‘சக்கரம்’ இணையத்தளம் இன்றுடன் மூன்றாவது ஆண்டினை நிறைவு செய்கின்றது. இந்தப் பெருமையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றோம். இந்த மூன்றாண்டு காலப்பயணத்தில் எமது இணையத்தளத்தின் உள்ளடக்கத்தைச் சிறப்பித்து வரும் கட்டுரைகளினதும் செய்திகளினதும் ஆசிரியர்களுக்கும், எமது இணையத்தளத்திற்கு கிரமமாக வருகை தரும் வாசகர்களுக்கும் மற்றும் எம்மை ஊக்குவிக்கும் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கடந்த இரண்டு ஆண்டு காலத்திற்கு மேலாக நீடித்த கொரோனா செய்திகளிலிருந்து சற்று விடுபடவும், இலங்கையின் இன்றுள்ள பொருளாதார நெருக்கடி, கடந்த பெப்ரவரி மாதம் 24ந் திகதி உக்ரைன் நாட்டில் ஆரம்பித்த ரஷ்யா – நேட்டோ யுத்தம், சர்வதேச சமூக, பொருளாதார அரசியல் நிலைமைகள், சூழலியல், அறிவியல் மற்றும் இசை, கலை, இலக்கியமென பல்வேறு கோணங்களில் தற்போது ‘சக்கரம்’ செய்திகளையும் கட்டுரைகளையும் தாங்கி வெளிவருகின்றது.
இலங்கையினதும் சர்வதேசத்தினதும் நிலவரங்கள், இனிவரும் காலங்களில் முன்னெப்போதுமில்லாதளவிற்கு மிகவும் நெருக்கடி வாய்ந்ததாகவே இருக்கும். இதனால் எமது இணையத்தளத்திற்கு பொறுப்பு இன்னும் அதிகமாகவே இருக்கப் போகின்றது. அதேவேளை வாசகர்களாகிய நீங்களும் நெருக்கடியான காலகட்டத்தில் சரியான கண்ணோட்டத்துடன் செயற்பட வேண்டியவர்களாக இருக்கிறீர்கள். எனவே எமது இணையத்தளத்திற்கு தினமும் வாருங்கள், வாசியுங்கள், அத்தோடு எமது இணையத்தை ஏனையவர்களோடு பகிர்ந்தும் கொள்ளுங்கள்.
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி பெற்ற தினமே மே தினம் ஆகும். இந்த நாளை உலகெங்கிலும் தொழிலாளர்கள் பலரும் வெற்றி நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். அதேபோலவே நாங்களும் மூன்று ஆண்டு காலத்திற்கு முன்னர் ‘சக்கரம்’ இணையத்தை ஆரம்பித்து, இந்த நாளில் மேதினத்தையும் எமது இணையம் ஒவ்வொரு ஆண்டாகக் கால்பதிப்பதையும் இணைத்துக் கொண்டாடுகின்றோம்.
உழைப்பு ஒன்றே நமது வாழ்வில் உயர்வைத் தருமென்ற உயரிய சிந்தனைக்கிணங்க, உலகின் அனைத்து தொழிலாளர்களுக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
–ஆசிரியர் குழு