-எஸ்.சண்முகம்
இது ஒரு பழைய விடயம்தான் என்றாலும் திரும்பவும் பேச வேண்டியுள்ளது.
அதாவது சிலர் மார்க்சியத்தையும் பெரியாரியத்தையும் எதிர் எதிராகப் பார்க்கின்றனர், வேறு சிலர் மார்க்சியத்துக்கு மேலாக பெரியாரியத்தை வைத்துக் கொண்டாடுகின்றனர். இந்த இரு நிலைப்பாடுகளும் தவறானவை என்பதே உண்மையான மார்க்சியவாதிகளின் கருத்தாகும்.
அதேநேரத்தில் முதலிலேயே இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும். அதாவது, மார்க்சியமும் பெரியாரியமும் ஒன்றல்ல என்ற விடயமே அது.
மார்க்சியம், பெரியார் பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்னர் தோன்றியது. கார்ல் மார்க்ஸ் பிரதானமாக தனது காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் நிலவிய வர்க்கப் போராட்டங்களையும், ஆளும் வர்க்கங்களுக்கிடையிலான போர்களையும் விஞ்ஞானபூர்வமாக ஆராய்ந்து, ஒரு சமதர்ம அரசை அமைப்பதன் மூலமே உழைக்கும் மக்கள் சகலவிதமான ஒடுக்குமுறைகளிலிருந்தும் சுரண்டல்களிலிருந்தும் நிரந்தரமாக விடுபட முடியும் என எடுத்துக் கூறினார்.
இதையேதான் பெரியாரும் தனது காலத்திய இந்திய சமூகத்தை – குறிப்பாக தமிழ் சமூகத்தை – ஆராய்ந்து சகல ஒடுக்குமுறைகள் சுரண்டல்களிலிருந்தும் மக்கள் விடுபட சமத்துவ சமுதாயம் அமைப்பதே வழி என வலியுறுத்தினார்.
எனவே கருத்தியல் ரீதியாகப் பார்த்தால் மார்க்சியமும் பெரியாரியமும் ஒரே விதமான கருத்தையே வலியுறுத்துகின்றன. எனவே இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிரானவர்கள் என்பது தவறானது.
ஆனால் இரு பகுதியினருக்கும் முரண்பாடு எங்கே வருகிறதென்றால், சமுதாயத்தைப் புரிந்து கொள்ளும் விதங்களிலும், அதை மாற்றியமைப்பதற்காக கையாளும் வழிமுறைகளிலும்தான்.
சமூகத்தில் நிலவும் அநேகமான பிரச்சினைகளுக்கு வர்க்கப் பிரிவினைதான் காரணம் என மார்க்சியம் எடுத்தியம்புகிறது. அதனால் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு வர்க்கப் போராட்டம்தான் அடிப்படையானது என மார்க்சியம் வலியுறுத்துகிறது.
ஆனால் பெரியாரியம் சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் சாதி அமைப்பும், மதவாதமும்தான் என எடுத்தியம்புகிறது. அதனால் சாதி அமைப்பையும், மதத்தையும் எதிர்த்து கருத்துப் பிரச்சாரம் செய்து மக்களை அதிலிருந்து விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
சமூகத்தை மாற்றியமைப்பதற்கு மிக முன்னேறிய வர்க்கமான தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து உழைக்கும் மக்களையும் அணி திரட்டி, பிற்போக்கு ஆளும் வர்க்கத்தை போராட்டத்தின் மூலம் தூக்கி எறிந்து, புதிய சமதர்ம (சோசலிச) அரசொன்றை அமைக்க வேண்டும் என மார்க்சியம் போதிக்கிறது. இந்தக் கருத்து விஞ்ஞானபூர்வமான பொருள்முதல்வாத தத்துவத்தின் அடிப்படையிலானது.
மறுபக்கத்தில், எந்த வர்க்கம் முதன்மையானது என்று பார்க்காமல் முழு மக்கள் மத்தியிலும் சாதியத்துக்கும் மதத்திற்கும் எதிரான கருத்துப் போராட்டத்தை நடத்துவதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என பெரியாரியம் போதிக்கிறது. இதை கருத்துமுதல்வாத அடிப்படையிலான தத்துவம் எனக் கொள்ளலாம்.
மார்க்சியம் குறிப்பிடும் போராட்டத்தில் ஒரு புரட்சிகரக் கட்சியின் தலைமைத்துவம், மக்களை அமைப்பு ரீதியாகத் திரட்ட வேண்டியதின் அவசியம், போராட்டத்துக்கான பாதை என்பன திட்டவட்டமாக வலியுறுத்தப்படுகின்றன. அவைகள் இல்லாமல் உழைக்கம் மக்கள் சுரண்டும் அதிகார வர்க்கத்திடமிருந்து அதிகாரத்தைப் பறித்தெடுத்து தமது சொந்த அதிகாரத்தை நிறுவ முடியாது என மார்க்சியம் வலியுறுத்துகிறது.
ஆனால் பெரியாரியத்தில் இவை எதுவும் வலியுறுத்தப்படுவதில்லை. சமூக மாற்றத்துக்கான திட்டவட்டமான வழிமுறைகள் எதனையும் பெரியாரியம் தெளிவாக முன்வைக்கவில்லை. கருத்துப் பிரச்சாரத்தால் மாற்றங்கள் ஏற்படும் என்ற கருத்துமுதல்வாத சிந்தனையே அதற்குக் காரணம்.
இருப்பினும், இரு தரப்பினரதும் வழிமுறைகள் வேறு வேறாக இருப்பினும், நோக்கங்கள் ஒன்றாக இருப்பதால், அதாவது சமதர்ம சமூகம் ஒன்றை நிறுவுவது என்பதாக இருப்பதால், இவைகள் எதிரெதிரான இயக்கங்கள் அல்ல.
கார்ல் மாக்ஸ்சுக்கு முதல் ஹெகல் என்ற தத்துவஞானிதான் சமதர்ம உலக மாற்றம் பற்றிப் போதித்தவர். அவரது கருத்துக்கள் கருத்துமுதல்வாதக் கருத்துக்கள் என கோடிகாட்டிய மார்க்ஸ், ‘உலகம் எப்படி இருக்கிறது என்று வியாக்கியானப்படுத்துவது மட்டும் போதாது, அதை எப்படி மாற்றலாம் என்றும் கண்டு பிடிக்க வேண்டும்’ என தனது கருத்தை வெளியிட்டார். அதன் அடிப்படையில் எழுந்ததே மார்க்சியம். இருப்பினும், ஹெகலையே மார்க்ஸ் தனது முன்னோடியாகக் கொள்கிறார்.
அதேபோலத்தான், ரஸ்யாவில் தனக்கு முதல் மார்க்சிய முன்னோடியாக இருந்த இன்னொரு கருத்துமுதல்வாதியான பிளக்கானோவை லெனின் முன்னோடியாகக் கொள்கிறார்.
அதனால்தான் பெரியார் கருத்துமுதல்வாதியாக இருந்தாலும், சமூக மாற்றப் போராட்டத்தில் அவருக்கும் தவிர்க்க முடியாத ஒரு இடம் உண்டு என மார்க்சியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.
அது மட்டுமல்ல, பெரியார் உலகின் முதல் சோசலிச நாடான சோவியத் யூனியனுக்குச் சென்று வந்ததுடன், அந்த நாட்டை முன்னுதாரணமாகவும் பிரச்சாரம் செய்து வந்தார். அத்துடன், தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பல போராட்டங்களையும் ஆதரித்தார். (சில தேர்தல்களில் கூட கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்) அதேபோல, பெரியார் நடத்திய பல போராட்டங்களை கம்யூனிஸ்ட்டுகளும் ஆதரித்தார்கள்.
ஆகவே, மார்க்சியத்துக்கும் பெரியாரியத்துக்கும் இடையில் சில சில விடயங்களில் கருத்து முரண்பாடுகள் இருப்பினும், எதிர்ச் சிந்தனையாளர்கள் சொல்வது போல் சீனப் பெருஞ்சுவர் எதுவும் இல்லை.