இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழு இன்று (23.06.2022) பிற்பகல் மீண்டும் நாடு திரும்பியுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல தரப்பினருடன் கலந்துரையாடிய பின்னரே அவர்கள் நாட்டிலிருந்து விடைபெற்றனர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய வெளிவிவகார செயலாளர் மற்றும் அவரது குழுவினர், 3603 எனும் விசேட விமானத்தில் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான திணைக்களத்தின் செயலாளர் ஶ்ரீ அஜய் சேத், தலைமைப் பொருளாதார ஆலோசகர் கலாநிதி வீ. ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் இந்து சமுத்திர பிராந்தியத்துக்கான இணைச் செயலாளர் கார்த்திக் பாண்டே உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவினர் இன்று (23.06.2022) முற்பகல் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.
இந்த விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை இப்பேராளர்கள் சந்தித்திருந்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுகள் வெளிப்படையாகவும், சுமூகமாகவும் ஆக்கபூர்வமான வகையிலும் நடைபெற்றன.
பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கான பிராந்தியத்தில் அனைவருக்கும் வளர்ச்சியும் பாதுகாப்பும் என்ற சாகர் கோட்பாடு மற்றும் அயலுறவுக்கு முதலிடம் கொள்கை ஆகியவற்றின் வழிகாட்டலின் அடிப்படையிலேயே முன்னொருபோதும் இல்லாதவகையில் இலங்கை மக்களுக்கான 3.5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகபெறுமதியான பொருளாதார, நிதி மற்றும் மனிதாபிமான ரீதியிலான உதவி அமைந்துள்ளதாக இவ்விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உடனான சந்திப்பின் போது, இந்திய இலங்கை இருதரப்பு உறவுகளின் அபிவிருத்திக்கான அவரது அர்ப்பணிப்பிற்காக இந்திய தரப்பினர் நன்றியினை தெரிவித்திருந்தனர். இலங்கையின் தற்போதய பொருளாதார நிலவரம் மற்றும் இந்தியாவால் வழங்கப்பட்டுவரும் உதவிகள் தொடர்பாகவும் பயனுள்ள கருத்துப்பரிமாற்றங்கள் இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதேவேளை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனான சந்திப்பின்போது, இலங்கையின் பொருளாதார நிலவரம் குறித்தும் பொருளாதார மீட்சிக்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் தொடர்பாகவும் ஆழமான கலந்துரையாடல்கள் இரு தரப்பினரிடையிலும் இடம்பெற்றிருந்தன. இவ்விடயத்தில், உட்கட்டமைப்பு, தொடர்பாடல்கள், புதுப்பிக்கத்தக்க சக்தி, மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுவாக்கல் உள்ளிட்ட விடயங்களில், இந்தியா இலங்கை இடையிலான முதலீட்டு பங்குடைமையை மேம்படுத்தலின் முக்கியத்துவம் குறித்தும் இச்சந்திப்பில் இருதரப்பினரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
இதேவேளை இலங்கை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்த்தன உடனும் இந்திய வெளியுறவு செயலாளர் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்தார். இச்சந்திப்பின்போது, கிட்டிய திகதி ஒன்றில் இருதரப்பு விஜயம் ஒன்றை மேற்கொள்வது தொடர்பாகவும் இராஜதந்திர ஈடுபாட்டினை வலுவாக்குவதில் மிகுந்த ஒன்றிணைவுடன் பணியாற்றுவதற்கும் அவர்கள் இணங்கியுள்ளனர்.
பயங்கரவாத ஒழிப்பு, கடல் பாதுகாப்பு, அனர்த்த முகாமைத்துவம், மனிதாபிமான உதவி, அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தக ரீதியான உறவுகள் மற்றும் இரு நாட்டு மக்களிடையிலான தொடர்புகள் உள்ளிட்ட விடயங்களில் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்களாலும் அரசாங்கத்தாலும் வழங்கப்பட்டுவரும் உறுதியான ஆதரவை இலங்கை தரப்பினர் மெச்சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பிரத்தியேக டிஜிட்டல் அடையாள முறைமை திட்டம் உட்பட 600 மில்லியன் அமெரிக்கடொலருக்கும் அதிகமான நன்கொடையுடன் இந்திய அரசாங்கத்தால் 5 பில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான அபிவிருத்தி உதவி வழங்கப்பட்டுள்ளமை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் கொள்ளப்படவேண்டிய விடயமாகும். இலங்கையின் சுற்றுலாத்துறைக்கும் பாரிய பங்களிப்பினை வழங்கும் நாடாக இந்தியா தொடர்ந்தும் உள்ளது.
பிராந்திய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட அமைப்புகளின் பல்வேறு மாநாடுகள் உட்பட்ட பல தொடர்ச்சியான சந்தர்ப்பங்களிலும் இவ்வருடம் மார்ச்சில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டங்களின்போதும் இந்தியாவால் வழங்கப்பட்ட ஆதரவினை இலங்கை தரப்பினர் வரவேற்றிருந்தனர்.
கொவிட் தொற்றுக்கு பின்னரான சூழலில் பொருளாதார நடவடிக்கைகளின் இயல்புநிலையினை உறுதிப்படுத்துவதற்கு ஏனைய நாடுகளும் இலங்கைக்கு உதவிசெய்யும் வகையில் இந்திய தலைமைத்துவம் மேற்கொண்டிருந்த ஊக்குவிப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் மேலும் சுட்டிக்காட்டியிருந்தனர்.