-இந்து குணசேகர்
சிறந்த ஆவண குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம் (short documentary) ஒஸ்கர் (Oscar) விருது வென்றுள்ளது. தமிழகத்துடன் தொடர்புடைய இந்த ஆவணப் படத்தின் படைப்பாளி கார்த்திகி கொன்சால்வ்ஸ் (Kartiki Gonsalves) குறித்து பார்ப்போம்.
தமிழ்நாட்டில் உள்ள தெப்பாக்காட்டில் வனத் துறை கண்காணிப்பில் குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் இருந்து வருகிறார் பொம்மன். தாய் யானை மின்சாரம் தாக்கி இறந்துவிட, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடைத்த குட்டி யானை ரகுவை வளர்க்கும் பொறுப்பு பொம்மனிடம் விடப்படுகிறது. பொம்மனும் அவருக்கு உதவியாக இருக்கும் பெல்லியும் சேர்ந்து ரகுவை மீட்டெடுக்கிறார்கள்.
இவ்வாறு யானைக்கும் – இயற்கைக்கும் – மனிதர்களுக்கும் இடையேயான அன்பினை தத்ரூபமாக வழங்கிய ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவண குறும்படத்திற்குதான் ஒஸ்கர் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த ஆவண குறும்படம் ஒஸ்கருக்கு தேர்வு செய்யப்பட்டது முதலே அதன் இயக்குர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மீது வெளிச்சம் பற்றி கொண்டது.
இந்த வெளிச்சத்துக்கு இடையே கையில் ஒஸ்கர் விருதுடன் பேசிய கார்த்திகி கோன்சால்வ்ஸ், “பழங்குடி மக்களையும் விலங்குகளையும் முன்னிலைப்படுத்திய எங்கள்படத்தை அங்கீகரித்த அகாடமிக்கு (Academy) நன்றி… இந்த விருது என் தாய்நாடான இந்தியாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
யார் இந்த கார்த்திகி கோன்சால்வ்ஸ்?: நீலகிரியில் பிறந்த கார்த்திகி அங்கேயே தனது கல்லூரிப் படிப்பபையும் முடித்திருக்கிறார். கார்த்திகி அடிப்படையில் ஒரு புகைப்பட பத்திரிகையாளர். குறிப்பாக காட்டு விலங்குகள் சார்ந்து, சுற்றுச்சூழல் சார்ந்தும் அவர் இயங்கி வந்திருக்கிறார். டிஸ்கவரி சேனல் (Discovery channel) உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணியாற்றி இருக்கிறார்.
இவ்வாறு சென்று கொண்டிருக்கையில் நீலகிரியில் கார்த்திகி ஒருமுறை பதேச்சையாக பொம்மனையும், அவாது யானை ரகுவையும் சந்தித்திருக்கிறார். இந்த யதேச்சையான சந்திப்புத்தான் ஆஸ்கர் வரை கார்த்தகியை கொண்டு சேர்த்துள்ளது. ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’தான் கார்த்திகியின் முதல் படம். இந்த ஆவணப் படத்தை முழுமையாக உருவாக்க கார்த்திகிக்கு 6 வருடங்கள் தேவைப்பட்டன.
ஆவணப் படம் உருவாக்கம் குறித்து கார்த்திகி கூறும்போது, “நான் பெரும்பாலும் வனப்பகுதியின் அருகில் வளர்ந்ததால் அதன் தன்மை எனக்கு நன்கு தெரியும்.விலங்குகளும் எனக்கு புதிது அல்ல. ஆவணப் படம் என்பது முழுவதும் யதார்த்த நிகழ்வுகளின் அடிப்படையில் ஆனது. அதற்கு செட்கள், ஸ்கிரிப்ட் எல்லாம் தேவையில்லை. இம்மாதிரியான படைப்புகளுக்கு பொறுமையும், வேட்கையும் முக்கியம்” என்கிறார்.
‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப் படத்தை பிரபல தயாரிப்பாளரான குனீத் மோங்கா தயாரித்திருக்கிறார். இவ்வாறு பெண்கள் இருவர் சேர்ந்து இந்தியாவுக்கு ஒஸ்கரை பெற்று தந்திருக்கிறார்கள்.
“நான் காட்டு நாயக்கன்… காட்டு நாயக்கன் என்றால்… நான் காட்டிலேயே பிறந்து, வளர்ந்து பெரியாவனானேன் என்பது அதன் பொருள். இனிமேலும் நாங்கள் காட்டில்தான் இருப்போம்…” என்று கனத்த குரலில் அறிமுகமாகிறார் பொம்மன். முதுமலையில் உள்ள தெப்பாக்காடு யானைகள் முகாமை (ஆசியாவிலேயே பழமையான முகாம்) சுற்றி பயணிக்கிறது இந்த ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) ஆவண குறும்படம்.
தெப்பாக்காட்டில் வனத்துறை கண்காணிப்பில் குட்டி யானைகளை பராமரிக்கும் பணியில் இருந்து வருகிறார் பொம்மன். தாய் யானை கரன்ட் ஷாக்கில் இறந்துவிட, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடைத்த குட்டி யானை ரகுவை வளர்க்கும் பொறுப்பு பொம்மனிடம் விடப்படுகிறது. பொம்மனும் அவருக்கு உதவியாக இருக்கும் பெல்லியும் சேர்ந்து ரகுவை மீட்டெடுக்கிறார்கள். இருவரிடம் பாசமாக வளர்கிறது ரகு. பொம்மன், ரகுவை சக யானைகளின் வாழ்வை வாழ காட்டுக்குள் விட்டாலும், ரகு அவற்றுடன் சேர மறுக்கிறது. ரகுவிற்கு பிறகு அம்மு குட்டி என்ற குட்டியானையும் பொம்மன் – பெல்லியிடம் ஒப்படைக்கப்படுகிறது. ரகுவும், அம்முகுட்டியும், பொம்மன் – பெல்லியின் உலகமாக மாறுகின்றன. நால்வரும் குடும்பமாக மாறுகிறார்கள்.
பொம்மன் – பெல்லி திருமணம் என நாட்கள் நகர்கின்றன. இந்த நிலையில், வனத்துறையால் ரகு வேறு ஒருவரிடம் பராமரிப்புக்காக அழைத்து செல்லப்படுகின்றது. குழந்தையை இழந்தது போல் பொம்மனும், பெல்லியும் உடைகின்றனர். எனினும் அம்மு குட்டியின் இருப்பு இருவரையும் ஆசுவாசப்படுக்கிறது. கைவிடப்பட்ட யானை குட்டிகளை வளர்ந்த முதல் தம்பதி என்று பொம்மனும் – பெல்லியும் அறியப்படுகிறார்கள்.
ரகு – பொம்மன் – பெல்லி – அம்முகுட்டி என நால்வருக்கும் இடையேயான உணர்வை காட்சிகள் மூலம் தத்ரூபமாகவும், அதேவேளையில் மனிதர்களின் ஆக்கிரமிப்புகளால் வனவிலங்குகள் சந்தித்த, சந்திக்கும் இழப்புகளை ஆழமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ். படத்தின் ஒளிப்பதிவும், இசை, எடிட்டிங் என அனைத்தும் கச்சிதமாக பொருந்தியுள்ளன. அதற்கான அங்கீகாரமாகத்தான் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஒஸ்கரில் ஆவணக் குறும்படம் ஒஸ்கர் (Oscar) விருது வென்றுள்ளது.
ஆவணப்படத்தின் முடிவில்… ரெட்டை குடுமி அணிந்துகொண்டு அம்முகுட்டி நம்மிடமிருந்து சட்டென்று விடைபெறுகிறது. ஆனால், பார்வையாளர்களாகிய நமக்கு இப்படத்திலிருந்து முழுமையாக விடுப்பட சில நிமிடங்கள் தேவைப்படுகிறது. காரணம், இப்படத்தில் அவ்வளவு காதல் நிரம்பியிருக்கிறது! ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ்’ – நெட்பிளக்ஸ் ஓடிடி (Netflix Odd) தளத்தில் காணலாம்.