Site icon சக்கரம்

தோழர் அ.கௌரிகாந்தன் நினைவாக:
காலம் வரையறுத்த வாழ்வும் காலம் வரையறுக்காத இலட்சியமும்

-மணியம் சண்முகம்

தோழர் அ.கௌரிகாந்தன்

தோழர் அ. கௌரிகாந்தன் 26.02.2023 அன்று தர்மபுரியில் காலமானார்.

னித வாழ்வில் சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் வாழ்வியல் சூழ்நிலைகள் மனதில் நின்று நிலைத்து விடுவதுண்டு. அத்தகைய ஒரு உறவுதான் இன்றைய தினம் காலமான தோழன் அ.கௌரிகாந்தனுக்கும் எனக்கும் இடையிலான உறவு.

காந்தனை (‘காந்தன்’ என்றுதான் நாம் எல்லோரும் ‘அவனை’ அழைப்போம்) நான் இறுதியாக நேரில் சந்தித்தது 1991 இல் என்று நினைவு. அப்பொழுது யாழ்.பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் அமைந்திருந்த எனது புத்தகக் கடைக்கு வந்து என்னைச் சந்தித்திருந்தார். அதன் பின்னர் நேரில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனால் எம் இருவருக்குமிடையே மானசீகமான ஒரு உறவு இருந்து கொண்டு இருந்ததாக நான் எண்ணுவதுண்டு. அந்த உறவின் விளைவாகவோ என்னவோ கடந்த சில வருடங்களாக முகநூல் உறவு இருந்து வந்தது ஒரு மன மகிழ்ச்சி. (பெரும்பாலும் உள் பெட்டியின் வழியாக)

காந்தனுக்கும் எனக்கும் இடையிலான உறவைச் சொல்வதானால் அது ஒரு மாபாரதக் கதையாகி விடும். சுருக்கமாகச் சில விடயங்களைக் கூறலாம்.

1963 இல் ‘இன்டர்’ வகுப்பில் (9 ஆம் வகுப்பின் இரண்டாம் ஆண்டு) சேர்ந்து படிப்பதற்காக நான் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்குச் சென்ற பொழுதுதான் காந்தனின் தொடர்பு ஏற்பட்டது. அவர் அங்கு என்னைவிட ஒரு வகுப்பு மேலே படித்துக் கொண்டிருந்தார்.

அவரது சொந்த ஊர் எமது கல்லூரி அமைந்திருந்த கந்தரோடை கிராமத்துக்கு அடுத்ததாக இருந்த உடுவில் கிராமம். அவரது தகப்பனார் அரிநேசரத்தினம் ஒரு பொலிஸ் சார்ஜனாக இருந்தார். மிகவும் கண்டிப்பானவர். (அவரைச் ‘சுழித்து’ விட்டுத்தான் பிற்காலத்தில் காந்தன் தனது அரசியல் வேலைகளை முன்னெடுத்தார்) தாயார் மிகவும் சாந்தமும் அன்பும் நிறைந்த ஒரு அம்மா. குடும்பத்தில் காந்தன்தான் மூத்தவர். அவருக்குக் கீழே பல தங்கைகளும் தம்பிகளும் உண்டு.

கந்தரோடையில் நான் அப்போதைய உடுவில் பாராளுமன்ற உறுப்பினர் வி.தர்மலிங்கத்தின் (புளொட் சித்தாத்தனின் தகப்பனார்) பெரிய தாயார் முறையான ஒருவரின் வீட்டில் தங்கியிருந்துதான் கல்வி கற்றேன். அவர்களுக்கு அங்கு இருந்த இன்னொரு வீட்டில் சில வெளியூர் மாணவர்கள் தங்கியிருந்து கல்வி கற்றனர். அந்த வீட்டுக்கு நானும் காந்தனும் வேறு மாணவத் தோழர்களும் அடிக்கடி சென்று அளவளாவுவது உண்டு.

அங்குதான் எமது இடதுசாரி அரசியல் ஈடுபாடு, இலக்கிய ஈடுபாடு, சமூக ஈடுபாடு என எல்லாமே ஏற்பட்டன. அந்தப் ‘பொற்கால’ வாழ்க்கையில் எமக்குள் ஏற்பட்ட உறவுகளும், ஏற்பட்ட அனுபவங்களும் எண்ணிலடங்காதவை, என்றும் மனதை விட்டும் அகலாதவை.

அங்கு சந்தித்த மாணவத் தோழர்கள் அனைவரும் எமக்குள் ஏற்பட்ட தொடர்புகள் மற்றும் உடன்பாடு காரணமாக அப்போது ‘சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சி’ என்று அழைக்கப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புகளை நாமே ஏற்படுத்தியதுடன், அதன் தலைமையிலான வாலிபர் சங்கமொன்றையும் அமைத்து அரசியல் வேலைகளில் ஈடுபட்டோம்.

அந்த வேலைகளால் ஏற்பட்ட உணர்வு காரணமாக எம்மில் மூவர் எமது படிப்பை இடைநிறுத்திவிட்டு முழுநேரமாக கட்சி வேலை செய்வது எனத் தீர்மானித்தோம். எமது வேலைகளை நகரப்புறங்களைத் தவிர்த்து கிராமப்புற விவசாயிகள் மத்தியில் மேற்கொள்வது எனவும் முடிவு செய்தோம். அதன் அடிப்படையில் நான் கட்சி வேலைகளுக்காக கிளிநொச்சிப் பிரதேசத்துக்குப் புறப்பட்டுச் சென்றேன். தோழர் காந்தன் வவுனியா பிரதேசத்துக்குச் சென்றார். மற்றவர் சிறிது காலம் சுன்னாகத்தில் தங்கியிருந்து வேலை செய்துவிட்டு, பின்னர் கிளிநொச்சிக்கு வந்து என்னுடன் இணைந்து கொண்டார். நாங்கள் மூவரும் குறைந்தது மாதத்தில் ஒரு தடவையாவது சந்தித்து ஒன்றாகத் தங்கியிருந்து உரையாடுவது வழக்கம்.

1970 ஆம் ஆண்டு தோழர் காந்தனுக்கு உதவியாக வேலை செய்வதற்காக கட்சி என்னை வவுனியாவுக்கு அனுப்பியது. அங்கு தோழர் காந்தன் மன்னார் வீதியிலிருந்த பூவரசன்குளத்தைத் தளமாகக் கொண்டும், நான் யாழ்ப்பாண வீதியிலிருந்த புதுக்குளத்தைத் தளமாகக் கொண்டும் வேலைகளை மேற்கொண்டோம். அப்பொழுது நாம் இருவரும் அக்கம் பக்கமாக இணைந்து நின்று பல வேலைகளை முன்னெடுத்தோம். அங்குள்ள மக்கள் மத்தியில் நாம் பல வேலைகளை மேற்கொண்டாலும், அவற்றில் வவுனியா – மன்னார் வீதியில் 10 வது மைலில் அமைந்திருந்த இராமையன் கல் என்ற இடத்திலிருந்த ஒரு பெரிய நெல் பண்ணையொன்றில் வேலை செய்த நூற்றுக்கணக்கான இந்திய வம்சாவழி கூலி விவசாயிகளின் கூலி சம்பந்தமாக நாம் நடத்திய போராட்டம் முக்கியமானது.

இந்த நிலைமையில், 1971 ஏப்ரலில் நடைபெற்ற ஜே.வி.பியின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சி வவுனியா மாவட்டத்தில் தமிழ் பகுதிகளில் வேலை செய்த எம்மையும் பாதித்தது. பொலிசாரின் கெடுபிடிகள் எம்மையும் பாதித்ததால், நானும் காந்தனும் தொடர்ந்தும் அங்கிருக்க முடியாததால் யாழ்ப்பாணம் திரும்பி வந்தோம்.

அந்தக் காலகட்டத்தில் எமது கட்சித் தலைமை பின்பற்றிய இடது சந்தர்ப்பவாத போக்கிற்கு எதிராக உட்கட்சிப் போராட்டமும் இன்னொரு பக்கத்தில் நடைபெற்று வந்தது. நாம் மூவரும் கூட அந்தப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டோம். அந்தப் போராட்டம் காரணமாக கட்சியில் சில பிளவுகள் தோன்றின. ஒரு பிளவின் காரணமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) என்ற புதிய கட்சி தோன்றியது. நான் அதில் என்னை இணைத்துக் கொண்டேன். அதேபோல, இன்னொரு பிளவின் மூலம் தோன்றிய கீழைக்காற்று இயக்கம் என்ற அமைப்பில் காந்தன் இணைந்து கொண்டார்.

தேசிய இனப் பிரச்சினை கூர்மையடைந்த பின்னர் தமிழ் இளைஞர்களால் பல ஆயுதப் போராட்ட இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன. அதே வேளையில் எமது இடதுசாரிக் கட்சிகளின் வேலைகள் தமிழ் தேசியவாதத்தின் போக்காலும், அந்த இயக்கங்களின் ஜனநாயக மறுப்புப் போக்காலும் செயலிழந்தன. அது மாத்திரமின்றி, எமது கட்சிகளைச் சேர்ந்த பலர் பல்வேறு தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களில் இணைந்தும் கொண்டனர். அந்தப் போக்கு காந்தனையும் விட்டு வைக்கவில்லை. அதன் பின்னர் எங்கள் இருவரினதும் பாதைகள் வெவ்வேறாயின. நான் முதல் அடியை எடுத்து வைத்த பாதையிலேயே தொடர்ந்தும் எனது பயணத்தைத் தொடர்ந்தேன்.

காந்தன் பல தமிழ் தேசியவாத அணிகளுடன் இணைந்து வேலை செய்ததாக கேள்வியுற்றேன். அவரும் அதற்கான ‘காரணங்களை’ என்னிடம் கூறியிருக்கிறார். இருந்த போதிலும் தான் ஆரம்ப காலத்தில் வரித்துக்கொண்ட மார்க்சியக் கொள்கைகளை தொடர்ந்தும் அவர் கடைப்பிடிக்க முயன்று வந்துள்ளார் என்பதையும் அவதானித்தேன். ஆயினும் அவரது சூழல் அதற்கான வாய்ப்புகளை அவருக்கு வழங்கவில்லை என எண்ணுகிறேன்.

திரும்பிப் பார்க்கையில் எமது 60 வருட அரசியல் வாழ்வில் நாம் என்னத்தைச் சாதித்தோம் என்ற அநாயாசமான உணர்வு சில வேளைகளில் ஏற்படுவதுண்டு. ஆனால், அது நாம் பின்பற்றிய தத்துவத்தின் தவறால் அல்ல, நாம் எமது சமூகத்தைச் சரிவரப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப எமது தத்துவத்தை பிரயோகிக்கத் தவறியதே அடிப்படைக் காரணம் என்பதை விளங்கும் போது சற்று ஆசுவாசம் ஏற்படுவதும் உண்டு.

தமது இலட்சியத்தை அடைய முடியாத கவலைகளோடு மரணித்த பல மார்க்சியவாதிகள் போலவே, தோழர் கௌரிகாந்தனதும் மரணமும் சம்பவித்துள்ளது. ஆனால், நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், எமது இலட்சியங்கள் மனித இனம் உள்ளவரைமரணித்துப் போகாது. அந்த இலட்சியம் எம்மைத் தொடர்ந்து வரும் சந்ததிகளால் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.

எனவே, கவலைகள் அற்று நிம்மதியாய் உறங்கு தோழா!

Exit mobile version