Site icon சக்கரம்

பொருளாதார நெருக்கடியில் இலங்கை ஊடகங்கள்

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் வெகுஜன ஊடகங்களை நடத்திச் செல்வதில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக பாராளுமன்றத்தில் இன்று (15.12.2022) நடைபெற்ற பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுக் கூட்டத்தில் ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

பொருளாதார சவால்களுக்கு மத்தியில் வெகுஜன ஊடக நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர் பட்டாலி சம்பிக ரணவக்க தலைமையில் பொருளாதார ஸ்திரத்தன்மை தொடர்பிலான குறுகிய கால மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழு இன்று (15.12.2022) பாராளுமன்றத்தில் கூடியது. இதன்போதே இவ்விடயம் புலப்பட்டது.

தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை உள்ளிட்ட சம்பிரதாயபூர்வமான ஊடக நிறுவனங்கள், இணைய ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் பலரும் இதில் கலந்துகொண்டனர்.

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தயாரிப்புக்கான செலவுகள் அதிகரித்திருப்பதால் விளம்பரங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியில் ஏறத்தாழ 70% வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக இங்கு தெரியவந்தது.

இரவு நேரங்களில் இடம்பெறுகின்ற மின்சாரத் துண்டிப்புக்கள் காரணமாக தொலைக்காட்சிகளுக்குக் கிடைக்கும் விளம்பரங்களின் அளவு குறைந்திருப்பதாகவும், தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிகழ்ச்சியொன்றைத் தயாரிப்பதற்காக அதிக செலவு ஏற்படுவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

காகிதத் தட்டுப்பாடு உள்ளிட்ட உற்பத்திச் செலவுகள் அதிகரித்துள்ளமையினால் நாளேடுகள் உட்பட வெளியீட்டுத் துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக பத்திரிகைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர். இந்நிலைமையினால் நாளேடுகளின் பக்கங்கள் மட்டுப்படுத்தப்பட்டு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர். நாளேடுகளில் பக்கங்கள் குறைக்கப்படுவதால் பிராந்திய ஊடகவியலாளர்களின் செய்திகளுக்கு இடமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

சில பத்திரிகை நிறுவனங்களில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்குக் கூட சம்பளம் வழங்குவதில் சிரமமான நிலை காணப்படுவதாகவும் இங்கு தெரியவந்தது. இந்நிலையில் நாளேடுகள் அச்சிடுவது 60%-70% வரை குறைந்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதற்கமைய பொருளாதார பிரச்சனைகள், உள்ளூர் செய்திகளை வெளியிடாமை போன்ற காரணங்களால் மக்களிடையே நாளேடுகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளதாக பத்திரிகை ஊடகவியலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

பொருளாதார நெருக்கடிக்கு மேலதிகமாக, சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தற்போதைய டிஜிட்டல் ஊடகப் போக்குகளினால் நாளேடு மற்றும் வானொலி போன்ற பாரம்பரிய ஊடகங்கள் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளமை குறித்தும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நெருக்கடி நிலையை எதிர்கொள்ள மக்களை தயார்படுத்துவதற்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் இணைந்து ஒரு இலக்கை அடைய அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. சுனாமி அனர்த்தம், பயங்கரவாதத்தைத் தோற்கடித்தல், கொவிட் நெருக்கடி போன்ற நிலைமைகளைச் சமாளிப்பதற்கு ஊடகங்கள் எவ்வாறு செயற்பட்டிருந்தனவோ, அதேபோன்று செயற்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகள் குறித்துக் கவனம் செலுத்திய உப குழுவின் தலைவர், ஊடகங்கள் குறித்த முன்மொழிவுகளை அடுத்த அறிக்கையில் உள்ளடக்கி அதனை தேசிய பேரவையில் முன்வைப்பதாகத் தெரிவித்தார்.

Exit mobile version