Site icon சக்கரம்

பழங்குடி மக்களின் நிலங்களைச் சுரண்ட பெருவில் தடை

ழங்குடி மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து இயற்கை வளங்களைச் சுரண்டும் பெரும் நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு தென் அமெரிக்க நாடான பெருவில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தென் அமெரிக்க நாடுகளில் இயற்கை வளங்கள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுப் பெரும் நிறுவனங்கள் இவற்றைச் சுரண்டும் பணியை நீண்டகாலமாகச் செய்து வருகின்றன. தங்கள் சுரண்டல்களை எதிர்க்கும் அரசுகளையே கவிழ்த்துவிடும் அளவுக்கு சட்டவிரோத நடவடிக்கைகளும் உண்டு.  தென் அமெரிக்காவில் மக்களால் தேர்வு செய்யப் பட்ட ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்றங்கள் தூக்கி யெறிப்பட்ட நிகழ்வுகள் ஏராளமான உள்ளன.

பெரு நாட்டில் தங்கள் பகுதிகளில் இயற்கை வளங்களைச் சுரண்டும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடி மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த வாழ்க்கையே பறிபோகும் நிலை உரு வாகியுள்ளது என்று அவர்கள் குற்றம் சாட்டினர். தங்கள் வாழ்விடங்களை மக்கள் இழந்து நிற்பதை அவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளுக்கு சாட்சியாகக் காட்டினார்கள். பழங்குடியினரில் பலர் எந்தவிதத் தகவலும் இல்லாமல் காணாமல் போயிருப்பது கவலையளிக்கக்கூடிய ஒன்றாக அப்பகுதி மக்கள் பார்க்கிறார்கள்.

இந்நிலையில், பெரு நாடாளுமன்றத்தில் உள்ள வலதுசாரி உறுப்பினர்கள், உள்நாட்டு மற்றும் பன்னாட்டு பகாசுர நிறுவனங்கள் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கு வழிசெய்யும் மசோதாவை உருவாக்கினார்கள். அம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த மசோதாவை உருவாக்கிய உறுப்பினர்கள் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பெரும் நிறுவனங்களோடு தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.  இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்டால் பழங்குடி மக்களின் நிலங்களைத் தாராளமாகத் தோண்டும் உரிமை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குக் கிடைத்திருக்கும். லித்தியம், தாமிரம் மற்றும் மேலும் பல மதிப்புமிக்க கனிமங்களைச் சுரண்டுவதற்கான உரிமை அவர்களுக்குப் போயிருக்கும். இந்த மசோதாவை “இனப்படுகொலை மசோதா” என்று பழங்குடி மக்கள் சித்தரித்தனர். தங்களை வெளியேற்றும் நோக்கத்தில்தான் இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

மசோதா நிராகரிப்பு

பெருவின் அதிகாரப்பரவல் குழுவின் முன்பாக இந்த மசோதாவின் நகல் வைக்கப்பட்டது. இத்தகைய மசோதாவைத் தங்களால் அனுமதிக்க முடியாது என்று அந்தக்குழு தெரிவித்ததால், மசோதாவைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று வலதுசாரி உறுப்பினர்கள்  கூறிவிட்டனர். பழங்குடி மக்களின் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்று பல்வேறு சமூக அமைப்புகள் கொண்டாடுகின்றன. போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்களில் ஒருவரான தெரிசா மாயோ, “பெருவின் பழங்குடி மக்களுக்கும், அவர்களின் அமைப்புகளுக்கும், உலகம் முழுவதுமுள்ள சாதாரண மக்களுக்கும் கிடைத்த பெரும் வெற்றியாகும்“ என்றார். தென் அமெரிக்காவின் வலதுசாரி ஆட்சியாளர்களும், கட்சிகளும் தொடர்ந்து இயற்கை வளங்களைச் சூறையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரேசிலில் போல்சானரோவின் சட்டவிரோத சுரண்டல் நட வடிக்கைகளுக்கு இடதுசாரி ஜனாதிபதி லூலா டி சில்வா முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அமேசான் காடுகளின் பாதுகாப்பு உலகத்திற்கானது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். பெருவில் இடதுசாரி ஜனாதிபதியைச் சட்ட விரோதமாகப் பதவி நீக்கம் செய்துவிட்டு தங்கள் திட்டங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். மக்கள் போராட்டம் அதை முறியடித்துள்ளது.

Exit mobile version