–பாஸ்கர் செல்வராஜ்
கொரோனா பாதிப்பை சமாளிக்க சுயநலமாக ஆறு ட்ரில்லியன் (Trillion) டொலரை அச்சிட்டு தனது நெருக்கடியைத் தீர்க்க முயற்சி செய்தது அமெரிக்கா. அது வீழ்ந்து நொறுங்க வேண்டிய பங்குச் சந்தையைத் தாங்கிப்பிடித்து முடங்கவிருந்த பொருளாதாரத்தை முடுக்கி விட்டது. பக்கவிளைவாக வந்த பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த சீனாவை அமெரிக்கக் கடன் பத்திரக் கையிருப்பை அதிகரிக்க செய்த முயற்சி தோல்வியடையவே எண்ணெய் உற்பத்தியாளர்கள் பக்கம் கவனம் திரும்பியது. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ரஷ்யாவின் தலைமையில் உற்பத்தியைப் பெருக்க மறுத்து, டொலர் பணப் பரிவர்த்தனையை நீக்கி யூரோவிலும் கையிருப்பை மற்ற சொத்துகளிலும் முதலீடு செய்துவந்த ரஷ்யாவைப் பணியவைக்க உக்ரைன் பிரச்சினையை முன்னுக்குக் கொண்டு வந்தார்கள். உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் வேலைகள் தொடங்கியது.
குறிக்கோளை அடைந்த ரஷ்யா
ரஷ்யாவை மண்டியிட வைக்கும் இந்த நகர்வை இராணுவ ரீதியாக எதிர்கொண்ட ரஷ்யா, உக்ரைனை ஆயுத நீக்கம் செய்து, இப்போது இந்த அரசியல் நகர்வை முன்னெடுக்க உதவும் நாசிசவாதிகளை ஆட்சியில் இருந்து நீக்கி உக்ரைனில் ஒரு நடுநிலை ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ரஷ்யா போரைத் தொடங்கியது. ரஷ்யப் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து அரசியல் பொருளாதார ரீதியாக அதை உலகில் இருந்து தனிமைப்படுத்தி அதன் படைகளை உக்ரைனில் வைத்து தோற்கடித்து ரஷ்யாவில் புதிய ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ செயல்பட்டது. இருவருமே தங்களது நோக்கத்தில் குறுகிய காலத்தில் முழு வெற்றிபெற முடியாத நிலையில் போர்க்களத்தில் ஒருவரையொருவர் தோற்கடிக்கும் முயற்சியில் இறங்கினார்கள். இதில் ரஷ்யா தனது நோக்கத்தில் வெற்றிபெறும் நிலையை அடையப்போகும் சூழலை உணர்ந்த உக்ரைன், பேச்சுவார்த்தையில் ரஷ்ய நிபந்தனைக்கு உட்பட சம்மதித்தது. கீவ்வைச் (Kiev) சுற்றிவளைத்திருந்த படைகளை நல்லெண்ண நோக்கில் விலக்கிக் கொண்டது ரஷ்யா.
நேட்டோவின் புக்கா படுகொலை குற்றச்சாட்டு
இந்த உக்ரைன் போர் தோல்வி, ஆசியாவைப் போல ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்க ஆதிக்கத்தில் இருந்து விடுவித்து ஒற்றைத் துருவ (Unipolar) டொலர் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுமாதலால், உக்ரைன், ரஷ்ய நிபந்தனைக்கு உட்படுவதை தடுத்து பனிப்போர் காலத்தில் ஆப்கானிஸ்தானில் நீண்டகால உள்நாட்டுப் போரின் மூலம் ரஷ்யாவை அமெரிக்கா தோற்கடித்ததைப்போல, இந்தப் போரிலும் தோற்கடிக்க முடிவெடுத்தது. ஒத்துழைப்பு கொடுக்காமல் முரண்டு பிடிக்கும் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளை வழிக்குக் கொண்டுவர ரஷ்யா படைவிலக்கம் செய்த பகுதியான புக்காவில் (Bucha) அது உக்ரைனியர்களை பெருமளவில் கொன்று குவித்ததாகவும், அது இனப்படுகொலைக்கு ஒப்பானதாகவும் இருப்பதாகக் கூறி ஒரு காணொளியை வெளியிட்டது. உடனே உலக நாடுகள் எல்லாம் இதைக் கண்டிக்க வேண்டும் என்று ஊடகங்களின் மூலம் கூப்பாடு போட்டது. “இந்த ஜோடிக்கப்பட்ட நிகழ்வு எங்கு கலந்தாலோசிக்கப்பட்டது; எப்படிச் செயல்படுத்தப்பட்டது; இதற்கு எந்த ஊர்தி பயன்படுத்தப்பட்டது. அதன் எண் என எல்லா தகவல்களையும் எங்களது உளவுப்பிரிவு வழங்கும்; கூடுதல் தகவல் வேண்டுமென்றால் எங்களை அணுகுங்கள் உதவுகிறோம்” என புட்டின் அறிக்கை விடுத்து அதை அம்பலப்படுத்தினார்.
ரஷ்யாவின் உயிரியல் ஆயுதக் குற்றச்சாட்டு
பதிலடியாக உக்ரைனில் அமெரிக்கா நடத்தி வந்த உயிரியல் ஆயுத ஆராய்ச்சிக் கூடங்கள் குறித்து ஐ.நாவில் விவாதிக்க வேண்டும் என்றது ரஷ்யா. முதலில் மேற்கு சார்பு ஐ.நாவின் தலைவர் மறுத்து, பின்பு அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள் புறக்கணித்த கூட்டம் நடைபெற்றது. அதில் பறவைகளின் இடப்பெயர்வை சில்லுகளைப் பொருத்தி கண்காணித்து, தேவைப்படும்போது வெடிக்கச்செய்து பறவையைக் கொன்று அதன்மூலம் தொற்றுக் கிருமிகளை பரவச்செய்யும் ஆய்வை அமெரிக்கா செய்ததாக ரஷ்யா குற்றம்சாட்டியது. அதற்கு ஆதாரமாக இந்தப் பகுதிகளில் தாங்கள் கைப்பற்றிய ஆவணங்கள் இருப்பதாகக் கூறியது. உயிரியல் ஆய்வுக்கூடங்களை உக்ரைனில் நடத்தியதாக செனட்டின் முன்பு உக்ரைன் வண்ணப்புரட்சியின் சூத்திரதாரியான விக்டோரியா நூலண்டு (Victoria Nuland) ஒப்புக் கொண்டிருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. புக்கா ‘படுகொலை’ குறித்து ஓயாமல் அலறிய ஊடகங்கள் இது குறித்து பேசவே இல்லை.
மரியோபோல் (Mariupol) நகரில் சரணடைந்த அல்லது பிடிபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்க்கைதிகளில் இங்கிலாந்தின் முன்னாள் இராணுவ வீரர்களான சௌன் பின்னர் (Shaun Pinner), எய்டன் அஸ்லின் (Aiden Aslin) ஆகிய இருவரும் அடக்கம். இந்த ‘புக்கா இனப்படுகொலை’ செய்தியின் சூத்திரதாரியான இங்கிலாந்தின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் “தன்னார்வலர்கள்” ரஷ்யா கேட்கும் நபரை உக்ரைன் விடுத்து எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ஜான்சனுக்கு விடுக்கும் காணொளியை ரஷ்யா வெளியிட்டது. இந்த “தன்னார்வலர்கள்” முன்பு சிரியாவிலும் இதேபோல போரிட்டார்கள் என்பதைக் கொண்டு பார்க்கும்போது இவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை ஊகித்துக்கொள்ளலாம்.
போரைத் தீவிரப்படுத்தும் நேட்டோ
மரியோபோல் நகரில் எஞ்சியிருந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான அசோவ் (Azov) பிரிவின் இராணுவ வீரர்கள் சோவியத் காலத்தில் கட்டப்பட்ட அணு ஆயுத தாக்குதலையும் தாங்கும் பாதாள இரும்பு உருக்காலையில் சென்று பதுங்கி இருக்கிறார்கள். இவர்களுடன் நேட்டோவின் முக்கிய இராணுவ தளபதிகளும் பிரான்சின் நாற்பதுக்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருமுறை உலங்கூர்திகள் மூலமும் ஒருமுறை கப்பலின் மூலமும் இந்தப் பகுதியில் இறங்கி மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை ரஷ்யா முறியடித்தது. இதையடுத்து ரஷ்யாவின் கருங்கடல் பகுதி கப்பற்படை வலிமையின் சின்னமாக விளங்கிவந்த மாஸ்கோவா (Moskva) போர்க்கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது. இது இங்கிலாந்தின் உதவியுடன் உக்ரைன் தயாரித்த நெப்டியூன் ஏவுகணை கொண்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரைன் தெரிவித்தது. போர்க்கப்பலின் தலைவரும் பதினைந்து மாலுமிகளும் இதில் உயிரிழந்தார்கள். நேட்டோவின் துணையின்றி செய்யமுடியாத இந்தத் தாக்குதலின் மூலம் இந்தப் போரை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவது அல்லது திசைதிருப்புவது நோக்கமாக இருந்திருக்கலாம்.
ரஷ்யாவின் உடனடி பதிலடியைத் தூண்டும், இந்தப் போரை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் இந்த நடவடிக்கைக்கு பதில் இராணுவ நடவடிக்கையை எடுக்காமல் ரஷ்யா இப்போதைக்குத் தள்ளிப்போட்டிருக்கிறது. வருடாந்திர தடையற்ற சுதந்திர கடல் போக்குவரத்தை (Freedom of Navigation) உறுதிசெய்யும் நடவடிக்கையில் இங்கிலாந்தின் போர்க்கப்பல்கள் இந்த வருடம் ஈடுபடவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதோடு சரணடையாமல் சோறு தண்ணியின்றி பட்டினியில் சமாதியாகப் போகிறவர்களை எதற்கு உயிரைக் கொடுத்துக் கொல்ல வேண்டும் எனக்கூறி, அசோவ் பாதாள உருக்காலையில் இருப்பவர்களைத் தாக்கி அழிக்காமல் விட்டுவிட்டு முதல்கட்ட போர் முடிவுக்கு வந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்திருக்கிறது.
பதிலடியைத் தள்ளிப்போடும் ரஷ்யா
வீராப்பும், ஜம்பமும், தனது பலத்தைக் குறித்த பீத்தலும், பலகீனமான ஒரு நாட்டை ஒன்றுமில்லாமல் செய்து, அதைக் காட்டி மற்றவர்களை பயமுறுத்தி பணிய வைக்கும் அமெரிக்க கலாச்சாரத்தைப் போலல்லாமல், அமைதியாக அழுத்தமான விளைவுகளை ஏற்படுத்தும், சொன்னதைச் செய்யும் கலாச்சார விழுமியங்களைக் கொண்டது ரஷ்யா. இவர்கள் எதிர் பார்த்ததைப்போல போர்க்கப்பல் தாக்குதலுக்கு உடனடியாக வினையாற்ற வேண்டிய உள்ளூர் அரசியல் அழுத்தம் அதற்கு இல்லை. அதோடு சரணடைய அனுமதிக்காமல் ரஷ்யாவின் அசோவ் உருக்காலை தாக்குதலை மற்றுமொரு “மனித அவல” தகவல் தொடர்பு போராக மாற்ற காத்திருக்கும் ஆங்கிலோ சாக்சன் கும்பலுக்கு அப்படியான வாய்ப்பைக் கொடாமல் கருமமே கண்ணாக இரண்டாம்கட்ட போரைத் தொடங்குவதாக அறிவித்திருக்கிறது ரஷ்யா.
இரண்டாம் கட்டப் போர் கிழக்கு மற்றும் தெற்குப்பகுதியை விடுவிப்பது என்கிறார்கள். கூடுதலாக உக்ரைனுடன் பேசுவது அர்த்தமற்றது; முழு உக்ரைனிய தேசியத்தை காக்கும் வாய்ப்பை அவர்கள் இழந்துவிட்டார்கள் என்கிறார் புட்டின். இதன் அர்த்தம் கிழக்கும், தெற்கும் தனி நாடுகளாக இருக்கும். தொழிற்சாலைகளும் இயற்கை வளங்களும் நிறைந்த கிழக்கும் இந்த பொருட்களை ஏற்றுமதி செய்யத் தேவையான துறைமுகப் பகுதியான தெற்கும் இனி உக்ரைனுக்கு திரும்பக் கிடைக்காது என்கிறார். இந்த இரண்டும் இல்லாமல் போரில் பெரும்பகுதி மக்களை அகதிகளாகவும் போரிலும் இழந்து கொண்டிருக்கும் இன்றைய மேற்கு உக்ரைன் ஒன்றுக்கும் உதவாத வெறும், மக்காச்சோளம், கோதுமையை விளைவிக்கப் பயன்படும் நிலமாகவே இருக்கும். இதை உணர்ந்த அதிபர் செலன்ஸ்கி வெறும் கையோடு வராதீர்கள்; எங்களுக்கு வேண்டிய கனரக ஆயுதங்களைக் கொண்டு வாருங்கள் என அமெரிக்காவிடம் கடுமை காட்டினார். கூடுதலாக, போரைத் தொடர்ந்து நடத்த பல பில்லியன் வேண்டுமெனவும் உக்ரைன் கோரிக்கை வைத்தது. அவர்களும் உக்ரைன் சிறப்பாகச் செயல்படுகிறது; எல்லோரும் ஆயுதங்கள் கொடுப்போம் எனக் கூட்டம் கூட்டி அறிவித்திருக்கிறார்கள். பைடன் 33 பில்லியன் டொலர் செலவிட செனட்டில் அனுமதி பெற்றிருக்கிறார்.
நோக்கமே கண்ணாக ரஷ்யா
இப்படி அனுப்பப்படும் ஆயுதங்களை ரஷ்யா அழித்தும், ஆயுதங்கள் செல்லும் ரயில் பாதைகளைத் தகர்த்தும் வருகிறது. இதில் அமெரிக்க போர்த்தளவாட உற்பத்தியாளர்கள் இலாபத்தில் கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள். போர்ச்சூழலைத் தலைகீழாக மாற்றும் முக்கிய ஆயுதங்களைக் கொடுத்தால் உலகில் யாரிடமும் இல்லாத சிறந்த ஆயுதங்களைக் கண்காட்சிக்காக வைத்திருக்கவில்லை; கண்டிப்பாகப் பயன்படுத்துவோம் என்கிறார் புட்டின். இந்தப் போர் மேலும் பரவி அடுத்த உலகப் போராகவோ, அணு ஆயுதப் போராகவோ மாறும் என எச்சரிக்கிறார் ரஷ்ய வெளியுறத்துறை அமைச்சர். அப்படியெல்லாம் ஆகாது; போரை நீண்டகாலத்துக்கு இழுத்து ரஷ்யாவை பலகீனப்படுத்துவதன் மூலம் உக்ரைன் போரில் வெல்லும் என்கிறது அமெரிக்கத் தரப்பு. அடுத்து மால்டோவா (Moldova) எல்லையில் ரஷ்ய அமைதிப்படை நிற்கும் ட்ரான்ஸ்நிஸ்ட்றியாவுக்கு (Transnistria) போரை விரிவாக்கும் வேலைகள் தொடங்கி இருக்கிறது.
இவை எல்லாம் இரண்டாம்கட்டப் போரில் ரஷ்யாவுக்கு அதிகமான உயிரிழப்பையும் பொருளிழப்பையும் ஏற்படுத்துமே தவிர, அதன் வெற்றியை தடுத்து நிறுத்தும் சாத்தியம் குறைவு. நீண்டகாலம் எடுத்தாலும் உறுதியாகவும் தெளிவாகவும் தனது நோக்கத்தை ரஷ்யா அடைந்து கொண்டிருக்கிறது. இந்தப் போரின் ராணுவ நோக்கமான உக்ரைனை இராணுவ மற்றும் நாசிச நீக்கம் செய்வதில் கிட்டத்தட்ட வெற்றி பெற்றிருக்கிறது.
தொடரும்…