Site icon சக்கரம்

செயற்கை நுண்ணறிவு யுகத்தில்….

-இரா.சிந்தன்

சமுதாய உற்பத்தியின்  அடுத்த விளைவாகத்தான்  செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் உருவாகியுள்ளன.

னித சமூகம் கால்நடை வளர்ப்பையும், வேளாண்மையையும் கைக்கொள்வதற்கு முன்பே நாய்கள் நம்மோடு பழகத் தொடங்கிவிட்டன என்று சில ஆய்வுகள் காட்டு கின்றன. ஒரு பெண்ணும், ஆணும் அவர்களோடு ஒரு நாயும் புதைக்கப்பட்ட பழமையான இடம் ஆய்வாளர்களால் அறியப்பட்டு, பின்னர் நவீன அறிவியலும் அதன் பழமையை உறுதி செய்தது. அதன்படி நாய்கள் நமது குடும்பங்களோடு பிணைக்கப்பட்டு 15 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மற்ற விலங்குகளை விடவும் நாய்களால் மனிதர்களை புரிந்துகொள்ள முடிகிறது. நாய்கள் தொடக்கத்தில் நம்மோடு வேட்டையில் உடனிருந்துள்ளன, இப்போதும் நாய்கள் நம்மோடு இருக்கின்றன. சில வேலைகளுக்கும் அவைகளை பழக்கப்படுத்தி உதவி பெற முடிகிறது.

ரோபோ நாய்கள்

அண்மையில், நாயைப் போன்ற ஒரு இயந்திரத்தைக் காண முடிந்தது. அது மனிதர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை எடுத்துவருகிறது. அதன் கால்களில் சக்கரங்கள் இல்லை. நாய்களைப் போன்றே தாவி ஓடுகிறது. ஒரு கோப்பையில் வைக்கப் பட்ட பழச்சாறை சிந்தாமல், சிதறாமல் எடுத்து வருகிறது. புல்வெளியில் நடக்கிறது. மேடு, பள்ளங்களில் தாவிக் குதிக்கிறது. வீட்டில் உள்ள குழந்தைகள், முதியவர்களுக்கு இந்த இயந்திரங்கள் துணையாக இருக்கக் கூடும், ராணுவத்தில் இவற்றை பயிற்றுவிக்க முடியும், பொருட்களை டெலிவரி செய்வதில் இந்த நுட்பங்கள் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று பல்வேறு சாத்தியங்களையும் தொழில்நுட்ப அறிஞர்கள் அடுக்குகிறார்கள். இதற்குப் பெயர்தான் ‘செயற்கை நுண்ணறிவு’ கடந்த கால இயந்திரங்களுக்கும், இந்த புதிய இயந்திரங்களுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு,  இவை அதிநவீன மென்பொருட்களோடு இணைக்கப் பட்டுள்ளன. இணைய வசதியோடு இணைந்துள்ளன. நம்முடைய செல்போன்களை போலவே எதிர்காலத்தில் ஒவ்வொரு இயந்திரமும் இணையத்தில் இணைக்கப்படவுள்ளன.

செல்போன்கள் அடைந்துவரும் பரிணாம மாற்றங்களே நம்மை ஆச்சர்யப்பட வைக்கின்றன. அதே மாற்றங்கள் எல்லா இயந்திரங்களிலும் ஏற்பட்டால் நிச்சயம் அவை இன்றைய வாழ்க்கையை புரட்டிப் போடும். அவ்வாறு ஏற்கனவே சில முந்தைய தலைமுறையினரின் வாழ்க்கையை இயந்திரங்கள் புரட்டிப் போட்டிருக்கின்றன. மனித ஆற்றலை வேறு வடிவத்தில் அவை மாற்றிக் கொடுத்தன. உதாரணமாக, ஆட்டுக்கல் மாவு அரைப்பதில் செலுத்திய பங்கை, கிரைண்டர் மாற்றியமைத்தது. ஒருவேளை எதிர்காலத்தில் அத்துடன் மென்பொருட்கள் இணைக்கப்பட்டு தோசை மாவுக்கும், அடை மாவுக்கும் சில பொத்தான்களை அழுத்தினால் போதும் என்ற நிலை ஏற்படலாம்.

சமூகத்தின் உற்பத்தி

செயற்கை நுண்ணறிவு மென்பொருட்களுக்குப் பின்னே ஆயிரக்கணக்கான மனிதர்கள் இயங்குகிறார்கள். அவர்கள் மனிதச் செயல்பாடுகளை கற்கிறார்கள். மென்பொருட்களுக்கு அதற்கேற்ற விதிகளை கற்பிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மனிதர்களின் செயல்பாடுகளும், திரும்பத் திரும்ப மேற்கொள்ளப்படும் பணிகளும் ஆராயப்பட்டு, பிழைகளைக் கண்டறிந்து நீக்கி செயற்கை நுண்ணறிவு மெருகூட்டப்படுகிறது. குறிப்பிட்ட சமுதாயச் சூழலிலேயே இது சாத்தியமாகியுள்ளது. உதாரணமாக உலகின் பல பகுதிகள் தற்போது அதிவேக இணைய வசதியில் இணைக்கப்பட்டுள்ளன. சூப்பர் கணினிகளின் வேகம், மனித ஆராய்ச்சியின் விளைவாக பல மடங்கு அதிகரித்துள்ளது. எனவே, சமுதாய உற்பத்தியின் அடுத்த விளைவாகத்தான் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் உருவாகியுள்ளன. மனித மொழி அறிவின், பல்வேறுபட்ட பயன்பாடுகளையும் மென்பொருட்களுக்குள் அடக்குவதில் கிடைத்திருக்கும் முன்னேற்றம் சாட் ஜிபிடி (ChatGPT) என்ற நுட்பத்தை உருவாக்கியுள்ளது. எழுத்துத் துறையில் அதன் அறிமுகம் மிகப்பெரும் ஆச்சரியங்களை உருவாக்கியுள்ளது. 

இந்த தொழில்நுட்பம், என்விடியா எனப்படும் நிறுவனம் உருவாக்கியுள்ள ‘டிஜிஎக்ஸ் ஏஐ சூப்பர் கம்யூட்டர்கள்’ வழியாக இயங்குகிறது. அதில் ஓபன்  ஏஐ (Open AI) என்ற மென்பொருளை வளர்த்தெடுத்துள்ளார்கள். இப்போது அந்த சேவையை மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னுடைய தேடுபொறியுடன் இணைத்து, தன்னுடைய வணிகத்தையும் இலாபத்தையும் பல நூறு மடங்கு விரிவாக்குவதில் பாய்ச்சல் வேகம் எடுக்கத் தயாராகியுள்ளது. சமுதாய உற்பத்தியின் விளைவை, தனியொரு பகாசுர முதலாளியின் மூலதனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்துவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

தேர்ந்த உதவியாளர்

சாட் ஜிபிடியிடம், சமோசா சமைப்பதற்கான குறிப்பை கேட்டால் உடனடியாக எழுதித் தருகிறது. சமோசா சாப்பிடுவதற்கான வழிமுறைகளை கேட்டால்  ஆலோசனைகளை அடுக்குகிறது. சமோசாவின் உடல் நல தீங்குகளை பற்றி கேட்டால் அதையும் சொல்கிறது. தன் வசம் இருக்கும் பதில்களை சாதுர்யமாக மாற்றி மாற்றிப் போட்டு நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. எனினும் அதற்கென்று ஒரு எல்லை உள்ளது.  இந்த செயற்கை நுண்ணறிவு அம்சங்கள், மனித அறிவைப் போன்று பரந்துவிரிந்தவை அல்ல. பயிற்றுவிக்கப்படும் துறையிலேயே அவை செயல்படும். அதன் செயல்பாட்டை பரிசோதித்து, பிழை நீக்குவதில் மனித மூளைகளுக்கு உள்ள பங்களிப்பை தவிர்க்கவே முடியாது. சாதாரணமாக, திரும்பத் திரும்ப நிகழக் கூடிய பிழைகளை இந்த செயற்கை அறிவுத்திறன் செயல்பாட்டால் தாமாகவே நீக்கிவிட முடிகிறது என்றாலும், சாட் ஜிபிடி ஒரு தேர்ந்த உதவியாளரின் இடத்தை மட்டுமே பிடித்துக்கொள்ள முடியும். அதே சமயத்தில் இந்த உதவியாளரை அமர்த்திக் கொள்ளும் வசதி எல்லோருக்கும் வாய்க்குமா? என்பது தான் முக்கியமான கேள்வி. இலாப வேட்கையுடன் கூடிய இதன் முதலாளியின் மூலதனத்தின் செயல்பாடுகள் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும்.

ஒரு காலத்தில் குதிரைகளை எட்ட நின்று பார்த்தவர்களும் இப்போது இருசக்கர வாகனங்களை பயன்படுத்துகிறார்கள். பேருந்துகள், ரயில்கள் பயன்பாட்டில் உள்ளன. வீடுகளுக்குள்ளும் மிக்சி,  மின் மோட்டார், வாசிங் மெசின்கள் செயல்படுகின்றன. எனவே, சாட் ஜிபிடி போன்ற சேவைகளை முதலாளித்துவத்தின் கட்டுப்பாடுகளை உள்ள டக்கியோ அல்லது தகர்த்தோ மனிதர்கள் அணுகுவார்கள். 

சோசலிசமும், முதலாளித்துவமும்

போக்குவரத்துத் துறையில் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் பரவலாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் தானியங்கி பேருந்துகளும், சரக்கு வாகனங்களும் விரைவில் பயன்பாட்டுக்கு வரக்கூடும். இந்த துறையில் ஆராய்ச்சி மேற்கொண்ட நிறுவனங்களின் மிக  முக்கியமான சவால், மனிதர்களை எதிர்கொள்வதுதான். குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு பழக்கப்படுத்தப்படும் இயந்திரங்களும் நிறைந்த சாலைகளுக்கு மனிதர்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். சிவப்பு விளக்கு எரிந்தாலும் கடைசி நொடி வரைக்கும் அதை கடந்துசெல்லவே எத்தனிக்கும் மனிதர்களோடு எந்த விபத்தும் ஏற்படுத்தாமல், ஒரு தானியங்கி வாகனம் பயணிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய சவாலாகும்.  இந்த சூழல் விபத்து ஏற்பட்டால் அதில் யார் மீது தவறு என்ற கேள்வியை சட்டத்தின் முன் நிறுத்துகிறது. சாலைகளின் வடிவமைப்பிலும், வாகனங்களின் வடிவமைப்பிலும் கூட மாற்றத்தை வற்புறுத்துகிறது. இப்படியான பின்னணியில், கூகுள் போன்ற பகாசுர நிறுவனங்கள் கூட இந்த ஆராய்ச்சியில் இருந்து  விலகிக் கொண்டன. அதே சமயம் சீனாவின் மாகாணங்களில் இந்த ஆராய்ச்சிகள் வேகமெடுத்துள்ளன. சோசலிசத்தின் திட்டமிட்ட அணுகு முறையின் காரணமாக, வாகனங்களை நவீனப்படுத்து வதில் தொடங்கிய ஆராய்ச்சிகள் தற்போது பொதுப் போக்குவரத்தின் அனைத்து அம்சங்களையும் வடிவமைப்பதை நோக்கித் திரும்பியுள்ளன. 

ஒரு சமூகமாக மனிதர்கள் இதனை முறையாக பயன்படுத்திக் கொண்டால் ஹாரன் ஒலிக்கு அவசியமில்லாத, நீண்ட வரிசைகளில் வாகனங்கள் காத்துக்கொண்டிருக்கத் தேவையற்ற, ஆற்றல் வீணடிப்பு குறைக்கப்பட்ட நவீன நகரங்கள் உருவாகக் கூடும். சீனா அவ்வாறான ஒரு நகரத்தை (சியாங்கன்) பெய்ஜிங்கில் இருந்து 2 மணி நேர பயணத் தொலையில் அமைத்து வருகிறது.

எதிர்காலத்தின் சவால்

ஆண்டாண்டு காலமாக மனிதர்கள் சேகரித்துள்ள அறிவினைத் தொகுத்துத்தான் அதி நவீன நுட்பங்கள் உருவாகின்றன. அவற்றில் செயற்கை நுண்ணறிவு மிகவும் தனித்துவமானதாகும். மனிதர்களின் அற்ப பிழைகளை அவை நீக்கிவிடுகின்றன. பிழைகளின் ஊடாகவே தனது கற்றலை மேற்கொள்ளக் கூடிய மனித இயல்பை அவை மழுங்கடிக்கக் கூடும்.  எனவே ஒரு சமூகம், அதனை மிகுந்த எச்சரிக்கை யுடனே கைக்கொள்ள வேண்டும்.  குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் அவற்றின்  பயன்பாட்டிற்கு சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்றன. கற்றல், கற்பித்தல் மற்றும் தேர்வு முறைகளிலும் அதற்கேற்ற மாற்றங்கள் தேவைப்படுகின்றன. உதாரணமாக, மனிதர்களின் விளையாட்டுத் திறனை ஆய்வுக்கு உட்படுத்துவதில் சில மென்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை, ஒவ்வொரு உடலுக்கும் ஏற்றவாறு தனித்துவமான பயிற்சிகளை பரிந்துரைக்கின்றன. பரிந்துரையை கணினி வழங்கலாம், பயிற்சியை மாணவர்தான் மேற்கொள்ள வேண்டும். எனவே, அனைத்து கல்வித் தளங்களிலும் நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற மேம்பாடு அவசியம்.

செயற்கை நுண்ணறிவின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் ஒட்டுமொத்த சமுதாயமும் பங்களிப்பைச் செலுத்துகிறது. ஆனால் அதன்  பலன்கள் சமுதாயமயமாகவில்லை. முதலாளித்துவத்தின் இந்த அடிப்படையான சிக்கல் எதிர்காலத்தில் ஏராளமான சிரமங்களை உருவாக்கக் கூடும்.  மனிதர்களின் வேலை நேரத்தைக் குறைப்பதில் மிகச் சிறந்த தாக்கத்தை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களால் சாத்தியமாக்க முடியும். ஆனால் முதலாளித்துவமோ அதனை வேலை ஆட்களை குறைக்கும் திசையிலேயே செலுத்தும்.  செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் தேவைகளுக்காக ஒட்டுமொத்த சமுதாயத்தின் சட்ட விதி களில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களும், அதனால் உருவாக்கப்படும் புதிய வாழ்க்கை நிலைமைகளும் முதலாளித்துவ ஏற்றத்தாழ்வில் புகுந்து வெளிப்படும் போது ‘நரகம்‘ போல இருக்க வாய்ப்புண்டு.

தானியங்கி கார்களுக்காக, சிறப்பாக அமைக்கப்படும் அதி நவீன சாலைகளில் சாலையோர கடைகளின் நிலைமை என்னவாக இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். முதலாளித்துவ ஏற்றத்தாழ்விற்கு முற்றாக முடிவுரை எழுதுவதே, அறிவின் நன்மைகளை அனைவருக்குமானதாக்கும். முதலாளித்துவ சுரண்டலுக்கு முடிவு எப்போது என்ற கேள்விக்கு சாட் ஜிபிடியும் இப்படித்தான் பதில் சொல்கிறது. ‘‘சமூக இயக்கங்களும், பொருளாதார சூழலும், அரசியல் உறுதியும் முகிழும்போது சுரண்டல் முடிவுக்கு வரும்’’. இந்த சூழலில் மே நாளின் லட்சியங்கள் முக்கியத்துவம்‌ பெறுகின்றன.

டிஜிட்டல் மே தினம்

நூறாண்டுகளுக்கு பின் மே நாள் கொண்டாட்டங்கள் எப்படி இருக்கும்‌ என்ற‌ கேள்வியை சாட் ஜிபிடி யிடம்  கேட்டபோது, அது இப்போதைய சமூக‌ வளர்ச்சிப் போக்குகளின் அடிப்படையில் அனுமானங்களை பட்டியலிட்டது. முதலாவதாக, ‘மே நாள் கொண்டாட்டங்கள் டிஜிட்டல் தளங்களில் நடக்கும். மெய்நிகர் வழிகளிலும் கூட்டங்கள் சாத்தியமாகும். தொழிலாளர்கள் இடம்பெயர்வு தொடர்வதால் பன்முக கலாச்சாரங்களின் சங்கமமாக அது அமைந்திடும்’ என்றது. அதனைத் தொடர்ந்து, ‘வளரும் நாடுகளில் தொழிலாளர்களுக்கு நல்ல ஊதியம், மருத்துவ வசதிகள், சமூக பாதுகாப்பிற்கான போராட்டங்கள் தொடர்ந்துகொண்டிருக்கும். வேலைகளில் இயந்திரத்தன்மை அதிகரிக்கும். எனவே அடிப்படை ஊதியத்திற்கும் பணிப் பாதுகாப்பிற்குமான முழக்கங்கள் மேலும் வலுப்படும்’ என்றது. இறுதியாக ‘ மே நாளில், பருவநிலை மாற்ற பிரச்சனைக்கு தீர்வு கோரும் போராட்டங்கள் நடக்கும். நீடித்த வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில், சூழலை பாதுகாக்கும் கோரிக்கைகள் முன்வைக்கப்படும்’.

இப்படி‌ மனித குலத்தின் மேம்பட்ட வாழ்க்கைக்காக கோரிக்கைகளை பட்டியலிட்ட அது, முதலாளித்துவ சுரண்டல் வேறு வடிவங்களில் தொடரும்‌ என்ற அனுமானத்தையே வெளிப்படுத்தியது. ஓய்வுக்கும், உறக்கத்திற்கும், வேலைக்குமான‌ மே நாள் இலட்சியங்கள் வலுப்படும்போது, செயற்கை நுண்ணறிவின் வெளிப்பாடுகள் கூர்மையாகும். முதலாளித்துவ ஏற்றத்தாழ்விற்கு முற்றாக முடிவுரை எழுதுவதே, அறிவின் நன்மைகளை அனைவருக்குமானதாக்கும் என்ற புரிதலை பெறக்கூடும். அதற்கான ஊக்கம் வர்க்கப் புரட்சி இயக்கத்தின் வலிமையில் அடங்கியுள்ளது.

Exit mobile version