இலங்கையில் அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததும், பிற நாட்டுக்கு கரன்சிக்கு நிகரான இலங்கை கரன்சியின் மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது. இந்நிலையில் தான் இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியதற்கு பல்வேறு பிரச்சனைகள் முக்கிய காரணிகளாக உள்ளன. கொரோனா பாதிப்பால் வந்த ஊரடங்கு, வேலையிழப்பு, வெளிநாட்டு கடன் அதிகரிப்பு, பணவீக்கம், அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்டவை தான் முக்கிய காரணமாக கூறப்படுகின்றன.
பொருளாதார வளர்ச்சி குறைவு
குறிப்பாக கொரோனாவின் 2 ஆண்டு காலம் என்பது இலங்கையை மோசமான நிலைமைக்கு தள்ளிவிட்டுள்ளது. 2021 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் இலங்கையின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட 1.8 சதவீதம் மெதுவாக வளர்ச்சியடைந்தது. அந்த ஆண்டில் பொருளாதார வளர்சி என்பது 3.7 சதவீதமாக மட்டுமே இருந்ததது.
அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது
மேலும் கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 70 சதவீதம் சரிந்து பிப்ரவரி மாத நிலவரப்படி சுமார் 2.31 பில்லியன் டொலராக உள்ளது. இது கடன் செலுத்த வேண்டியதை விட மிகவும் குறைவாக உள்ளது. இதனால் உணவு மற்றும் எரிபொருள் உட்பட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழைகள் அதிகரிப்பு
சுற்றுலா துறையை சார்ந்து இருக்கும் இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா லொக்டவுன் காரணமாக ஏராளமானோர் வேலையிழந்தனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை உயர்ந்து வந்தனர். உலக வங்கி கணிப்புப்படி தினசரி வருமானம் 3.20 அமெரிக்க டொலர் என்ற அடிப்படையில் 2020ல் நாட்டில் ஏழைகளின் எண்ணிக்கை 11.7 சதவீதமாக இருக்கும் என கூறப்பட்டது. இது முந்தைய ஆண்டில் 9.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில் தான் லொக்டவுனில் குறைந்த வருமானம் கொண்ட 5 மில்லியன் குடும்பங்களை கண்டறிந்து அரசு சார்பில் ரூ.5,000 வழங்கப்பட்டது.
மின்சார உற்பத்தி பாதிப்பு
இலங்கையில் நீண்டகாலமாக மின்தட்டுப்பாடு உள்ளது. மார்ச் துவக்கத்தில் தினசரி 7 மணிநேர மின்வெட்டு அமலில் இருந்த நிலையில் தற்போது இது 10 முதல் 15 மணிநேரமாக அதிகரித்துள்ளது. இலங்கை தனது மின்சாரத்தில் 40 சதவீதத்தை நீர்மின் நிலையங்கள் மூலம் தான் பெறுகிறது. போதிய மழையின்மையால் பெரும்பாலான நீர்த்தேக்கங்களில் தண்ணீர் குறைந்துள்ளன. மின் உற்பத்தியும் சரிந்துள்ளது. மேலும் மின்உற்பத்திக்கான மற்ற முக்கிய பொருட்களாக நிலக்கரி, எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால் அன்னிய செலாவணி கையிருப்பு குறைவால் இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் டீசல் தட்டுப்பாட்டால் அனல்மின் நிலையங்கள் பல அனல் மின் நிலையங்கள் இயங்கவில்லை. இதுவும் முக்கிய காரணமாக உள்ளது.
எரிபொருள் பிரச்சனை
மக்கள் பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், மண்ணெண்ணை ஆகியவற்றை நீண்ட வரிசையில் நின்று பெற்று வருகின்றனர். அதிக விலைக்கு விற்பனை செய்தாலும் கூட, அத்தியாவசிய தேவைகளுக்காக அதனை தவிர்க்காமல் வாங்க முயற்சிக்கின்றனர். இருப்பினும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் தகராறு ஏற்படுகிறது. இந்நிலையில் தான் எரிபொருள் நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. டீசல் தட்டுப்பாட்டால் பல அனல்மின் நிலையங்கள் செயல்படவில்லை. கடுமையான டீசல் பற்றாக்குறையால் பல அனல் மின் நிலையங்கள் மூடப்பட்டு நாடு முழுவதும் மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல் விலை 92 சதவீதமும், டீசல் விலை 76 சதவீதமும் உயர்ந்துள்ளது. இதற்கிடையே ரஷ்யா-உக்ரைன் இடையேயான மோதல் போக்கால் கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்துள்ளன. இதுவும் இலங்கைக்கு தற்போது தலைவலியாக உள்ளன.
உயரும் பணவீக்கம்
இலங்கையில் வெளிநாட்டு கடன்கள் அதிகரித்துள்ளன. 51 பில்லியன் டொலர் வெளிநாட்டு கடன்களைச் செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை என மார்ச் 2020ல், நாட்டில் இறக்குமதி தடை விதிக்கப்பட்டது. இது அத்தியாவசியப் பொருட்களின் பரவலான தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வுக்கு வழிவகுத்தது. மேலும் 2022 பிப்ரவரியில் 15.1 சதவீதமாக இருந்த இலங்கையின் பணவீக்கம் 2022 மார்ச்சில் 18.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. உணவு பணவீக்கம் பிப்ரவரியில் 25.7 சதவீதத்தை எட்டியது. இது ஒரு தசாப்தத்தில் இல்லாத அளவுக்கு அதிகமாகும். அக்டோபர் 2021 நிலவரப்படி ரூபாய் 25 ஆக இருந்த ஒரு கப் டீயின் விலை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது. மருத்துவரின் வருகை, மருந்துகளின் விலையும் அதிகரித்து வருகிறது. இலங்கையின் மத்திய வங்கியான சிபிஎஸ்எல் ரூபாயின் பெறுமதியை 15 வீதம் வரை குறைத்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வந்ததால், டொலருக்கு 230 ரூபாய் மாற்று விகித வரம்பை எட்டியது. இதுவும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா உதவி
இந்நிலையில் தான் இலங்கைக்கு இந்தியா உள்பட அண்டை நாடுகள் உதவி செய்து வருகின்றன. இலங்கையின் இருப்பை அதிகரிக்க இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி மாதம் 400 மில்லியன் டொலர்கள் கொடுத்து உதவுவதாக அறிவித்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு பிப்ரவரியில் இந்தியாவில் இருந்து எரிபொருள் வாங்க 500 மில்லியன் டொலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது. இருப்பினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது சீராக கொஞ்சம் நாட்கள் பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
(இதனை எழுதியவர் தமிழ்நாட்டு ஊடகவியலாளர்: ஆர். நந்தகுமார். இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பாக இந்த மாதிரியான சரியான கண்ணோட்டங்களை இலங்கைக்கு வெளியே இருந்து மாத்திரமே பலர் எழுதுகிறார்கள். எனினும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிபற்றி தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ஒருவரது பூரணவிளக்கத்தினை எத்தனை இலங்கையர்கள் ஏற்றுக்கொள்ளப் போகிறார்கள்? வீதியில் இறங்கிப்போராடினால் இந்தப்பிரச்சனையைத் தீர்க்க முடியுமா? அல்லது ஆட்சிமாற்றத்தினால் இந்தப்பிரச்சனையைத் தீர்க்க முடியுமா?)