100,000 மெட்ரிக் தொன் எரிவாயு கொள்வனவுக்கான ஒப்பந்தத்தில் லிட்ரோ கைச்சாத்து!
100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் லிட்ரோ கேஸ் (Litro Gas) நிறுவனம் இன்று (30.06.2022) கைச்சாத்திட்டுள்ளது.
உலக வங்கியுடனான குறித்த ஒப்பந்தத்தில், லிட்ரோ நிறுவனம் சார்பில் அதன் தலைவர் முதித்த பீரிஸ் கைச்சாத்திட்டுள்ளார்.
இவ்வாறு பெறப்படவுள்ள 100,000 மெட்ரிக் தொன் எரிவாயுவின் பெறுமதி 90 மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும், அதற்கு உலக வங்கி 70 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதுடன், மீதமுள்ள 20 மில்லியன் அமெரிக்க டொலர் லிட்ரோ நிறுவனத்தால் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த எரிவாயு கையிருப்பு சுமார் நான்கு மாத காலத்திற்கு நாட்டின் பாவனைக்கு போதுமானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
எரிவாயு கையிருப்பில் 70% வீட்டுப்பாவனை நுகர்வுக்காக வழங்கப்படும் என்றும் இதில் 12.5 கிலோ கொண்ட 5 மில்லியன் கொள்கலன்களும், 5 கிலோ எடைகொண்ட ஒரு மில்லியன் கொள்கலன்கள் மற்றும் 2.3 கிலோ கொண்ட ஒரு மில்லியன் கொள்கலன்களையும் பெற்றுக் கொள்ள மதிப்பீடுகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், எஞ்சிய 30% எரிவாயு கையிருப்பு வணிக பயன்பாட்டிற்காக வழங்கப்படவுள்ளது.
மேலும், 20 மில்லியன் டொலர் செலவில் லிட்ரோ நிறுவனத்தால் பெறப்பட்ட 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவின் முதல் தொகுதி ஜூலை முதல் வாரத்தில் இலங்கையை வந்தடையும் என்றும், அதன் பின்னர் அவற்றை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒருபோதும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை
நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படாது என வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 25ஆம் திகதி வரை 47 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் எஸ்.டி.கொடிகார தெரிவித்துள்ளார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாடு, சம்பா, வெள்ளை அரிசி உள்ளிட்ட 25 ஆயிரம் மெட்ரிக்தொன் அரிசி இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எரிபொருள் நெருக்கடி காரணமாக அரிசி விநியோகம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பஸ் கட்டணங்கள் 22% ஆல் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு (01.07.2022) முதல் அமுலாகும் வகையில் பஸ் கட்டணங்கள் 22% ஆல் அதிகரிக்கப்படுவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, தற்போது ரூ. 32 ஆக உள்ள குறைந்தபட்சட பஸ் கட்டணம் ரூ. 40 ஆக அதிகரிக்கப்படுவதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.
இன்று (30) முற்பகல் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
வருடாந்தம் பஸ் கட்டணங்களை திருத்துவது தொடர்பான தேசிய கொள்கையின் அடிப்படையில் வருடாந்தம் ஜூலை 01ஆம் திகதி பஸ் கட்டணங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
ஆயினும் இவ்வருடத்தில் மாத்திரம் 4 தடவைகள் பஸ் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொண்டதாக அவர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த 4 தடவைகளும் எரிபொருள் விலையேற்றத்தை மாத்திரம் அடிப்படையில் பஸ் கட்டணங்கள் திருத்தம் செய்யப்பட்டதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஆயினும் வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தின் போது, எரிபொருள் அதிகரிப்பு உள்ளிட்ட 12 விடயங்கள் தொடர்பில் கவனத்தில் கொண்டு குறித்த கட்டண திருத்தத்திற்கான கணிப்பீட்டை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும், இதன்போது அவர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து ஒரு சில சங்கங்கள் பஸ் கட்டணங்களை 20% ஆக அதிகரிக்க வேண்டுமெனவும் ஒரு சில சங்கங்கள் அதனை 30%ஆக அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததாக அவர் தெரிவித்தார்.
மேற்படி 12 விடயங்களின் அடிப்படையில், 32.04% ஆக பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆயினும் கடந்த ஏப்ரல் மாதத்தில் பஸ் கட்டண அதிரிப்பு கணக்கெடுப்புக்கமைய 24.76% ஆக அதிகரிக்க வேண்டிய நிலையில், டொலர் விலை அதிகரிப்பு, வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்டவற்றின் விலை அதிகரிப்பு ஏனைய விடயங்களை கருத்திற் கொண்டு, அப்போதைய போக்குவரத்து அமைச்சரின் அனுமதியுடன் மேலதிகமாக 10.24% அதிகரிப்புடன் பஸ் கட்டணத்தை 35% ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்போது வருடாந்தம் ஜூலை 01ஆம் திகதி மேற்கொள்ளும் கட்டண அதிகரிப்பில் மேற்படி 10.24% கட்டணத்தை குறைப்பதாக சங்கங்கள் ஒத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அதற்கமைய, தற்போது கணக்கெடுக்கப்பட்ட பஸ் கட்டண அதிகரிப்புக்கமைய 32.04% இலிருந்து ஏப்ரல் மாதம் மேலதிகமாக அதிகரிக்ப்பட்ட 10.24% இனை கழிக்கும் போது அது 21.80% ஆக வருவதன் அடிப்படையில் அதனை கிட்டிய பெறுமானத்திற்கு மட்டிட்டு பஸ் கட்டணத்தை 22% ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், குறைந்தபட்ச கட்டணத்தை 22% ஆக அதிகரிக்கும்போது ரூ. 39.04 ஆக அமைகின்ற நிலையில், பிரயோக ரீதியாக அதனை ரூ. 40 ஆக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக நிலான் மிராண்டா தெரிவித்தார்.
இக்கட்டண அதிகரிப்பு, இன்று நள்ளிரவு முதல், அதாவது ஜூலை 01ஆம் திகதி முதல், தனியார் மற்றும் இ.போ.ச. பஸ்களுக்கு செல்லுபடியாகும் என்பதுடன், சாதாரண சேவை, அரைச் சொகுசு, சொகுசு, அதி சொகுசு சேவைகள் ஆகிய அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும் என அவர் இதன்போது தெரிவித்தார்.