பிரான்ஸ் விமான நிலையத்தில் 18 ஆண்டுகளாக தங்கி இருந்த, சேர் அல்பிரட் மெஹ்ரான் என்று அறியப்பட்ட ஈரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரீமி நஸ்செரி (Mehran karimi nasseri) 13.11.2022 அன்று உயிரிழந்தார்.
ஈரான் நாட்டின் ஒரு பகுதியாக இருந்த சுலைமான் (Masjed Soleiman) நகரில் ஈரானிய தந்தை மற்றும் பிரிட்டன் (ஸ்கொட்லாந்து) தாய்க்கு 1945-ம் ஆண்டில் பிறந்தவர் மெஹ்ரான் கரீமி நஸ்செரி. இங்கிலாந்து நாட்டுக்கு மேல்படிப்பு படிப்பதற்காக 1973-ம் ஆண்டு சென்றார். அவர் சொந்த நாட்டுக்கு திரும்பி வந்த பின்பு, ஈரானின் கடைசி மன்னரான ஷாவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டு, பாஸ்போர்ட் இன்றி 1977 ஆம் ஆண்டு நாடு கடத்தப்பட்டார்.
நாடு கட்த்தப்பட்ட மெஹ்ரான் கரீமி நஸ்செரி, அரசியல் அகதியாக பிரிட்டனில் குடியுரிமை வேண்டி விண்ணப்பித்திருந்தார். மெஹ்ரானி தாயார் ஸ்கொட்லாந்தை சேர்ந்தவர் என்றாலும், அவருக்கு குடியுரிமை வழங்க பிரிட்டன் அரசு மறுத்துவிட்டது. இந்த நிலையில் அகதிக்கான உரிய ஆவணம் இல்லாததால் 1988-ம் ஆண்டு பிரான்ஸில் உள்ள ஆகஸ்டில் பாரீஸ் நகரில், சார்லஸ் டி கால்லே (Paris-Charles de Gaulle) விமான நிலையத்தில் மெஹ்ரான் தங்கத் தொடங்கினார். தான் ஒரு நாடற்றவர் என்பதை அறிவித்து அங்கிருந்த டெர்மினல் (Terminal) பகுதியில் தனது பெட்டி, படுக்கைகளுடன் மெஹ்ரான் தங்கத் தொடங்கினார். 1988 ஆம் ஆண்டு முதல் 2006 வரை மெஹ்ரான் கரீமி நஸ்செரி அங்குதான் தங்கி இருந்தார்.
தனது ஒவ்வொரு நாளையும் புத்தக வாசிப்பிலும், எழுதுவதிலும் மெஹ்ரான் செலவிட்டு வந்தார். இந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக அவர் விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டு சில காலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். எனினும் சில மாதங்களாக மெஹ்ரான் சார்லஸ் டி கால்லே டெர்மினல் 2F பகுதியில் மீண்டும் தங்க தொடங்கினார். இந்த நிலையில் தனது 77 வயதில் மாரடைப்புக் காரணமாக மெஹ்ரான் விமான நிலையத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.
இவரது வாழ்க்கையை மையமாக வைத்துத்தான் ‘தி டெர்மினல்’ (The Terminal) படத்தை இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) 2004 ஆம் ஆண்டு உருவாக்கி இருந்தார். இப்படத்தில் மெஹ்ரான் கரீமி நஸ்செரி கதாபாத்திரத்தில் ரொம் ஹேங்ஸ் (Tom Hanks) நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.