Site icon சக்கரம்

இலங்கையில் உணவு உற்பத்தியை பெருக்குவதில் இந்தியா ஆர்வம்

-எஸ். சாரங்கன்

ந்தியா வெறுமனே உணவு மற்றும் எரிபொருள் நிவாரணங்களை மாத்திரம் இலங்கைக்கு வழங்கவில்லை. உணவுத் தட்டுப்பாடு இலங்கையில் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முன்னேற்பாடான உதவிகளை வழங்குவதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகின்றது.

அவ்வாறான உதவிகளில் ஒன்றுதான் இலங்கையில் நெற்செய்கையைப் பெருக்குவதற்காக இந்தியா வழங்குகின்ற யூரியா இரசாயனப் பசளை ஆகும். இலங்கையில் உணவுப் பற்றாக்குறை தோன்றுவதற்கான ஆபத்து உள்ளதாக நிபுணர்கள் பலரும் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். நாட்டில் உணவு உற்பத்தியை உடனடியாக அதிகரிப்பதன் மூலமே உணவுப் பற்றாக்குறையை வெற்றி கொள்ள முடியுமென்பதே அவர்களது ஆலோசனை ஆகும்.

எனவேதான் இலங்கைக்கு யூரியா பசளையை வழங்குவதன் மூலம் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு இந்தியா உதவி புரிவதற்கு முன்வந்துள்ளது. உணவு நிவாரணங்களை வழங்குவதென்பது மக்களின் உணவுத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கான உடனடித் தீர்வாக அமையலாம்.

ஆனால் அது நிரந்தரமான தீர்வாக அமைந்து விடப் போவதில்லை. இலங்கையில் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கான உதவிகளை வழங்குவதன் ஊடாகவே அம்மக்களின் உணவுப் பற்றாக்குறையைப் போக்குவதற்கான நிரந்தரத் தீர்வைக் காண முடியுமென்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவில் இருந்து அண்மையில் யூரியா பசளையின் முதற்கட்டத் தொகுதி இலங்கையை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.

உணவு தானிய தட்டுப்பாட்டில் தவித்து வருகிற இலங்கையின் உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கு ஏதுவாக 65 ஆயிரம் தொன் யூரியா உரம் வழங்குவதற்கு இந்தியா உறுதி அளித்திருந்தது. இந்த நிலையில், இந்தியா இலங்கைக்கு 44 ஆயிரம் தொன் யூரியா உரத்தை சமீபத்தில் வழங்கியிருந்தது. இந்த யூரியா பசளை அண்மையில் கொழும்பு வந்து சேர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நெற்செய்கையை துரிதமாக அதிகரிப்பதற்காக இந்தியாவிடம் இலங்கை கடன் உதவி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. உரத்தட்டுப்பாடு நிலவுவதால், உணவுப் பொருள் நெருக்கடி ஏற்படும் அபாயம் உள்ளதாக இலங்கை சுட்டிக் காட்டியிருந்தது. இதனையடுத்தே இலங்கைக்கு உடனடியாக யூரியாவை இந்தியா வழங்கியுள்ளது.

நெற்செய்கைக்காக 65,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவையென்பதே இலங்கை விடுத்திருந்த கோரிக்கையாகும். உடனடியாக உரம் இறக்குமதி செய்வதற்கு இந்தியாவிடம், இலங்கை கடன் உதவி கோரியிருந்தது. இந்நிலையில், உர இறக்குமதிக்காக இந்தியா 55 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடனை இலங்கைக்கு வழங்கி உள்ளதாகவும், இது இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க உதவும் என்றும் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.

இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கியான எக்ஸிம் வங்கிக்கும் இலங்கைக்கும் இடையில் இக்கடனுதவி குறித்த உடன்படிக்கை ஒன்று 10 ஜூன் 2022 இல் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் இலங்கை மற்றும் இந்தியாவின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கை அரசாங்கம் ‘யால’ பருவகால நெற்செய்கைக்குரிய யூரியா உரத்தினை பெற்றுக் கொள்வதற்கான ஆதரவை இந்த கடனுதவித் திட்டம் வழங்குகின்றது. முக்கியத்துவம் வாய்ந்த இத்தேவையினை அடிப்படையாகக் கொண்டு, உரக் கொள்வனவுக்கான சகல செயற்பாடுகளையும் துரிதமாக நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கமும் எக்ஸிம் வங்கியும் இணங்கியுள்ளமையால் இந்த உரத்தொகுதி இலங்கையை வந்தடைந்தது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வின் போது இலங்கை சார்பில் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேவேளை இக்கடனுதவி குறித்த சகல செயற்பாடுகளையும் மிகவும் துரிதமாக நிறைவேற்றியமையானது, இலங்கை மக்களின் நலன்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் முக்கியத்துவத்தினை பிரதிபலிப்பதாக இந்திய உயர் ஸ்தானிகர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘அயலுறவுக்கு முதலிடம்’ என்ற கொள்கையின் அடிப்படையிலும் இலங்கையின் சிறந்த நண்பனாகவும் பங்காளியாகவும், இந்தியா கடந்த சில மாதங்களில் இலங்கை மக்களுக்கு பல்வேறு பரிமாணங்களில் உதவிகளை வழங்கியுள்ளது. 3.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார உதவி முதல் உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள் மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை வழங்கி இலங்கையின் உணவு, சுகாதாரம் மற்றும் சக்தி பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு உதவிகளை வழங்குதல் வரையில் இந்த ஆதரவானது நீடித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இந்தியா தனது உரத் தேவையை ஓமான் நாட்டிலிருந்தே பெற்றுக் கொள்வதாகவும், அந்த வகையில் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளித்த உரம் ஓமான் நாட்டில் கொள்வனவு செய்யப்பட்டு கப்பல் மூலம் நேரடியாக இலங்கைக்கு வரவழைக்கப்படவுள்ளதாகவும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் இந்திய உரத்தின் முதல் தொகுதியானது இலங்கையை வந்தடைந்திருந்தது.

இரசாயனப் பசளை உதவி ஒருபுறமிருக்கையில் இலங்கையில் வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள கால்நடை வளர்ப்பு தொழில்துறையை மேம்படுத்தவும் உதவிகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சீதோஷ்ண நிலையைப் பொறுத்தவரை சூரியகாந்தி பயிர்ச்செய்கைக்கு உகந்த சூழல் காணப்படுவதாகவும், சூரிய காந்தி எண்ணெய்க்குச் சர்வதேச சந்தையில் பெரும் கிராக்கி இருப்பதால் அதனைப் பயிரிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்திய உதவிகளைப் பெற்றுத் தருவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்துள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தத்தளிக்கின்ற அண்டை நாடான இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறது. வெளிநாட்டுக் கடன்களில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு ஜனவரி முதல் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் (இந்திய நாணயப் பெறுமதியில் சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் உதவிகள் வழங்குவதற்கு உறுதி அளித்துள்ளது.

Exit mobile version