Site icon சக்கரம்

நிலைபேறான அபிவிருத்தி கூட்டுறவு சட்டகத்தில் ஐக்கிய நாடுகள் சபையும் இலங்கையும் கையொப்பம்

– உத்தேசத் ஒதுக்கீடு 60 மில்லியன் டொலர்; ஏனைய வழிகளிலான 325 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமானது
– ஐ.நா. வின் முகவர் அமைப்புகள், நிதியங்கள், நிகழ்ச்சித்திட்டங்களின் செயற்பாடுகளுக்கு 2027 வரை வழிகாட்டும்

க்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி கூட்டுறவு சட்டகம் (United Nations Sustainable Development Cooperation Framework – UNSDCF) 2023 – 2027 ஆனது இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கை ஐக்கிய நாடுகளால் 17.08.2022 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள அனைத்து ஐ.நா முகவர் அமைப்புகளினதும் செயற்பாடுகளை வழிநடத்தும் சட்டகம் UNSDCF என்பதோடு, நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை அடைவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் ஒட்டுமொத்த நோக்கம் மற்றும் பங்களிப்பையும் இது ஒருங்கிணைக்கும். இக் கூட்டுறவு சட்டகமானது பொருளாதார வீழ்ச்சி மற்றும் அதனோடு இணைந்த கொவிட் 19 பாதிப்புகள் என்பவற்றிலிருந்து வேகமாக மீளெழுச்சி பெறுவதற்கான செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்காக, பொருளாதாரம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிப்பதற்கான ஒத்துழைப்பு, சமூக சேவைகள், நியாயமான தொழில், சமூக ஒருங்கிணைவு, மற்றும் இலங்கையிலுள்ள அனைத்து மக்களுக்கும் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு என்பவற்றுக்கு முன்னுரிமை அளிக்கும்.

UNSDCF ஆனது இலங்கை அரசாங்கத்தின் சார்பில் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் ஐக்கிய நாடுகளின் சார்பில் ஐநாவின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர் – ஹெம்டி ஆகியோரால் இணைந்து கையொப்பமிடப்பட்டது. இக் கூட்டுறவு சட்டகத்தில் இலங்கையிலுள்ள ஐநா முகவர் அமைப்புகள், நிதியங்கள் மற்றும் நிகழ்ச்சித்திட்டங்களின் தலைவர்களும் கையொப்பமிட்டனர். நிதி அமைச்சில் இடம்பெற்ற இக் கையொப்பமிடும் நிகழ்வில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திருமதி. அருணி விஜேவர்தன மற்றும் அவரோடு ஐநா அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லசலன் – காரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய திறைசேரி செயலாளரான மஹிந்த சிறிவர்தன, “அனைவருக்கும் பொதுவான முன்னுரிமைகளை சூழ சர்வதேச சமூகத்தைக் ஒன்றிணைக்கக்கூடிய பன்முகத் தீர்வுகளின் முக்கியத்துவத்தையே தற்போதைய உலகளாவிய சவால்கள் வெளிப்படுத்துகின்றன. இலங்கை மக்களின் நிலைபேறான மற்றும் உட்சேர்ப்பான அபிவிருத்தியை நோக்கி செயலாற்றுகையில் இலங்கை ஐக்கிய நாடுகளின் இந்த கூட்டுறவு சட்டகமானது முக்கிய அங்கமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான ஐநா வதிவிட ஒருங்கினைப்பாளர் ஹனா சிங்கர் – ஹெம்டி, “இந்த கூட்டுறவு சட்டகமானது தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகள், 2030 நிகழ்ச்சி நிரல் மற்றும் ஐநா சாசனத்தின் கொள்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளன. UNSDCF ஆனது ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள மற்றும் ஒன்றையொன்று வலுவூட்டுகின்ற நான்கு மூலோபாய முன்னுரிமைகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. இதன்போது ஐநாவின் முறைமையானது இலங்கையை உருமாற்றுகின்ற மற்றும் துரிதமான ஒரு வளர்ச்சியை அடைவதற்காக தனது தேர்ச்சியை ஒருங்கிணைக்கும். இந்த மூலோபாய முன்னுரிமைகளில் உட்சேர்ப்பான நியாயமான மனிதவள அபிவிருத்தி மற்றும் நல்வாழ்வு, மீளெழக்கூடிய மற்றும் பசுமையான மீட்சி மற்றும் பகிரப்பட்ட சௌபாக்கியம் மற்றும் நிலைபேறான சுற்றுச்சூழலுக்கான வளர்ச்சி, சமூக ஒருங்கிணைவு மற்றும் உட்சேர்ப்பான ஆட்சி மற்றும் நீதி, மற்றும் பாலின

சமத்துவம் என்பவற்றை உள்ளடக்கியுள்ளன. நிச்சயமாக, எமது செயற்பாடுகள் பொருளாதார வீழ்ச்சி மற்றும் கொவிட் 19 பாதிப்பு என்பவற்றிலிருந்து மீட்சி பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கும் விதமான இணைந்த பங்களிப்பைக் கொண்டமைந்திருக்கும்” என்று கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ஐநா முறைமையின் நிகழ்ச்சித்திட்டங்கள் மனித உரிமைகள், பாரபட்சமின்மை மற்றும் “எந்த ஒருவரும் புறந்தள்ளப்படவில்லை ” என்பதனை உறுதி செய்தல் ஆகிய கொள்கையில் நிலைநிறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

”2023 – 2027 அபிவிருத்தி கூட்டுறவு சட்டகமானது இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளைப் பிரதிபலிக்கின்ற அதேவேளை நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை சாத்தியமாக்குவதற்காக ஐநாவின் நாட்டுக்கான அணியுடன் இணைந்து செயற்படுகின்றது. பொருளாதார மற்றும் சமூக விடயங்களில் மகத்தான மாற்றங்கள் நடைமுறைக்கு வந்த இலங்கையின் முக்கியமான ஒரு தருணத்தில் இது நிறைவுக்கு வந்தது. தனது அபிவிருத்தி நடவடிக்கைகளின் செயலாக்கத்துக்கான தேசிய மட்டத்திலான ஒருங்கிணைப்புக்கு இந்த சட்டகமானது ஐநா முறைமையின் முக்கியமான ஒரு மாற்றமாக இருக்கும்” என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திருமதி அருணி விஜேவர்தன தெரிவித்தார்.

UNSDCF ஆனது, அதன் 5 வருட நடைமுறைப்படுத்தல் காலப்பகுதியில் அடிப்படை பாதீட்டு ஒதுக்கமான உத்தேசத் தொகை 60 மில்லியன் அமெரிக்க டொலர்களால் நிதியளிக்கப்படும். இது ஏனைய வழிமுறைகளால் கிடைக்கப்பெறும் கிட்டத்தட்ட 325 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேலதிகமானதாகும்.

Exit mobile version