Site icon சக்கரம்

நூற்றாண்டு காணும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து!!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் நூற்றாண்டு விழாவையொட்டி இணைய வழி கருத்தரங்கம் ஒன்று மே 27 அன்று நடைபெற்றது. இதையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங்கிற்கு சகோதர வாழ்த்துச் செய்தி அனுப்பினார். அது இணையத்தின் மூலமாககட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.அருண்குமாரால் வாசிக்கப்பட்டது. வாழ்த்துச் செய்தியின் முழு விவரம் வருமாறு…

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதன் நூற்றாண்டு விழாக் கொண்டாடப்படும் இத்தருணத்தில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நான் என்னுடைய இதயப்பூர்வமான சகோதரத்துவ கம்யூனிஸ்ட் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பாக அப்போது இந்தியாவை இரக்கமற்ற முறையில் பிரிட்டிஷ் காலனிய ஆட்சி சுரண்டிக்கொண்டிருந்த சமயத்தில்,  இந்தியப் பிரதேசத்திற்கு வெளியே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது.அதிலிருந்து, இந்த நூற்றாண்டு முழுவதும், சகோதரத்துவ கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ற முறையில் நம்இரு கட்சிகளுக்கும் இடையே, ஏற்ற இறக்கங்களுடன், சகோதரத்துவ கம்யூனிஸ்ட் உறவுகள் மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கின்றன.

மார்க்சிய – லெனினியம் – ஒரு ஆக்கப்பூர்வ அறிவியல்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), மார்க்சியம்-லெனினியம் என்பது ஓர் ஆக்கப்பூர்வ அறிவியல் (creative science) என்று அறுதியிட்டுக் கூறுவதைத் தொடர்கிறது. இது முற்றிலும் வறட்டுத்தனத்திற்கு எதிரானது. இதனை எல்லாக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சூத்திரங்களின் ஒரு தொகுப்பாக எப்போதுமே குறைத்து மதிப்பிட முடியாது. ஓர் ஆக்கப்பூர்வமான அறிவியல் என்ற முறையில், அதன் புரட்சிகரமான கொள்கைகளையும், மக்களை அடிமைத்தளைகளிலிருந்து விடுவிப்பதற்கான நோக்கங்களையும் உறுதியாகப் பின்பற்றும் அதேசமயத்தில், அது ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு குறிப்பிட்டநாட்டில் நிலவும் துல்லியமான நிலைமைகளுக்குத் தன்னை தகவமைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. “துல்லியமான நிலைமைகள் குறித்து, துல்லியமான ஆய்வு என்பதே இயக்கவியலின் உயிரோட்டமான சாராம்சம்” (“concrete analysis of concrete conditions is the living essence of dialectics”)  என்று தோழர் லெனின் சொல்லியிருக்கிறார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு நூற்றாண்டு வரலாறு, மார்க்சிய – லெனினியம் என்ற ஆக்கப்பூர்வ அறிவியலை அது சீனத்தில் இருந்த துல்லியமான நிலைமைகளுக்கு எவ்விதத்தில் தகவமைத்துக்கொண்டது என்பதற்கான ஒரு சாட்சியமாகும். ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய உத்வேகத்திலிருந்தும், அனுபவத்திலிருந்தும் படிப்பினைகளைக் கற்றுக்கொண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி தங்கள் நாட்டில் தேசிய விடுதலைப் போராட்டத்தின் தலைமையை மார்க்சியத் தத்துவத்தையும், நடைமுறையையும் புதுமையான பாதையில் முன்னெடுத்துச் சென்று வெற்றிகரமாக நிறைவேற்றியது. இது இறுதியாக சோசலிச சீனம் – சீன மக்கள் குடியரசு – நிறுவப்படுவதற்கு இட்டுச் சென்றது. இத்தகைய நீண்ட வரலாற்றினூடே, பல்வேறு சோதனைகளை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்கொண்டு அவற்றை வெற்றிகரமாக கடந்து முன்னேறி வந்திருக்கிறது. தான் நடந்து வந்த பாதையில் மேற்கொள்ளப்பட்ட தவறுகள் பல அடையாளம் காணப்பட்டு, சரிசெய்யப்பட்டு, தற்போது சோசலிச சீனத்தை உருக்கு போன்று ஒருமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. சமூகக் கொந்தளிப்பு ஏற்படக்கூடிய விதத்தில் கசப்பான போராட்டங்கள் பல நடந்தன. எனினும் அவற்றையெல்லாம் சரிசெய்துகொண்டு, அதுபோன்ற தவறுகள் மீண்டும் ஏற்படாது என்பதை உத்தரவாதப்படுத்திக்கொண்டு சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிகரமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

தவறுகள் அடையாளம் காணப்பட்டு, சரிசெய்யப்பட்டு, அதுபோன்ற தவறுகள் மீண்டும் நிகழாவண்ணம் உறுதிசெய்யப்பட்ட நிலைமைகளை உருவாக்குவதே எதிர்காலத்தை நோக்கி விடுதலைக்கான மக்கள் இயக்கங்களை முன்னெடுத்துச்செல்வதற்கான சாராம்சமாக இருக்கும் என்பதை சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

துணிச்சலான சீர்திருத்தங்கள்
இத்தகைய புதிய கண்டுபிடிப்புகளின் மூலமாகவும், சுய-விமர்சன மதிப்பீடுகள் மற்றும் சரிசெய்தல் மூலமாகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 1978இல் துணிச்சலான சீர்திருத்தங்களின் பாதையில் இறங்கியது. இவற்றின்மகத்தான முடிவுகள் இன்றைய தினம் உலகில் உள்ள ஒவ்வொருவராலும் பார்க்கப்பட்டு, ஒட்டுமொத்த உலகத்தையும்  புருவத்தை உயர்த்தி ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்ட சீர்திருத்தங்கள், மார்க்சிய – லெனினியத்தின் புரட்சிகர சித்தாந்தங்களைப் பின்பற்றுவோருக்கு வழிகாட்டும் என்றும், சோசலிசத்தை பலவீனப்படுத்தி, அழித்திட வேண்டும் என்பதற்காக கிடைத்திடும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திடும் சோசலிசத்தின் எதிரிகளுக்கு எவ்வித சந்தர்ப்பத்தையும் அளிக்காது என்றும் நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சீர்திருத்தங்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொண்டுவந்த கடந்த பல பத்தாண்டுகளில், மக்கள் சீனக் குடியரசைக் குறி வைத்து சோசலிசத்தினை அரித்துவீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் ஏகாதிபத்தியத்தால் மேற்கொள்ளப்பட்ட  அனைத்து தாக்குதல்களையும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றிகரமாக எதிர்த்து முறியடித்தது. கொரோனா வைரஸ் தொற்றுக் காலம் முடிவடைந்த பின்னர் ஏகாதிபத்திய சக்திகள் தங்கள் நலனுக்கேற்ற விதத்தில் உலகை மாற்றியமைத்திட முயலும்போது இவர்களுக்கு எதிரான வர்க்கப் போராட்டங்கள் தொடரும். இத்தகைய ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளை முறியடித்திட சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் அது வெற்றி பெற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

தத்தளிக்கும் முதலாளித்துவம்
இயல்பாகவே மனிதாபிமானமற்ற முதலாளித்துவம், மனிதகுல சுரண்டலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க முடியாது என்றும்,  இதனுடைய நெருக்கடிகளிலிருந்து அதனால் வெளிவரமுடியாது என்றும் கூறிவந்த மார்க்சிய-லெனினியப் புரிதலை இன்றைய உலகம் உறுதிப்படுத்தி இருக்கிறது.  அதன் நோக்கமே கொள்ளை லாபம் ஈட்டுவதுதான். எனவே அது எப்போதும் தன் சுரண்டலைத் தீவிரப்படுத்திக்கொண்டே இருக்கும். முதலாளித்துவம், தான் உருவாக்கிய பொருளாதார நெருக்கடியிலிருந்து, குறிப்பாக  2008க்குப்பின் அதனால் உருவான பொருளாதாரமந்தத்திற்குப் பின்னர்,  அதனால் வெளிவரமுடியாமல் திண்டாடிக் கொண்டிருப்பதை 21ஆம் நூற்றாண்டின் முதல் இருபதாண்டுகள் காட்டியிருக்கின்றன.  உலகப் பொருளாதாரம் பொருளாதார மந்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பெருந்தொற்று வந்து, ஏற்கனவே தத்தளித்துக் கொண்டிருந்த உலகப் பொருளாதாரத்தை மேலும் பேரழிவுக்கு இட்டுச் சென்றது. சர்வதேச நிதி மூலதனத்தால் தலைமை தாங்கப்படும் ஏகாதிபத்திய நவீன தாராளமய உலகமயம் இதற்குத் தீர்வு அளிக்கமுடியாமல், தன் ஒட்டுமொத்த திவால் தன்மையைக் காட்டிக்கொண்டிருக் கிறது.

மக்கள் சீனக் குடியரசு, கொரோனா வைரஸ்தொற்றைச் சமாளித்துக் கட்டுப்படுத்தி, சமூகத்தையும் பொருளாதாரத்தையும் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலமாக மீண்டும் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் சென்று உலகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து, முதலாளித்துவ அமைப்பு முறையைவிட சோசலிச அமைப்பு முறையே உன்னதமானது என்று நிலை நிறுத்தி உலகத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது.

வறுமை முற்றாக ஒழிப்பு
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்முயற்சியின் காரணமாகத்தான் சீனா 2020இல் வறுமையை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடிந்தது; ஒவ்வோராண்டும் பல லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கி வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைத்தது, தன்னுடைய சுகாதாரப் பாதுகாப்பு அமைப்புமுறையை வலுப்படுத்தியிருக்கிறது. உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளையும், கல்வி நிறுவனங்களையும் கட்டி எழுப்பியிருக்கிறது. சீனா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்களின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக செய்திட்ட முதலீடுகளிலிருந்து இப்போது பலன்களை அறுவடை செய்துகொண்டிருக்கிறது. சமத்துவமின்மையையும் ஊழலையும் ஒழித்துக்கட்ட நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியிருப்பதும் மிகவும் பாராட்டத் தக்கதாகும்.

நவீன சோசலிச நாடாக மலர…
உங்களுடைய வெற்றிகளைப் பாராட்டும் அதே சமயத்தில், நீங்கள் உங்கள் தவறுகளை சுயவிமர்சன ரீதியாகத் திருத்திக் கொண்டு முன்னேறியுள்ள இந்த தருணத்தில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தன்னுடைய புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதுடன், 2049வாக்கில் ஒரு ‘நவீன சோசலிச நாடாக மிகவும் செழுமையான, வலிமையான, ஜனநாயக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முன்னேறிய நாடாகவும் நல்லிணக்கமுள்ள நாடாகவும்’ கட்டி எழுப்புவதற்கான உங்களுடைய லட்சியத்தை எய்துவதற்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையின்கீழ், மக்கள்சீனக் குடியரசு, தெற்காசியா மற்றும் உலகின் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் பங்களிப்புகளைச் செய்துகொண்டு, அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவுகளை ஒருங்கிணைத்துக்கொண்டு, ஓர் அமைதியான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்றும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நம்புகிறது.  

வரவிருக்கும் காலங்களில் நம் இருகட்சிகளுக்கும் இடையேயான சகோதரத்துவ கம்யூனிஸ்ட் உறவுகள் நம் நாடுகளின் மக்களுக்கும், அரசாங்கங்களுக்கும் இடையே உறவுகளை மேம்படுத்துவதற்குப் பங்களிப்புகளைச் செய்து கொண்டு வலுப்படுத்துவது தொடரும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நம்புகிறது.

மார்க்சியம் – லெனினியம் நீடூழி வாழ்க!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நீடூழி வாழ்க!

ஏகாதிபத்தியம் ஒழிக!

தமிழில்: ச.வீரமணி

Exit mobile version