Site icon சக்கரம்

அரசின் பயணப் பாதை வேலைத்திட்டம் விரைவில்

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை

IMF மற்றும் உலக வங்கியுடன் நிதி அமைச்சர் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் வெற்றி

சபையில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவிப்பு

பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார பயணப் பாதை வேலைத்திட்டம் நிதி அமைச்சர் நாடு திரும்பியதும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன நேற்று தெரிவித்தார். அதேவேளை அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

அரசாங்கம் நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் அரசாங்கத்தின் நட்பு நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போது நிதியமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க ஆகியோர் சர்வதேச நாணய நிதியத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியுடன் நடத்தப்பட்டுவரும் பேச்சுவார்த்தைகள் சாத்தியமானதாக அமைந்துள்ளன. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது தொடர்பான உறுதிமொழிகள் அந்நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன.

தற்போதைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான சிறந்த பொறிமுறையொன்றை உருவாக்கி நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் பொருளாதார பயணப்பாதை திட்டம் தொடர்பில் நிதியமைச்சர் நாடு திரும்பியதும் பாராளுமன்றத்திற்கு அவரால் தெளிவு படுத்தப்படும்.

அரசாங்கம் தொடர்ச்சியாக இந்த விடயங்களை பாராளுமன்றத்தில் தெரிவித்து வரும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ச்சியாக அது சம்பந்தமான கேள்விகளையே சபையில் மீண்டும் மீண்டும் எழுப்பி வருகின்றார்.

தொடர்ச்சியான அவரது இத்தகைய செயற்பாடுகள் எதிர்க்கட்சிக்கான பிரசாரமாகவே அமைகின்றது.

அவர்களால் பிரசாரத்துக்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செயற்பாடுகள் நாட்டை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

நாட்டில் தற்போது நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை எதிர்க் கட்சி தெரிவித்து வருகின்றது. எனினும் அவர்களது காலத்திலேயே தொழிற்சங்க போராட்டங்களை மேற்கொண்ட 80,000 பேர் வேலை நிறுத்தம் செய்யப்பட்டனர். இரண்டு ரூபா 80 சதம் அதிகரிப்பை கோரியே அந்த தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.அதன்போது ஜனநாயகத்துக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர்கள் தற்போது மறந்து செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Exit mobile version