Site icon சக்கரம்

பெரு: ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டம்!

Protestors take over the Pan-American highway in the Northern Cone of Arequipa following the announcement by Peruvian new President Dina Boluarte of her intention of presenting a bill to parliament to advance the scheduled general elections from April 2026 to April 2024 in Arequipa, Peru, on December 12, 2022. - Protesters have demanded fresh elections and the resignation of new President Dina Boluarte, following the arrest of her leftist predecessor Castillo last week after he attempted to dissolve Congress and rule by decree. (Photo by Diego Ramos / AFP) (Photo by DIEGO RAMOS/AFP via Getty Images)

னநாயகத்தை மீட்பதற்கான போராட்டங்கள் மீது நடந்த அடக்கு முறைக்கு இதுவரையில் பெருவில் 46 பேர் பலியாகியிருக்கிறார்கள். கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து மக்கள் போராட்டக்களத்தில் இருக்கிறார்கள். மக்களை  அடக்குவதன் மூலம் போராட்டங்களை சமாளித்து விடலாம் என்று தற்போதைய ஜனாதிபதி டினா போலுவார்ட்டே (Dina Boluarte) தலைமையிலான பெரு அரசு நினைத்தது. இதனால் மக்கள் தொடர்ந்து அடக்குமுறைத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.  கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது, போராட்டத்தை  பல அமைப்புகள் நிறுத்தி வைத்தன. அத்துடன் போராட்டங்கள் நின்றுவிடும் என்று  போலுவார்ட்டே தலைமையிலான அரசு நினைத்தது. ஆனால், கொண்டாட்டங் களுக்குப் பிறகு மீண்டும் தொடங்கிய போராட்டங்கள் கடந்த ஆண்டு நிறைவில் நடந்ததை விட பெரும் அளவில் வெடித்தன. பல மாகாணங்களில் வீதிகள்,  மக்கள் திரளால் நிறைந்து காணப்பட்டன. சில மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் கட்டாயம் அந்தந்த மாகாணங்களின் நிர்வாகங்களுக்கு ஏற்பட்டது. மக்கள் தடைகளை மீறி ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தில் இறங்கியிருப்பதால் அடக்குமுறையை அரசு அதிகரித்துள்ளது. இதனால் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன.

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசின் அடக்குமுறைகளை மீறி மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பெரு தலைநகர் லிமாவில் ஜனவரி 12-ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சில  மாகாணங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மக்கள் திரள் வதைத் தடுக்க அரசு நடவடிக்கை களை எடுத்து வருகிறது. ஆனால், தொழிற்சங்கங்களும், இடதுசாரி அமைப்புகளும் ஒருங்கிணைத்து வரும் எதிர்ப்புப் பேரணிகளில் மக்கள் கலந்து கொள்கிறார்கள். போராட்டம் நடத்தி வரும் சமூக அமைப்புகளில் ஒன்றைச் சேர்ந்த ஓல்கா எஸ்பெஜோ, ‘‘இவ்வளவு இறப்புகள் நிகழ்ந்துள்ளன. மக்களின் குரல்களைக் கேட்காமல் ஏன் இருக்கிறீர்கள், போலுவார்ட்டே? தயவு செய்து இந்தப் படுகொலைகளை நிறுத்துங்கள். வலதுசாரிகள் உங்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதை நீங்களும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள்’’ என்கிறார். தற்போது ஜனநாயகத்திற்கு விரோதமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பெட்ரோ காஸ்டில்லோவுடன் இணைந்துதான் மக்களிடம் வாக்குகளைப் பெற்று, துணை ஜனாதிபதி ஆனார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘கொலைகாரர் போலுவார்ட்டே’’  என்ற முழக்கங்களும் பேரணியில் எழுப்பப்பட்டன. அட்டைகளால் செய்யப்பட்ட சவப்பெட்டிகளையும், கொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களையும் ஏந்தியவாறு மக்கள் வலம் வந்தனர். அரசுக்கு எதிரான முழக்கங்கள் பெரும் அளவில் எழுந்தன. மிகவும் அமைதியான முறையில் நடந்த இந்தப் பேரணியில் மக்கள் இணைந்த வண்ணம் இருந்தனர். பெருவின் மற்ற நகரங்களிலும் இதுபோன்ற பேரணிகள் நடைபெற்றன.

அமைச்சர் பதவி விலகல்

ஜனவரி 12 அன்று மக்களின் ஆவேசமான பேரணி நடந்து கொண்டிருக்கும்போதே தொழிலாளர் துறை அமைச்சர் எடுவர்டோ கார்சியா (Eduardo Garcia Birimisa) தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். மக்கள் உயிரிழந்ததற்கு அரசு மன்னிப்புக் கோர வேண்டும் என்றும், தவறுகள் நடந்துள்ளன. அந்தத் தவறுகளைச் சரி செய்ய வேண்டும் என்பதை அரசு  அங்கீகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் தெரிவித்திருக் கிறார். ஏப்ரல் 2024 வரையில் எல்லாம் மக்களால் காத்திருக்க முடியாது. தேர்தல்கள் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். ஜனவரி 11-ஆம் தேதியன்று பெருந்திரள் அஞ்சலி ஊர்வலம் நடந்தது நூற்றுக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்று காவல்துறை யின் அடக்குமுறைக்குப் பலியானவர்களின் உடல்களுக்கு மரியாதை செலுத்தினார்கள். சிலியில் தெற்குப் பகுதியில் உள்ள ஜூலியாகா நகரில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தின் நிறைவில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் கொலைகளுக்கு நீதி  கிடைக்க வேண்டும் என்று கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்தனர். இவர்களின் தியாகம் வீண்போகாது. ஜனநாயகம் மீட்டெடுக்கப்படும் என்று நிகழ்வில் பங்கேற்ற பலரும் உறுதியளித்தனர்.

பெருவில் நடந்தது என்ன?

பெட்ரோ கஸ்ட்டிலோ

பெரு நாட்டில் நடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ (Pedro Castillo) வெற்றி பெற்று 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார்.

பெருவின் கிராமப்புற மக்களின் அமோக ஆதரவுடன் காஸ்டிலோ ஆட்சிக்கு வந்தார். ஆனாலும், விலைவாசி உயர்வு காரணமாக காஸ்டிலோவின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. கடந்த சில மாதங்களாகவே விலைவாசி அதிகரித்துகொண்டே போனது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், உணவுப்பொருள்கள், உரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்தன. விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர்.

ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. அதனால், பெரு உட்பட பல நாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. பெருவில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம், கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக பணவீக்கம் 1.48 சதவிதமாக அங்கு பதிவாகியது. இதனால், ஜனாதிபதி காஸ்டிலோ மீது மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்தது.

இந்த போராட்டம், ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. அதனால், தலைநகர் லிமாவில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார், ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ. மேலும், நாடு சந்தித்துவரும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக ஜனாதிபதி கஸ்டில்லோ அறிவித்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு எதிராக பல்வேறு நாடுகளும் குரல்கொடுத்தன. திடீரென நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய ஜனாதிபதி  பெட்ரோ காஸ்டில்லோ, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார்.

இந்த நிலையில், பெட்ரோ காஸ்டில்லாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ந் திகதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 130 எம்.பி-க்கள் கொண்ட பாராளுமன்றத்தில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 101 பேரும், எதிராக ஆறு பேரும் வாக்களித்தனர்.  அதையடுத்து, ஜனாதிபதி பதவியிலிருந்த நீக்கப்பட்ட பெட்‍ரோ காஸ்டிலோ, கைதுசெய்யப்பட்டார். பின்னர், துணை ஜனாதிபதியாக பதவி வகித்த டினா போலார்ட்டே ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ஜனாதிபதி மாற்றப்பட்டதற்கும், பெட்ரோ காஸ்டிலோ கைது செய்யப்பட்டதற்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் களமிறங்கியுள்ளனர்.

https://chakkaram.com/wp-content/uploads/2023/01/peru-yt.mp4
Exit mobile version