Site icon சக்கரம்

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி அரசியலும் உணர்வுகளும்!

நிர்மல்

ரசியல் என்றால் என்ன என்பதற்கு “நிலைப்பாடு” என எளிதாகப் பொருள் சொல்ல முடியும். எதில் ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறோமோ அது அரசியலாகும். உதாரணமாக “எனக்கு அரசியல் பிடிக்காது” என நாம் ஒரு நிலைப்பாடு எடுத்தால் அது கூட அரசியலே ! எனவே அரசியல் என்பது தவிர்க்க முடியாததாக ஆகிவிடுகிறது. ஆனால் அந்த அரசியலை இடம் அறிந்து காலம் அறிந்து வெளிப்படுத்த முடியும். எப்படி எங்கு வெளிப்படுத்துகிறோம் என்பது பல நேரங்களில் அந்த அரசியலை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லக் கூடும்.

உலகளாவிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்கள் அரசியல் வெளிப்படுத்தக் கூடிய களமாக மாறுவதைத் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அந்த வகையில் 2022 ஆண்டு உலகக் கால்பந்துப் போட்டியில் வெளிக்காட்டப்படும் சில அரசியல்களை தொகுத்து கட்டுரையாக்கலாமென எண்ணினேன்.

இதுதான் அரபு – இஸ்லாமிய நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பைப் போட்டி என்பதே முதல் அரசியல் வெளிப்பாட்டுக்கு காரணமாக அமைந்தது. உலகளாவிய இஸ்லாமிய வெறுப்பைக் குறித்த நிலைப்பாட்டை பலநாடுகள் வெளிப்படையாகவே தங்கள் அரசியலை காட்டினார்கள். சிலர் ஆதரித்தார்கள், சிலர் எதிர்த்தார்கள். 1990களுக்கு முன் இருந்த அமெரிக்கா ரஷ்யா பனிப்போர் காலத்தில் இப்படித்தான் ஒலிம்பிக்ஸ் போன்ற போட்டிகள் நடக்கும் இடத்தை வைத்து அரசியல் உணர்வுகளை வெளிக்காட்டும் நிகழ்வுகள் நடக்கும். அமெரிக்காவில் நடந்தால் ரஷ்யா புறக்கணிக்கும், ரஷ்யாவில் நடந்தால் அமெரிக்க அணி புறக்கணிக்கும். ஆனால் கட்டாரில் நடக்கிறது என்பதற்காக யாரும் போட்டியை புறக்கணிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து பல எதிர்மறை செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். மிகச் சிறிய குறைகள் கூட ஊதிப் பெரிதாகக் காட்டப்பட்டது. அரங்கத்தின் வெளியிலிருந்த நடைபாதையின் ஓரத்தில் ஒரு சிறு குழி இருந்தது. சரியாக செங்கல் வைத்து மூடாமல் விட்டுவிட்டார்கள் போல – இந்தச் சிறிய குழியின் புகைப்படம் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. இதோ பாருங்கள் அவர்கள் உருப்படியாக போட்டிகளை நடத்த முடியாது என்கிற தொனியில் செய்திகள் புறப்பட்டன.

கடந்த 25 ஆண்டுகளாக உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் அரபிய இஸ்லாமிய வெறுப்புணர்வு உலகெங்கும் பரவியுள்ளது என்பது புரியும். பெரும்பாலும் இவை திட்டமிட்டு கட்டமைக்கப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை. ’இவர்கள் இப்படித்தான்’ என்பது போன்ற ஒற்றைத் தன்மைக்குள், ஒரு மதத்தினர் மீது அசைக்கமுடியாத பிம்பம் உருவாக்கப்பட்டு விட்டது. செய்தித்தாள்கள், சினிமாக்கள், டிவி, சமூக ஊடகங்கள் எனப் பல விதங்களில் இவை கட்டமைக்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதுமாக உருவாகியிருக்கும் இந்தப் போலி பிம்பக் கட்டமைப்பின் தாக்கத்தை இந்தியாவிலும் நாம் உணர்ந்தே வருகிறோம்.

அப்படியான கட்டமைப்பை தகர்க்கக் கட்டார் இந்த உலக கோப்பைப் போட்டியின் துவக்க விழாவை கவித்துவமாக பயன்படுத்தியது .

“மனிதர்கள் தேசங்களாகவும் இனங்களாகவும் சிதறிக் கிடப்பது ஏன் தெரியுமா? நாம் வேற்றுமைகளின் அழகையும் மாறுபாட்டையும் புரிந்து கொண்டு ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளத்தான். இந்த நம்பிக்கையில் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்,” என்கிற உணர்வைச் சொல்லி, “வாங்க பழகலாம்” என அழைத்தது அழகிய அரசியலாகவும் மேன்மையான உணர்வைச் சொல்லுவதாகவும் அமைந்திருந்தது.

இது துவக்க விழாவில் வெளிக்காட்டிய அரசியலாக அமைந்தது. ஆனாலும், உலகக் கால்பந்து போட்டியின் போது ஈரான் வீரர்கள் வெளிக்காட்டிய அரசியல்தான் உலகம் முழுவதும் பேசும் பொருளான முதல் அரசியல் வெளிப்பாடு. ஈரான் அரசு-பயங்கரவாத அடக்குமுறையை எதிர்த்தும், பொதுமக்கள் போராட்டங்களை ஆதரித்தும் வெளிப்படுத்திய அரசியல் இது. உலகக் கால்பந்து போட்டிகளில் நடக்கும் அனைத்து போட்டியின் துவக்கத்திலும் போட்டியிடும் இரு நாட்டினர் தேசிய கீதம் இசைக்கப்படும். மிகவும் உணர்ச்சிவயப்பட்டு வீரர்களும் பார்வையாளர்களும் பாடுவார்கள். பார்க்கவே பரவசமாக இருக்கும். இந்த உணர்ச்சிப்பூர்வமான தருணத்தை தங்கள் அரசியலுக்காக பயன்படுத்தினார்கள் ஈரானிய கால்பந்து வீரர்கள். வேறொன்றும் செய்யவில்லை, தேசிய கீதம் இசைக்கும்பொழுது அதைப் பாடாமல் அமைதியாக இருந்தார்கள் அவ்வளவுதான் !

மஹ்சா அமினி எனும் பெண் தன் தலை மூடாங்கை, (ஹிஜாப்) சரியாக அணியவில்லை என ஈரானிய போலீசாரால் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணையில் இருக்கும் பொழுதே இறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக நாடு தழுவிய போராட்டங்கள் நடந்தன. இனி பெண்களுக்கு ஹிஜாப் கட்டாயம் என்கிற நடைமுறைக்கு மாற்று வர வேண்டுமென போராடினார்கள். இந்தப் போராட்டத்தை அடக்குவதற்கு, அரசு பயன்படுத்திய வன்முறையின் காரணமாக இன்னும் பலர் மரணம் அடைந்தனர். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவாகத்தான் ஈரானிய வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் புறக்கணித்து தங்கள் அரசியலை உலகக்கோப்பை போட்டியின் பொழுது வெளிக்காட்டினார்கள்.

இப்படியான அரசியல் வெளிப்பாடுகளை குறித்து எழுதும் பொழுது, நம் ஊர்களில் நடக்கும் கோவில் திருவிழாக்கள், நம் வீட்டில் நடக்கும் திருமணம் மற்றும் பல விழாக்கள் நினைவுக்கு வருகிறது. இப்படியான விழாக்கள் மக்களை ஒன்றிணைக்கும். மக்கள் என்றால் நமக்குப் பிடிக்காதவர்கள், பிடித்தவர்கள் என அதில் அடங்கும். இப்படியான சூழல் பலதரப்பட்ட மனிதர்களை ஒரே இடத்தில் கூட்டும் பொழுது, அவர்களின் எண்ணங்கள், கருத்துக்கள், அரசியல்கள், பழைய பகைகள், உராய்வுகள் கூட வெளிப்படக் கூடிய இடமாக திருவிழாக்கள் மாறிவிடும். இப்படியான சூழல் உலகக் கால்பந்து போட்டியின் பொழுதும் அமைந்தது.

Kan11 எனும் ஊடக நிறுவனம், இஸ்ரேல் நாட்டைச் சார்ந்தது. அதன் முக்கியப் பொறுப்பில் இருப்பவர் மோவ்வர்டி, உலகக் கால்பந்துப் போட்டிகளை குறித்து செய்திகள் சேகரிப்பதற்காகக் கத்தார் வந்தவர் இவர். கட்டார் நாட்டால் முறையாக அனுமதிப் பெற்று வந்தவர். அவரை இனங்கண்ட சில அரபு ரசிகர்கள் அவர் மீது வெறுப்புச் சொற்கள் கொண்டு பேசிய காணொளி உலகம் முழுவதும் பரவலாகப் பார்க்கப்பட்டது. அந்தக் காணொளியில் ஒரு அரபு ரசிகர், இஸ்ரேலிய ஊடகவியலாளரை நோக்கி, “பாலஸ்தீனம் தான் இருக்கிறது, இஸ்ரேல் என்பது கிடையாது. உங்களை யாரும் இங்கு வரவேற்கவில்லை, தயவுசெய்து நாட்டை விட்டு வெளியே செல்லுங்கள். இது கட்டார், இது எங்கள் நாடு,” என பேசியது வைரலானது. இது மட்டுமல்ல இன்னும் சில இஸ்ரேல் ஊடகவியலாளர்களும் இப்படியான வெறுப்புணர்வின் வெளிகாட்டலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இது ஒரு சிறந்த உலகக் கோப்பைப் போட்டி என்பதை மறுப்பதற்கில்லை, ஆனால் நாங்கள் மிகவும் மோசமான உணர்வோடு இங்கிருந்து புறப்பட வேண்டியிருக்கும் எனத் தங்கள் வருத்தத்தை பதிவு செய்கிறார்கள் இஸ்ரேலிய ஊடகவியளார்கள்.

இஸ்ரேல் பாலஸ்தீனத்தை ஆக்கிரமித்திருப்பதால், இஸ்ரேல் – அரபு உறவு என்பது எலியும் – பூனையுமான உறவுதான். இஸ்ரேலியர்களைக் குறித்து அரபியர்களுக்கு எப்போதும் கசப்பான உணர்வு உண்டு. இதற்கு வரலாற்றுக் காரணங்கள், அரசியல், பொருளாதார காரணங்கள் உண்டு. இசை கட்டமைத்த உணர்வின் வெளிப்பாடே அரபு ரசிகர்கள் வெளிக்காட்டிய உணர்வு. அதைக் காணொளியாக பதிவு செய்து பரப்பியது ஒருவித அரசியல் வெளிப்பாடே.

மனித உரிமைப் பாகுபாடுகளை ஒழித்தல் என்பது இன்றைய உலகின் முக்கிய அரசியல். மாற்றுத்திறனாளிகள், பாலினப் பேதங்களுக்கு ஆட்படுகிறவர்கள், முதியவர்கள் போன்றவர்களை எந்தத் தருணத்திலும் தனிமைப்படுத்திவிடக் கூடாது. எல்லாக் காரியங்களிலும் Invlusive எனும் ஒன்றிணைக்கும் தன்மை இருக்க வேண்டும் என்கிற உணர்வு மேலோங்கி இருக்கும் காலம் இது.

கட்டார் நாட்டில் உலகக் கோப்பை நடக்கப் போகிறது என்கிற செய்தி வெளிவந்த முதல், அந்த நாட்டின் மீது வைக்கப்பட்ட மிக முக்கிய குற்றச்சாட்டு, கத்தார் LGBT (Lesbian, Gay, Bisexual, and Transgender) எனும் ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை மறுக்கும் நாடு. புலம் பெயர்ந்து இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு முழுமையான உரிமைகளை வழங்காத நாடு போன்ற குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. மனித உரிமை மீறல் செய்யும் நாட்டிலா உலகக் கோப்பை, என்பதுதான் பரவலாக பரப்பப்பட்ட அரசியலாக இருந்தது. இதைக் குறித்துக் கட்டாரும் எந்தக் கருத்தையும் வெளிப்படையாக அறிவிக்காமலே இருந்தது. அனைவரையும் நாங்கள் வரவேற்கிறோம், எங்களின் கலாச்சாரங்களுக்கு மதிப்பளியுங்கள் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது. போட்டி ஆரம்பித்ததும் இந்த ஓரினச் சேர்க்கையாளர்கள் உரிமை குறித்த அரசியல் வெளிப்படத் துவங்கியது. அதை வெளிக்காட்ட அவர்கள் எடுத்த ஆயுதம், “One Love” எனும் வாசகம் பொறித்தக் கைப்பட்டை (Arm Band). இந்த ‘ஒன் லவ்’ என்பது எல்லாவித பாகுபாடுகளுக்கும் எதிரான வாசகத்தைத் தாங்கியக் கைப்பட்டை என்றாலும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான உரிமை கத்தாரில் மறுக்கப்படுகிறது, அதனால் இந்த ‘ஒன் லவ்’ எனும் கைப்பட்டையை அணிந்துதான் எல்லா விளையாட்டுப் போட்டியிலும் விளையாடுவோம் என 7 ஐரோப்பிய அணிகளும் அறிவித்தன. “One Love” என்ற வாசகமும் அதிலிருக்கும் வானவில் கொடியும் LGBTQ உரிமைகளை வெளிக்காட்டும் சின்னம். இப்படியான அரசியல் வாசகங்கள் போட்டியில் விளையாடும் பொழுது அணிவது FIFA வின் விதி முறைக்கு எதிராக இருப்பதால், இப்படியான கைப்பட்டை அணிந்தால் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள் என எச்சரித்தது FIFA. FIFAவின் இந்த விதிமுறைக்கு கட்டுப்பட்டு ‘ஒன் லவ்’ கைப்பட்டையைக் கட்டித் தங்கள் அரசியலை வெளிப்படுத்தும் முயற்சியை கைவிட்டனர் ஐரோப்பிய நாட்டு அணியைச் சேர்ந்த வீரர்கள்.

என்னதான் சில வெளிப்பாடுகளுக்கு தடை விதித்தாலும், சில நேரங்களில் உள்ளுக்குள் இருக்கும் அரசியல், புது விதமாக வெளிப்பட ஆரம்பிக்கும். தங்களின் உணர்ச்சிகளை வெளிக்காட்டத் தடை உள்ளது என்பதை உணர்ந்த ஜெர்மானிய வீரர்கள், தங்களின் எதிர்ப்பைப் புதுவிதமாக உலகுக்கு தெரிவித்தது பரபரப்பானது. ஒவ்வொரு அணிகளும் போட்டித் துவங்கும் முன், விளையாடும் பதினோரு பேர்கள் மட்டும் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்வார்கள். அப்படி எடுத்துக் கொள்ளும் பொழுது அனைத்து ஜெர்மானிய வீரர்களும் தங்கள் கைகளால் வாயை மூடியவாரு எடுத்துக் கொண்டார்கள். அதாவது கட்டாரில் நடைமுறையில் இருக்கும் சட்டங்கள், ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிரானதாக உள்ளது, தொழிலாளர்களுக்கு ஏற்றதாக இல்லை எனவே அதை எதிர்க்கிறோம் என்கிற தங்கள் உணர்வுகளை வெளிக்காட்ட இங்குத் தடை இருக்கிறது என்பதால் இப்படிச் செய்தார்கள்.

உலகக் கோப்பைப் போட்டி என்பது விளையாட்டு வீரர்களின் உணர்வுகளையும் அரசியலையும் வெளிக்காட்டும் இடம் மட்டுமல்ல, ரசிகர்களும் பார்வையாளர்களும் கூட இந்த நிகழ்வை பயன்படுத்திக் கொண்டார்கள். அதுவும் ஐரோப்பிய வீரர்களின் இந்த ‘ஒன் லவ்’ கைப்பட்டை அணியும் சர்ச்சைக்கு எதிர் அரசியலாக பார்வையாளர்கள் பாலஸ்தீன நாட்டுக் கொடி கொண்ட கைப்பட்டையை அணிந்து வர ஆரம்பித்தார்கள். அது மட்டுமின்றி பல பார்வையாளர்கள் பாலஸ்தீன நாட்டின் கொடிகளை அரங்கில் தூக்கிப் பிடித்து தங்களின் உணர்வுகளை வெளிக்காட்டிக் கொண்டார்கள்.

உலகக் கால்பந்துப் போட்டி நடக்கும் பொழுது நாம் காணும் இப்படியான அரசியல் மற்றும் உணர்வு வெளிக்காட்டல் மனித இயல்பு. தவிர்க்க முடியாதது. முடிந்தவரை சட்டங்கள் போட்டு வரைமுறை நிர்ணயம் செய்யலாம். ஆனாலும் தவிர்க்க முடியாது. இது விளையாட்டுக்கான அரங்கு, இங்கு அரசியலுக்கும் சமூக உணர்வு வெளிகாட்டலுக்குமான இடம் அல்ல என சிலர் கூறினாலும், அதையும் தாண்டி அரசியலும் உணர்வுகளும் வெளிப்பட்டே தீரும் என்றே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. இப்படியான உணர்வு வெளிக்காட்டல்கள் உலகக் கோப்பைப் போட்டிகள் மட்டுமின்றி நம் வீட்டுத் திருவிழா, திருமண மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களில் கூட விதவிதமாக வெளிக் காட்டப்படுவதை நாம் அறிந்திருப்போம். அவள் வந்தால் நான் விழாவுக்கு வர மாட்டேன், அவர் மேடையிலிருந்தால் நான் மேடையில் ஏற மாட்டேன், இவரையெல்லாம் கூப்பிட்டால் நாங்க வர முடியாது, இப்படிப் பலவற்றை நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கும். சில நேரங்களில் இப்படியான செயல்கள் பொது நிகழ்வையே பாதிப்பதாகவும் அந்நிகழ்வே நடைபெற முடியாத வகையில் அமைந்துவிடும், ஆனால் உலகக் கால்பந்துப் போட்டிகளில் வெளிக்காட்டிய அரசியலாகட்டும் உணர்வுகளாகட்டும் எதுவும் போட்டி நடத்த இடையூறாக இருக்கவில்லை, ரசிகர்களையும் பார்வையாளர்களையும் அது பாதிக்கவுமில்லை. யாரையும் வலுக்கட்டாயமாக இதைச்செய் எனக் கூறவில்லை, போட்டிகள் தங்கு தடையின்றி கொண்டாட்டமாக நடந்தது. அனைத்து வகை அரசியல் உணர்வுகளையும் விஞ்சி நின்றது. “கால்பந்து” என்கிற விளையாட்டின் மீது ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் இருந்த அளப்பறியா காதலே இதற்குக் காரணம் எனச் சொல்ல முடியும்.

அப்படியான காதலும் அந்த விளையாட்டின் மீதான வேட்கையும் அளவுக்கு மீறி பொங்கி வழிந்தது எனவும் சொல்லமுடியும். உதாரணமாக ஒரு அரங்கு, கிட்டதட்ட 86 ஆயிரம் பேர். இவர்களில் 99 விழுக்காடு பிரேஸில் அணி ஆதரவாளர்கள். கிட்டத்தட்ட அனைவரும் மஞ்சள் பச்சை நிற உடைகள், பிரேஸில் கொடிகள், முகப்பூச்சுக்கள், மேள தாளங்கள், தொப்பிகள் என அமர்களம். இதெல்லாம் பிரேஸில் நாட்டிலிருந்து வந்தவர்கள் அல்ல, பெரும்பாலும் இந்தியர்கள், அரபியர்கள் இன்னும் பல நாட்டினர்தான் இப்படி பிரேஸில் நாட்டின் கொடி ஏந்தி உற்சாகப்படுத்தினார்கள். ஒவ்வொருமுறை கோல் போஸ்டை நோக்கி உதைக்கப்படும் பந்திற்காகத் தன்னை மறந்து கத்துகிறார்கள். பிரேஸில் அணி வீரன் தள்ளிவிடப்பட்டால் கோவப்பட்டுத் திட்டிக் கொள்கிறார்கள்.

தேச எல்லைகளைக் கடந்த ஆதரவுக்கு என்ன காரணம்? – இவற்றிற்க்கு ஒரே பதிலாக இருப்பது – “புட்பால்” மட்டும்தான் !

இது போல ஆர்ஜென்ரினாவிற்கு, கட்டாரில் வாழும் இந்தியர்களின் உற்சாக வரவேற்பும், கட்டில் அடங்காத ஆதரவும் கால்பந்து விளையாட்டை மனித குலத்தின் மாபெரும் வேட்கையாகவேப் பார்க்க வைத்துவிட்டது.

ஸ்பெயின் நாட்டில் பிறந்து வளர்ந்த மொரோக்கா அணி வீரர்கள், ஜெர்மனி, சுவிஸ், பிரான்ஸ், இங்கிலாந்து, நெதர்லாந்து நாட்டு அணியில் இடம் பெற்ற ஆப்பிரிக்க வீரர்கள், எனத் தேச எல்லைகளை எல்லாம் கடந்து, கால்பந்துக்கென புதிய வகையான அணி சேர்தலை சாத்தியப் படுத்தியிருக்கிறது. இதுவே எதிர்கால மனித சமூகத்திற்கான அரசியல் வெளிப்பாடு எனக் கொண்டாட அழைக்கிறது. இன, நிறப் பாகுபாடுகளை கடக்கும் பயணம், மிகச் சரியாகச் சென்றுக் கொண்டிருக்கிறது என ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.

இப்படி மனிதப் பாகுபாடுகளை களைந்து சமத்துவ உணர்வை நோக்கிய நீண்டப் பயணத்தில் கால்பந்து போட்டியும் ஒரு அங்கமாக ஆகியிருப்பது உண்மையில் பாராட்டப்பட வேண்டிய ஒன்று. இதைப் புரிந்து கொள்வதும் அவசியம்.

கட்டாரும் FIFAவும் போட்டிகளைத் தங்குத் தடையின்றி, அதே வேளையில் பலவித உணர்வு அரசியல் வெளிக்காட்டலை மேலான்மை செய்து, சரியான முறையில் சமாளித்து, உணர்வுகளுக்கு ஏற்ற செயல்முறைகளைச் செய்திருந்தது. அது மட்டுமல்ல, இந்த உலகக் கோப்பை விளையாட்டுப் போட்டியின் சமூக அரசியல் முழக்கமாக No Discrimnation – பாகுபாடு ஒழித்தல் என்பதையே வைத்திருக்கிறார்கள். அனைத்துப் போட்டியின் துவக்கத்திலும் No Discrimination என்கிற வாசகம் தாங்கியப் பதாகை அணிகளின் அணிவகுப்பில் இடம்பெறுகிறது, மேலும் புகழ் பெற்ற வீரர்கள் No Discrimination என்கிற முழக்கத்தைச் சொல்லும் காணொளிகளும் போட்டித் துவங்கும் முன் அரங்கில் இருக்கும் மின் திரையில் ஒளிபரப்பப்படுகிறது.

அனைத்து வகையான பாகுபாடுகளைக் களைய வேண்டும். மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகார அத்துமீறல் பல மக்களைப் பாதிக்கிறது, அது அவர்களுக்கான வாய்ப்புகளைத் தடுக்கிறது, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது, மனிதத் திறமைகளை வீணாக்குகிறது, சமூகப் பதட்டங்கள், ஏற்றத் தாழ்வுகளை வலியுறுத்துகிறது எனப் பாகுபாடு ஒழிக்கும் முழக்கங்களை தனது அரசியலாக வெளிக்காட்டுகிறது, உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் FIFA.

அரசியல் வெளிப்பாடுகளும், உணர்வு வெளிப்பாடுகளும் மனிதர்களின் தவிர்க்க முடியாத தனித்துவமான குணம். இது மக்களை அணியாக ஒன்றிணைக்கிறது. இறுதிப் போட்டியின் முடிவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிக் அரசியலும் உணர்வுகளும் பஞ்சமில்லாமல் பொங்கி வழிந்ததைக் காண முடிந்தது.

ஆர்ஜென்ரினா அணி வீரரான மெஸ்ஸிக்கு அரேபிய முறைப்படி அளித்த முதல் மரியாதை அனைவரையும் வியக்க வைத்தது. நம்மூரில் பொன்னாடை போர்த்துதல், பூரணக் கும்ப மரியாதை அளித்தல், தலப்பாகைக் கட்டிவிடுதல் போன்றவை மரியாதையும் மதிப்பையும் வெளிக்காட்டி இன்னொருவரை கவுரவிக்கப் பயன்படுத்தப்படுவதைப் போல, இங்கு, “பிஸ்த்” எனும் அங்கவஸ்திரம் அணிவித்தல் !

இந்த மேலாடை அரசாளுகிறவர்கள், மத குருமார்கள், அரசாங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ளவர்கள் அணிந்திருப்பார்கள். மேலும் திருமண கொண்டாட்டக் காலத்திலும் அணிந்திருப்பார்கள். கத்தாரின் எமிர், மெஸிக்கு இதைப் பரிசளிப்பு விழாவில் அணிவித்து கவுரப்படுத்தினார்.

மெஸ்ஸியும் அதைத் தனக்கே உரிய அடக்கத்தோடும், மகிழ்வோடும் ஏற்றுக் கொண்டு பதில் மரியாதைச் செய்தது பார்க்க அருமையாக இருந்தது.

பொதுவாக அதிகாரத் தலைமை வகிப்பவர்கள், பிரதமர்கள், இன்றும் மன்னர்களாக இருந்து ஆட்சி செய்கிறவர்களை மற்றவர்கள் சந்திக்கும் பொழுது சில முறைகள் உண்டு. அவர்களுக்கு மிக அருகில் செல்லக் கூடாது, இப்படியான உடையணிய வேண்டும், அவர்கள் கண்களை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது, நமது பின்புறத்தைக் காட்டக் கூடாது எனப் பட்டியல் நீளும். இங்கிலாந்து ராணியை சந்திக்கிறவர்களுக்குச் சிறப்பு பயிற்சி கூட உண்டு எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

கட்டார் நாட்டின் மன்னரும் இப்படியானவராகத்தான் இருப்பார் என்கிற எண்ணத்தை சந்தேகிக்க வைப்பதாக இருந்தது இறுதிப் போட்டி வெற்றி விழா நிகழ்வு.

பரிசளிக்கும் பொழுது, போட்டியில் பங்கேற்ற அனைத்து வீரர்களையும் ஆரத்தழுவி நீங்கள் நினைக்கிற ஆள் நான் இல்லை என்பதைச் சொல்லுவதாக இருந்தது.

துவக்க விழாவில் “வாங்க பழகலாம்” என்கிற முழக்கத்தை முன் வைத்ததை இன்னும் ஒருபடி எடுத்துச் சென்றது போல அமைந்திருந்தது கட்டார் மன்னரின் உணர்வுப்பூர்வமான தழுவல்கள்.

https://www.youtube.com/watch?v=9sxSObpX58U
Exit mobile version