-ச.ச.சிவசங்கர்
2022 சென்னை புத்தகக்காட்சியின் பிளாக்பஸ்டர் ஆகியிருக்கிறது நீதிநாயகம் கே.சந்துரு எழுதிய ‘நானும் நீதிபதி ஆனேன்’ நூல். நான்கு கடைகளுக்கு ஒரு கடை என்கிற ரீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் இந்தப் புத்தகம் வாங்கிவைக்கப்பட்டிருக்கிறது. மக்கள் அலையலையாக வந்து நூலை வாங்குகிறார்கள். புத்தகக்காட்சிக்கு வரும் சந்துருவோடு, குடும்பத்தோடு நின்று படம் எடுத்துக்கொள்கிறார்கள். புத்தகத்தை வாங்கி அவருடைய கையெழுத்து வாங்கி, குழந்தைகளிடம் அவர் கையால் கொடுத்து ஆசி வழங்கி புத்தகத்தைக் கொடுக்கச் சொல்கிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான தலைப்புகள் குவிந்திருக்கும் நாட்டின் பெரிய புத்தகக்காட்சியில், எழுத்தாளர்கள், நட்சத்திரப் பிரபலங்கள் புத்தகங்களைத் தாண்டி ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரின் சுயசரிதை நூல் மக்களால் இப்படி வாங்கப்படுவதும், கொண்டாடப்படுவதும் தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராதது.
சமீபத்தில் வெளியான த.செ.ஞானவேலின் ‘ஜெய்பீம்’ திரைப்படம் ஒரு வழக்குரைஞராக சந்துரு எப்படியான போராளியாக வாழ்ந்திருக்கிறார் என்பதை மக்களிடம் வெகுவாக எடுத்துச்சென்றது இதற்கு முக்கியமான காரணம் என்றாலும், மக்களுக்காக வாழ்பவர்களை சமூகம் எவ்வளவு உயரிய இடத்தில் வைத்துப் பார்க்க முற்படுகிறது என்பதற்கும் உதாரணம் ஆகியிருக்கிறது இந்நிகழ்வு. குறிப்பிடத்தக்க இத்தருணத்தில் சந்துருவிடம் நூலை முன்வைத்துப் பேசினேன். -ச.ச.சிவசங்கர்
சுயசரிதை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஏன் தோன்றியது?
பல காரணங்கள். சமூகத்தில் நான் எதிர்கொண்ட சில அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதும், என் மீது முன்வைக்கப்பட்ட சில விமர்சனங்களுக்கும் பதில் அளிக்க வேண்டும் என்பதும் அவற்றில் முக்கியமானவை. குறிப்பாக, நான் வக்கீலாகப் பணியாற்றியபோது என்னை ஏற்றிப்பிடித்த பல தோழர்களுக்கும், வக்கீல்களுக்கும் நான் நீதிபதியானது அறவே பிடிக்கவில்லை. அமைப்போடு மல்லுக்கட்டும் ஒரு வக்கீல், அமைப்புக்குள்ளே நீதிபதியாகச் செல்வது இழப்பு என்பது அவர்களுடைய எண்ணம். பொதுவெளியிலேயே கடுமையாக விமர்சித்தவர்கள் பலர் உண்டு. ஒருகட்டத்தில் நான் நீதிபதியாக இருக்கும்போது, தவறுசெய்த இரு வக்கீல்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க முயன்றபோது அதற்கு எதிராக கண்டன முழக்கம் எல்லாம் வந்தது. ஆனால், என்னளவில் நான் ஒரே நோக்கில்தான் செயல்பட்டேன். வெளியிலிருந்து செய்ய முடியாத பல காரியங்களை உள்ளே சென்று செய்தேன். இதைப் பதிவுசெய்வது முக்கியம் என்று நினைத்தேன். அதுவும் முக்கியமான காரணம். சட்ட மாணவனாக, வழக்குரைஞராக, நீதிபதியாக இப்படி மூன்று காலகட்டங்களிலும் என்னுடைய செயல்பாட்டை இந்த நூலில் எழுதியிருக்கிறேன்.
நீதிபதியாக உங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஒரு நீதிபதி எப்போதுமே தன்னுடைய தீர்ப்புகளினால் அறியப்படுபவர். என் தீர்ப்புகள் நான் என்ன செய்தேன் என்பதைச் சொல்லும். புத்தகத்தை வாங்கி வாசியுங்கள். நீங்களே மதிப்பிடுங்கள்.
நான் புத்தகத்தை வாசித்துவிட்டேன். கலைஞர் – எம்ஜிஆர் –ஜெயலலிதா – ஸ்டாலின் நால்வரைப் பற்றியும் புத்தகத்தில் வருகிறது. ஒரு மாணவராக, அரசின் அமைப்புக்கு வெளியே இருப்பவராக, அதேசமயம் அமைப்பில் தலைகீழ் மாற்றத்தைப் புரட்சிகரமாக உருவாக்கிவிடும் நம்பிக்கை கொண்டவராக இருக்கும்போது, கலைஞருடைய முதல் ஆட்சியைப் பார்க்கிறீர்கள். இப்போது அமைப்புக்குள் ஆழமான அனுபவங்களோடு, ஒரு மூத்த குடிமகனாக இருக்கும்போது ஸ்டாலினுடைய முதல் ஆட்சியைப் பார்க்கிறீர்கள். அரசு என்கிற அமைப்பை இன்று எப்படிப் பார்க்கிறீர்கள்? கலைஞர்-ஸ்டாலின் இருவருடைய முதல் ஆட்சியைப் பற்றியும் இந்த பார்வையிலிருந்து உங்களுடைய மதிப்பீடு என்ன?
அரசைப் பற்றிய எனது பார்வை மாமேதை லெனினின் எழுத்துகளால் உருவானவை. ‘அரசு என்பது ஒரு பலாத்கார இயந்திரம்; அதை முறியடிப்பதற்கான உத்தியை ஓர் அடிப்படை மாற்றத்தால் மட்டுமே உருவாக்க முடியும்!’ என்பதுதான் அவருடைய தத்துவம். அன்றும் சரி, இன்றும் சரி; அந்தப் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை.
நீங்கள் கேட்டுள்ள இரு தலைவர்களின் செயல்பாடுகளையும் இந்திய அரசு எனும் பெரிய அமைப்பில், மாநில அரசு எனும் சின்ன பகுதியை, அரசாங்கத்தைக் கையாள்வது தொடர்பானது. கலைஞர் செயல்பாடுகளை அவர் கைகளில் கட்சியும் ஆட்சியும் வந்த 1969-லிருந்து ஆரம்பித்தால், கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்திலிருந்து அவர் மறையும்வரை ஏறத்தாழ ஐம்பது ஆண்டு கால வாழ்க்கை நாம் எடுத்துக்கொள்ள இருக்கிறது; அதிலிருந்து ஒரு முழுமையான படம் கிடைக்கும். ஸ்டாலின் செயல்பாடுகளை அப்படி மதிப்பிட இன்னும் போதுமான காலம் ஆகவில்லை. ஏனென்றால், அவர் கையில் முழுமையாகக் கட்சியும் ஆட்சியும் வந்து கொஞ்சம் காலமே ஆகிறது. ஆனால், ஒரு விஷயம் சொல்ல முடியும். ஸ்டாலின் அரசு எதிர்கொள்ளும் சவால்கள் கலைஞர் அரசு எதிர்கொண்ட சவால்களைவிடவும் மிகவும் கடினமானவை.
லெனினுடைய பார்வையின்படி அரசு என்பது பலாத்கார இயந்திரம் என்று எடுத்துக்கொண்டால், அதற்குள் பணியாற்றுவதன் வழியாக அதன் அடிப்படைப் பண்பை மாற்றுவதற்கு சாத்தியம் இருக்கிறதா? அரசின் ஓர் அங்கமான நீதித் துறையில் பணியாற்றுகையில் எந்த அளவுக்கு அமைப்பு உங்களை அனுமதித்தது?
புரட்சியானது அமைப்புக்கு வெளியே நடப்பது; சீர்திருத்தமானது அமைப்புக்கு உள்ளே நடப்பது. பலாத்கார இயந்திரம் என்று அரசின் பண்பையே கூறுகிறோம். அந்தப் பண்பை மாற்றுவதற்கு அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவர புரட்சி ஒன்று தேவை. அதற்கான புரட்சிகர அமைப்பும், உத்தியும் தேவை. அதற்கான காலம் வரும் வரை ஏற்கெனவே நீடிக்கும் அரசின் கீழ் நாம் செயலாற்ற வேண்டிய கட்டாயத்தில் நமக்குச் சாத்தியமானது எல்லாம் சீர்திருத்தங்கள்தான். எப்போதுமே சீர்திருத்தங்களுக்கான வரையறையும் அவற்றுக்கான வீச்சும் மட்டுப்படுத்தப்பட்டவையே! ஆனால், புரட்சியை நோக்கி மக்கள் செல்ல அவர்களை அதிகாரப்படுத்த, அவர்களுடைய உரிமைகளை உறுதிபடுத்த இந்தச் சீர்திருத்தங்கள் முக்கியமான பங்காற்றும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட காலகட்டத்திலிருந்து பார்த்தால் மக்களுடைய உரிமைகள் படிப்படியாக நசுக்கப்பட்டேவந்திருக்கின்றன. அப்படி இருக்கும்போது இந்த நீதியமைப்பை எந்த நம்பிக்கையோடு பார்ப்பது?
ஒரு விஷயத்தை இங்கே ஒப்பிட்டுப்பாருங்கள். இந்தியத் துணைக் கண்டத்தில் நம்மைச் சுற்றியுள்ள பல நாடுகளில் அரசமைப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டு ராணுவ ஆட்சி நடக்கிறது. அப்படி இருக்க 72 ஆண்டுகளாக ஸ்திரத்தன்மையுடன் இந்தியாவில் அரசமைப்பு செயல்படுகிறதென்றால், தன்னளவில் அது ஒரு ஜனநாயக வலிமையைப் பெற்றிருக்கிறது. அரசமைப்புச் சட்டம் உருவாவதற்கு முன்னர் இருந்த காலனிய ஆதிக்கக் காலகட்டத்தில் இதைக் காட்டிலும் கொடுமையான அடக்குமுறைகள் இருந்தன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
அரசமைப்புச் சட்டத்தின் இறுதி வடிவத்தை அறிமுகப்படுத்தி அம்பேத்கர் பேசுகையில் அவர் விடுத்த ஒரு எச்சரிக்கையை இங்கே குறிப்பிடலாம். அரசியல் விடுதலை அடைந்துவிட்டோம் என்றாலும், இன்னும் சமூக விடுதலையும், பொருளாதார விடுதலையும் அடைவதற்கு வெகுதூரம் உள்ளது; அப்படிப்பட்ட முயற்சியில் தோல்வியுற்றால் இக்குடியரசு நொறுங்கிவிடும் என்று எச்சரித்தார் அம்பேத்கர். சட்டப்புத்தகத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகளுக்கும், நடைமுறையிலுள்ள சூழலுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இன்றைக்கும் பெரும்பான்மையான பிரச்சினைகளுக்குக் காரணம். அதைக் கடப்பதே நம் முன்னுள்ள சவால். இந்த இடைவெளியைக் குறைப்பதில் நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் முக்கியமான பொறுப்பு உண்டு.
பெரிய போராட்டங்களைத் தனிமனிதராகக் கையாண்டிருக்கிறீர்கள். இதில் எந்த அளவிற்கு உங்கள் குடும்பம் உதவியாக இருந்தது?
குடும்பம் என்பதை நெருங்கிய உற்றம் உறவுகளுடன் சுருக்கிக் கொள்ள விரும்பவில்லை. என்னைச் சுற்றியிருக்கும் பெரிய குடும்பம் என்றைக்குமே என்னுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தேவந்திருக்கிறது. என் மகளும் என் மனைவியும் என்றைக்குமே என்னுடைய நியாயமான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளித்திருக்கின்றனர்.
பெரிய அச்சுறுத்தல்கள் வரும்போது ஒரு சாமானியராக எதிர்க்கும் தைரியத்தை எங்கிருந்து பெறுகிறீர்கள்? உதாரணமாக, ஒருவர் ஆத்திகராக இருந்தால் கடவுளை அழைப்பார்!
ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் அதிகமாகக் கடவுளைப் பற்றிப் புரிந்துகொண்டவர்கள். ஆகையால், மன வலிமையும், தத்துவக் கோட்பாடுகளுமே நாத்திகர்களை வழிநடத்திச் செல்லும். தைரியசாலிகளுக்கு ஒருமுறைதான் மரணம் என்ற வாக்கியத்தை நினைவில் கொண்டால் எல்லாவிதமான அநீதிகளையும் எதிர்த்துப் போராட முடியும்.
இப்படிப்பட்டவர்களை வேட்டையாட முனைவது அமைப்பின் இயல்பு. உங்களை எப்படி தற்காத்துக்கொண்டீர்கள்?
அமைப்பு என்பது பலதரப்பட்டவர்களையும் உள்ளடக்கியதுதானே! அதில் ஒரு பகுதி இப்படியானவர்களை ஒடுக்க முற்பட்டால், ஒரு பகுதி பக்கபலமாகவும் நிற்கும். அப்படியான மக்கள்தான் நம்மைத் தற்காத்துக்கொள்ளும் ஆயுதங்கள். ‘எங்கிருந்து வருகிறாய் என்றால் மக்களிடமிருந்து; எங்கே செல்கிறாய் என்றாலும் மக்களிடமிருந்து!’ என்று சொல்வார் மா வோ. அதைத்தான் நானும் சொல்வேன்!
உங்கள் சுயசரிதை நூல் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது… அடுத்து என்ன திட்டம்?
நான் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்றபோது, நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யர் எனக்கு ஒரு கடிதம் எழுதினார். அதுதான் எனக்கான வழிகாட்டி. ஓய்வடைந்த பிறகு, மூத்த வக்கீலாக தொழில் நடத்தவோ, அரசுப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளவோ நான் முனையாதது அதனால்தான். சமூகப் பணியில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும். இப்போது எழுத்தும் பேச்சுமே என் களங்கள். அங்கே என் பணி தொடரும்!