கியூபாவின் புரட்சி நாயகரான சே குவேராவின் மகன் கமிலோ குவேரா (Camilo Guevara) ஓகஸ்ட் 29ந் திகதி காலமானார். அவருக்கு வயது 60. இதனை கியூபா அரசு தரப்பு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
அவர் வெனிசுலாவுக்கு பயணம் மேற்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அலெய்டா மார்ச் (Aleida March) மற்றும் சே குவேரா தம்பதியருக்கு பிறந்த 4 பிள்ளைகளில் இவர் ஒருவர். இவர் அவர்களுக்கு பிறந்த மூன்றாவது மகன் ஆவார். ஹவானாவில் சே குவேரா ஆய்வு மையத்தின் இயக்குனராக அவர் பணியாற்றி வந்துள்ளார்.
சே குவேரா தொடர்பான ஆவணங்கள் மற்றும் முக்கிய பொருட்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதை கமிலோ குவேரா தனது தாயார் அலெய்டா மார்ச் உடன் இணைந்து கவனித்து வந்துள்ளார். பெரும்பாலும் இவர் பொது வெளியில் நடைபெறும் நிகழ்வுகளில் அதிகம் கலந்து கொள்ளாமல் இருந்துள்ளார். சில நேரங்களில் அவரது தந்தையை கவுரவிக்கும் நிகழ்வுகளில் மட்டுமே அவர் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு மகள் உள்ளார்.
கியூபா நாட்டின் அதிபர் மிகேல் டயஸ்-கானெல் (Miguel Díaz-Canel), கமிலோவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். “ஆழ்ந்த வேதனையுடன் சேவின் மகனும், அவரது கருத்துகளை முன்னெடுத்து சென்றவருமான கமிலோ நம்மை விட்டு பிரிந்துவிட்டார்” என ட்வீட் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.