-நீ. சு. பெருமாள்
இவனுக்கு முந்தைய வரலாறு அனைத்தும் இவனுள் முடிந்தது… பிந்தைய வரலாறு அனைத்தும் இவனுள் தொடங்குகிறது.. என்று தமிழ் இலக்கிய எழுத்துலகில் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தன் *ஜெயபேரிகை* பத்திரிக்கையில் பதிவு செய்திருக்கிறார்.
உண்மைதான் ஒவ்வொருவரின் கல்லறையிலும் தோற்றம் மறைவு என ஆண்டுகளை குறிப்பிட்டிருப்பார்கள் கார்ல் மார்க்சின் கல்லறையிலும் 1818 – 1883 என்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான இந்த கோட்டில் தான் ஒவ்வொருவரின் வாழ்நாள் சாதனைகள் வேதனைகள் வெற்றிகள் தோல்விகள் என அனைத்தும் அடங்கி விடுகின்றன.
இன்று கார்ல் மார்க்ஸின் 140 வது நினைவு தினம். 65 வயது வரையில் இந்த உலகில் வாழ்ந்தவர்… 1843 மார்ச் 14 ல் சவரம் செய்யாத முகத்துடன் நிலைகுத்திய பார்வையுடன் நாற்காலியில் உட்கார்ந்தவாறு தனது சிந்தனைகளை நிறுத்திவிட்டு காலமானார்…
இலண்டனில் அரச குடும்பத்தார் மற்றும் உயர் பதவி வகித்தவர்கள் அடக்கமாகும் கல்லறைத் தோட்டத்தில் மார்க்சின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. மாறாக அதன் எதிர்புறத்தில் ஹைகேட் கல்லறை (Highgate Cemetery) தோட்டத்தில் மார்க்சின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. எளிய மக்கள் இறந்து போனால் அடக்கம் செய்யும் இந்த ஹைகேட் பகுதியில்தான் அடக்கம் செய்ய அன்றைய முதலாளித்துவ பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது.
பிரஷ்யா என்கிற கூட்டமைப்பில் இருந்த ஜெர்மனியில் பிறந்தவர்… ஆனால் இறக்கும்போது நாடற்றவராக ( *Stateless Person) இருந்தார். உற்ற நண்பராகத் திகழ்ந்த ஏங்கல்ஸ் உள்ளிட்ட 11 பேர்கள்தான் அந்த மிகப் பெரும் சிந்தனையாளரின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றனர். எளிய மக்களின் கல்லறைகளுக்குள் ஒன்றாக காரல் மார்க்ஸ் கல்லறை இருந்தால் காலத்தே கரைந்து போகும் என்று பிரிட்டன் முதலாளித்துவம் எண்ணியது. ஆனால் மார்க்ஸ் காலமாகி 140 ஆண்டுகள் ஆன பின்னாலும் இன்றைக்கும் மார்க்சின் கல்லறை மீது மலர்களை வைத்து மரியாதை செலுத்துவோர் எண்ணிக்கை குறையவில்லை.
குறிப்பாக வெளிநாட்டவர் இலண்டன் நகரைச் சுற்றிப்பார்க்க வேண்டும் எனில் சுற்றுலா வாகனம் ஓட்டுபவர் மறக்காமல் அவர்களிடம் கேட்கின்ற கேள்வி மார்க்சின் கல்லறை அமைந்த ஹைகேட் பகுதிக்கு போகலாமா என கேட்பது வழக்கம்… அந்த அளவுக்கு இன்றைக்கும் சர்வதேச அளவில் நினைக்கப்டுகின்ற… பெரும்பாலான சிந்தனைவாதிகள் பொதுவுடமைவாதிகள் மற்றும் பொருளாதார ஆய்வாளர்களால் நேசிக்கப்படுகின்ற ஒரு மனிதராக கார்ல் மார்க்சின் பெயர் நிலைத்துள்ளது.
கார்ல் மார்ஸ் ஒரு தத்துவவாதியாக, சிந்தனையாளராக, புரட்சிக்காரராக மட்டுமே பார்ப்போர் உண்டு. அதையும் கடந்து ஒரு காதலிக்குச் சிறந்த காதலராக… கவிதைகள் படைக்கும் கவிஞராகவும் இருந்தார் என்கிறது அவரது இளமைக் கால வரலாறு. காதலும் கவிதைகளும் படைக்கும் இதயத்தில் தான் புரட்சியும் இருக்கும் என்பதை மார்க்ஸ் வரலாறு நமக்குச் சொல்கிறது.
மார்க்சின் தந்தை ஹென்றிச் மார்க்ஸ் (Heinrich Marx) ஒரு யூதர். தாயார் பிரஸ்பேர்க் (Pressburg) ஒரு டச்சுக்காரப் பெண்மணி. இத்தம்பதியர்க்கு 9 குழந்தைகள். 5 பேர் இறந்து போக மீதமிருந்த நான்கு குழந்தைகளில் ஒருவர்தான் கார்ல் மார்க்ஸ். வழக்கறிஞராக இருந்த தந்தையாரிடம் அவ்வளவாக வழக்குகள் வரவில்லை காரணம் ஜெர்மனியர்கள் எப்போதுமே யூதர்களை வெறுத்தது தான்…. வேறுவழியில்லாமல் மார்க்ஸின் குடும்பம் மார்ட்டின் லூதரால் வழிநடத்தப்பட்ட கிருத்தவ மதத்தை தழுவுகிறது. அதன் பின்னால் தான் மார்க்சின் தந்தைக்கு வழக்குகள் வருகின்றன. ஜெர்மானியர்களின் தொடர்பு ஏற்படுகிறது. அப்படி மார்க்சின் தந்தையோடு பழக வந்தவர்தான் பிற்காலத்தில் மார்க்சின் மனைவியான ஜென்னியின் தந்தை. மார்க்சின் வீட்டில் ஜெர்மனிய சிந்தனையாளர்கள் வருவதும் உரையாடுவதுமாக வீடு களை கட்டுகிறது. அந்த உரையாடல்களை சிறு வயதில் இருந்தே மார்க்ஸ் கவனிக்கத் தொடங்குகிறார். ஜென்னியின் தந்தையார் வீட்டில் நூலகம் இருப்பதை அறிந்த மார்க்ஸ் அவரது வீட்டிற்கு அடிக்கடி செல்கிறார். படிப்பதில் ஆர்வம் கொண்ட ஜென்னியுடன் இயல்பாகவே நட்பு கொள்கிறார் மார்க்ஸ். அந்த நட்பு காதலாக மாறி பல தடைகளுக்குப் பிறகு திருமணம் செய்து கொள்கிறார்கள்.
மார்க்ஸை விட நான்கு வயது மூத்தவர் ஜென்னி. சிறு வயது முதலே ஜென்னியின் வீட்டுக்கு வந்ததால் நான் பார்த்து வளர்ந்த பையன் நீ என ஜென்னி அடிக்கடி கேலி பேசிய வரலாறும் ஜென்னியின் வாழ்க்கை வரலாறு குறிப்புகளில் காணப்படுகிறது. மார்க்ஸ், ஜென்னி தம்பதியர்க்கு ஏழு குழந்தைகள் பிறந்தன. அதில் நான்கு குழந்தைகள் பட்டினியால், நோயால் மருத்துவம் பார்க்க வசதியின்றி இறந்து போகிறார்கள். வறுமைக்கு எதிரான ஆயுதக் கண்டுபிடிப்பதில் மூழ்கியிருந்த மார்க்ஸ்க்கு எவ்வித இடையூறும் இன்றி பாதுகாத்தவர் ஜென்னி.
உலக ஏகாதிபத்திய சக்திகளை உறுதியுடன் எதிர்த்த மார்க்ஸ் தன்னுடைய மனைவியின் மரணத்தின் போது நிலைகுலைந்து போனார் என்று ஏங்கல்ஸ் பதிவு செய்துள்ளார். (ஜென்னியின் துயரம் மிகுந்த வாழ்க்கையை தனி நூலாகவே எழுதலாம்)
மார்க்சுக்கு 12 வயது வரையில் வீட்டில்தான் தொடக்கக் கல்வி. பிறகு கல்வி நிலையத்திற்கு வருகிறார் மார்க்ஸ். புதிய மாணவர்களைப் பார்த்து வழக்கம்போல் ஆசிரியர்கள் கேள்விகளை கேட்கிறார்கள். நீங்கள் படித்துவிட்டு என்னவாகப் போகிறீர்கள் என்று…. ஒவ்வொரு மாணவரும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துகின்றனர் டாக்டராக… பொறியாளராக… அரசு உயரதிகாரியாக வருவோம் என்கிறார்கள்…கார்ல் மார்க்ஸ் எழுந்து நின்று *மனித குலத்தில் ஒரு சாரார் சகல வசதிகளுடன் பொருளாதாரத்தில் உயர்ந்து வாழ்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் உண்ண உணவு கூட இல்லாமல் பட்டினியோடு போராடுவது ஏன்….* இதற்கான விடையைத் தேடுவதுதான் எனது எதிர்கால லட்சியம் என்று கேள்வி எழுப்பிய ஆசிரியர் அதிர்ந்து போகும் அளவுக்கு பதில் சொல்கிறார் மாணவனாக இருந்த மார்க்ஸ்.
கார்ல் மார்க்ஸ் மாணவனாக இருந்த சமயத்தில் ஜெர்மானிய தத்துவவாதி ஹெகல் என்கிற சிந்தனையாளரின் தாக்கம் பெரும்பாலான இளைஞர்களை கவர்ந்திருந்தது. அவர்தான் முதன்முதலில் மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது… மாறாதது ஒவ்வொரு பொருளின் வளர்ச்சிக்கு பின்னாலும் மாற்றம் இருந்தே ஆகும் அதுதான் இயற்கையின் விதி என்று அந்த வாசகத்தை பயன்படுத்தியவர். ஜெர்மனிய இளைஞர்களைப் போல முதன் முதலில் ஹெகலியவாதியாகத்தான் மார்க்ஸ் இருந்தார். அவரின் படைப்புகளைத் தான் மார்க்சும் விரும்பினார். ஆனால் ஒரு விஷயத்தில் முரண்படுகிறார். *இந்த உலகம் மாறிக் கொண்டே இருக்கிறது இந்த உலகத்தின் மாற்றம் என்பது யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றும் மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தின் கடவுளின் தூதுவர்களாக தான் மன்னர்கள் ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். எனவே எல்லாம் மாறினாலும் இந்த ஆட்சிமுறை மாறாது மன்னர்களும் மாற மாட்டார்கள் ஏனென்றால் இந்த உலகத்தை படைத்த மாபெரும் சக்தி ஒன்று அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்கள் தான் கடவுளின் தூதுவர்கள் என ஹெகல் சொல்வதை மார்க்ஸ் நிராகரித்தார்.
ஹெகலின் தத்துவத்தை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட கார்ல் மார்க்ஸ் உலகத்தைப் படைத்தது கடவுள் தான் என்பதில் மாற்றுக்கருத்து கொண்டார். எல்லாமே மாறும் என்றால் மன்னர்களின் ஆட்சி முறையும் மாறத்தானே வேண்டும் என்றார் மார்க்ஸ். இன்னும் தீவிரமாக ஆராய்ந்தார் அதற்காக அவர் டாக்டர் பட்டம் பெறுவதற்கு அவர் எடுத்துக் கொண்ட பாடம் நாத்திகம். மதத்தின் வேலை என்ன? மதம் மனிதனை எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறது? என்கிற ஆய்வில் ஈடுபடுகிறார். அந்த ஆய்வின் முடிவில் வெளியானதுதான் ‘மூலதனம்’ எனும் ‘தாஸ் கேபிடல் ‘(Das Kapital). இந்த நூலை தன் சம காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த டார்வின் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ய விரும்பி டார்வினுக்கு கடிதம் எழுதுகிறார் காரல் மார்க்ஸ். ஏனென்றால் உயிரின் தோற்றுவாய் என்கிற டார்வினுடைய அந்த ஆய்வு முடிவு என்பது அனைவராலும் ஏற்கக் கூடியதாக இருந்தது. அவர்தான் முதன் முதலில் மனிதனை கடவுள் படைக்கவில்லை மாறாக உயிர்களின் பரிணாம தொடர்ச்சி தான் இன்றைய மனிதன் என்று மதவாதிகளுக்கு எதிரான கருத்துக்களை பதிவு செய்தார். அதற்காக மதவாதிகளின் துன்புறுத்தலுக்கு ஆளாகி வீட்டைவிட்டு செல்ல வேண்டிய அவலம் ஏற்பட்டது. அதனால் டார்வின் சிறிதுகாலம் தன்னுடைய உறவுகளை விட்டு பிரிந்தார்.
இந்த நிலையில் மூலதனம் நூலை சமர்ப்பணம் செய்கிறேன் என்று மார்க்ஸ் எழுதிய கடிதத்திற்கு டார்வின் பதில் கடிதம் எழுதினார்…. தற்போது மதவாதிகளோடு நான் கொஞ்சம் சமரசம் செய்துகொண்டு என்னுடைய உறவுகளோடு வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் உங்களுடைய மூலதனம் படைப்பை நான் மனப்பூர்வமாக வரவேற்றாலும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க இயலவில்லை. எனவே நீங்கள் என் பெயரில் சமர்ப்பணம் செய்ய வேண்டாம் என்று வருத்தத்தோடு மார்க்சுக்கு டார்வின் கடிதம் எழுதியதும் வரலாறாகும். மத உணர்வுகள், மதத்தினுடைய அந்த தாக்கம் எந்த அளவுக்கு சிந்தனையாளர்களை பாதிக்கிறது என்பதற்கு வரலாற்றில் இது ஒரு உதாரணமாகும்.
ஏங்கல்ஸ் நட்பு கிடைத்த பிறகு மார்க்சின் சிந்தனையில் வேகமெடுக்கிறது. குறிப்பாக மார்க்ஸ் குடும்பத்தின் வறுமைத் தீயை அணைக்க உதவி செய்கிறார். தம்முடைய 28 ஆம் வயதில் வறுமையின் தத்துவம் (The poverty of philosophy) எனும் பெயரில் 1847 ஆம் ஆண்டில் முதல் ஆய்வு நூல் வெளியிடுகிறார். அடுத்த ஆண்டில் உலகின் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளில் புரட்சிகள் மூலம் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய கம்யூனிஸ்ட் வேலை திட்டம் எனும் 24 பக்க நூலினை தன் நண்பர் ஏங்கல்ஸ் உடன் இணைந்து வெளியிடுகிறார். இந்த சின்னஞ்சிறு நூலானது தமிழ் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது . அந்த கம்யூனிஸ்ட் அறிக்கையில் உழைப்பாளி மக்கள் என்ன செய்ய வேண்டும் என்கிற கேள்வி பதில் அடிப்படையில் தான் அந்தப் புத்தகம் உலக உழைப்பாளி மக்களின் மனதோடு பேசியது… அந்த புத்தகத்தின் வீச்சு மேற்குலகத்தின் ஆட்சியாளர்களை உலுக்கியது. ஜெர்மன் தேசம் கார்ல் மார்க்சுக்கு தத்துவத்தை சொல்லிக்கொடுத்தது. பிரான்சு தேசம் அரசியலைக் கற்றுக் கொடுத்தது பிரிட்டன் நாடு பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களைவது எப்படி என்கிற ஆய்வுக் களத்தை அமைத்தது.
இங்கிலாந்தில் அன்றைக்கு முற்போக்கு எண்ணம் கொண்ட இளைஞர்கள் சிலரால் நியாயவாதிகள் எனும் பெயரில் ஒரு சங்கம் இயங்கி வந்தது. அதில் மார்க்சையும், ஏங்கல்சையும் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்தச் சங்கம்தான் பின்நாட்களில் பொதுவுடைமையரின் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பிரிட்டன் நூலகத்தில் காலையில் சென்றால் இரவில் வருவது. நூலக குறிப்பைக் கொண்டு எழுதுவது என தன் வாழ்நாட்களில்15 ஆண்டுகள் பொருளாதார ஆராய்சியிலேயே செலவழித்தார்.
உலகை மாற்றக்கூடிய வல்லமை உழைக்கும் மக்களுக்குத் தான் உண்டு என்றும்…. உலகத் தொழிலாளர்களே ஒன்றுசேருங்கள்… நீங்கள் இழக்கப் போவது அடிமை விலங்குகளைத்தான்… அடையப் போவதோ பொன்னுலகம் எனச் சொல்லி ‘தாஸ் கேபிடல்’ எனும் ‘மூலதனம்’ நூலைப் படைத்தார்.
இன்றைக்கும் கார்ல் மார்க்சின் கல்லறையில் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்கிற வாசகம் பொறிக்கப்பட்டிருக்கிறது. மனிதகுலம் இருக்கும் வரையில் மார்க்சின் பெயர் நிலைத்து நிற்கும் என இரங்கல் கூட்டத்தில் ஏங்கல்ஸ் பேசியது உண்மைதான் என உலகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.