Site icon சக்கரம்

சீனக் கப்பல் Yuan Wang 5 அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகைதர அனுமதி

யுவான் வாங் 5 (Yuan Wang 5) எனும் சீன ஆராய்ச்சிக் கப்பலுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 16 – 22 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அமைச்சு வெளியிட்டுள்ள அறிவித்தலில்

கப்பலின் வருகை தொடர்பான ஆரம்ப அறிவிப்பு
2022 ஓகஸ்ட் 11-17 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருளை நிரப்பிக் கொள்ளும் நோக்கத்திற்காக சீனாவின் விஞ்ஞான ஆய்வுக் கப்பலான யுவான் வாங் 5 திட்டமிடப்பட்டுள்ளதாக 2022 ஜூன் 28ஆந் திகதிய இராஜதந்திரக் குறிப்பின் மூலம் கொழும்பில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம் அமைச்சிற்குத் தெரிவித்தது.

குறித்த துறைமுக விஜயத்தின் போது பணியாளர்களின் சுழற்சி எதுவும் நடைபெறாத நிலையில், சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் கோரிக்கைக்குத் தேவையான உதவி மற்றும் சாத்தியமான பரிசீலனையை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

‘இராஜதந்திர அனுமதி’ போன்ற கோரிக்கைகள் தொடர்பான ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைக்கு அமைவாக, பாதுகாப்பு அமைச்சு, இலங்கை கடற்படை மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு போன்ற அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் அனுமதிக்காக அமைச்சு மேற்படி கோரிக்கையை அறிவித்தது.

பாதுகாப்பு அமைச்சு, TRC அனுமதி
குறிப்பிட்ட காலப்பகுதியில் எரிபொருள் நிரப்புதல் நோக்கங்களுக்காக கப்பல் வருகை தருவதற்கான பாதுகாப்பு அனுமதி 2022 ஜூலை 07ஆந் திகதி பாதுகாப்பு அமைச்சிடமிருந்தும், குறுக்கீடு மற்றும் பாதுகாப்பற்ற அடிப்படைக்கு உட்பட்ட அதிர்வெண்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்கான தடையில்லாக் கடிதம் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடமிருந்தும் பெறப்பட்டதைத் தொடர்ந்து, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் நிரப்பும் நோக்கத்திற்காக விஜயம் செய்வதற்கான இராஜதந்திர அனுமதி, 2022 ஜூலை 12ஆந் திகதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சினால் சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு அனுப்பப்பட்டது.

நிபந்தனைகள்
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் தானியங்கி அடையாள தொகுதி (Automatic Identification System – AIS) இயங்கிய நிலையைப் பேணுதல் மற்றும் இலங்கை கடற்பரப்பில் எந்த விஞ்ஞான ஆய்வுகளும் மேற்கொள்ளப்படலாகாது போன்ற பாதுகாப்பு அமைச்சினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிபந்தனைகளும் இதன்போது முன்வைக்கப்பட்டது.

கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்க வேண்டுகோள்
அதனைத் தொடர்ந்து, அமைச்சிடம் எழுப்பப்பட்ட சில விடயங்களின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பான மேலதிக ஆலோசனைகள் மேற்கொள்ளும் வரை, அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான கப்பலின் விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம் 2022 ஓகஸ்ட் 05ஆந் திகதியிட்ட இராஜதந்திரக் குறிப்பின் மூலம் சீன மக்கள் குடியரசின் தூதரகத்தைக் கோரியது.

இந்த விடயத்தை நட்பு ரீதியாக, பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஆக்கபூர்வமான உரையாடலின் மூலமாக, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு, அரசுகளின் இறையாண்மை சமத்துவக் கொள்கைகளுக்கு ஏற்ப தீர்க்கும் நோக்கில், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் இராஜதந்திர வழிகள் மூலமான உயர் மட்ட ஆலோசனைகளில் அரசாங்கம் விரிவாக ஈடுபட்டுள்ளது. எழுப்பப்பட்ட கவலைகளின் அடிப்படையில், அமைச்சு இந்த விடயத்தில் ஆலோசனைகளுக்கு உதவக்கூடிய மேலதிக தகவல்களையும், ஆவணங்களையும் கோரியது.

சீனத் தூதரகத்தால் மீண்டும் கோரிக்கை
யுவான் வாங் 5 கப்பல் 2022 ஓகஸ்ட் 16ஆந் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், 16 முதல் 22 ஓகஸ்ட் 2022 வரையான காலப்பகுதியிலான புதிய திகதிகளில் எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக அனுமதி கோரி விண்ணப்பித்ததாகவும், இராஜதந்திரக் குறிப்பின் மூலம் சீன மக்கள் குடியரசின் தூதரகம் 2022 ஓகஸ்ட் 12ஆந் திகதி அமைச்சிற்குத் தெரிவித்தது.

அனைத்து ஆவணங்களையும் கருத்தில் கொண்டு, 2022 ஓகஸ்ட் 16 – 22 வரை கப்பல் வருகை தருவதற்கான அனுமதியை சீன மக்கள் குடியரசின் தூதரகத்திற்கு 2022 ஓகஸ்ட் 13ஆந் திகதி தெரிவிக்கப்பட்டது.

நாடுகளின் நட்புறவு முக்கியமானது
அனைத்து நாடுகளுடனுமான இலங்கையின் ஒத்துழைப்பு மற்றும் நட்புறவுக் கொள்கையை மீண்டும் வலியுறுத்துவதற்கு அமைச்சு விரும்புகின்றது. சுற்றுப்புறப் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இலங்கையின் சர்வதேசக் கடமைகளுக்கு அமைவாக, அனைத்து நாடுகளினதும் நியாயமான நலன்களைப் பாதுகாப்பதே அதன் நோக்கமாகும்.

குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில் கடுமையான பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள மற்றும் இலங்கை மக்களின் நலன்களை உறுதிப்படுத்தும் பல உள்நாட்டு செயன்முறைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அனைத்து நாடுகளினதும் ஆதரவு, ஒற்றுமை மற்றும் புரிந்துணர்வை அமைச்சு உயரி வகையில் பாராட்டுகின்றது.

Exit mobile version