Site icon சக்கரம்

கனடா பிரதமரின் பகிரங்க குற்றச்சாட்டு: இந்தியா பதிலடி!

கிறிஸ்டோபர் ஜெமா

ந்திய அரசாங்கத்திற்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நஜ்ஜர் (Hardeep Singh Nijjar) கொல்லப்பட்டதற்கும் இடையே தொடர்பு இருப்பதாக கூறிய கனடா பிரதமரின் குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கான அந்நாட்டின் தூதரை அடுத்த 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே கனடாவில் வசித்து வந்த இந்தியா வம்சாவளியும், காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார்.

இது இந்தியாவில் காலிஸ்தான் என்ற தனிநாடு கேட்டு போராடி வரும்  சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே பதட்டத்தை அதிகரித்து வந்தது.

கனடா பிரதமர் குற்றச்சாட்டு!

இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

அந்நாட்டு பாராளுமன்றத்தில் நேற்று (செப்டம்பர் 18) பேசிய ஜஸ்டின் ட்ரூடோ “ இந்திய அரசின் உயர்மட்ட உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கனடா தனது ஆழ்ந்த கவலைகளை அறிவித்துள்ளது” என்று தெரிவித்தார்.

கனடா மண்ணில் ஒரு கனேடிய குடிமகன் கொல்லப்படுவது என்பது வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு ஈடுபாடும் நமது இறையாண்மையை ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும்” என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.

மேலும் கடந்த வாரம் ஜி20 உச்சிமாநாட்டிற்காக டெல்லி சென்றிருந்த நிலையில் பிரதமர் மோடியிடம் இதுகுறித்த தனது கவலைகளை நேரடியாகவும் தெரிவித்ததாக ஜஸ்டின் ட்ரூடோ கூறினார்.

இதற்கிடையே கனடாவின் வெளியுறவு அமைச்சர் மெலானி ஜோலி, இந்தியாவின் உளவுத்துறையின் தலைவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதை  உறுதி செய்தார்.

எனினும் கனடா தலைநகர் ஒட்டாவாவில் உள்ள இந்திய தூதரகம் இதுகுறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இந்தியா மறுப்பு!

அதே வேளையில் கனடாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கையில், “கனடா பிரதமர் பாராளுமன்றத்தில் கூறியதையும், அவர்களின் வெளிவிவகார அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம். கனடாவில் எந்தவொரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசாங்கத்தின் தொடர்பு பற்றிய குற்றச்சாட்டுகள் அபத்தமானது.

இதே போன்ற குற்றச்சாட்டுகளை கனடா பிரதமர் முன்பு நமது பிரதமரிடம் முன்வைத்தபோது, அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன.

நாங்கள் சட்டத்தின் ஆட்சிக்கு வலுவான அர்ப்பணிப்புடன் கூடிய ஜனநாயக அரசியலை முன்னெடுத்து வருகிறோம்.

கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுவது ஒன்றும் புதிதல்ல.

இத்தகைய ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் காலிஸ்தான் பயங்கரவாதிகள் மீதான கவனத்தை திசை திருப்ப முயற்சிகள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் தற்போது காலிஸ்தான் கனடா அரசியல் பிரமுகர்கள் இத்தகைய கூறுகளுக்கு வெளிப்படையாக அனுதாபத்தை வெளிப்படுத்தியிருப்பது கவலை அளிக்கிறது.

காலிஸ்தான் பிரிவினைவாதிகள் கொல்லப்பட்ட விஷயத்தில் இந்திய அரசாங்கத்தை இணைக்கும் அனைத்து குற்றச்சாட்டையும் நாங்கள் நிராகரிக்கிறோம். மேலும் அங்கு செயல்படும் அனைத்து இந்திய விரோத நடவடிக்கைகளுக்கும் எதிராக விரைவான மற்றும் பயனுள்ள சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசாங்கத்தை கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசின் பதிலடி!

மேலும் ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டை தொடர்ந்து கனடாவில் உள்ள இந்திய உளவுத்துறை தலைவரை நாட்டை விட்டு வெளியேற்றியதற்கு இந்திய அரசு தற்போது பதிலடி கொடுத்துள்ளது.

அதன்படி இன்று (19.09.2023) காலை இந்தியா நாட்டின் கனடா தூதரான கேமரூன் மேக்கேயை  நேரில் அழைத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது.

மேலும் அவரை அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

“இந்தியாவைத் தூண்டிவிட பார்க்கவில்லை” –  நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் கனடாவுடன் முற்றும் மோதல்

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில், “இந்தியாவைத் தூண்டிவிடவோ அல்லது பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. ஆனால் இந்தியா இதனை மிகத்தீவிரத்துடன் கையாள வேண்டும்” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ முன்பு குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக தற்போது இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய ட்ரூடோ, “இந்த விவகாரத்தில் இந்தியாவை நாங்கள் தூண்டிவிடவோ அல்லது இந்தியாவுடனான பதற்றத்தை அதிகரிக்கவோ பார்க்கவில்லை. எல்லாவற்றையும் தெளிவுபடுத்துவதற்கும் சரியான செயல்முறைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் இந்திய அரசுடன் இணைந்து பணியாற்றவே விரும்புகிறோம்.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைக்கும் இந்திய அரசின் ஏஜென்ட்களுக்கும் தொடர்பு இருப்பது பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகள் உள்ளதை கனேடிய அரசின் ஏஜென்சிகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்த குற்றச்சாட்டுகளை கனேடிய அரசு தீவிரமாக பின்பற்றப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகளை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. “கனடாவில் நிகழ்ந்த வன்முறைச் செயலுக்கு இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் அபத்தமானது. இது உள்நோக்கம் கொண்டது. இதற்கு முன்பே இதே குற்றச்சாட்டுகள் கனடா பிரதமரால் இந்திய பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டன. அப்போதே அவை முற்றிலும் நிராகரிக்கப்பட்டன.

இந்தியாவில் வசிக்கும் கனேடியர்களுக்கு அறிவுறுத்தல்:

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு கனேடிய அரசாங்கம் சில விஷயங்களை அறிவுறுத்தியுள்ளது. கனடா அரசாங்கத்தின் இணையதளத்தில், “பயங்கரவாத தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் அதிக அளவு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில பாதுகாப்புக் கவலைகள் உள்ளன. நிலைமை விரைவாக மாறக்கூடும். எனினும், மிகவும் எச்சரிக்கையாக இருங்கள், உள்ளூர் ஊடகங்களைக் கண்காணித்து உள்ளூர் அதிகாரிகளின் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்” என்று அறிவுறுத்தியுள்ளது.

சம்பவத்தின் பின்னணி: இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பயங்கரவாதிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை வலியுறுத்தி கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். கனடாவில் உள்ள இந்திய தூதரகம் முன்பு, கடந்த மார்ச் மாதம் அவர்கள் போராட்டம் நடத்தினர்.

காலிஸ்தான் பயங்கரவாதிகளின் செயல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனடா அரசிடம் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கனடாவில் காலிஸ்தான் டைகர் படைப்பிரிவின் தலைவரும், தீவிரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலையில் கனடாவில் உள்ள இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோர் முக்கிய பங்காற்றியுள்ளனர் என அவர்களின் போட்டோக்களுடன் கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போஸ்டர் ஒட்டினர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “இந்திய அரசாங்க முகவர்களுக்கும் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொலைக்கும் தொடர்பு இருப்பதற்கான நம்பத்தகுந்த குற்றச்சாட்டுகள் உள்ளன. ” என்று கூறினார்.

பிரதமரின் பேச்சைத் தொடர்ந்து, பேசிய வெளியுறவு அமைச்சர், “நாங்கள் இந்தியாவின் மூத்த தூதரக அதிகாரிகையை நாட்டில் இருந்து வெளியேற்றியுள்ளோம். அவர் இந்தியாவின் வெளிநாடு புலனாய்வு அமைப்பின், ஆராய்ச்சி மற்றும் ஆய்வுப் பிரிவின் (RAW) தலைவராக செயல்பட்டவர்” என்றார்.

Exit mobile version