Site icon சக்கரம்

‘கோட்டா கோ கம’ பகுதியை சீர் செய்ய ரூ. 49 இலட்சம் செலவு மதிப்பீடு

காலி முகத்திடலுக்கு அருகில் ‘கோட்டா கோ கம’ (GOTA GO GAMA) என்ற பெயரில் ஸ்தாபிக்கப்பட்ட போராட்டக் களத்தை சீர் செய்ய சுமார் 49 இலட்சம் ரூபா அவசியமென மதிப்பிடப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

காலி முகத் திடலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீட்டு அறிக்கையை பெறுவதற்கு தற்போது நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அதிகார சபை கூறுகிறது.

அந்தக் காணியின் மீளமைப்பு மற்றும் அடிப்படைப் பணிகளுக்காக 1.5 இலட்சம் ரூபாவும் புற் தரையை மீள கட்டமைப்பதற்கு 47.5 இலட்சம் ரூபாவும் செலவிட வேண்டியுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட மதிப்பீட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காலி முகத் திடல் மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு செயற்பாட்டாளர்களிடம் இருந்து நட்டஈடு பெற்றுக்கொடுக்க தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அண்மையில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரி சுமார் 3 மாதங்களாக காலி முகத்திடலைச் சுற்றியுள்ள பகுதியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் தங்கியிருந்தனர். கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வெளியேறியதையடுத்து, செயற்பாட்டாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் அறிவித்ததுடன், அதன்படி அவர்கள் அவ்விடத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கியிருந்த காலி முகத் திடல் பொதுச் சொத்தாகும். 1971ஆம் ஆண்டு 41ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தின் 3(1) பிரிவின் கீழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டவிரோதமான கட்டமைப்புகளை ஏற்படுத்தியிருந்த காலி முகத்திடல் பகுதியானது கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமானது. 1978/09/30 ஆம் திகதிய 41 ஆம் இலக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் விசேட வர்த்தமானிப் படி இப்பகுதி நகர அபிவிருத்திப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்திப் பகுதியில் ஏதேனும் அபிவிருத்தி நடவடிக்கை அல்லது தற்காலிக நிர்மாணங்கள் மேற்கொள்ளப்பட்டால், 1982ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபை (திருத்த) சட்டத்தின் பிரிவு 8(A)1 இன் படி அனுமதி பெறப்பட வேண்டும். ஆனால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து முறையற்ற ஒன்றுகூடலை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த நிலப்பரப்பில் அனுமதியின்றி ஏராளமான நிர்மாணிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால், பொதுமக்கள் அப்பகுதியை சுதந்திரமாக பயன்படுத்துவதற்கான உரிமையும் தடைபட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நகர அபிவிருத்தி அதிகார சட்டத்தை மீறுவதாகும். அதன்படி, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version