Site icon சக்கரம்

‘எனது குடும்பத்தை காப்பாற்ற நெசவுத் தொழிலே கைகொடுத்தது’ – ஏ.எல்.சித்தி பரீதா

-ஆர்.சுகந்தினி

ஏ.எல்.சித்தி பரீதா

− ஏ.எல்.சித்தி பரீதாவின் துயரம்

எனது கடினமான உழைப்பின் உதவியுடன் எனது முதல் இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒருவாறு கரை சேர்த்துள்ளேன். மூன்றாவது பெண் பிள்ளை எங்களுடன் உள்ளார். அவருக்கு இப்போது 16 வயதாகிறது. எமது குடும்பக் கஷ்டத்தின் காரணமாக எமது மூன்றாவது பெண் பிள்ளையின் பாடசாலைக் கல்வியை அவர் 9ஆம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோதே இடைநிறுத்தியிருந்தேன். அப்பிள்ளையை மேற்கொண்டு கல்வி கற்க வைப்பதற்கான போதிய வசதி என்னிடம் இல்லை.

எனது கணவர் திடீரென்று பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நான் இளம் பிராயத்தில் பழகியிருந்த நெசவுத் (கைத்தறி) தொழிலே தற்போது எனது குடும்ப வாழ்வாதாரத்தைக் கொண்டு செல்வதற்கு ஓரளவேனும் கை கொடுத்து வருகின்றது என, நெசவுத் தொழிலாளியான 60 வயதுடைய ஏ.எல்.சித்தி பரீதா தெரிவிக்கின்றார்.

ஆரையம்பதியை வசிப்பிடமாகக் கொண்ட ஏ.எல்.சித்தி பரீதா, தனது வாழ்க்கையில் எதிர்பாராதவிதமாக நேர்ந்த துயரத்தை விவரிக்கின்றார். அவர் மேலும் விவரிக்கையில்,

எனது 20ஆவது வயதில் எனது கணவருடன் திருமண பந்தத்தில் இணைந்து எமது இல்லற வாழ்க்கை இனிதே கடந்ததுடன், அதன் பயனாக எமக்கு மூன்று பெண் பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் எனது கணவர் மேசன் தொழில் செய்து எமது குடும்பச் செலவை நன்றாகக் கவனித்து வந்தார்.

இவ்வாறிருக்கையில் கடந்த 2013ஆம் ஆண்டு எனது கணவர் திடீரென்று பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். அவரைக் குணப்படுத்துவதற்காக வைத்தியசாலைகள் தோறும் அலைந்தும் அவரைக் குணப்படுத்த முடியாமல் போனது. எனது கணவரும் எந்தவித வேலைகளும் செய்ய முடியாத நிலையில், வீட்டோடு முடங்கிப் போய்விட்டார்.

எனது கணவர், பிள்ளைகளுடன்மிகவும் சந்தோஷமாகக் கழிந்த எமது குடும்ப வாழ்க்கை சூனியமாகிக் போனதுடன், துயரமும் என்னை விட்டு வைக்கவில்லை. இந்நிலையில், எமது குடும்ப பொறுப்பை சுமக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு நான் தள்ளப்பட்டேன்.

ஒரு பக்கம் துயரம் என்னை படாய்படுத்திய போதிலும், மனதளவில் அதற்கு இடங்கொடுக்காது எனது கணவரையும் பெண் பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டேன். கணவருக்கும் பிள்ளைகளுக்காகவும் வாழ வேண்டுமென்று எண்ணினேன்.

எனது பெற்றோருடன் இருந்த காலத்தில் குடும்ப வறுமை காரணமாக நான் எனது 25ஆவது வயது முதல் நெசவுத் தொழிலுக்கு சென்றிருந்தேன். அதன் பின்னர் சிறிது காலம் கணவர், பிள்ளைகள் என இருந்த நிலையில் எனது நெசவுத் தொழிலை இடைநிறுத்தியிருந்தேன்.

இவ்வாறான நிலையில் நான் ஏற்கெனவே செய்திருந்த நெசவுத் தொழிலில் இணைந்து வேலை செய்வதற்கு தீர்மானித்தேன். எம்.வை. ஆதம் என்பவர் ஆரையம்பதியில் நடத்தும் ஏ.ஆர்.கைத்தறி உற்பத்தி நிலையத்தில் இணைந்து நெசவுத் தொழிலை செய்வதற்கு ஆரம்பித்தேன்.

தற்போது நெசவுத் தொழிலில் 20 வருடகால அனுபவமிக்க ஒருவராக நான் திகழ்கின்றேன் என்கிறார் அவர்.

எமது ஏ.ஆர்.கைத்தறி உற்பத்தி நிலையத்திற்குச் சொந்தமாக 14 கைத்தறிகள் உள்ளன. இந்நிலையில் அத்தொழிற்சாலைக்கு வந்து வேலை செய்ய முடியாமல் தூர இடங்களிலுள்ள 6 பெண்களுக்கு அவர்களது வீடுகளிலிருந்தவாறே நெசவுத் தொழில் செய்வதற்கேற்ற வகையில் 6 கைத்தறிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இப்பெண்கள் வீடுகளிலிருந்தவாறு தங்களது வீட்டு வேலைகளையும் கவனித்துக்கொண்டு, நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டு வருமானம் ஈட்டுகின்றனர். ஏனைய 8 கைத்தறிகள், ஏ.ஆர்.கைத்தறி உற்பத்தி நிலையத்தில உள்ளன. அந்நிலையத்தில்; நான் உட்பட 4 பெண்களும் 4 ஆண்களும் வேலை செய்கின்றோம் என்கிறார் அவர்.

அம்பாறை, மருதமுனையிலுள்ள தொழிற்சாலையொன்றிலிருந்து நூல் உள்ளிட்ட மூலப்பொருட்களை எமது தொழிற்சாலை முதலாளி மொத்தமாக பெற்றுக்கொண்டு வந்து, இங்கு பயன்படுத்துகின்றார். எமது உற்பத்திகளுக்கு வேண்டிய வகையில் நூல்களுக்கு சாயமூட்டப்பட்டு அத்தொழிற்சாலையால் தரப்படுகின்றன.

இந்நிலையில், பெண்களுக்குரிய சாரிகளையும் ஆண்களுக்குரிய சாரங்களையும் நாம் தயாரிக்கின்றோம். ஒரு நாளைக்கு சுமார் 30 சாரங்களும் சுமார் 4 சாரிகளும் எமது ஏ.ஆர்.கைத்தறி உற்பத்தி நிலைய ஊழியர்களினால் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறு எமது ஊழியர்களினால் தயாரிக்கப்படும் சாரிகளும் சாரங்களும் மருதமுனையிலுள்ள மொத்த விற்பனை நிலையங்களுக்கு விநியோகிப்பதுடன், மட்டக்களப்பிலுள்ள புடைவைக் கடைகளுக்கும் விநியோகித்து வருமானத்தை ஈட்ட வழிவகை செய்கின்றோம்.

எம்மால் நெய்யப்படும் நெசவு சார்ந்த உடு புடைவைகளுக்கு கேள்வி அதிகமாகவே இருக்கின்றன. அனைவரும் விரும்பி வந்து வாங்குகின்றனர். அதிலும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே நெசவுத் தொழில் சார்ந்த உடு புடைவைகளை அதிகளவில் வாங்குகின்றனர் என்கிறார் அவர்.

கொரோனாத் தாக்கமும் எமது தொழிலை விட்டு வைக்கவில்லை. கொரோனா காலத்தில் நாடு முடக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், எமது தொழிலிலும் சற்று பின்னடைவை எதிர்நோக்கியிருந்தோம். இருந்தபோதிலும், தற்போது நாடு வழமையான சூழ்நிலைக்கு திரும்பி வரும் நிலையில், எமது நெசவுத் தொழில் மீண்டும் புத்துயிர் பெறத் தொடங்கியுள்ளது என்கிறார் அவர்.

எனது கணவர் நோய்வாய்ப்பட்டதை தொடர்ந்து 12 வருடகாலமான இவ்வாறான தொழில் ரீதியான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் என்னால் இயன்றவரை நான் எனது குடும்பத்தைக் நன்றாகக் கவனித்து வருகின்றேன். காலை 7.00 மணிக்கு நெசவுத் தொழிலுக்காக தொழிற்சாலைக்குச் சென்று மதியம் 12.00 மணிக்கு வீடு திரும்புவேன். இவ்வாறு வீடு திரும்பும்பொழுது எமது சாப்பாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கடையில் வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் செல்வேன்.

அதன் பின்னரே மதியநேர உணவைத் தயாரித்து, எனது கணவர் உள்ளிட்டோருக்கு கொடுத்துவிட்டு, நானும் உட்கொள்வேன். அதன் பின்னர் மீண்டும் பிற்பகல் 2.00 மணிக்கு நெசவு நெய்வதற்குச் சென்றுவிட்டு மாலை 6.00 மணிக்கு வீடு திரும்புவேன்.

அதன் பின்னர் இரவுப்பொழுதில் எஞ்சியுள்ள எனது வீட்டு வேலைகளைக் கவனிப்பேன்.

எனது கடினமான உழைப்பின் உதவியுடன் எனது முதல் இரண்டு பெண் பிள்ளைகளையும் ஒருவாறு கரை சேர்த்துள்ளேன். மூன்றாவது பெண் பிள்ளை எங்களுடன் உள்ளார். அவருக்கு இப்போது 16 வயதாகிறது. எமது குடும்பக் கஷ்டத்தின் காரணமாக எமது மூன்றாவது பெண் பிள்ளையின் பாடசாலைக் கல்வியை அவர் 9ஆம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோதே இடைநிறுத்தியிருந்தேன். அப்பிள்ளையை மேற்கொண்டு கல்வி கற்க வைப்பதற்கான போதிய வசதி என்னிடம் இல்லை.

ஆனாலும், அப்பெண் பிள்ளை தனது காலில் நிற்க வேண்டும் என்பதற்காக தையல் கலையை பழக்கியுள்ளேன். அப்பெண் பிள்ளை, தையல் தொழிலை செய்வதற்கு தையல் இயந்திரம் தேவையாக உள்ளதுடன், அதை வாங்கும் பண வசதி தற்போது என்னிடம் இல்லை. நான் உழைக்கும் சம்பளம் எமது அன்றாட உணவுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது என்கிறார் அவர்.

எனது துயரமான வாழ்க்கைக்கு மத்தியிலும் வளர்ந்து வரும் பெண் பிள்ளைகளும் ஒன்றை மாத்திரம் நான் கூற விரும்புகின்றேன். நாம் எண்ணியவாறு எமக்கு வாழ்க்கை அமைவதில்லை. எதிர்பாராதவிதமாக எமது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படலாம். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம்.

ஆகையால் நாம் ஏனையோரிடம் கையேந்தாமல் எமது வாழ்க்கையைக் கொண்டுசெல்ல ஏதாவதொரு சுயதொழிலை பழகியிருக்க வேண்டும் என்கிறார் அவர்.

Exit mobile version