Site icon சக்கரம்

பதவி விலகினார் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச!

லங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இந்த அசாதாரண சூழலுக்குப் பொறுப்பேற்று, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து விலகியதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகும் இராஜினாமா கடிதத்தை இன்று (09.05.2022) ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இதனை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

அலரி மாளிகைக்கு அருகில் மாபெரும் போராட்டம்! மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம்!!

மறு அறிவித்தல் வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களால், நாட்டில் கடந்த 30 நாட்களாக மிக அமைதியாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டங்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டமையைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்களில் 23 பேர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, பிரதமரின் இல்லமான அலரி மாளிகைக்கை முன்பாக இடம்பெற்று வந்த ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடாத்திய பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள், அங்கிருந்து சுமார் 2 கி.மீ. இற்கும் அதிக தூரத்தில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்று வந்த போராட்டக்களத்திற்கு வந்து அங்கும் சேதம் விளைவித்ததோடு, பலர் மீது தாக்குதல் நடாத்தியிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் அமைதியின்மை காரணமாக அதனைக் கட்டுப்படுத்தும் வகையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய மாணவர்கள் தற்போது அலரி மாளிகை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, அவர்களுக்கு ஆதரவாக தற்போது நூற்றுக் கணக்கானோர் அங்கு குழுமியுள்ளனர்.

Exit mobile version