Site icon சக்கரம்

இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

முதல்வா் மு.க.ஸ்டாலின்

லங்கையில் வாடும் மக்களுக்கு உதவிட நிதி அளிக்க வேண்டுமென தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை (03.05.2022) வெளியிட்ட செய்திக் குறிப்பு:

‘இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழலில் அந்த நாட்டு மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். அவா்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருள்கள், உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என அறிவித்திருந்தேன். இதற்கான மத்திய அரசின் அனுமதியும் கிடைத்துள்ளது. இதன் முதல் கட்டமாக, தமிழ்நாட்டிலிருந்து 40 ஆயிரம் தொன் அரிசி, 500 தொன் பால் பவுடா், உயிர்காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்படவுள்ளன.’

உதவும் தருணமிது: நல்லெண்ணம் கொண்ட அனைவரும் நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டிய தருணமிது. எனவே, மனிதாபிமான அடிப்படையில், இலங்கை மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட நன்கொடைகள் வழங்கலாம். நீங்கள் வழங்கும் உதவிகள் இலங்கை மக்களுக்குத் தேவையான பொருள்களாக வாங்கி அனுப்பி வைக்கப்படும்.

நன்கொடை வழங்க விரும்புவோர் மின்னணு பரிவா்த்தனை முறைகளைக் கையாளலாம். அதன்படி, http://ereceipt.tn.gov.in.cmprf/cmprf.html

வங்கி: இந்தியன் ஓவா்சீஸ் வங்கி. வங்கிக் கிளை: தலைமைச் செயலக கிளை, சென்னை – 600 009. சேமிப்புக் கணக்கு எண்: 117201000000070. ஐ.எப்.எஸ்.சி குறியீடு:
IOBA0001172. CMPRF பான் எண்: AAAGC0038F

இ.சி.எஸ் (ECS) மூலமாக ஆன்லைனில் தொகையை அனுப்புவோர், அதற்கான அதிகாரபூா்வ ரசீதை அனுப்புவதற்கு பின்வரும் விவரங்களை வழங்க வேண்டும். பங்களிப்பாளரின் பெயா், பங்களிப்புத் தொகை, வங்கி, கிளை, பணம் அனுப்பும் தேதி, பரிவா்த்தனை குறிப்பு எண், தொடா்பு கொள்ள வேண்டிய முகவரி, மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண் ஆகிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும்.

யுபிஐ முறை மூலமாக கூகுள் பே, போன் பே, பேடிஎம், அமேசான் பே, மோபிகுவிக் (PhonePe, Google Pay, Paytm, Amazon Pay, Mobikwik) போன்ற கைப்பேசி செயலிகள் வழியாகவும் பணத்தை அனுப்பலாம். அதற்கான பயனா் குறியீடு: tncmprf@iob

காசோலை, வரைவு காசோலை மூலம் நன்கொடை வழங்கலாம். அரசு இணைச் செயலாளா் – பொருளாளா், முதலமைச்சரின் பொது நிவாரண நிதி, நிதித் துறை, தலைமைச் செயலகம், சென்னை – 600 009 தமிழ்நாடு என்ற முகவரிக்கு காசோலையாகவோ, வரைவு காசோலையாகவோ அனுப்பி வைக்கலாம். இவற்றை அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியா்களிடமும் அளிக்கலாம்.

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குவோர் 80-G ன் கீழ் வருமான வரி விலக்கு பெறலாம்.

திமுக ரூ.1 கோடி: பொருளாதார நெருக்கடியால் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிட திமுக சார்பில் ரூ.1 கோடி அளிக்கப்படும் என்று கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து, செவ்வாய்க்கிழமை (03.05.2022) அவா் வெளியிட்ட அறிக்கை:

‘எல்லைகளைக் கடந்து உலக மாந்தராகச் சிந்திப்பதுதான் தமிழா் பண்பு. பிறா் துன்பம் கண்டு முதலில் துடிக்கும் நெஞ்சம் தமிழா் நெஞ்சம். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்னும் உயரிய அறத்தை ஒழுகி நடக்கும் நாகரிகம் நம் நாகரிகம். நெருக்கடியில் உள்ள இலங்கை மக்களுக்கு நேசக்கரம் நீட்டும் விதமாக, திமுக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவிட முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

திமுக எம்.எல்..க்கள் ஊதியம்: திமுகவைச் சோ்ந்த சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஒரு மாத ஊதியமும் முதலமைச்சா் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்றும் அவா் அறிவித்துள்ளார்.

.பி.எஸ்.: இலங்கைக்கு சொந்த நிதியில் இருந்து ரூ.50 லட்சம் வழங்குவதாக தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் (ஏப்.29) எதிர்க்கட்சி துணைத் தலைவா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்தார். மற்றவா்களும் பின்பற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளார் என அதற்கு முதல்வா் ஸ்டாலின் நன்றி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த்: இலங்கையில் வாழும் மக்களின் துயர் துடைக்கவும், அவர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அக்கட்சி நிறுவனத் தலைவரும், பொதுச் செயலாளருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல், காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இதனால், வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் இலங்கை மக்கள், பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தக் கோரி அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் உள்ள தமிழக மக்கள் அகதிகளாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

உண்ண உணவு, உடுத்த உடை மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் இலங்கை மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்தக் கடினமான நேரத்தில் அவர்களுக்கு உதவிட வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை. அந்த வகையில் இலங்கையில் வாழும் மக்களின் துயர் துடைக்கவும், அவர்களுக்கு உதவிடும் வகையிலும், தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும்” என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

Exit mobile version