனவு செய்கின்றனர். பின்னர் ஒரு வருடம் கழித்து அதிலிருந்து பெறும் அரிசியை தாம் விரும்பிய விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதனால் அரிசி விலை அவர்களது கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இருந்து வருகிறது.’

இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டியு குணசேகர. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாத்தறை மாவட்ட 12 ஆவது மாநாடு அண்மையில் நடைபெற்ற போது கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் அங்கு உரையாற்றுகையில்,

‘ஊழலை முற்றிலுமாக ஒழிக்க முடியாது. ஆனால் கட்டுப்பாட்டில் வைக்க முடியும். பொருளாதார விடயமே இனறு பிரதான பிரச்சினையாக உள்ளது. பொருளாதாரப் பிரச்சினை ஒவ்வொரு நாட்டையும் பாதிக்கிறது. அமெரிக்காவும் நாணயத் தாள்களை அச்சிடுகிறது. ஆனால் இலங்கைக்கு அந்த விடயத்தில் சர்வதேச அங்கீகாரம் கிடையாது. டொலர் பற்றாக்குறையால் அமெரிக்கா மரணத்தறுவாயில் உள்ளது. இருந்தும் யாரும் அதைப் பற்றி கதைப்பதில்லை. அரசாங்கத்தின் நிதிக் கொள்கை நவ தாராளவாதத்துக்கு ஏற்ற வகையில் வகுக்கப்பட்டுள்ளது. பணத்தை அச்சிடுவதால் பிரச்சினை தீரப் போவதில்லை. அதன் விளைவாக பண வீக்கமும் விலைவாசி உயர்வும்தான் ஏற்படும்.

1978 இல் அப்போதைய நிதியமைச்சர் ரொனி டி மெல் வரிகளால் வரும் வருமானத்தை 24 வீதத்திலிருந்து 6 வீதமாகக் குறைத்தார். இதை 24 வீதமாக மாற்றாவிட்டால் நாடு டொலருக்கு கெஞ்ச வேண்டிய நிலைதான் ஏற்படும்.

இந்த நேரத்தில் வர்க்க முன்னணியை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. 1947 இல் இடதுசாரிக் கட்சிகள் பாராளுமன்றத்தில் 25 பிரதிநிதிகளைக் கொண்டிருந்தார்கள். இடதுசாரிக் கட்சிகளுக்கிடையில் புரிந்துணர்வு இல்லாமல் போனதால் அவர்கள் தமது சக்தியை இழந்து விட்டார்கள். அதன் விளைவாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தது. இருந்த போதிலும் 1956 இல் முற்போக்கு கட்சிகள் ஒன்றிணைந்ததால் ஐ.தே.கவை தோற்கடிக்க முடிந்தது. 1972 இல் புதிய அரசியலமைப்பை உருவாக்கி குடியரசை தோற்றுவிக்க முடிந்தது.

நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் இன்று பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் இதை உணரத் தவறியுள்ளன. இது சம்பந்தமாக எந்த உரையாடலும் இல்லை. சந்தைப் பொருளாதாரமும் மூலதனமும் முதலாளித்துவவாதிகளின் கரங்களில் உள்ளன. முதலாளித்துவவாதிகளின் கரங்களில் உள்ள பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்தாத வரை வறுமையை ஒழித்துக்கட்ட முடியாது.’ எனக் கூறினார்.

இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்கவும் வேறு சிலரும் உரையாற்றினர். அங்கு நிறுவப்பட்டிருந்த கட்சியின் ஸ்தாபகத் தலைவர் டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கவின் உருவச் சிலைக்கு மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Exit mobile version