Site icon சக்கரம்

உக்ரைன்: ஆதிக்க சக்திகளின் போட்டியில் ஒரு பகடைக்காய்!

(கொழும்பிலிருந்து வெளியாகும் ‘டெயிலி மிரர்’ (Daily Mirror) பத்திரிகையில் வெளிவந்த தலையங்கத்தின் சாராம்சம்)

க்ரைனின் எல்லைகளில் ரஸ்யப் படைகள் நிலை கொண்டதைத் தொடர்ந்து நேட்டோ நாடுகளுக்கும் ரஸ்யாவுக்கும் இடையில் நிலவி வந்த பதட்டம் இறுதியாக யுத்தமாக வெடித்துள்ளது. யத்தம் உருவாகுமோ என ஐரோப்பா பயப்பட்டு வந்தபோதிலும் யதார்தத்தில் ஒரு போருக்கான தேவை இருக்கவில்லை. உக்ரைன் நேட்டோ கூட்டணியில் இணைவதற்கு முயற்சித்தது சம்பந்தமாக ரஸ்யா அச்சம் கொண்டு கிளப்பிய குரலுக்கு பேச்சுவார்த்தைகள் மூலமும், நெருக்கடியைத் தணிப்பதன் மூலமும் தீர்வு காண்பதற்குப் பதிலாக தூரதிஸ்ட்டவசமாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அணி ஆக்கிரமிப்பு நிலையைத் தேர்ந்தெடுத்தது. ஒரு நாட்டின் தலையீட்டை மன்னிக்காமல் விடுவதற்கு முன்பாக ரஸ்யா ஏன் உக்ரைனுக்குள் நுழைந்தது என்பது அவசியம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர் ரஸ்யா உலக நாடுகள் மத்தியில் மிகவும் சரிந்து போனது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் ஜேர்மனிக்கு ஏற்பட்ட நிலையில் ரஸ்யா இருந்தது.

அதன் பொருளாதாரம் சிதிலமடைந்து, தேசியச் சொத்துகள் விற்கப்பட்டு, அதன் மதிப்பு பெரிதும் பாதிக்கப்பட்டது. மிகவும் மோசமானது என்னவென்றால், வாக்களித்ததிற்கு மாறாக மேற்குலகம் தனது நேட்டோவை கிழக்கு நோக்கி விஸ்தரித்ததாகும். அத்துடன், மேற்குலகம் ஜோர்ஜியாவிலும் (Georgia) எஸ்தோனியாவிலும் (Estonia) இருந்த விரோதக் குழுக்களின் ஆதரவையும் பெற்றுக் கொண்டது.

விளாடிமிர் புட்டினின் அவதானிப்பின் கீழ் மேற்குலகின் இந்தக் தீவிரவாதமும் வளர்ச்சியும் இயற்கையானது அல்ல என்ற சக்தேகத்தை ரஸ்யாவுக்கு ஏற்படுத்தியது. உக்ரேன் நேட்டோவுடன் இணைவதின் மூலம் அமெரிக்கா மற்றும் நேட்டோ துருப்புக்கள், அணுவாயுதங்கள் உட்பட்ட ஏவுகணைகள் என்பன ரஸ்யாவின் வாசற்படிக்கே வந்துவிடும் என ரஸ்யா தனது பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கருதியதினாலேயே சில தினங்களுக்கு முன்னர் உக்ரைனில் அதன் நடவடிக்கைகள் ஆரம்பமாயின. உக்ரைனுக்கு நேட்டோவுடனான உறவுகள் அதிகரித்து வந்ததினாலேயே முன்னதாக 2014 இல் கிரிமியாவை (Crimea) ரஸ்யா எடுத்துக் கொண்டது.

உக்ரைனுக்குள் தனது படைகளை அனுப்புவதற்கு முன் உக்ரைன் நேட்டோவில் இணைவதற்கு எதிராக ரஸ்யத் தலைவர் புடின் ஒரு சிவப்பு கோடு கிழித்திருந்தார்.

தூரதிஸ்ட்டவசமாக நேட்டோ சக்திகள் – குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியும், பிரித்தானியப் பிரதமரும் உள்நாட்டில் கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்திருந்த நிலையில், சரிந்து கொண்டிருக்கும் தமது செல்வாக்கை நிலைநிறுத்துவதற்காக இராஜதந்திர ரீதியில் சமரசம் செய்யும் ரஸ்யாவின் முயற்சியை வேண்டுமென்றே நிராகரித்துவிட்டு, உக்ரேனுக்கும் ரஸ்யாவுக்கும் இடையிலான மோதல் நிலையைப் பயன்படுத்துவது என முடிவெடுத்தனர்.

2020 இல் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவரான ருல்சி கப்பார்ட் (Tulsi Gabbard) இந்த நெருக்கடியை சில விடயங்களைச் செய்து சுலபமாகத் தீர்த்திருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார். அதாவது, ரஸ்யா தனது பாதுகாப்பு நலன்கள் ஆபத்துக்குள்ளாமல் இருப்பதை உணர்வதற்காக உக்ரைன் நேட்டோவில் சேராமல் இருப்பது என்பது அவரது யோசனை. கப்பார்ட்டின் கருத்துப்படி உக்ரைன் என்ன விதத்திலேனும் நேட்டோவில் சேர்வதற்குத் தயாராக இருந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி பைடன் சமரசத்துக்கான ஆலோசனையை நிராகரித்துவிட்டார். உக்ரேன் ஜனாதிபதி தன்னை விமர்சித்த ஊடகங்கள், தொலைக்காட்சி நிலையங்கள் என்பவற்றை மூடி, எதிர்க்கட்சி அரசியல்வாதிகளைக் கைது செய்தது போன்றவற்றை கணக்கில் எடுக்காது அமெரிக்காவும் நேட்டோவும் தாங்கள் உக்ரைனைப் பாதுகாப்பது ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக என வாதிட்டனர்.

உக்ரைனை நேட்டோவில் சேர்க்கமல் விடுவதன் மூலம் ரஸ்யாவின் அச்சத்தை நீக்க வேண்டிய தேவை நேட்டோவுக்கு இருந்தது. மறுபக்கத்தில் ரஸ்யா தனது துருப்புகளை உக்ரைனில் இருந்து அகற்ற வேண்டிய தேவை இருந்தது.

ஒருங்கிணைக்கப்பட்டுள்ள உலகப் பொருளாதாரம் கொடிய யுத்தத்துக்கு விலை கொடுக்க வேண்டி வரும். ஏற்கெனவே உக்ரைனில் பலர் இறந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாகியுள்ளனர் எனத் தகவல்கள் வந்துள்ளன. மனித இழப்புகளை பணப் பரிபாசையில் கணக்கிட முடியாது.

இரண்டாவதாக, யுத்தம் பெரும்பாலும் சிறிய மற்றும் ஏழை நாடுகள் மீதுதான் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். கொவிட் – 19 தாக்கத்தால் ஏற்கெனவே இந்த நாடுகள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இன்று ஒரு பீப்பா எண்ணெயின் விலை 105 டொலர்களைத் தாண்டிவிட்டது. எமது நாட்டைப் பொறுத்தவரையில் இந்தப் பெருந்தொற்று ஏராளமான ஏழைகளைப் பலியெடுத்துவிட்டது. இன்று குடும்பங்கள் ஒரு நாளைக்கு இரு நேர உணவைப் பெற முடியாமலும், அடிப்படை வைத்திய வசதிகளைப் பெற முடியாமலும் திண்டாடுகின்றன. எண்ணெயின் விலையுயர்வு மேலும் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணும்.

யுத்தத்தை விரைந்து முடிவுக்கு கொண்டுவராவிடின், ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலுள்ள ஏராளமான மக்கள் உக்ரைனில் யுத்தத்தால் இறக்கும் மக்கள் தொகையை விடக் கூடுதலாக பட்டினியால் இறப்பர்.

யுத்தங்களால் ஒருபோதும் பிரச்சினைகள் தீர்வதில்லை. அவை உண்மையான பிரச்சினையை மோசமாக்கவே உதவும். உதாரணத்துக்கு, இலங்கையின் மூன்று தசாப்தகால ‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரை’ எடுத்துப் பார்க்கலாம். பயங்கரவாதக் குழு இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஆனால் போர் எழுந்ததிற்குக் காரணமாக இருந்த தமிழ் சமூகத்தின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.

ரஸ்யாவின் ‘பாதுகாப்பு கோட்பாடு’ (Security Doctrine) வல்லரசு நாடுகளின் கோடியில் இருக்கும் சிறிய நாடுகளுக்கு புதிய கிருமிகளை திறந்து விட்டுள்ளது. இந்த கட்டுக்கதையை அடிப்படையாக வைத்து கியூபா தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும், சீனாவுடனான இலங்கையின் நட்புறவு தனக்கு அச்சுறுத்தல் என இந்தியாவும், இஸ்ரேல் இந்த அடிப்படையில்தான் பாலஸ்தீன நிலங்களைக் கைப்பற்றியதென்றும் கூறலாம்.

படையெடுப்பு என்பது பிரச்சினைகளுக்கான தீர்வு அல்ல. இது பேச்சுவார்த்தைகளுக்கான நேரம். நேட்டோ தனது விஸ்தரிப்புவாத நோக்கங்களைக் கைவிட வேண்டும். ரஸ்யா தனது துருப்புகளை விலக்கி நல்ல சூழலை உருவாக்க வேண்டும். யுத்தம் தீர்வல்ல.

Exit mobile version