Site icon சக்கரம்

முடிவுக்கு வரட்டும் தமிழ்நாடு ஆளுநரி(யி)ன் அநாகரீகச் செயல்பாடுகள்

-கே.சந்துரு

மிழ்நாட்டில் குப்பை கொட்ட வந்த ஆளுநர்கள் பல விதம். ஆரம்பத்தில் சாம்ராஜ்ஜியத்தை இழந்த மன்னர் பரம்பரையின் எச்சங்களுக்கு ஆளுநர் பதவியை அளித்து புது மாப்பிள்ளைபோல் இம்பாலா கார்களில் பவனி வரவும், ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுத்துக்கொள்ளவும் அமர்த்தப்பட்டார்கள். மைசூர் மாநிலத்தின் மேனாள் மகாராஜா ஜெயசாமராஜ உடையார் இந்த வகையில் சேர்ந்தவர். இப்படியானவர்களால் மாநில அரசுக்குச் செலவீனங்களைத் தவிர வேறு பிரச்சினைகள் எழவில்லை. 

அடுத்த கட்டத்தில் அமர்த்தப்பட்ட ஆளுநர்கள் அவரவர்கள் மாநிலங்களில் ஏற்பட்ட உள்கட்சி சண்டையால் கட்டம் நகர்த்தப்பட்டவர்கள் (அ) நீண்ட சர்வீஸுக்கு ஓய்வூதிய பயனளிப்பதுபோல் வேறு மாநிலங்களுக்கு ஆளுநராக அனுப்பப்பட்டார்கள். இந்த இரு வகைப்பட்டவர்களும் தங்களது நீண்ட அரசியல் அனுபவங்களால் பிரச்சினைகள் எவற்றையும் உருவாக்கவில்லை.

ஒவ்வொன்றும் ஒருவிதம் 

அதற்குப் பின் உருவானதே ஆளுநர்கள் பேயாட்டம். ஒன்றிய அரசில் ஆட்சியில் உள்ள கட்சிக்கு மாற்றாகச்  செயல்பட்ட மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்புவதற்குப் பரிந்துரைக்கலாயினர். நெருக்கடிநிலையின்போது தமிழ்நாடு ஆளுநராக இருந்த கே.கே.ஷா அதற்கு முந்தைய இரவில் அரசு விழாவில் அரசின் செயல்பாடுகளைப் பாராட்டிவிட்டு அன்றிரவே சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அறிக்கை அனுப்பிய வரலாற்றுக்கு உரியவர். விளைவு கலைஞர் மு.கருணாநிதி அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

பேயாட்டத்திற்கு உட்படாத ஒன்றிய அரசிற்கு ஊழியம் செய்ய முன்வராத ஆளுநர்கள் பந்தாடப்பட்டனர் (அ) பதவி நீக்கப்பட்டனர். மாநில அரசைக் கலைப்பதற்குப் பரிந்துரைக்க மாட்டேன் என்று கூறிய பர்னாலாவிடம் ராஜினாமா கடிதம் வாங்கப்பட்டது. ராஜினாமா செய்ய மறுத்த பட்வாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டார். 

ஆளுநர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதம். ஆளுநர் மாளிகையை ஒட்டியுள்ள காப்புக் காட்டை கழிப்பறையாகப் பயன்படுத்தியவர் ஒருவர். பாதுகாக்கப்பட்ட விலங்குகளை அடித்து மான் கறி விருந்து வைத்தவர் ஒருவர். உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும் அரசமைப்புச் சட்டம் புரியாமல் அமைச்சரவை ஒப்புதலின்றி கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்து குட்டு வாங்கியவர் ஒருவர். நர்சரி பள்ளி முதல் புடவைக் கடைகள் வரை திறப்பு விழாவிற்குச் சென்றதுடன், தான் நடத்திவந்த அறக்கட்டளைக்கு நன்கொடை பெற்றவர் ஒருவர். 

இப்போது இந்த வகைகளிலிருந்து மேலும் ‘மேம்படுத்தப்பட்ட கோமாளிகள்’ அனுப்பப்பட்டுவருகிறார்கள். அவர்களுக்கு அரசியல் பாரம்பரியமோ சட்ட ஞானமோ கிடையாது. ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் தயவில் பதவி வாங்கி வருபவர்கள் அங்கிருந்து வரும் சிக்னல்களுக்கு ஏற்ப நடனமாடுகிறார்கள். தங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன யோசிப்பார்கள் என்பதையெல்லாம் பற்றி அவர்களுக்குக் கவலை இல்லை. 

நீங்கள் தபால்காரரா? 

ஆடுவது நாடகமென்றாலும் அவ்வப்பொழுது இவர்கள் தங்களை அறிவுஜீவிகளாகக் காட்டிக்கொள்கிறார்கள். அட்சரம் அறிந்துகொள்ள ஆசிரியர்களை அமர்த்தியுள்ளதாக பேட்டி கொடுக்கும் அவர்கள், திருக்குறளுக்கு உரை எழுதிய ஜி.யு.போப்பைக்கூட விமர்சிக்க தயங்குவது இல்லை. சனாதனத்திற்குப் புது உரை எழுதும் அவர்கள் அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மைக்கு அர்த்தம் ஏதுமில்லை என்று தங்களது அறியாமையைக் காட்டிக்கொள்ளவும் தயங்குவது இல்லை. தமிழ்நாடு என்று அழைக்காமல் தமிழகம் என்று அழைப்பதே சரியாக இருக்கும்; அப்பொழுதுதான் பிரிவினைவாதம் தலையெடுக்காது என்பது அன்னாரின் சமீபத்திய கண்டுபிடிப்பு. 

பிஹாரிலிருந்து வந்த மனிதருக்கு அந்த மாநிலத்தின் பெயர் எப்படி வந்தது என்று தெரியுமா? விஹார் என்பது புத்த மடங்களைக் குறிப்பிடுவதாகும். அந்தப் பெயர் திரிந்துதான் பிஹார் என்று ஆனது.  இந்து சனாதனத்தைப் புகழ்ந்துவரும் அவர் தனது மாநிலத்தின் பெயரை மாற்ற பரிந்துரைப்பாரா? 

இந்தியக் காவல் பணியில் சேவை புரிந்த ஆர்.என்.ரவிக்குக்  கட்டுப்பாடு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனெனில், அவரது சாவி உள்துறை வசம் உள்ளது. அமைச்சரவை அறிவுறுத்தியும் குற்றவாளிகளின் மன்னிப்பு மனுக்களில் கையெழுத்திட மறுத்த அவரை உச்ச நீதிமன்றம் கண்டித்ததை யாவரும் அறிவர். வழக்கு முடிவுக்கு வருவதற்கு முன்னால் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து மனுக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய அவரை உச்ச நீதிமன்றம் ”நீங்கள் தபால்காரரா?” என்று கேட்டது. 

ஆளுநர்கள் ஆர்.என்.ரவி (தமிழ்நாடு), ஆரிப் கான் (கேரளம்), தமிழிசை சௌந்தரராஜன் (தெலுங்கானா) இம்மூவருக்கும் ஒற்றுமை ஒன்று உண்டு. அவர்கள் சேர்ந்து இசைக்கும் கோஷ்டி கானத்திற்குப் பக்கவாத்தியம் வாசிக்க பாஜக உண்டு. அவரவர் மாநிலங்களிலுள்ள பெரும்பான்மை பெற்ற கட்சிகளின் அரசின் ஸ்திரத்தன்மையைக் குலைப்பதுதான் மூவருக்கும் முதல் அஜெண்டா. சட்டப்பேரவைகள் இயற்றிய சட்டங்களுக்கு ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவது, மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங்களில் அவர்களை ‘வேந்தர்கள்’ என்று அறிவித்திருப்பதனால் பல்கலைக்கழகங்களின் உள்விஷயங்களிலும் தலையிட்டு தங்களது ராஜதர்பாரை நடத்துவது, போதாதென்று அவர்களது காவிக் கட்சி விசுவாசத்தைக் காண்பிப்பதற்காக அவ்வப்பொழுது கூட்டங்களில் முத்து உதிர்ப்பது… மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற கவலையோ, கூச்சமோ துளியும் கிடையாது. 

தொடரும் தாமதம்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 சட்டங்களுக்கு இன்னும் ஆளுநர் தனது ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்திவருகிறார். ஆன்லைன் ரம்மி விளையாட்டைத் தடைசெய்து போடப்பட்ட அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ரவி, அவசரச் சட்டத்தை முறையான சட்டமாக இயற்றிய பேரவையின் சட்ட வரைவிற்கு இன்று வரை ஒப்புதல் அளிக்காததோடு ஆன்லைன் விளையாட்டை நடத்திவரும் வியாபாரிகளுக்கு ஆளுநர் மாளிகையில் பேட்டி தரவும் தயங்கவில்லை. 

இந்தியாவிலுள்ள நாடாளுமன்றமும், மாநிலங்களிலுள்ள சட்டமன்றங்களுக்கும் உள்ள உரிமைகள் 105 மற்றும் 194 பிரிவுகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. அதன்படி பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு உண்டான உரிமைகள், பாதுகாப்புகள் இங்குள்ள மன்றங்களுக்கும் உண்டு. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கூட்டங்கள் ஆரம்பிக்கும்போது அதில் உரையாற்ற வரும் பிரிட்டிஷ் அரசரோ (அ) அரசியோ தாங்களாகவே எந்த உரையையும் ஆற்ற முடியாது. பிரிட்டிஷ் அரசர் நாடாளுமன்றச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நடைமுறை அங்கேயும் உண்டு. 

ஆனால், 1708க்குப் பிறகு இன்று வரை எந்தச் சட்டத்திற்கும் பிரிட்டிஷ் அரசரோ (அ) அரசியோ ஒப்புதல் அளிக்க மறுத்ததில்லை. மறுக்கவும் முடியாது. இத்தனைக்கும் பிரிட்டனில் எழுதப்பட்ட அரசமைப்புச் சட்டம் கிடையாது. அவர்கள் மரபுரீதியான வழக்கங்களையே பின்பற்றிவருகிறார்கள். எழுதப்பட்ட சட்டங்களைத் தவிர மரபுரீதியான நடைமுறைகளுக்கும் அங்கே ஒரே மரியாதைதான். அதையொட்டிதான் இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது 105வது பிரிவில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திற்கு எந்தெந்த உரிமைகள் இருக்கிறதோ அவையெல்லாம் இந்திய நாடாளுமன்றத்திற்கு உண்டு என்று எழுதப்பட்டது. 

அது தவிர, நாடாளுமன்றத்தின் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக விதிகள் உருவாக்கும் உரிமை 118வது பிரிவின்படி நாடாளுமன்றத்திற்கும், 208வது பிரிவின்படி சட்டமன்றங்களுக்கும் மட்டுமே உண்டு என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதேபோல், நாடாளுமன்ற நடவடிக்கைகளைப் பற்றி விசாரிப்பதற்கோ (அ) குறுக்கிடுவதற்கோ நீதிமன்றங்களுக்கு உரிமை இல்லை (பிரிவு 122). சட்டமன்றங்களின் நடவடிக்கைகளில் குறுக்கிடுவதற்கும், நீதிமன்றங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது (பிரிவு 212).  

அருவருக்கத்தக்க செயல்

இவற்றை எல்லாம் துச்சமாக்குவதன் உச்சகட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவையின் இவ்வருட ஆரம்பக் கூட்டத்தில் நடந்துகொண்ட அருவருக்கத்தக்க நடைமுறை. பேரவைக் கூட்டத்தைத் துவங்குவதற்கும், முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் ஆளுநர்தான் உத்தரவிட வேண்டும். ஆளுநர் விரும்பினால் பேரவையில் பேசுவதற்கும் தங்களது கருத்துகளை எழுதி அனுப்பவும் அரசமைப்புச் சட்டத்தின் இடம் உண்டு (பிரிவு 175).  தேர்தல் நடந்த பிறகு நடக்கும் முதல் கூட்டத்திலும், புத்தாண்டு துவக்கத்தில் நடைபெறும் முதல் கூட்டத்திலும் அவரது உரை உண்டு. 

அரசமைப்புச் சட்டப் பிரிவு 163இன்படி ஆளுநர், முதல்வர் தலைமை தாங்கும் அமைச்சரவையின் ஆலோசனையின்பேரில்தான் செயல்பட முடியும். ஆகவே, பேரவையில் அவர் ஆற்றும் உரையை அரசுதான் எழுதித் தர வேண்டும். மக்களின் ஆதரவு பெற்ற அமைச்சரவை தன்னுடைய கொள்கைப் பிரகடனங்களை அவையின் முதல் கூட்டத்தில் அறிவிப்பதற்காக ஆளுநர் உரையைத் தயார் செய்வார்கள். இதுதான் இதுவரை கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறை.  

ஆனால், இம்முறை தமிழ்நாடு அரசு தயாரித்த ஆளுநர் உரை அவரிடம் 6ஆம் தேதியே அளிக்கப்பட்டது. அவ்வுரையின் தமிழாக்கமும் சேர்ந்து உறுப்பினர்கள் தெரிந்துகொள்ளும் வண்ணம் அவர்களிடம் உள்ள ‘டேப்லெட்’டில் (மின்னணுவில் வாசிக்கும் கருவி) பதிவேற்றம் செய்யப்பட்டது. சம்பிரதாய மரியாதைகளுக்குப் பிறகு ஆளுநர் தனது உரையை வாசிக்க ஆரம்பித்தவுடன் பாஜக, அதிமுக கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் அவரைக் கண்டித்து வெளிநடப்பு செய்தன. உரையைப் படிக்க ஆரம்பித்த ஆளுநர் அதிலுள்ள சில பகுதிகளைத் தவிர்க்க முற்பட்டது அவை உறுப்பினர்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. அவரது உரைக்குப் பின் அரசு தயார்செய்த உரையின் தமிழாக்கத்தைப் பேரவைத் தலைவர் அப்பாவு படிக்க ஆரம்பித்தார். 

இதனால், அவைப் பதிவேட்டில் இரு வேறு முரண்பட்ட உரைகள் பதிவாகின. இதனை உணர்ந்த அவையின் முன்னவர் (முதல்வர்) அவசரமாக தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். அதன்படி அரசு தயார் செய்த உரை மட்டுமே அவையில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் மரபு மீறிய ஆளுநரின் நடவடிக்கை வருத்தம் தருவதாகவும் கருத்து தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்கள் அத்தீர்மானத்தை நிறைவேற்றினர்.

தீர்மானம் நிறைவேறுகின்ற அதேநேரத்தில் ஆளுநர் கூட்ட இறுதியில் இசைக்கப்படும் தேசிய கீதத்திற்குக்கூட காத்திராமல் வெளிநடப்பு செய்து சாதனை படைத்தார். அதுமட்டுமின்றி தான் பேசிய உரையைப் பதிவிடாதது பற்றி சட்ட ஆலோசகர்களைக் கலந்தாலோசிக்கப் போவதாகவும் வெளியில் அறிவித்தார். அவருக்குத் தெரியாததா? அரசமைப்புச் சட்டத்தின் 212வது பிரிவின்படி அவை நடவடிக்கைகளில் எந்த நீதிமன்றமும் குறுக்கிட முடியாததோடு நடவடிக்கைகள் அவை விதிகளுக்கு விரோதமாக இருக்கிறது என்று விசாரிக்கவும் முடியாது. 

அவை நடவடிக்கைகள் தனிமனித சுதந்திரத்தை முறையின்றி பறித்தால் மட்டுமே நீதிமன்றத்தால் சட்டப்பிரிவு 21இன்படி தலையிட முடியும். அப்படித்தான் சட்ட விரோதமாக சிறைபடுத்தப்பட்ட ‘ஆனந்த விகடன்’ ஆசிரியர் பாலசுப்பிரமணியனை சென்னை உயர் நீதிமன்றம் விடுதலை செய்ததோடு அவைத் தலைவருக்கு ரூ.1,000 அபராதமும் விதித்தது. 

ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும்

ஆளுநரின் அநாகரீக நடவடிக்கைகளால் அவரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளது. குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது (பிரிவு 61). ஒன்றிய அரசின் அசைவுக்கு இணங்க மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்பதனால் ஆளுநரைப் பதவி நீக்கம் செய்வதற்கு சட்டம் வழிவகை இல்லை. ஆனால், இவ்வளவு மக்கள் விரோதச் செயல்பாட்டையும் அரசமைப்பு விரோதப் போக்கையும் கொண்ட ஓர் ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டியது ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டிய அவசிய நடவடிக்கை. அப்படி இல்லை என்றால் தமிழ்நாட்டின் குரல் அது நோக்கி ஓங்கி ஒலிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!

Exit mobile version