Site icon சக்கரம்

கச்சதீவு உற்சவத்தில் இந்திய யாத்திரீகர்களையும் அனுமதிக்க கோரிக்கை

-அலோசியஸ்

ழமைபோல இலங்கைக்கு சொந்தமான கச்சதீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலய உற்சவம் இவ்வருடம் மார்ச் 11 – 12 ஆம் திகதிகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த உற்சவத்தில் வழமையாக இலங்கையிலிருந்தும் இந்தியாவிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் தமது சொந்தப் படகுகளில் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி வந்து கலந்து கொள்வது வழமை. அங்கு வரும் யத்திரீகர்களுக்கான வசதிகளை ஆலய நிர்வாகமும், இலங்கைக் கடற்படையும் செய்து கொடுப்பதும் வழமை.

ஆனால், கொவிட் – 19 பெருந்தொற்றுக் காரணமாக இம்முறைத் திருவிழாவில் இந்திய யாத்திரீகர்களை அனுமதிப்பது இல்லைனெ;றும், இலங்கை யாத்திரீகர்களின் தொகையையும் மட்டுப்படுத்துவது எனவும் இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கை அரசின் இந்தத் தீர்மானம் தமிழக யாத்திரீகளுக்கு பெரும் ஏமாற்றத்தையும் கவலையையும் அளித்துள்ளது. குறிப்பாக, தமது கடல் தொழிலுக்கு கச்சதீவு அந்தோனியார் ஆலயத்துக்கு நேர்த்தி வைக்கும் தமிழக மீனவர்களுக்கு பெரும் ஏமாற்றமாகப் போய்விட்டது. எனவே, அவர்கள் இது குறித்து தமது கவலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் எடுத்துக் கூறினர்.

அவர்களது முறைப்பாட்டைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரைத் தொடர்பு கொண்டு, இந்திய யாத்திரீகர்களும் கச்சதீவு உற்சவத்தில் பங்கெடுப்பதற்கு இலங்கை அரசுடன் பேசி ஏற்பாடு செய்து தரும்படி கேட்டுக் கொண்டார்.

அத்துடன் நின்றுவிடாது, முதல்வர் ஸ்டாலின் தமது சார்பாக தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு மூலம் இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடனும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடினார். தமிழக முதல்வரின் வேண்டுகோளை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தாம் இலங்கை அரச தலைமையுடன் இது குறித்துப் பேசி இந்திய யாத்திரீகர்களும் கலந்து கொள்ள வழிவகை செய்வதாக தமிழக அரசுக்கு வாக்குறுதி அளித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள சில அரசியல்வாதிகள் எடுத்ததிற்கெல்லாம் இலங்கை அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது வழமை. ஆனால் முதல்வர் ஸ்டாலின் அவ்வாறில்லாமல் இராஜதந்திர ரீதியாகவும், சிநேகபூர்வமாகவும் இந்தப் பிரச்சினையை அணுகியிருப்பது பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. இத்தகைய வழிமுறைகளின் மூலம் இலங்கை கடல் பரப்பில் தமிழக மீனவர்கள் மேற்கொள்ளும் அத்துமீறல்களுக்கும் ஒரு முடிவை ஏற்படுத்தினால், இந்தியத் தமிழகத்துக்கும் இலங்கைத் தமிழகத்துக்கும் இடையில் மட்டுமின்றி, இரு நாடுகளுக்கிடையிலும் நட்புறவு தழைத்தோங்க வழி பிறக்கும்.

(கச்சதீவு யாருக்குச் சொந்தம் என்ற பிரச்சினை மிக நீண்ட காலமாக இலங்கை – இந்திய அரசுகளுக்கிடையே நிலவி வந்தது. இந்த நிலைமையில் இந்தியாவில் ஸ்ரீமதி இந்திரா காந்தியும், இலங்கையில் திருமதி சிறீமாவோ பண்டாரநாயக்கவும் பிரதமர்களாக இருந்த சூழ்நிலையில், இருவருக்கும் இடையிலான நெருங்கிய நட்புணர்வு காரணமாக பாக் ஜலசந்தியில் இரு நாடுகளுக்குமிடையிலான எல்லை வகுக்கும் போது, இந்தியா கச்சதீவை இலங்கையின் கடல் எல்லைக்குள் விட்டுக் கொடுத்து 1974 இல் இரு நாடுகளுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. அன்றிலிருந்து கச்சதீவு இலங்கையின் இறைமைக்குள் உள்ள ஒரு தீவாக இருந்து வருகிறது. ஆனாலும், அந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இந்திய மீனவர்கள் தமது தொழிலின் போது கச்சதீவில் தங்கி ஓய்வெடுக்கவும், தமது வலைகளைக் காயப்போடவும், அங்குள்ள அந்தோனியார் ஆலய திருவிழாவில் வருடா வருடம் கலந்து கொள்ளவும் அந்த ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டன)

Exit mobile version