Site icon சக்கரம்

யார் இந்தப் பொன்னியின் செல்வன்கள்?

– அ.மார்க்ஸ்

பொன்னியின் செல்வன்’ நாவல் மற்றும் அந்தத் தொடர் நாவலை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி பற்றி அந்தப் பெயரில் திரைப்படம் தயாரிப்பவர்கள், அதற்கு வசனம் எழுதியுள்ள ஜெயமோகன் வரை ஆய் ஊய்ன்னு அடிக்கிற லூட்டி தாங்க முடியவில்லை. இன்று என்னிடம் ஒருவர், “சார்! இந்த ராஜ ராஜ சோழன்தான் அந்தக் காலத்துல நாகப்பட்டுணத்துல சூடாமணி விகாரைன்னு புத்தருக்கு கோயில் கட்டிக் கொடுத்தாராமே…” எனப் படு சீரியசாகக் கேட்டார்.

ஏதோ ராஜராஜ சோழன் பௌத்தத்தை எல்லாம் ஆதரித்தவன் போலவும், மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக அவன் இப்படி நாகப்பட்டிணத்தில் ”சூடாமணி விகாரை” என பௌத்த வழிபாட்டுத்தலம் ஒன்றைக் கட்டி பௌத்தர்களுக்காக அளித்ததாகவும் சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்களில் ஒருவர் ஒரு கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். ராஜராஜன் மத ஒற்றுமைக்காக வாழ்ந்தவன் எனப் புகழும் நோக்கத்துடன் எழுதப்பட்ட கட்டுரை அது. ஒரு இணைய இதழில் அது வெளிவந்தது.

“அந்த ராஜராஜ சோழன்தானே இலங்கைத்தீவின் மீது படை எடுத்து அனுராதபுரம், பொலனறுவை முதலான இடங்களில் உள்ள பௌத்தச் சின்னங்களை எல்லாம் அழித்தவன். எரியூட்டியவன். அழித்த நகரங்களுக்கு “ஜனநாதமங்கலம்” எனத் தன் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொண்டவன். கொள்ளை அடித்து அள்ளி வந்தவன். இன்றளவும் புத்தரை வணங்குபவர்களால் அஞ்சப்படுபவன். வெறுக்கப்படுபவன். அதெப்படி இத்தனை பெருந்தன்மையுடன் பௌத்தர்களுக்கு அவன் ஆலயம் கட்டித் தந்தான் எனச் சொல்கிறீர்கள்?” -என நான் அன்று ஒரு மறுப்பைப் பதிவு செய்தது நினைவுக்கு வருகிறது.

சரி. ராஜராஜனின் ஆட்சியில் நாகையில் அன்று இந்தச் சூடாமணி விகாரம் கட்டப்பட்டதன் பின்னணியாக இருந்த வரலாற்று உண்மைகளைக் காணலாம். சீனத்துடன் அப்போது சோழ மன்னர்களுக்கு மிகப் பெரிய அளவில் வணிகத் தொடர்பு இருந்தது. பௌத்த சீனத்தின் நன்கொடை மற்றும் நல்லெண்ண நோக்கில் எழுப்பபட்டதுதான் நாகை விஹாரை. நாகை அன்று அவர்களுக்கு ஒரு முக்கியமான துறைமுகம். சற்று வெளிப்படையாகச் சொல்வதானால் சூடாமணி விகாரம் என்பது சோழனின் பெருந்தன்மையின் விளைவல்ல. முழுமையான வணிகத் தந்திரம் ! ராஜராஜன் பௌத்த வழிபாட்டுத் தலம் கட்டித் தந்திருப்பதெல்லாம் சமையப் பொறையின் அடையாளம் அல்ல. அது அன்றைய காலச் சூழலின் விளைவு. சீனர்களுடனான வணிகம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது

ராஜராஜனின் புகழ் பாடுவது என்பதில் இந்துத்துவர்களும் தீவிரத் தமிழ்த் தேசியர்களும் பல நேரங்களில் கைகோர்த்து நிற்பதைக் காணலாம்.

இலங்கையர்கள் ஐந்தாம் மகிந்தனின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ் வெந்து கிடந்த நேரத்தில் அவர்களை அவனிடமிருந்து விடுவித்த மகா மனிதநேயப் பணியைச் செய்தவன் ராஜராஜன் எனச் சில ஆண்டுகள் முன் இங்கொரு கதையைத் தமிழ்த் தேசியர்கள் முன்வைத்தனர்.

எல்லாப் படை எடுப்பாளர்களும் தாங்கள் அடித்த கொள்ளை, அதன்மூலம் பெற்ற அரசியல் பலன்கள் ஆகியவற்றை மறைக்க வழக்கமாகச் சொல்லும் கதைதான் இது. அந்தக் கால படை எடுப்பாளர்கள் முதல் இந்தக் கால புஷ், ட்ரம்ப் வரை பயன்படுத்திய / பயன்படுத்துகிற கொடூரமான தந்திரம்தான் இது. சதாம் உசேனிடமிருந்து ஈராக் மக்களைக் காப்பாற்றப் படை எடுத்ததாகத்தானே புஷ்சும் சொல்லிக் கொண்டார். இட்லர், முசோலினி, ராஜபக்க்ஷே யார்தான் இதற்கு விதிவிலக்கு? இலங்கைத் தீவையும் பொலனறுவை, அநுராதபுரம் முதலான பௌத்த புண்ணியத் தலங்களையும் அழித்து அவற்றுக்குத் தன் பெயரில் ’ஜனநாத மங்கலம்’ எனப் பெயரிட்டு ஒரு தீராத சிங்கள – தமிழ்ப் பகைக்கு வித்திட்ட ஒரு ஆக்ரமிப்பாளன்தான் ராஜராஜன்.

”தேவரடியார்கள் மரியாதைக்குரியவர்கள். அவர்களை தேவதாசிகளுடன் ஒப்பிடக் கூடாது” என இன்று ராஜராஜ சேவையில் இறங்கியுள்ள இந்த ராஜராஜன் திரைப்படத் தயாரிப்பாளர் அதன் வசனகர்த்தா எல்லாம் இப்படித்தான் சொல்வார்கள்.

தான் இப்படியானப் படைஎடுப்புகளில் கொண்டுவந்த பெண்களை ராஜராஜன் வழியில் வந்த குலோத்துங்கன் தனது அந்தப்புரத்திற்குக் கொண்டு சென்றதை எதிர்த்து அக்கால மக்களே கிளர்ச்சி செய்ததை எல்லாம் இன்றைய ராஜராஜப் புகழ்பாடிகள் பேசமாட்டார்கள். நானும் வேல்சாமியும் சுமார் முப்பதாண்டுகள் முன் எழுதிய கட்டுரை ஒன்றில் இத்னை ஆதாரத்துடன் பதிவு செய்துள்ளோம். குலோத்துங்கன் செய்ததற்கு ராஜராஜன் என்ன செய்வான் என மகா புத்திசாலித்தனமாக இன்றைய ராஜராஜ வழிபாட்டாளர்கள் கேட்கலாம். யார் செய்தார்கள் என்பதல்ல இங்கு பிரச்சினை.

தேவரடியார் எனும் நிறுவனம் எங்கு கொண்டுபோய் விடும் என்பதுதான் நாம் இதன் மூலம் புரிந்துகொள்ள வேண்டியது. அப்படி மன்னர்களின் போகங்களுக்குப் பலியானவர்கள்தான் மக்கள். தேவதாசிப் பாரம்பரியத்திற்கு எதிராக இங்கே தமிழகத்தில் சுயமரியாதை இயக்கம் போராடியபோது அந்தக் கேவலத்தைக் காப்பற்ற முனைந்த சத்திய மூர்த்தி அய்யர், ராஜகோபாலாச்சாரி ஆகியோரின் குரலில் இன்று பேசுகிறவர்கள்தான் இன்றைய இந்த ராஜராஜன் புகழ்பாடிகள்.

தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியது ராஜராஜன்தான் என்பதைப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின் 1907ல் முதன் முதலாகக் “கண்டுபிடித்துச் “ சொன்னது வெள்ளைக்கார அறிஞர்கள் தான். இடைப்பட்ட ஆயிரம் ஆண்டு காலத்தில் ராஜராஜன்தான் அந்தக் கோவிலைக் கட்டினான் என எந்தத் தமிழ் நூல்களிலும் பதிவில்லையே ஏன்? ஏன் ராஜராஜனைத் தமிழ் மக்கள் மறந்தனர்? அல்லது புறக்கணித்தனர்?

அவ்வளவு ஏன், அத்தனை தமிழ் நூல்களையும் அழிவிலிருந்து காப்பாற்றினாரே உ.வே.சா அவருக்கு 1907 வரை ராஜராஜன் யார் என்றே தெரியாதே?

தலித் ஒருவரின் பெயரை கல்வெட்டில் பொறித்தான் ராஜராஜன் என கூறுகிறார்கள். முதல் முதலில் தலித்களுக்குத் தனிச் சுடுகாடு கட்டியதும் அவன்தானே! இல்லையா? கராஷிமா, சுப்பராயலு முதலானோரின் சோழர்கால ஆய்வுகளைக் கருத்தூன்றிப் படித்திருந்தால் இதை எல்லாம் இவர்கள் அறிந்திருக்க்க் கூடும்.

இப்படி இன்று மன்னர்களின் புகழ்பாடிச் சேவகம் செய்யும் கேவலம் தமிழகத்தை ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு செல்கிறது. இதெல்லாம் தமிழனின் பெருமையல்ல. வீழ்ச்சி.

(இது ஒரு பொழுதுபோக்குத் திரைப்படம் என்பதைத் தாண்டி ஏதோ தமிழகத்தின் பண்டைப் பெருமை என்கிற ரீதியில் முன்வைக்கப்படுவதால்தான் இதை எல்லாம் இங்கே சொல்ல வேண்டி உள்ளது. சொல்ல இன்னும் சில செய்திகள் உள்ளன)

Exit mobile version